16 August 2008

படிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)

சுயமில்லா இரவிகளில் :

இரவு வேளைகளில் தனியாக சுற்றிதிரிவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , சென்ற ஒரு வாரமாகத்தான் நான் எங்கும் செல்வதில்லை , மனநிலை சரியில்லை , மனதில் வெறுமையின் அளவு மிதமிஞ்சிய அளவுக்கு முற்றியிருந்தே காரணம் ,

அவளை இரவுகளில்தான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல். அநாதைகளின் வெருமைக்கு அர்த்தமில்லை.

எனது வண்டி இதோ ரயில் நிலையத்தை தாண்டிவிட்டது , ரயில்நிலையத்தின் பின்புறம்தான் அந்த பாழடைந்த பழைய பிரிட்டிஷ் காலத்திய கிடங்கு இருந்தது , அங்குதான் அரவு வேளைகளில் சுற்றி திரிய எனக்கு தேவையான போதை கிடைத்தது ,


அங்கு இரவுகளில் சுற்றும் இளமையில்லா விபச்சாரிகளும் , அரவாணிகளும் , கஞ்சா விற்கும் பிச்சைகார வேடதாரி கிழவர்களும் , லாரி ஓட்டுனர்களும் , அங்குள்ள வண்டி கடையில் டீ விற்கும் பெரியவரும் என அந்த இடத்தின் அனைத்தும் எனக்கு தெரியும் ,

அந்த இடத்தில் பல வருடங்களாக சுற்றியதில் கிடைத்தவை இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இவர்களும் இவைகளுமே , அவர்களுக்கும் அவைகளுக்கும் ஆயிரமாயிரம் ஏக்கங்களும் , கனவுகளுகளும் , கதைகளும் எப்போதும் இருந்திருக்கின்றன . அவர்கள் சமுதாயத்தை தங்கள் இந்நிலைக்காக கேள்விகள் கேட்டதில்லை .

கேள்விக்குறிகள் ஏன் வளைந்திருக்கின்றன தெரியுமா , கேள்வி கேட்பவன் என்றுமே இந்த சமுதாயத்தில் வளைக்கப்படுவான் , சுவடுகளின்றி அழிக்கப்படுவான் அதற்குத்தான் அந்த குறியின் கீழ் ஒரு புள்ளியோ?

மஞ்சுளாவை எனக்கு நன்றாகத்தெரியும் , அந்த இருள் நிறைந்த பிரிட்டிஷ் கிடங்கியில் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு சிறிய அறைதான் அவளது வசிப்பிடம் , வயது நாற்பத்தைந்துக்கு மிகாமல் இருக்கும் , விபச்சாரி , ஐந்துக்கும் பத்துக்கும் கூட தன் உடலை விற்பவள் , மிக நல்லவள் , என்னை பார்த்தால் பாக்கு மட்டும் கேட்பாள் , என்னை பல முறை அவள் சுகிக்க அழைத்தும் நான் மறுத்திருக்கிறேன் . அவளது அன்பு மட்டும் போதுமென்றிருக்கிறேன் . என்னால் விபச்சாரிகளை புணர இயலுவதில்லை . இவளை கண்ட பிறகுதான் இப்படி .

இவள் வாழ்க்கையில் சந்திக்காத மனிதரில் இல்லை , எல்லா வகை மனிதனையும் சந்தித்திருக்கிறாள் ,

குட்டை,நெட்டை,குண்டு,ஒல்லி,இளைஞன் ,கிழவன் ,குடும்பஸ்தன்,பிரம்மச்சாரி,வழிபோக்கன்,
பிச்சைகாரன்,பணக்காரன்,பார்ப்பனன்,பகுத்தறிவாளன்,கம்யூனிஸ்ட்,எழுத்தாளன்,அரசியல்வாதி,
முதலாளி,தொழலாளி,விவசாயி...............


சுடுகாட்டில் காணும் சமத்துவத்தை , விபச்சாரியின் யோனியிலும் காணலாமோ? , அவளும் அவளது உடலும் கூட ஒரு சுடுகாட்டை போன்றதுதான் .

