Pages

19 July 2008

இளமையில் கொல்..... : அறிவியல் சிறுகதை .



அந்த அரசுவிபச்சாரவிடுதியின் சுற்றுசுவரின் கிழக்கு பகுதியில் , பான்பராக் கரையும் , சிறுநீர் தடமும் , உபயாகித்த ஆணுறைகளின் குவியல்களினூடே பயணிக்கும் கரை படிந்த சுவர்களின் எல்லையில் இருக்கும் அந்த அதிரகசிய அரசாங்க புத்தக்கடையினை அடைவது அத்தனை சுலபமல்ல .

ஜெக்யூ அங்குதான் ஓட்டமாய் நடந்து கொண்டிருந்தான் அந்த கடையை நோக்கி , அவனது பதினைந்துவயது , பயத்தில் பிட்யூட்டரி சுரப்பிக்கு வேலை தந்து கொண்டிருந்தது , குற்ற ஒழிப்பு படையின் கண்ணில் சிக்கினால் , முதல்முறையாதலால் வலதுகாலின் கட்டைவிரல் மட்டுமே துண்டிக்கப்படுமென்பது அவனுக்கு தெரியாமலில்லை , அந்த புத்தகங்கள் மீதான அவனது ஆர்வம் அவனை இதோ இந்த அளவுக்கு தன் கட்டை விரலையும் பணயம் வைக்குமளவுக்கு தைரியம் தந்திருக்கிறது . அப்புத்தகங்கள் அவனுள் செய்துவிட்ட மாற்றங்கள் அவனை எதற்கும் துணிந்தவனாக்கியிருந்தது , அப்புத்தகங்கள் அவனது வயதையும் மீறிய விடயங்கள் குறித்த தேடலின் தொடக்கமாய் , புதிய உலகத்தின் வாசலாய் , அவனிதுவரை அறிந்திடாத இன்ப துன்பங்கள் பாச நேசங்கள் உறவு பிரிவுகள் சொர்க்க நரகங்கள் என அவனது ஆழ்மனத்தின் அலைவரிசையினூடே விரிவதாய் இருந்தது .



''அண்ணா!! நான் கேட்ருந்த புத்தகம் வந்துடுச்சாங்கண்ணா '' தயங்கினான் ஜெக்யூ ,


'' வா, ஜெ!! இன்னும் வரலயே தம்பி , உன்னோட குடிமை எண் எங்கிட்ட இருக்குப்பா , அந்த எண் சரியா பாரு !! சுழியம் சுழியம் ஏழு எட்டு ஆறு ஏழு எட்டு ஆறு ஆறு ஆறு ஆறு !! அதுதானே !! ''


''ஆமானா , இன்னொரு சுழியம் சேர்த்துக்கோங்கண்ணா!! உயர்குடிமை மக்களுக்கு ஒரு சுழியம் கூட்டிருக்காங்கணா , உங்களுக்கு தெரியாதா , முந்தாநாளுதான் நம்ம தினா மின்னொளி செய்திகள்ல வந்துச்சே நீங்க படிக்கல ''


''எங்க தம்பீ , வரவர வியாபாரம் செமையா படுத்திருச்சு , ஏற்கனவே தடை பண்ண புத்தக எண்ணிக்கையே லட்சத்தத் தாண்டும் இப்போ இன்னும் மூணாயிரம் புத்தகத்த தடை பண்ணிட்டாங்க , புத்தகம் விக்க அரசாங்கம் குடுத்துருக்கற இடத்த பார்த்தல்ல , இந்த இடத்துக்கு எவன் வருவான் , அதுவும் இப்பல்லாம் எவன் படிக்கிறான் , அவன் அவனுக்கு அரசாங்க பார்ல தண்ணி அடிக்கவும் விடுதில விபச்சாரிகளோட ................. அதுக்குமே நேரம் சரியா இருக்கு , இந்த ஈனபிழைப்புக்கு நடுவுல எங்க தம்பி மத்த விசயத்த கவனிக்க ''


'' ம்ம் , அண்ணா , ஷங்கி ஒரு புக் கேட்டாணாமே ''


''அது மூணு நாளைக்குள்ள வந்துடும்பா , நீ ரொம்ப நேரம் இங்க இருக்காத , அந்த குற்ற ஒழிப்பு கபோதிங்க வந்துட்டா , உனக்குமட்டுமில்ல எனக்கும் சேர்த்துதான் தண்டனை , தயவு பண்ணி கிளம்பிருங்க தம்பி !! , உங்க நல்லதுக்குதான் சொல்றேன் ''


