Pages

29 July 2008

கிரிக்கெட்டாயணம் - பிளாஸ்டிக் பால காண்டம்



இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் அது என்றுமே ஏழைகளை எட்டததாலோ என்னவோ எளிமையான கிரிக்கெட் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவி விட்டது .

கிரிக்கெட் விளையாட ஒரு பந்தும் பேட்டும் இருந்தால் போதும் வேறேதும் தேவையில்லை ,

அது முதன்முதலாய் புகுந்தது ஆங்கிலேயனின் வழியாய் இருந்தாலும் இன்று இந்தியாவின் உயிர் விளையாட்டாய் மாறி நிற்கிறது . நம்மில் கிரிக்கெட் விளையாடாத பார்க்காத ஏன் கிரிக்கெட் தெரியாதவர் மிகச்சிலரே . கிரிக்கெட்டும் ஒரு வகை யுத்தம் தான் , யுத்தங்களில் குண்டுகள் எறியப்படுகின்றன கிரிக்கெட்டில் பந்துகள் எறியப்படுகின்றன . இரண்டிலுமே வெற்றி பலசாலிக்கே .



பிளாஸ்டிக் பால காண்டம் :


அறிமுகப்படலம் :



கோவையின் மிக அருகில் இருக்கும் கிராமம் எங்களது செல்வபுரம் . அப்போது எனக்கு ஒன்பது வயது , அப்போதெல்லாம் நாங்கள் தொட்டு விளையாட்டு, ஒளிஞ்சு விளையாட்டு , பம்பரம் , கோலி,டீஞ்சி என ஒலிம்பிக்கில் சேர்க்க முடியாத உன்னத விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்த அற்புதமான மீட்க இயலாத காலம் , அது வரைக்கும் எங்களுக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு இருப்பதும் , அது பிற்காலத்தில் எங்களையெல்லாம் அடிமைப்படுத்த போகிறதென்றும் தெரியாது , முதன்முதலாக கிரிக்கெட்டை எங்களூருக்கு கொண்டு வந்தவர் எங்களூர் கிரிக்கெட் ஆசான் கார்த்திகேயன் , அவர்தான் முதன்முதலில் கிரிக்கெட்டை எங்களுக்கு அறிமுகம் செய்தார் , அப்போது அவருக்கு வயது 12 , அவர் ஒரு முறை சென்னப்பட்டினத்திற்கு சென்று வந்து கற்றுக்கொண்ட ஆட்டமது , ஒரு உடைந்த கட்டையை வைத்துக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பாலையும் வைத்து அவரும் அவரது தம்பி சிவானும் கிரிக்கெட் ஆடுவதை பார்த்து நாங்கள் மிரண்டு போய் பார்த்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையிலே , எங்களையும் அவர் ஆட அழைத்தார் , ஒல்லிக்குச்சி நோபால் வினோத் ,குட்டையான தயிர்வடை மஞ்சு, கட்டையான கறிக்கடை கார்த்தி,கருப்புநிற அக்னி,மனோஜ்,நெட்டையான தமிழ்,குண்டு கோகுல், கமல்,ரவி,முட்டை கார்த்தி , முஸ்தபா,லெனின்,வினி என சிகரெட் அட்டைகள் பொருக்கி டீஞ்சி விளையாடிக் கொண்டிருந்த எங்கள் ஊரின் பிற்காலத்தில் உருவாகப் போகும் ஒரு இளம் கிரிக்கெட் அணி அன்றுதான் பேட்டையும் பந்தையும் தொட்டு பார்த்தது .



பயிற்சிப்படலம் :



கரிபடர்ந்த கட்டை பேட்டும் ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் பாலும்தான் எங்களது முதல் கிரிக்கெட் பயணத்தை தொடங்க உதவியது . கார்த்தி அண்ணன் எங்களுக்கு கிரிக்கெட்டின் அடிச்சுவடிகளை கற்று தந்தார் , அவருடன் தினமும் விளையாட மாலைகளில் அவர் வீட்டு வாசலில் நானும் பிறரும் தவமாய் தவமிருந்தோம் , அவர் வீட்டு சந்து எங்களுடை முதல் மைதானம் , எங்களுக்கு நாள்பட நாள்பட கிரிக்கெட் நுணுக்கங்கள் கைவந்தன . அவர் வீட்டு முற்றம் பவுண்டரியானது , அவர் வீட்டு காம்பவுண்டு சுவர் ஸ்டெம்பாணது.