அவளது உடலில் போலிஸின் பூட்ஸ்கால்கள் படாத இடமென்று எதுவுமேயில்லை , போலிஸூக்கு காமமென்றாலும் , கடுப்பென்றாலும் இவளது உடலே இறையாக்கபட்டிருக்கிறது.
அவள் கூறும் கதைகளென்றால் எனக்கு மிக பிடிக்கும் , ஆயிரமாயிரம் கதைகள் சொல்வாள் , கஞ்சாவின் மயக்கத்தினூடே அவளது கதைகள் அற்புதமாய் என் மனகண்ணில் விரியும்.

அவளது சிரிப்பிலும் சமயங்களில் கடவுள் தெரிந்திருக்கிறார் . அவளது அரவாணி தோழிகளோடு நானும் பல நாட்களில் மது அருந்தியபடி பேசிமகிழும் வேளையில் இவள் மட்டும் கண்களில் எதோ ஒரு கதை எனக்கு மட்டும் புரியும் படி கூறியிருக்கிறாள் . அக்கதை எனக்கு இப்பொது வரை புரிந்ததே இல்லை.

அவளும் உன்னை போல என்னை போல மூன்று வேளை சோறு தின்று , இச்சமூகத்தில் கவுரமென்னும் சங்கிலியோடு தன்னை பிணைத்துக்கொண்டுதான் வாழ்ந்திருக்கிறாள் . இவளது அழகு ( என் காதலியின் அழகு ) இதோ இவளை பல கழுகுகளின் காமத்திற்கு தீனியாக்கியிருக்கிறது , இன்று அவளை பார்த்தால் அவள் அழாகாய் இருந்திருப்பாள் என்று கூட யாரும் ஒத்துக்கொள்ள முடியாதபடி சமுதாயம் அவளை அழகாக்கியிருந்தது .

அவள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்து சீரழிந்த கதை எல்லாரும் அறிந்த ஒன்றுதான் , சீரழிந்த அவளது வாழ்க்கை மேலும் சீரழிய அவளது அன்பின் தேடலும் ஒரு காரணமாய் இருந்தது , அவளுக்கு சென்னை வரும் முன்பே திருமணமாகியிருந்தது , அவளுக்கும் ஒரு மகனிருந்தான் .


இதோ இன்றிரவும் அவளை ஒரு முறை பார்த்து விட்டு என் தேடலை தொடர வேண்டும் , வண்டியை அந்த பிரிட்டிஷ் கிடங்கின் வாசலில் நிறுத்திவிட்டு , உள்ளே நுழைந்தேன் , அவளில்லை , அறையிலும் ஒன்றுமில்லை , வாசலில் பெரியவரிடம் கேட்டபோது அவள் ஜிஹெச்சில் இருப்பதாகவும் ஒரு வாரமாய் வயிற்றுபோக்கும் , காய்ச்சலுமாய் கிடந்ததாகவும் கூற மனது ஏதோ செய்தது , வண்டியுடன் அறைக்கே திரும்பி விட்டேன் .

அடுத்த நாள் காலை அவளை நேரில் சந்திக்கலாமென மருத்துவமனைக்கு செல்ல , அரை நிர்வாணமாய் பாதி உயிரோடு மருத்துவமனை வாயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தாள் , என் கண்களில் துளிர்த்த கண்ணீருக்கு காரணம் தெரியவில்லை என் கண்களுக்கும் எனக்கும் .
தனக்கு எய்ட்ஸ் என கூறினாள் , இனி பிச்சை எடுக்கத்தான் வேண்டுமெனவும் இனி தன் உடலுக்கு மதிப்பேது என வருந்தினாள் , அவளை என் வண்டியில் அமரசெய்து வீட்டிற்கு கிளம்பினேன் . என்னோடு தங்கிவிட வற்புறுத்தினேன் , அவளும் சரியென்று கூறிவிட , எனது வெகு நாள் தேடல் முடிவுக்கு வந்து விட்டதாய் எண்ணினேன் .

என் தாயும் மஞ்சுளாவை போலத்தான் சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தவள் , இன்று வரை அவளை எந்த சினிமாவிலும் நான் பார்த்ததில்லை , அவளுக்கும் இது போல ஒரு நிலை வந்திருக்குமோ என்கின்ற என் தேடல்தான் இதோ எனக்கு ஒரு புதிய தாயை கண்டறிய உதவியிருக்கிறது , எனது தேடலுக்கு முற்றுப்புள்ளியாய் மஞ்சுளா வந்ததாய்தான் நினைத்தேன் ,


ஒரு மாதம் என்னோடு இருந்து எனக்கு சிறிய உதவிகள் செய்து கொண்டு மிக நிம்மதியாய் மகிழ்ச்சியாய் , தன் வாழ்வில் முதல் முறையாய் நிம்மதியாய் வாழ்ந்தாள் , அவளுக்கு என்ன தோன்றியதோ , ஒரு வெள்ளி கிழமை காணாமல் போய்விட்டாள் .


தெய்வம் எனக்காய் தந்த ஒன்று , காணாமல் போனது , வாழ்க்கையின் இருபது வருடங்களை தனியே கழித்த எனக்கு வெறுமை தெரிந்தது . இரவுகளில் நிறுத்தப்பட்டிருந்த எனது தேடல் மீண்டும் தொடர்ந்தது . இதோ தினமும் தொடர்கிறது எனது தேடல் ,

அவளை இரவுகளில்தான் நான் கண்டெடுத்தேன் , நான் அலைவது தேடலுக்காய் , முற்றுப்பெறாத என் தேடலுக்காய் , பல வருடமாய் தொடரும் என் தேடல் இன்றாவது முற்று பெருமா என்பது போன்ற ஒரு தேடல் .

____________________________________________________________________________________

மண்டை :


அந்த மனிதரை பார்க்க மிக நல்லவர் போலத்தான் இருந்தது ராமிற்கு , இருந்தாலும் தயக்கத்தோடு எப்படி அவரிடம் கேட்பது , அவர் தன்னை தவறாக நினைத்து விட்டால் , ராமிற்கு இது அடிக்கடி எழுகின்ற சந்தேகம்தான் , ஆனால் பேருந்து நிலையத்தின் தனியே நிற்கும் ஒரு ஆணிடம் எப்படி கேட்பது ,

இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க நீல நிற சட்டையும் கையில் ஆனந்த விகடனுமாய் அமர்ந்திருந்த மோகன் ராமை முறைத்து பார்க்க ராமிற்கு வெட்கமாய் இருந்தது ,

ராம் இப்படி ஒன்றை தேடித்தான் பல வருடமாய் அலைந்திருக்கிறான் , ஆனால் இன்று அது அவன் முன்னே , ஆனால் அவனால் அதை பற்றி கேட்க வெட்கம் பிடுங்கியது , மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவானாய்,

அவரருகில் சென்று

'' சார் !! '' என்றான்

அவனை மேலும் கீழுமாய் ஒரு பார்வையை உதிர்த்து விட்டு

''சொல்லுங்க சார்''

''சார் தப்பா நினைச்சுகாதீங்க , ''

'' அட என்னப்பா , தயங்காம கேளு ''

'' இந்த விக் எங்க வாங்கினது , ரொம்ப அருமையா இருக்கே , பார்த்தா நிஜம் மாதிரியே இருக்கே சார் ? சொன்னா நானும் ஒன்னு வாங்கிப்பேன் அதான் ''


கடுப்பான மோகன் விருட்டென அங்கிருந்து நகர , நம் கதாநாயகனும் தனது அரைமண்டையை மறைக்கும் அற்புத விக்கின் தேடலைத்தொடர்ந்தான் .


___________________________________________________________________சென்னை குறித்த அரிய புகைப்படம் : இப்படத்தில் தெரிவது 1925 ஆம் ஆண்டில் கூவம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையமும் .


