Pages

06 June 2008

கதை சொல்லும் திண்ணைகள்

கதை சொல்லும் திண்ணைகள் :

வேகமாய் மாறிடும் காலம் நம் சமுதாயத்தின் பல மாற்றங்களோடு நம் கலாச்சாரத்தின் பதிவுகளையும் சமயத்தில் மிதித்தும் அழித்தும் விடத்தவறுவதில்லை . சில நேரங்களில் நம் முன்னோர்கள் விட்டு சென்ற காலத்தின் சுவடுகளையும் நாம் பாதுகாக்க தவறிவிடுகிறோம் . அச்சுவடுகளுக்குள்ளேதான் எத்தனை எத்தனை கதைகள் , இன்று நாம் வாழ்வில் தேடும் பல இழந்தவைகளின் விதைகள் அங்கே புதைக்கப்பட்டுள்ளது,விதைக்கப்படவில்லை .

நம் தமிழ்நாடு விருந்தோம்பலிற்கு புகழ் பெற்றது , எதிரியாயினும் வந்தாரை வரவேற்கும் சமுதாயம் நம்முடையது . அதற்கு பெருஞ்சான்றாய் விளங்குவது திண்ணைகள் . அக்கால வீடுகளில் திண்ணைகளில்லாத வீடுகளினை காண்பதரிது . கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என கூறுவதுண்டு அது போல திண்ணையில்லாத வீட்டில் அக்காலகட்டத்தில் யாரும் குடியிருக்கவில்லை .

என் தாத்தாவுடன் நான் எங்களூரின் பாதைகளில் சுற்றித்திரிவது வழக்கம் . எங்கள் ஊரில் மரகதம் பாட்டியின் வீடு மிக பிரபலம் , அந்த வீட்டை குறித்து ஊரில் பல கதைகள் கூறுவதுண்டு . அவர்கள் வீட்டு திண்ணைக்கும் அவளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு , அவள் வாழ்வின் ஒவ்வோர் நிகழ்விலும் அத்திண்ணைக்கும் பங்கிருந்திருக்கிறது .

மரகத்தின் பால்யத்தில் அவளுக்கு அத்திண்ணையின் முற்றத்தில் தான் அவள் அம்மாவின் சேலையில் தொட்டில் கட்டுவதுண்டாம் , அவள் வீட்டிற்குள் தூங்க வைத்தால் தூங்கமால் அழுது கொண்டே இருப்பாளாம் . அத்திண்ணைக்கும் அவளுக்குமான தொடர்பு அப்படிதான் துவங்கியது .

அவள் பள்ளி செல்கையிலே பள்ளி முடிந்ததும் அந்த திண்ணையில் ஏறி நின்று திண்ணையோடு ஒட்டியிருந்த சுவற்றில் கிருக்கி மகிழ்வாள் , திண்ணையிலமர்ந்து பாடம் படிப்பாள் . அம்மா அவளுக்கு பால் சோறு, நிலா சோறு ஊட்டுவதும் அங்குதான் , அப்பா நரி முயல் முதல் இராமாயணம் வரை கதைகள் சொன்னதும் அங்குதான்

அவள் பூப்படையும் வரை அங்கேதான் பல்லாங்குழியும் , தாயமும் , ஆடுபுலி ஆட்டமும் ஆடுவாள் . அதன் பின் அம்மாவின் சொல் கேட்டு வெளியே அமருவதில்லை . விளையாட்டும் குறைந்துவிட்டது திண்ணையின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது .

அவளண்ணன் அவனது நண்பர்களுடன் அத்திண்ணையிலமர்ந்தபடி அந்த வீதியில் போகும் பெண்களை கேலி செய்ய ஆரம்பித்திருந்தான் அவளுக்கு வேதனையாய் இருந்தது , அப்பாவும் அத்திண்ணையிலமர்ந்துதான் அரசியலிலிருந்து ஊர் பஞ்சாயத்து வரை பேசுவார் , அத்திண்ணை மற்றவாரால் ஆக்கிரமிக்க படுவது அவளுக்கு பிடிக்கவேயில்லை . ஆனாலும் திருவிழா , பண்டிகை என்றாலே திண்ணையை கோலங்களால் அலங்காரம் செய்ய கிளம்பி விடுவாள் , இவள் செய்யும் அலங்கார சேட்டைகளை அது அமைதியாய் ஏற்றுக்கொள்ளும் .