எங்களுருக்கு அப்போதுதான் டிவியின் வரவு ஏற்பட்டிருந்த காலம் , டிவிகார கவுண்டர் வீட்டில் நாங்கள் கிரிக்கெட்டை முதன் முதலில் பார்த்தோம் . கிரிக்கெட் ஒளிபரப்பாகும் நாட்களில் நாங்கள் பரபரப்பானோம் , நாங்கள் ஆடும் கிரிக்கெட்டுக்கும் அவர்கள் ஆடும் கிரிக்கெட்டுக்கும் ஆயிரம் வித்தியாசங்களை பட்டியலிட்டான் அக்கினி, பிறகு அதை குறித்து மாலை வேளைகளில் எங்கள் தெரு அண்ணாச்சிகடை வாசலில் வரிசையாய் அமர்ந்து அதை எப்படி நமக்கேற்றவாரு எளிமை படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிப்போம் , அண்ணாச்சிகடைக்காரர் பையன் சக்தி அண்ணன் எங்கள் குழுவுக்கு ஆலோசகர் அல்லது ஐடியா மணி ஆனார் , அவருக்கு வலதுகால் போலியோவால் சூம்பி விட்டதால் அவர் ஐடியா மட்டும் தருவார் , அவரால் விளையாட இயலவில்லை அதனால் தானோ என்னவோ அவருக்கு கிரிக்கெட் மிகபிடித்து போனது .



முதல் பந்து :



கார்த்தி அண்ணன் சென்னைக்கு கல்லூரி படிக்க போய்விட்டார் ,அவரோடு அவர் குடும்பமும் பட்டிணத்திற்க் குடி பெயர்ந்தது , நாலு வருடமாய் அவருடன் கிரிக்கெட் விளையாடும் இந்த வருங்கால இந்தியாவின் தூண்கள் இனி என்ன செய்ய போகிறதோ என்ற அச்சம் எங்களுக்குள் ஏற்பட்டது . நெட்டை தமிழ் யோசனை கூறினான் , நாங்கள் தனியாக ஆட ஆரம்பிக்க முடிவெடுத்தோம் , எங்கு விளையாடுவது , பந்துக்கும் பேட்டுக்கும் , என்ன செய்வது , ஒரு கிரிக்கெட் அணி அன்றுதான் உருவானது முட்டை கார்த்தி அன்றுதான் கேப்டனானான் , எங்களுள் அவன்தான் கொஞ்சம் உயரமானவன் , எல்லாரிடமும் பணம் வசூலித்தான் நானும் என் பங்குக்கு என் முப்பது இந்திய பைசாக்களை தந்தேன் , கோகுல் வீட்டிலிருந்து அடுப்பெறிக்கும் கட்டையை களவாடி வந்தான் பேட் தயாரானது , எங்களால் மொத்தமாய் 3 ரூபாயே பந்திற்காக சேர்க்க முடிந்தது , அனைவரும் கோவைக்கு நடைபயணமாய் கிளம்பி ஒரு கடையில் பிளாஸ்டிக் பால் வாங்க முடிவானது . அங்கு போய்தான் தெரிந்தது பந்து 2 ரூபாய் என்று மீதி பணத்தை எங்களது அணி நிதியாக சக்தி அண்ணாவிடம் சேர்க்கப்பட்டது . பந்து என்ன நிறத்தில் வாங்குஙது என எங்கள் வாக்குவாதம் முற்றி கடைசியில் கடைக்காரர் தலைமையில் சாட் பூட் த்ரீ போடப்பட்டு கோகுல் தம்பி கமல் ஆசைப்பட்ட வெளிர் மஞ்சள் நிறம் முடிவானது .

