Pages

16 September 2008

பொய் சொல்லப் போறோம் : சரக்கு பழசு ஸைடிஸ் புதுசு !!!



சமீபத்தில் 1970களில் வெளியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படங்களிலும் 1980களில் வெளியான் பெரும்பாலான மசாலா படங்களின் ( உதாரணம் : சகலகலா வல்லவன் ) கதைக்கருவை எடுத்துக்கொண்டு , மிக அற்புதமான நகைச்சுவையோடு துளியும் ஆபாசமோ வன்முறையோ இரட்டை அர்த்த வசனங்களோ இன்றி குடும்பத்தோடு அனைவரும் கண்டு ரசிக்கும்படி வந்துள்ள மற்றும் மிகச்சமீபத்தில் வெளியான அருமையான படங்களின் வரிசையில் நிச்சயம் '' பொய் சொல்லப் போறோம் '' படம் இருக்கும்.

இந்த படம் கோஸ்லா கா கோஸ்லா என்னும் இந்திபடத்தினை தழுவி எடுக்கப்பட்டது என படம் துவங்கியதுமே காட்டிவிடுகின்றனர் .

டைட்டில் போடும் போதே இயக்குனர் அசத்த ஆரம்பித்திருக்கிறார் ,அழகான சில பொய்களின் படங்களுடன் படம் துவங்குகிறது .

( புல்தின்னும் புலி , செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பீரங்கிகள் , பின்லேடனுடன்
கை குலுக்கும் புஷ் , 2ரூபாய்க்கு பெட்ரோலும் 1 ரூபாய்க்கு டீசலும் விற்கும் பங்க் etc etc... )


ஒரு சாவு வீட்டில் நடக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்களுடன் படம் துவங்குகிறது . ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் சொந்த வீட்டு கனவும் அதனால்அவர்கள் ஏமாற்றப்படுவதும் அந்த இழப்பிலிருந்து அக்குடும்பம் எப்படி மீண்டது என்பதை சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் மிக அருமையான திரைக்கதையுடன் படமாக்கிய இயக்குனர் விஜயை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் . படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனுக்கும் வயிற்றில் பொறி பறக்க செய்யும் , இரண்டாம் பகுதி முழுவதும் ