Pages

18 September 2008

காலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை

காலமும் காதலும் காதலின் காலனும் -










காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை .

அவனையும் அவளையும் அது அப்படித்தான் அழைத்துச்சென்றிருக்கிறது , அவள் பூப்பெய்தி இருபது வருடங்களுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அத்தனையையும் எப்படித்தான் பொருத்துக் கொண்டதோ அந்த உடல் ,

காமத்தில் நகக்கீரல்களும் வலியும் அழகானாதாம் யாரோ ஆணாதிக்க கிழட்டு கவிஞன் பாடிச் சென்ற வரிகளின் அர்த்தம் அவளிதுவரை உணர்ந்ததில்லை , அவள் மேல் விழுகின்ற நகக்கீரல்களும் அவள் மேல் விழுகின்ற உடல்கள் தரும் எடையின் வலியும் அவளுக்கு என்றுமே சுகமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை , அதை ஒரு ஆணால் மட்டுமல்ல கணவனுடன் காமத்தில் கரைகண்ட எந்த குடும்ப பெண்டிரும் உணர இயலாத உயிரின் வலியது .

காதோரம் நரையும் முகமெல்லாம் மஞ்சளும் உதட்டில் சாயமும் தலையில் மல்லிகையும் சோம்பிய உடலும் கரைபடிந்த பற்களுமாய் அவளை எங்கும் காணலாம் . அவள் நம்மை சுற்றி எப்போதும் அலைபவள் . அதற்கென பிறக்காவிட்டாலும் அதற்காய் தயாராக்கப்பட்டவள் , கல்வியின்றி கலவி மட்டும் பயின்றவள் , இப்பெண்கள் பூப்படையாமலிருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் , காம மிருகங்கள் அப்போதும் புணர காத்திருக்கும் வாசலில் .

அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அந்த சாந்தி திரையரங்க பேருந்து நிருத்ததில் , தினமும் காலையில் ஒன்பது மணிக்கு பேருந்தில் ஏறி பத்து மணிக்கு அலுவலகம் சென்று ஆறு மணிக்கு மீண்டும் பேருந்தில் அடைக்கலமாகி மீண்டும் வீட்டை அடையும் நகரத்தின் கோடி இயந்திரங்களில் அவனும் ஒருவன் , பேருந்து நிலையத்தை ஒட்டிய அந்த நடைபாதை சுரங்க பாதையில் நின்ற படி போவோர் வருவோரை கண்களால் அழைத்து காசு பார்க்கும் அவள் இவனை அப்படி என்றுமே பார்த்ததில்லை , இவனுக்கு அதுவே அவள் மேல் மையல் வர காரணமாயிருந்தது .

அவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட அது , காதலா? காமமா? அல்லது மையலா? புயலா? எதுவோ ஒன்று மையம் கொண்டு அவனை தாக்கியிருந்தது .

காசு கொடுத்து காமம் தேடுபவன் என்ன காதலுடனா காமம் கொள்வான் , அவளை பூப்போல் புணர , அவன் காதலிக்க தொடங்கிய போதிருந்த அந்த காகிதப்பூ பலரது கைகளாலும் கசக்கப்பட்டு வாடியிருந்தது இப்போது , அவன் அவளது உடல் அவனுக்கொரு பொருட்டாய் இருந்ததில்லை , இவனும் ஒரு நாள் வாயைவிட்டு சொன்னான் உன் மேல் எனக்கு காதல் என்று , அவளால் பேச இயலாமல் எதோ தடுத்தது , பிறகு சரியென்றாள் . காதலித்தாள் .

பெரியாரென்றான் பகுத்தறிவென்றான் , அம்பேத்கரென்றான் , காதலென்றான் , அன்பென்றான் , கதை சொன்னான் , இதமாய் முத்தம் தந்தான் , இதயத்தில் நீ என்றான் , கடல் காட்டி முத்தமிட்டான் , காந்தி சிலையோரம் காற்றோடு கவிதை சொன்னான் , குடும்பம் பற்றி கவலையில்லை தனக்கு குடும்பமே இல்லையென்றான் , குழந்தைகள் வேண்டுமென்றான் , குடும்பத்தலைவியாய் ஆக்குவேனென்றான் , மடியில் படுக்கவைத்து பாடி மகிழ்வித்தான் , காதோரம் கிசுகிசுத்து அவளை கற்பனையில் மிதக்கவிட்டான்.