பந்தும் பேட்டும் தயாரானது , விளையாட இடம் வேண்டுமே , இட்லி வினோ ரோட்டில் ஆட இட்லிமாதிரி ஐடியா கொடுத்தான் , மின்விளக்கு கம்பம் ஸ்டம்பானது , விளையாட்டு துவங்கியது . இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டு ஆன் சைடில் மட்டுமை ரன்கள் என்பது போல ஆட ஆரம்பித்தோம் , ஆப் சைடில் சக்தி அண்ணன் கடை இருந்தது . ரோட்டின் குருக்கே ஒடி ரன் எடுக்க வேண்டும் , வண்டிகள் வரும்போது ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும் , பிறகு மீண்டும் தொடரும் , பந்து சாக்கடையில் விழுந்து விட்டால் அடித்தவன்தான் அதிலிருங்கி எடுக்க வேண்டும் ,யார் வீட்டிற்குள்ளாவது அடித்தால் அடித்தவன் அவுட், அவனே பந்தையும் கேட்டு வாங்கி வர வேண்டும் . சாக்கடையில் பந்து விழுந்தால் கழுவ தண்ணீர் அவனவன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கழுவ வேண்டும் . எங்கள் வயது பெண்கள் ( சரி குழந்தைகள் ) அவரவர் வீட்டு வாசலிலும் நின்று எங்கள் ஆட்டத்தை பார்த்து சிரிப்பது எங்களுக்கு ஒரு புது வித இனம் புரியாத மகிழ்ச்சியை கொடுத்தது , என்ன அந்த பெண்கள் முன்னால் சாக்கடையில் இறங்கி பந்தை எடுப்பது மட்டும்தான் கொஞ்சம் இல்லை இல்லை மிக கேவலமாக இருந்தது , அது ஏன் என்று புரியவில்லை எனினும் பிற்காலத்தில் அது புரிந்தது .



டிரையல்ஸ் யுத்தம் :


இப்படியாக ஒரு நாள் கிரிக்கெட் விளையாடுகையில் முதல் பந்தில் மஞ்சு அவுட்டாக , அவனோ அது டிரையல்ஸ் ( ஆட்டம் ஆரம்பிக்குமுன் சும்மா வீசி பார்ப்பது ) என்றும் தான் அவுட்டில்லை என்றும் வாதிட்டான் , அவனணி அம்பயர் அடுத்து பேட் செய்ய ஆசைப்பட்டு அவனுக்கு அவுட் கொடுத்து விட என்ணணி வீரர்கள் வாய்வாதம் செய்ய கடைசியில் ச்சண்டை முடிந்ததென்னவோ அடிதடியில் கார்த்தி அக்கினியை சாக்கடையில் தள்ளி விட அவன் அங்கிருந்த கல்லை அவனை நோக்கி வீச கல் சரியாக அந்த வழியே வந்த என் தந்தையின் மண்டையை பதம் பார்க்க , அவர் தலையில் பொல பொலவென குறுதி காட்டாறு போல பாய்த்தோடியது , நான் அதிர்ச்சியில் உறைந்து அப்பாவை நோக்கி நடக்க மற்றவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துவிட்டனர் .


எனக்கு வீட்டில் உபசரிப்பு பலமாய் கிடைத்தது , அப்பாவோ எங்கள் மீது பரிதாபப்பட்டு எங்களுக்காய் அம்மாவிடம் பரிந்து பேச அப்பா எனக்கு முதன்முதலாய் பரமபிதாவை போல காட்சியளித்தார் .


ஆனால் ரோட்டில் நாங்கள் ஆடும் ஆட்டம் அதோடு நின்று விடும் என எண்ணிய எங்கள் வீட்டு எதிரிகளின் எண்ணம் ஈடேறவில்லை , கோகுல் களத்தில் இறங்கினான் முதல் ஆளாய் அக்கினி என்னிடம் மன்னிப்பு கேட்டான் , முட்டை கார்த்தி படைகளை திரட்டினான் , அருங்கோண வடிவ 20 பைசா சுண்டப்பட(டாஸ்) மீண்டும் அடுத்த யுத்தம் ஆரம்பமானது . பிளாஸ்டிக் பந்து யுத்தம் .