Pages

22 June 2008

இடியாப்ப சிக்கனும் இன்னபிற சிக்கல்களும் கேயாஸ் தியரியும்

'' சார், 5 வருஷத்துக்கு முன்னால நான் மட்டும் அந்த இடியாப்ப சிக்கன் சாப்பிட போகாமா இருந்திருந்தா , இங்க வந்துருக்கவே மாட்டேன் , என்ன செய்ய எல்லாம் விதி சார் ''
நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன் இளவழகனை ,

'' இததான் சார் அறிவியல்ல , கேயாஸ் தியரிங்கறாங்க , நம்ம வாழ்க்கைல எடுக்குற சின்ன சின்ன முடிவுகளும் , சின்னசின்ன நிகழ்வுகளும் நம்ம வாழ்க்கைய எப்படி வேணா மாத்தும் , ஒரு பெரிய பிரச்சனையோட ஆரம்ப புள்ளி , அந்த சின்ன நிகழ்வா இருக்காலாம் , எனக்கு அந்த இடியாப்ப பிரச்சனை மாதிரி ,எனக்கு அந்த இடியாப்பம் சாப்பிடணும்னு அன்னைக்கு தோணாம இருந்திருந்தா இன்னைக்கு உங்க முன்னாடி இப்படி ...நான் பெரிய சாப்ட்வேர் இன்ஜினியாரா இருந்திருப்பேன் சார் ''

எனக்கு கபாலம் கலங்கியது '' அப்படி என்ன சார் அந்த இடியாப்ப சிக்கன் பண்ணுச்சு ''
'' எனக்கு 25 வயசு சார் அப்போ , என்ஜினியரிங் முடிச்சிட்டு ஜாவா படிச்சிகிட்டுருந்தேன் , என் நண்பன் விஜய் , என்னோட உயிர் நண்பன் சார் அவன் , செப்டம்பர் 15 , அன்னைக்குத்தான் அவன் அந்த கடைக்கு கூப்டான் , அங்க இடியாப்பமும் சிக்கனும் தருவாங்க ரொம்ப ஜோரா இருக்கும்னு சொல்லி கூட்டிட்டு போனான் , நான் எவ்வளவோ வேண்டாம்னு சொல்லியும் என்னை கட்டாயப்படுத்தி கூட்டிகிட்டு போனான் , இடியாப்பம் சாப்பிடறப்போ பக்கத்துல இருந்தவர் , அவரோட பேக்க என்கிட்ட குடுத்திட்டு கொஞ்சம் பார்த்துக்கோங்கனுட்டு போனாரு , அவரு 15 நிமிஷம் ஆகியும் வரல , விஜயும் அவசராமா கிளம்பணும்னு கிளம்பிட்டான் '' தண்ணீரை முழுங்கியபடி பேசினார் .
'' திடீர்னு போலீஸ் உள்ள வந்தாங்க , எல்லாரையும் சோதனைப்போட்டாங்க , அப்போ என்கிட்ட இருந்த அந்த ஆளோட பேக்க சோதனை போட்டாக்க அதுல பூரா வெடிகுண்டு !!!!! சொல்லவே வேணாம் , போலிஸ் என்னை புடிச்சு ஜெயில்ல போட்டாங்க , அதான் நான் முதல்முறை சிறைக்கு போனது , எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புனு சொல்லி கேஸ் நடந்துச்சு , 1 வருஷம் கழிச்சு என் மேல குற்றமில்லனு விடுதலை பண்ணிட்டாங்க , இந்த இடைபட்ட காலத்தில இந்த சோகம் தாங்கம , அப்பாக்கு பக்க வாதம் வந்துருச்சு , என் காதலியும் என்ன விட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்டாங்க , அம்மாதான் எப்பவும் என்ன வந்து ஜெயில்ல பாப்பாங்க '' சொல்ல கண் கலங்கியது .
'' சாரி சார் மன்னிச்சுருங்க .... '' எனக்கும் மனம் கம்மியது . '' சார் நாம நாளைக்கு பேசலாம் சார் , '' என்று கூற எனக்கும் அதுவே சரி எனப்பட்டது .

அடுத்த நாள் '' வாங்க வினோ , உக்காருங்க , சாரி , நான் நேத்து கொஞ்சம் எமோசனலாகிட்டேன் , '' ,

''சார் பராவால்ல,அதுக்கபுறம் என்னாச்சு சார் '' ஆர்வமாக கேட்டேன் ,
'' இந்த ஒரு வருஷம் ஜெயில்ல இருந்தேன் இல்லைங்களா , அங்க போலீஸ் அடிச்சதுல இந்த வலது கை எலும்பு முறிஞ்சு போயி , அது யாருக்கும் உபயோகமில்லாம போயிருச்சு , ஜெயில்லருந்து வெளிய வந்து , எந்த வேலைக்கும் போக முடியாம , வீட்ல கஷ்டம் , காசெல்லாம் என் கேஸுக்கே செலவு பண்ணிட்டு , அப்பாக்கு முடியாம , எனக்கு ஒரு கையும் இல்லாம , நண்பர்கள இழந்து , காதலிய இழந்து , என் வாழ்க்கைல எல்லாமே போய் கடைசில தற்கொலை பண்ணிக்கலாம்னு போயி அதுலயும் தோல்வி , இந்த மாதிரி நடக்க இந்த சமுதாயத்து மேல கோபம் வந்து பணம் சம்பாரிக்க எனக்கு நல்லா தெரிஞ்ச தொழில்நுட்பத்துலயே கோல்மால் பண்ணி அதுல மறுபடியும் போலிஸ் கிட்ட மாட்டி , நீங்க கூட கேள்வி பட்ருப்பீங்களே , கிரெடிட் கார்டு மோசடினு , அது நான்தான் , அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் ஜெயில் , அங்க என் கூட இருந்த கைதிகிட்டருந்து கம்யூனிசமும் தமிழும் படிச்சேன் , அப்புறம் சிறைல நான் எழுதிய கட்டுரைகள் , உங்க வார இதழ்ல தான வந்துச்சு , அதற்கு கிடைத்த மக்கள் ஆதரவு , அதுக்கப்புறம் கட்சில இடம் , என்னோட அனல் பறக்கும் மேடைப்பேச்சு , அதற்கு கைதட்டிய மக்களின் ஆதரவு , எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுதுதானே ,''
'' ஆமா சார் '' தலையை ஆட்டியபடி கூறினேன் .
'' இப்ப சொல்லுங்க வினோ சார் , அந்த இடியாப்ப சிக்கன் சாப்பிடாம இருந்தா , என் குடும்பம் , காதல் , நட்பு , பாசம் , என் கனவு எல்லாத்தையும் இழந்துட்டு இப்படி உங்க முன்னால ஒரு உணவுத்துறை அமைச்சரா உக்காந்துருப்பேனா...?''

எனக்கும் அப்படித்தான் தோணியது ..