Pages

16 July 2008

ஏழைக்கதைகள் ஏழு : கனவுக்கணினி






இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிரினத்திற்கும் ஆசை உண்டு , அது அமீபாவாக இருக்கட்டும் நீலத்திமிங்கலமாகட்டும் , ஏன் அழிந்து போன டைனோசர்களுக்கு கூட ஆசைகள் இருந்திருக்கும் . ஆசைப்பட தகுதி தேவையில்லை . உயிருள்ள எல்லாமே ஆசைப்படலாம் .
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு ஆசை , சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .

நாம் அனுபவிக்கும் பல வசதிகளும் யாரோ ஒருவரின் ஆசையின் வடிவமே , ஆசைகளின் வடிவம் கற்பனை , கற்பனைகளின் வடிவம் கண்டுபிடிப்பு . ஆக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஆசைக்கு அழிக்கும் பலமும் உண்டு . அணுவின் சக்தியை கண்டறிந்தவனின் ஆசை ஆக்கும் ஆற்றாலாய் உருவெடுக்க , அதை அனுபவிப்பன் ஆசை எதையும் அழிக்க முற்பட்டது . ஆசைக்கு எல்லையில்லை , அது சுதந்திரமானது அது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஒன்றுதான் .

அது கட்டற்றது .

'' முருகேசா , ஐயரு கம்பெனிக்கு டீ குடுக்க போகாம அங்க என்னடா பண்ற !! '' அதட்டினார் டீக்கடை அதிபர் , அவருக்கு வேலையாட்களை அதட்டுவதில் அதி தீவிர ஆசை .

'' தோ!! கிளம்பிட்டேன்ப்பா!!''


கையிலிருந்த தேநீர் அட்டியிலிருந்த எட்டு கோப்பைகளிலிருந்தும் தேநீர் தெரித்து விழ அதை இறுக்கமாய் பிடித்தபடி ஓடி வந்தான் முருகேசன் . அழுக்குக் கால்சட்டை மேலும் கிழிந்தபடி.

'' என்னடா !! சொல்லி வாய மூடல அதுக்குள்ள வந்து நிக்கற '' ,

திருதிருவென விழித்தபடி நின்றான் முருகேசன் , டீமாஸ்டர் வாயை திறந்து எதையோ பேச எத்தனிக்க , முருகேசன் அவரை பார்த்து வேண்டாம் என்பது போல் சைகை செய்ய மர்மமாக சிரித்தபடி தனது தேநீர் தயாரிப்பில் மூழ்கினார் .

அந்த அலுவலகத்தில் மொத்தமாய் பத்து பேர்தான் , எப்போதும் கலகல என ஆர்ப்பாட்டமாக இருக்கும் அந்த அலுவலகத்தில் முருகேசனுக்கு காலை மாலை இரு வேளையும் தேநீர் தருவது மிக பிடித்தமான ஒன்று . எல்லாமே அவளை பார்க்கத்தான் . அவள் அந்த அலுவலுகத்துக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது . அங்கு அவளை போல எட்டு இருந்தாலும் அவனது பார்வை எல்லாம் அவள் மேல்தான் . அந்த அலுவலகத்தில் அவள் மட்டும்தான் கருப்பு . அதுதான் அவனை ஈர்த்திருக்க கூடும் . அவனது ஆசை எல்லாம் அவளருகில் அமர்ந்து ஆசை தீர அவளோடு ஒரு நாள் முழுக்க அவளோடு கழிக்க வேண்டுமென்பதே .

'' சார் , ? ''

மேஜை மேல் டீயை வைத்து விட்டு ஏகாம்பரம் சாரை ஏக்கத்துடன் பார்த்தான் , அவர் கவனிக்கவில்லை , அந்த அலுவலகத்தில் இவனிடம் முகம் கொடுத்து பேசும் ஒரே ஆள் . இவனை பார்க்கையில் தன் பால்யம் ஞாயபகம் வருவதாயும் அவனை அடிக்கடி பள்ளிக்கு சென்று படிக்க சொல்லியும் வற்புறுத்துபவர் .

''சார் ? '' கொஞ்சம் சத்தத்தை கூட்டிப்பார்த்தான் .


''என்னடா !! '' முறைத்தார் .