அவளுக்கு வரன் தேடுகையில் புரோகிதரும்,புரோக்கர்களும் அந்த திண்ணையிலமர்ந்துதான் அவளப்பாவிடம் ஆலோசிப்பார்கள், அப்போதெல்லாம் சன்னலுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஒட்டு கேட்க அவளுக்கு மிக பிடிக்கும் . அவள் கணவன் முதல் முறை பெண் பார்க்க வருகையிலே அத்திண்ணையிலமர்ந்தபடி சன்னல் வழியே ஓரக்கண்ணால் மரகதத்தை தேடினாராம் . இது இன்று வரை அவளுக்கும் அத்திண்ணைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாம் .

அவளுக்கு திருமணமாயிற்று , திண்ணைக்கும் அலங்காரம் கோலங்களால் , கணவன் மணமாகி கொஞ்ச நாளிலேயே பர்மாவில் போரென புறப்பட புகுந்த வீட்டில் தனிமை . அன்றாடம் மாமியாருடன் சண்டையிட்டு தன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த திண்ணைதான் நிம்மது கொடுத்தது . எத்தனையோ நாட்கள் தலைவிரி கோலமாய் , வயிற்றில் குழந்தையையும் கண்களில் கண்ணீரையும் சுமந்தபடி தன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் வீட்டினரை விட அந்த திண்ணையே நிம்மதி தந்தது .

போருக்கு சென்றவன் அங்கேயே மடிந்து விட , தகப்பன் வீட்டிற்கே அனுப்ப பட்டாள் . மீண்டும் திண்ணைக்கே வந்து விட்டாள் , இம்முறை பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு பாடம் எடுக்க , இளம்விதவைகளை தன் வச படுத்த முயலும் ஆண்கள் அந்த ஊரிலதிகம் , அவளுக்கு அது பிடிக்கவில்லை , அதனால் ஊரில் இவளை பற்றிய பொய் கதைகள் பல திண்ணைகளுக்கும் பொழுதுபோக்காயிற்று .

தந்தை , வீட்டை இவள் பெயரில் எழுதிவிட்டு மடிந்து விட, அந்த திண்ணை கண்ணீரால் மிதந்தது , ஊரின் வயதான பெண்களும் பாட்டிகளும் அத்திண்ணையை அடைத்து கொண்டு ஒப்பாரி பாடி விட்டு , கொடுத்த காபியையும் முழுங்கிவிட்டு சென்றனர் .

திண்ணையிலேயே ஒரு தையலியந்திரத்தை போட்டு , தன் பயணத்தை தொடர்ந்தாள் . மிதித்து மிதித்து தைக்க தைக்க , அவள் மகனும் வளர்ந்தான், அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது , அவனுக்கு திருமணம் செய்து வைத்து பார்த்தாள் , வந்த மருமகளும் தாயைப்போல பார்த்து கொண்டாள் .

ஆனாலும் எப்போதும் அத்திண்ணையிலேயேதான் தன் அதிக நேரத்தை செலவிடுவாள் , மூட்டு வலியால் பாதிப்படைந்து முழு நேரமும் அத்திண்ணையிலேயே அமரும் படி ஆயிற்று , இரவு கூட அங்கேயே தூங்குவாள் , அவளுக்கும் அதுதான் பிடித்திருந்தது , பின்னாட்களில் அந்த திண்ணை ஊர் முதியோர்களின் சரணாலயமானது .

அத்திண்ணையில் ஒரு நாள் இரவு உறங்கியவள் விடிகையில் உயிரோடில்லை . மகன் பிழைப்பிற்காக குடும்பத்தோடு வெளிநாடு சென்றவன் திரும்பவில்லை , தகவலேதும் இல்லை.
நாகரீகம் ஊரை மாற்றியிருந்தது , எந்த வீட்டிலும் திண்ணையில்லை , மரகதம் பாட்டியின் வீட்டைத்தவிர , அவ்வூரில் இன்னும் கூட அவள் கதைகள் பிரபலம் , முன்னாலே அவள் காதல்கதைகள் , இப்போது பேய்க்கதைகள் அந்த திண்ணையுடன் இணைத்து . அந்த திண்ணையில் இப்போதெல்லாம் யாரும் அமருவதில்லை . அவளோடு அந்த திண்ணையும் இறந்துவிட்டிருந்தது . ஒவ்வொரு முறை அந்த திண்ணையை நான் கடக்கும் போதும் அது மரகத்தின் கதையை சொல்ல எப்போதும் தவறுவதில்லை .


_____________________________________________________________________________

இந்த திண்ணை பதிவு பாலாண்ணாவின் இந்த பதிவிலிருந்து கிடைத்த உந்துதல் . அவருக்கு நன்றி .

முரளிக்கண்ணனின் திண்ணை பதிவு

கயல்விழி அக்காவின் திண்ணை பதிவு
என் பதிவை தொடர்ந்து திண்ணை பற்றி எழுத நண்பர் லக்கி மற்றும் சென்ஷியை வேண்டுகிறேன் .