'' சரினா , என்னோட புக்கும் ஷங்கியோட புக்கும் வந்ததும் என்னோட குடிமை எண்ணுக்கு , எப்பவும் போல உங்களுக்கு பேதினு சேதி அனுப்புங்கண்ணா '' ,

நாட்டின் அனைவரது குடிமை எண் மூலமாய் அரசாங்கம் அவரவருக்கு வரும் சேதிகள் , தகவல்கள் , தத்தமது ஒளிப்பேழையின் மூலம் யாருடன் என்ன உரையாடினாலும் , என எல்லாமே கண்காணிப்பது சில தடைசெய்யப்பட்ட சொற்கள் பறிமாற்றம் கூட பிரச்சனைதான் எனபதும் ஜெக்யூவிற்கு நன்றாக தெரியும் அதனால்தான் இப்படி ஒரு விசேட ஏற்பாடு , பேசி முடித்து கவலைரேகைகள் முகத்திலோட வீட்டை நோக்கி நடக்கலானான் .

ராகவன் அதிபர் நைவத்தின் 100 அடி உயர சிலையின் பின்னால் மறைந்து கொண்டு தேசியக்கொடியிலிருந்து இருநூறாவது அடியில் தனது டைட்டானிய துளைப்பான் துப்பாக்கியை குறிபார்த்து கொண்டிருந்தான் . அம்முறை அந்த அராஜக அதிபரை கொன்றேயாக வேண்டும் .


ஒ.மா.இ நாடு (ஒருங்கிணைந்த மாநிலங்களின் இந்தியா ) தனது நூறாவது சுதந்திர தினத்தை அபரிமிதமாய் உலகத்தின் வல்லரசாய் அதனதிபர் நைவத்தின் சர்வாதிகார ஆட்சியில் கொண்டாடி கொண்டிருந்தது . நூறாவது முறையாக சரித்திர புகழ்வாய்ந்த தில்லியின் செங்கோட்டையில் ஒமாஇ நாட்டின் அதிபர் நைவத் மின்னல் குண்டுதுளைக்காத டைட்டானிய கவசமணிந்து நாட்டின் கொடியை கொடிக்கு ஆயிரத்தி ஐநூறு அடி தூரம் தள்ளி நிற்கும் சிறுநீர் காரில் அமர்ந்தபடியே ஒரு மைக்ரோ ரிமோட்டில் தன் குரலால் ஆணையிட தேசியக்கொடியும் எப்போதும் போல பட்டொளி வீசி பறந்தது . கொடியேற்றதிற்கு பின் காரை விட்டு இறங்காமல் அப்படியே தனது வீட்டிற்கு கிளம்பலானார் . அவரை எப்படியாவது கொன்றுவிட எண்ணி இருபத்தைந்தாவது முறையும் தோல்வியடைந்துவிட்ட ராக்ஸூம் கிருஷூம் விதியை நொந்தபடி அங்கிருந்து தங்களது அதிவேக இரு சக்கர நீர்உருளியை கிளப்பி மீண்டும் தங்களது இயக்க முகாமை நோக்கி பயணத்தை தொடங்கினர் .

'' எங்கடா , போயிருந்த? ''


''ஷங்கி வீட்டுக்குப்பா , ''


அவன் அப்பாவின் கையிலிருந்த ஒளிபேழையில் உள்ளீடாய் வருகின்ற ரத்தழுத்த உண்மைகண்டறியும் மென்பொருள் '' பொய் பொய்'' என அலறியது .


அவன் அப்பாவின் பிணவாடை வீசும் இதுவரை அவனை எப்போதும் அடித்திடாத கைகள் அவன் கன்னங்களில் முத்திரைபதிக்க ஜெக்யூ ''அம்மா அம்மா'' என்று அலறினான் .


அவனப்பா ஒமாஇ யின் அரசாங்க விவசாய சாலையில் சிறைச்சாலையின் மரணதண்டனை குற்றவாளிகளின் உரமாக்கப்பட்ட உடல் கூழை அள்ளிவந்து தனது பணியிடத்தில் சேர்க்கும் வேலை , ஷங்கியின் அப்பாவின் மேற்பார்வையில் தினக்கூலிக்கு பணியாற்றுகிறார் . ஜெக்யூவிற்கு அந்த வேலையை அவனப்பா செய்வது இப்போதெல்லாம் பிடிப்பதில்லை .