''நான் கேட்டேனே அது ''

''சனிக்கிழமைனு சொல்லிட்டேன்ல , அப்புறமென்ன !! ''

'' சரிங்க சார் ,'' அங்கிருந்து தன் தேநீர் அட்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப முற்பட்டவன் , சில அடிகள் நகர்ந்து பின் ஒரு முறை அவளை ஏக்கமாக பார்த்துவிட்டு , ஒரு பெரு மூச்சுடன் நகர்ந்தான் .


இன்று வியாழன் , இன்னும் ஒரு நாள்தான் எப்படியாவது வேகமாக இந்த நாற்பத்தி எட்டு மணி நேரமும் கழிந்து விடாதா என ஏங்கினான் . சனிக்கிழமை தன் வெகு நாள் ஆசையை ஏகாம்பரம் சார் நிறைவேற்றி தருவதாக வாக்குருதி அளித்திருந்தார் .

கடைக்குள் நுழைய டீமாஸ்டர் வினவினார் இவன் முகத்தில் தெரித்த புன்னகையில் எல்லாம் புரிந்து போனது , மதியம் காய்ந்து போன தக்காளி சாதம் காயந்தபடி இருக்க இவன் மோட்டுவலையை பார்த்தபடி சோற்றை பிசைந்து கொண்டு அதை பற்றியே கற்பனை செய்து கொண்டிருந்தான்.

அவளை முதல் முறை பார்க்கையில் அவள் என்னவென்றே விளங்கவில்லை . ஆர்வமிகுதியில் யாருமே அவனிடம் பேசாத அந்த அலுவலகத்தில் ஏகாம்பரமிடம் கேட்க அவர் அதன் பெயர் கம்ப்யூட்டர் என்றும் கணக்கு போட வாங்கி இருப்பதாகவும் , அவனும் அதை கற்றுக்கொண்டால் நல்ல சம்பளத்தில் வேலைக்கு போகலாமெனவும் கூறினார் .

அவளால் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்பதெல்லாம் அவனுக்கு ஆசையில்லை , ஒரு நாள் மட்டும் அக்கணினியிலமர்ந்து அவ்விசைப்பலகையினில் தன் விரல் பட ஒரு நாள் எல்லாம் அப்படியே இருந்துவிட்டு அப்படியே செத்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றெண்ணியிருக்கிறான் .

அறிவிற் சிறந்ததாய் இருப்பதால் அதை ஒரு பெண்ணாய் நினைத்தானோ. விந்தைகள் புரிவதால் தேவதையாய் கற்பனை செய்தானோ அவனுக்கு அது அதுவல்ல , அது அவளாகியிருந்தது . நம்மூரில் தேவதைகள்தானதிகம் தேவதூதர்கள் குறைவு , அதனாலும் கணினி அவனுள் பெண்பாலாய் ஆகியிருக்கலாம் .

கணினியுடனான அவனது ஆசையை காமத்தோடு ஒப்பிட்டால் , காமம் போன்றதொரு வேட்கையாயிருப்பின் , காமத்தின் ஆவல் ஒரு முறையோடு முடிவதில்லை , காதலாய் கொண்டால் அதுவும் காமத்தின் அழகிய வடிவமே , அவனது ஆசை பக்தியை போன்றது , இறையை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்னும் பக்தி , ஒரு முறை பார்த்துவிட்டால் பிறகு முக்திதான் என்பதை போல இதுவும் பக்திதான் கணினி மீதான ஒரு பக்தி .

அவனால் பணம் கொடுத்து கணினி கற்க அறிவுமில்லை வசதியுமில்லை , ஏகாம்பரமிடம் தெரிவிக்க அவரோ , அவர் வாங்கும் சொற்ப சம்பளத்தில் தன்னால் அவனை படிக்க வைக்க இயலாது வேண்டுமானால் வாரமொருமுறை சனிக்கிழமைகளில் வந்தால் கற்றுத் தருவதாய் வாக்களித்தார் .

நாற்பத்தி எட்டு மணி நேரத்தையும் நானூறு வருடங்களாய் ஆசையின் வலியோடு பயணித்தான் . ஒரு வழியாய் சனிக்கிழமையும் வந்தது .

விடியலுக்காய் காத்திருந்தது போல அவசரமாய் எழுந்து , குளித்து , பவுடர் பூசி , கோவிலுக்கு சென்று , சாமி கும்பிட்டு , தேங்காய் உடைத்து , கற்பூரமேற்றி , ஒரு வழியாய் ஐயர் அலுவலகத்தை அடைந்தான் . அலுவலகம் திறக்கப்படவில்லை . பொருத்திருந்தான் .