____________________________________________________________________
வந்தது வந்துட்டீங்க அப்படியே பக்கத்துல கிரிக்கெட்ட விட சிறந்த விளையாட்டா நீங்க கருதும் விளையாட்டு எதுனு வலது பக்கம் ஓட்ட குத்திட்டு போங்கோ .
____________________________________________________________________

14 comments:

முரளிகண்ணன் said...

இதுவும் பல்ப் பிக்சன் வகை எழுத்தா?. உங்கள் பதிவுகளை காட்டிலும் கடைசியில் வரும் மேட்டர்கள் கலக்கல்

வெண்பூ said...

உங்களின் இந்த இரட்டை கதை முயற்சி நன்றாக வருகிறது அதிஷா. முக்கியமாக கதை மட்டுமல்லாமல் எழுதும் நடையும் இரண்டு கதைகளிலும் வித்தியாசத்தைக் காட்டுகிறீர்கள். பாராட்டுக்கள்..

லக்கிலுக் said...

முதல் கதை அருமை.

பாரு நிவேதிதாவுக்கு.. சாரி... சாரு நிவேதிதாவுக்கு நிறைய சிஷ்யர்கள் வலையுலகில் ரெடி!!!

உண்மைத்தமிழன் said...

தம்பி அதிஷா

நீயும் ஜோதில ஐக்கியமாயிட்ட போலிருக்கு.. முதல் கதையின் அலங்காரம் படிக்க வைத்தது.. கிறங்க வைத்தது..

தொடரட்டும்..

Anonymous said...

தம்பி அதிஷா

நீயும் 'ஜோதி'ல ஐக்கியமாயிட்ட போலிருக்கு.. நிறைய பிட்டு படங்களை பார்த்து எனக்கும் அஜால் குஜால் கதைகள் நிறைய சொல்லவும். நானே பார்த்திராத அஜால் குஜால் படங்களை நீ நிறைய பார்க்க வாழ்த்துக்கள்..

தொடரட்டும்..

வெண்பூ said...

வாங்க உட்டாலக்கடி தமிழன். நீங்க யாரோ எவரோ தெரியாது, ஆனால் உங்கள் கமெண்ட்கள் பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. ஆனால் ஒரு சில சமயம் அவை வரம்பு மீறுவதுதான் சிறிது முகம் சுளிக்க வைக்கிறது. நல்ல ஹீயுமர் சென்ஸ் உங்களுக்கு, உண்மைத் தமிழனை மட்டுமல்லாமல் எல்லோரையும் நீங்கள் கும்மலாம், என்னையும் சேர்த்துதான். நல்ல பொழுதுபோக்காக இருக்கும்.

அதிஷா... சொல்ல மறந்துவிட்டேன். புதிய டெம்ளேட் நன்றாக, அழகாக‌ இருக்கிறது.

Unknown said...

முரளி அண்ணா வாங்க வணக்கம் ,

அண்ணா என்ன இப்படி சொல்லிட்டிங்க , அப்ப இனிமே பதிவுக்கு பதிலா கடைசி மேட்டர மட்டும் போடவா?

Unknown said...

மிக்க நன்றி வெண்பூ

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிஷா... கலக்கிட்டிங்க... முதல் கதை சூப்பர். வாழ்த்துக்கள்...

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு முதல் கதை. பாராட்டுக்கள்.

Sundar சுந்தர் said...

ரெண்டு நல்ல வித்தியாசமான கதைகள். முதல் கதை கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்ன்னு தோணுது.

மோகன் கந்தசாமி said...

அதிஷா,
இது புகைப்படமா? அல்லது ஓவியமா?

வானவன் மாமகன் said...

வாழ்த்துக்கள் நண்பரே, உங்கள் உயரம் உங்களை தொட..வாழ்த்துக்கள் நண்பரே.

வானவன் மாமகன் said...

முடி கொட்டுனவன் பூரா மூலக்காரங்குறது நிருபிச்சிட்டீங்க நண்பா..