'' சரி விடுங்க , இதென்ன இன்னைக்கு நேத்தா முகத்த தொங்க போட்டுகிட்டு வரீங்க ''


''இல்லை தலைவரே , நாங்க சரியாதான் திட்டம் போட்டோம் , ஆனா அவன் காரவிட்டு இறங்கவே இல்ல ''


'' சரி இனிமே இந்த வேலைக்கு நீங்க சரியா வரமாட்டிங்க, நான் வேற ஆள பாத்துக்கறேன், இந்த பண்டில போயி கடைக்கு சப்ளைபண்ணிட்டு , பணத்த வாங்கிட்டு வந்துடு , உங்களோட போலி குடிமை அட்டைய எடுத்துகிட்டிங்கள்ள ?!!'' , தலையை ஆமாம் என்பது போல ஆட்டியபடி பண்டலை தூக்கிக் கொண்டு இருவரும் கிளம்பினர் .


இஒஇ (இந்திய ஒருமைப்பாட்டு இயக்கம் ) ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது , ஆரம்பிக்கபட்ட நாளிலிருந்து இதுவரை நாற்பது மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் , அறுபது வங்கி கொள்ளைகள், இருநூருக்கும் மேற்பட்ட மனித வெடிகுண்டு கொலைகள் என பல்வேறு சட்டவிரோத சம்பவங்களும் அரசாங்கத்திற்கு கண்டுபிடிக்க இயலாத தொல்லையாகவே இருந்தது . பள்ளி மாணவர்கள் பலரையும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புத்தகங்களை மலிவு விலையில் கொடுத்து மூளைச்சலவை செய்து இயக்கத்தின் பல்வேறு வேலைகளுக்கும் பயன்படுத்தினர் . இளம் மூளைகளை சலவைசெய்வது மிக சுலபமாக இருந்தது அந்த இயக்கத்தின் தலைவனுக்கு .


ஒளிப்பேழை ஒலி எழுப்பியது ஜெக்யூ அதை பார்த்து தன் மூளையால் கட்டளையிட அதன் உள்ளிருந்து வந்த புத்தக்கடைகாரனின் ஒளி பிம்பம்


'' வணக்கம் ஜெக்யூ , எனக்கு பேதி '' என்று கூறி மீண்டும் அந்த ஒளிப்பேழையின் உள்ளே விருட்டென்று ஓடி மறைந்து கொண்டது .



தன் ஒளிப்பேழையில் ஷங்கியை அழைத்தான் .


ஜெக்யூவினப்பா வாங்கி தந்த தனது புதிய அதிவேக சூரிய ஒளி மின்னுருளியை முடுக்க அது அந்த அரசாங்க விபச்சார விடுதியின் மூத்திர சந்தில் போய் நின்றது .



'' தோழர்களே , இந்த நாள் நம் இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள் , சிதறுண்டு கிடக்கும் நாம் நம் பாரத தேசத்தின் பழம்பெருமையையும் பண்பாட்டையும் பேணிகாப்போம் , அதற்கு இந்த ஓமாஇ ஒழிந்து இந்திய தேசம் உருவாக வேண்டும் , நமக்கு தேவையான உதவிகளை தர நம் அயல்நாடான மங்கோலியாவும் அதன் நட்பு நாடான சீனாவும் ஒப்புதல் அழித்திருந்தன . இன்று இரவு அவை நம் நாட்டின் தலைநகரை முற்றுகையிட எண்ணியுள்ளனர் , அவர்களது செயற்கோள்கள் ஏற்கனவே தலைநகரை குறிப்பார்த்தபடி தயார் நிலையில் உள்ளது , இன்றிரவு அவை 8.13 மணிக்கு சரியாக தலைநகரை தாக்க உள்ளது , நாளை காலைக்குள் இந்தியாவின் முக்கிய ராணுவ தளவாடங்களும் , செயற்கை கோள்களும் அழிக்கப்பட்டு நாளை நம் மதத்தின் புதிய சாம்ராஜ்யம் இப்பூவுலகில் புதியதாய் பிறக்கும் , இனி பாரதத்தில் சிந்து மதம் மட்டுமே உயிரோடிருக்கும் மற்ற மதங்களும் பின்பற்றுவோறும் உயிரோடு கூட இருக்கலாகாது , வாருங்கள் தோழர்களே நாளை புத்துலகம் படைப்போம் , நாளைய சூரியன் நமக்காய் உதிக்கட்டும் , வாழ்க சிந்து மதம் , வாழ்க பாரதம் , பாரத் மாத கி ஜெ , பாரத் மாதா கி ஜெ '' தனது உரையை முடித்தபடி தனது கையில் தனது லேசர் கத்ததியால் ஒரு கோடிட அதிலிருந்து பொலபொலவென வந்த இரத்தம் அவனை சுற்றியிருந்தோர் மேல் தெளிக்க , பல்லாயிரக்கணக்காண சிந்து மதத்தினர் கூடியிருந்த அந்த சபையே அதையே மறுதலித்தபடி ஓவென ஓலமிட்டனர் . அங்கே பலருக்கும் ரத்தவாடை பிடித்திருந்தது .