இவன் வயது குழந்தைகள் ரிக்சாவிலும் , ஆட்டோவிலும் , பேருந்திலும் பள்ளிக்கு போய்க்கொண்டிருந்தனர் , அவர்களை பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் , அலுவலக வாசலில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் புரட்டினான் , அதுவும் சரியாக படிக்க இயலாமல் , மீண்டும் சாலையிலேயே அயர்ந்தான் . மேலும் குழந்தைகள் சாரை சாரையாக எறும்புகள் போல கையில் அட்டியுடன் அணிவகுத்து செல்ல , தலையை குனிந்து கொண்டான் . குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார பயணமது .


ஏகாம்பரம் வரவில்லை , மதியமானது அப்போதும் அவர் வரவில்லை ,பொருத்திருந்ததான் , மாலை ஆனது பசி காதை அடைக்க ஆரம்பித்திருந்தது இன்னும் வரவில்லை , இரவாகியும் அவன் அங்கிருந்து அகலவில்லை , அவள் மேலிருந்த ஆசைக்கு அவ்வளவு பலம் .


நள்ளிரவாக டீமாஸ்டர் அவனைத்தேடி அலுவலகத்திற்கே வந்துவிட , இவன் அரைமயக்கத்தில் அந்த அலுவலக வாசலில் படுத்திருந்தான்.


''முருகேசா!! டேய் முருகேசா!! '' தட்டி எழுப்பினார் . '' என்னாடா ஆச்சு , நேத்து லீவு சொல்லிட்டு போனவன் , ரவைக்கு வீட்டுக்கு வருவனு காத்திருந்தா ஆளக்காணலயேனு இங்கிட்டு வந்து பார்த்தா இப்படி பைத்தியகார பயலாட்டம் படுத்திருக்க , வா ரூம்புக்கு போவோம் ''


''அண்ணா ஏகாம்பரம் சார் வரலணா , என்னாச்சினு தெரியல , யாருமே வரலணா ''


''சரி வா நாம காலைல பேசுவோம் , லூசுபயபுள்ள , எதையாவது தின்னியா'' பசியால் அவன் அவரது மடியில் மயங்கி விழுந்தான் .

திங்கள் கிழமையும் அந்த அலுவலகம் திறக்கப்படவில்லை , தொடர்ந்து ஒரு வாரம் பூட்டியே இருந்தது . தினமும் அவனும் விடாது அங்கு சென்று பார்த்து வருவான் .

சில நாட்கள் கழித்து அது ஒரு நிதிநிறுவனமென்றும் அது திவாலாகியதாகவும் செய்தி படித்ததாக மாஸ்டர் கூறினார் . அநந் அலுவலகம் இனிமேல் திறக்க மாட்டார்கள் எனபதை தவிர எதுவும் புரியாது துடித்து போனான் . அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவளை இனி பார்க்க முடியாதென்பது .

பிரிதொரு நாளில் அந்த அலுவலகம் அடித்து நொருக்கப் பட்டது அந்த நிறுவன முதலீட்டாளர்களால் , அவளும் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள் , அவள் உடைந்து நடுத்தெருவில் கிடக்க அதில் ஒன்றை கையில் எடுத்து கதறி அழுதான் . அவனாசை அநாதையாய் நடுரோட்டில் .


அதை தூக்கி கொண்டு கடைக்கு திரும்புகையில் வழியெங்கும் அவள் துகள்கள் ஒவ்வொன்றாய் பொருக்கி கொண்டான் , கையில் இடமில்லை அந்த விசைப்பலகையும் உடைந்த திலையில் சாக்கடையில் , ஒடிச்சென்று சாக்கடையில் இறங்கி அதையும் எடுத்துக் கொண்டு , தெருவோர நீர் குழாயில் கழுவியபடி கடையை நோக்கி நடக்க மாலை மங்க ஆரம்பித்தது . அவன் ஆசையும் நிறைவேறியது .



சில ஆசைகள் தானாகவே நிறைவேறுகின்றன , சில ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன , சில ஆசைகள் அது சாகும் வரை அந்த உயிரனத்தோடு வாழ்ந்து அது இறந்தபின் அதனுடனே மக்கி மண்ணாகின்றன . ஆசைப்பட தகுதி தேவையில்லை . ஆசைகளின் ஆற்றல் அளப்பரியது .