ஊருக்கு ஒதுக்குபுறமாய் யாருமில்லா தனிமையான விடுதியின் அறையில் அவனது தோளில் சாய்ந்து கொண்டு என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்றாள் , செய்வேன் என்றான் ஒற்றை வார்த்தையில் , அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் எப்போதும் இருந்தது , அவனுக்கு நம் உடல் மட்டும்தான் தேவை என்பதைப்போல , அவளது ஆண்களின் உலகம் துரோகிகளின் உலகம் , இவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து தொழிலுக்கும் போக இயலாமல் சாப்பாட்டிற்கும் மற்றதுக்கும் இவனை நம்பி அவன் தரும் சொற்பத்தில் இன்பம் கண்டு இன்று அவனுக்கு தன்னையே முழுமையாய் தரப்போகும் வேளையில் இப்படியொரு எண்ணம் அவள் மனதில் பாலில் ஒரு துளி விஷமாய் , அவன் சந்தேகமா என்றான் , இல்லை என்பது போல மறுத்தவளின் கண்களில் கண்ணீர் தன் சோகங்கள் தீர்ந்ததாய் . அவள் தனது உள்ளத்தை முழுமையாய் தந்தாள் , காமம் இல்லா உலகத்தில் வாழ்வதாய் , வெறிநாயாய் மேலே பாய்ந்து பிரண்டும் காமமில்லா உலகத்தில் வாழ்வதாய்....

காமம் முற்றி காதல் ஆகும் கண்களின் உலகத்தில் இவன் காதல் முற்றி காமமானது , அவனும் புணர்ந்தான் காதல் கிழிய புணர்ந்தான் ஆணுறை கிழியாமல் .

கதவு தட்டும் ஓசை கேட்க திறந்தால் காவலன் அவள் காதலின் காலன் , அவன்கள் தப்புவதும் அவள்கள் சிக்குவதும் நம் நாட்டில் காலம்காலமாய் நடப்பதுதானே , காலம் இருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்து சென்றது .

பல வருடங்களுக்கு பிறகு அதே சாந்தி திரையரங்க பேருந்துநிறுத்தம் , வருவோர் போவோரை கண்களால் அளந்த படி அவள் , காதோரம் நரைத்து விட்ட முடியை சரி செய்தபடி , நான் கேட்டேன் அவனை அதன்பிறகு நீங்கள் பார்க்கவில்லையா என்று , சிரித்தாள் , சதை கேட்கும் அவளிடம் கதை கேட்கும் பைத்தியம் போல் என்னை பார்த்தாள் .

பிரிதொரு நாள் அதே அவன் அதே அவள் , அவனுடன் அவனின் அவளும் , இவன் இருவராய் , அவள் ஒருத்தியாய் , அவன் வாழ்க்கையின் தேடலில் தீவிரமாய் அடுத்த பேருந்துக்காய் இவளை பார்க்காதது போல தனது பணப்பையை இருகப்பிடித்தபடி நிற்க , அவளும் அவனை பார்க்காதது போல அவளின் இன்றைய அவனாய் ஒரு பிச்சைகாரனிடம் பேரம் பேசியபடி , அவளுக்கு அவனது முகம் அருவருப்பாய் அவனுக்கும் அவளது முகம் அப்படியேவும் .

அவன் தினமும் வெறுப்புடனும் இன்பமில்லாமலும் இயந்திரம் போல் வாழ்க்கையையும் அவனின் அவளையும் காதலையும் புணர்ந்தபடி காதலையும் காலத்தையும் அவளையும் மறந்தவனாய் ,

அவள் எச்சில் பண்டமாய் தெருவோர நாய்களின் பசிக்குணவாய் வாயோரம் வழியும் புகையிலையினை துடைத்து கொண்டு பேரம் பேசிய படி இன்றும் நாளையும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த நாளும் ஓயும் வரை , இவர்களில் யார் இதற்கெல்லாம் காரணம் என புரியாமல் இவையெல்லாம் எதற்கு என தெரியாமல் கதை புரியாத நான் .

____________________________________________________________________

பட உதவி - மின்னஞ்சல் நண்பர்.