'' ஜெக்யூ .. இதோ நீ கேட்ட புத்தகம் , மனுதர்மமும் வர்ணாசிரமும் ''


'' அப்பாடா குடுங்க இப்பவே படிச்சிடறேன் '' கையில் வாங்கியதும் அவனது மூளையிலிருந்த சிப்புகளை அவன் படிக்க தொடங்கு என உத்தரவிட அந்த புத்தகத்தின் சாரத்தை ஐந்து விநாடியில் மூளை உள்வாங்கியது .



அவன் அங்குதான் தடை செய்யப்பட்ட கீதை,ராமாயணம்,மகாபாரதம்,பைபிள் புதிய பழைய ஏற்பாடுகள் , குரான் என மதங்கள் குறித்த புத்தகங்களை படித்திருக்கிறான் .


''என்ன ஜெக்யூ இந்த புத்தகமெப்படி இருக்கு !! ''


அவனது கேள்விக்கு பதில அளிக்க விருப்பமின்றி புத்தக கடைக்காரனிடம் பணத்தை கொடுத்து விட்டு , ஷங்கியின் புத்தகம் வராததால் அவனை அழைத்து கொண்டு பிரமைபிடித்தவனை போல அங்கிருந்து கிளம்பினான் .



போகும் வழியில் தனது வாகனத்தை அந்த விபச்சார விடுதியின் ஆளில்லா பகுதியில் நிறுத்தி ஷங்கியிடம்


'' ஷங்கி நீ என்ன ஜாதிடா '' என கேட்க ,


ஷங்கி தனது ஜாதியை பற்றியும் அவனது முன்னோர்கள் பற்றியும் அவனது மூதாதையர் எழுதியதை பற்றியும் தான் படித்த சில குறிப்புகளை குறிப்பிட்டான் .



இன்னும் நான்கு மணி நேரமே இருக்கிறது, ஓமாஇ மீது தாக்குதல் , தொடங்க அவனுக்கு மனது படபடவென இருந்தது , தனது தெய்வத்தை வேண்டிக்கொண்டான் , அலகு குத்தி தேர் இழுப்பதாய் . அவன் இங்கு வந்து சேர்ந்து இதோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது , வீட்டிலிருந்தும் குற்றதடுப்பு படையிடமிருந்தும் தப்பிக்க அங்கே வந்தவன் இன்று அந்த இயக்கத்தை யாருமே எதிர்பாராத அளவு உயரத்திற்கே இட்டு சென்றிருக்கிறான் . இயக்கத்திற்காய் பல முறை தன் உயிரையும் பணயமாய் வைத்து பல கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறான் . எத்தனையோ கொலைகளையும் , கொள்ளைகளையும் மிகச்சாதரணாமாய் செய்தவனுக்கு இது மிக பெரிய சுமையாய் , முதன்முதலாய் பயத்தையும் கொடுத்தது .

அவன் கனவிலும் எண்ணியிராத அந்தக் கொலை பேச்சில் தொடங்கி கலகமாய் வளர்ந்து சண்டையில் நடந்து இதோ கொலையில் முடிந்து விட்டது ,

அது நடந்து பத்தாவது விநாடியில் சற்றுமுன் ஒளிப்பேழை செய்திகளில் ஜெக்யூ செய்த அந்த கொலைச்சம்பவம் சற்றுமுன்னின் செயற்கைகோள் மூலமாய் ஒளிபிம்பங்களாய் எல்லாரது ஒளிபேழையிலும் வெளிவரத்துவங்கியது , இரும்பு துண்டால் பிளக்கப்பட்ட ஷங்கியின் மூளை தனது சக்தியை முழுவதுமாய் இழக்க குற்ற ஒழிப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு தங்களது அதிவேக காற்றில் பறக்கும் சிற்றூர்தியில் பறந்து வர , ஜெக்யூ தனது ஒளிப்பேழையில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்துபோய் செய்வதறியாது நிற்க , அதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த ஒரு நிழலுருவமவனை அப்படியே இழுத்துக்கொண்டு அந்த இருளான பகுதியில் மறைந்தது .


