Pages

04 September 2008

புனித ரமலானும்,விநாயகர் சதுர்த்தியும் ஒரு தவளையின் பிரார்த்தனையும்....



தவளையின் பிரார்த்தனை :



அந்த மதகுருவுக்கு இரவு பிரார்த்தனை என்றால் மிக பிடிக்கும் , முன்னிரவுகளில் தொடங்கும் அவரது பிரார்த்தனை விடியும் வரை கூட தொடர்வதுண்டு , இரவெல்லாம் இறைவனை வேண்டி மிக அதிக சத்தத்துடன் துதி பாடல்களை பாடுவார் , ஆனால் கடந்த மூன்று நாட்களாக மட்டும் அவரால் அப்படி பிரார்த்தனை செய்ய இயலவில்லை , அதற்கு காரணம் அவரது வீட்டிற்கு அருகில் புதிதாய் முளைத்த குளத்தில் இருக்கும் தவளையின் கொர் கொர் சத்தம் .


அவரும் பல முறை அந்த குளத்தை நோக்கி கத்தி பார்த்தார் , '' ஏ தவளையே என்னை நிம்மதியாக இருக்கவிடு '' என்று பல முறை கூறியும் , இவர் ஒவ்வொரு முறை கூறும் போதும் அந்த திமிர் பிடித்த குட்டி தவளை மேலும் பலமாக கத்தி அவரை எரிச்சலூட்டியுது ,


அன்று மிக முக்கியமான ஒரு பிரார்த்தனை நாள் , அவரால் அந்த தவளையின் சத்தத்தில் முழுமையாய் அந்த பிரார்த்தனையை செய்ய இயலாமல் போகவே அவர் இறைவனிடம் அந்த தவளை குறித்து கடிந்து கொண்டார் , திடீரென அந்த அறையில் அசரீரியாய் ஒரு குரல்


''சொல் உனக்கு என்ன வேண்டும் ''


''யார்ரா அது''


''மானிடா நான்தான் எல்லாம் வல்ல இறைவன் ''


''ஐயய்யோ சாமி நீங்களா ''


''ஆமாம் ஏன் என்னை அழைத்தாய் ''


''சாமி மூணு நாளா என்னால என்னோட பிரார்த்தனைய சரியா பண்ண முடியல , பக்கத்து குளத்தில இருக்கற ஒரு குட்டி தவளை ரொம்ப தொந்தரவு குடுக்குது , எப்படியாவது அத ஊமையாக்கிருங்க ''


''அடப்போங்கடா , நீங்களும் உங்க பிரார்த்தனையும் , அந்த தவளையும் மூணு நாளா இதத்தான் எங்கிட்ட கேட்டு பிரார்த்தனை பண்ணிகிட்டு இருக்கு ''


என்று கூறி டமார் என மறைந்து போனார் .

_________________
___________________________________________________


(கதைக்கரு - அந்தோணி டி மெல்லோ .. அவரது தவளையின் பிரார்த்தனை கதை நிறைய மாற்றங்களுடன் ) . இக்கதை பிரார்த்தனை குறித்த நம் நம்பிக்கைகளை தகர்த்தெறிய வல்லது , ஊன்றி படித்தால்.

____________________________________________________________________


இன்று செப்டம்பர் ஐந்து இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் அமரர் . டாகடர்.சர்வேபள்ளி ராதாகிருஷணன் பிறந்த நாளையொட்டி கொண்டாடப்படுகிறது .


தெய்வத்தை விட உயர்ந்த மதிப்புடைய , நமது வாழ்க்கையின்ஏணிப்படிகளாய் நமக்கு அறிவு புகட்டிய ஆசான்களை இன்றைய நாளில் மட்டுமல்லாது எந்த நாளும் வணங்குவோம்.

_________________________________________________________________


இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் . இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து அவர்களுக்கெதிராய் கப்பலோட்டி தமிழினத்திற்கே பெருமை சேர்த்த அவரை இன்றைய தினத்தில் நினைவு கூர்வோம்.


_________________________________________________________________