ஜெக்யூவால் எதையுமே பார்க்க இயலவில்லை , ஒரே இருட்டு , அவனது கண்களில் இனம் புரியாத வலி அவனை ஆட்கொள்ள , அவனால் தன் உடலின் எந்த பாகத்தையும் உணர முடியவில்லை . தன் தலை மொட்டை அடிக்கபட்டது போல உணர்ந்தான் , அவனால் அவனுடலஇன் எந்த பாகத்தையும் உணர முடியவில்லை . தனக்கு என்னாயிற்று , தான் எங்கிருக்கிறோம் கடைசியாய் என்ன செய்து கொண்டிருந்தோம் அவனால் நினைவு கூற இயலாது குழம்பினான் . அவனை சுற்றியிருந்த வெறுமை அவனை ஏனோ அவனால் புரிந்து கொள்ள இயலாத துன்பமாய் , தன் உடலை உணர இயலாத ஜடமாய் .....


சற்றுமுன் உடனடி செய்திகள் , ஓமாஇ யின் மீதான தாக்குதல் உளவு செயற்கைக்கோள்கள் மூலமாய் தடுக்கப்பட்டதாகவும் , அதற்கு காரணாமான அந்நிய நாடுகளின் மீதும் தன் தாக்குதலையும் தொடங்கியுள்ளதாகவும் , இந்த சதியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெக்யூ , ஓமாஇ ஐ கைப்பற்ற தனது இஒஇ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைமையில் செயல்பட்டதாகவும் , நாட்டில் இதுவரை ஒழிக்கப்பட்டிருந்த மதவாத மற்றும் வகுப்பு வாத பிரச்சாரத்தை மீண்டும் மீட்க முயன்றதாகவும் , பல பிற மதத்தினரை ஈவிரக்கமின்றி கொன்றதாகவும் , அது தவிர தன் மதத்தவராக கருதப்படுபவரையும் ஜாதி என்கிற தடைசெய்யப்பட்ட அழிந்து போன மிக பிற்போக்குதனமான முறையால் பிரித்து பார்த்தும் தனக்கு கீழானவராக தன் முன்னோர் எழுதிய புத்தகங்களின் படி பார்த்தும் அவர்களை துன்புருத்தி கொன்றிருக்கிறாரெனவும் , நாட்டை கைப்பற்றும் முயற்சியில் நமது எதிரி நாடுகளான அழிந்து போன சீனாவுடனும் , மங்கோலியாவுடனும் கைக்கோர்த்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு இன்று காலை மக்கள் மன்றத்தில் அவனது மூளை தவிர மற்ற அனைத்தையும் வெட்டி கூளாக்கி விவசாயத்திற்கு உரமாக்குமாறு நமது அதிபர் தீர்ப்பளித்தார் எனவும் நமது உடனடி செய்தித்துறை செய்திகள் தெரிவித்துள்ளன . அவரது மூளை நமது அரசுமின்னிலையத்தின் மின் உற்பத்திக்காக நாளை அனுப்பி வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது . இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன . செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்களது கையடக்க ஒளிப்பேழையின் இலவச சேவையை பயன்படுத்துங்கள் . வாழ்க ஓமாஇ வாழ்க செம்மான் நைவத் .


அந்த அரசுவிபச்சாரவிடுதியின் சுற்றுசுவரின் கிழக்கு பகுதியில் , பான்பராக் கரையும் , சிறுநீர் தடமும் , உபயாகித்த ஆணுறைகளின் குவியல்களினூடே பயணிக்கும் கரை படிந்த சுவர்களின் எல்லையில்தான் இன்னும் அந்த மனுதர்மமும் வர்ணாசிரமும் கிடந்தது அடுத்த ஜெக்யூவின் வருகைக்காக .........

_____________________________________________________________________________________

சிறில் அலெக்ஸ் அவர்கள் அறிவித்திருந்த அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக என் முதல் கதை .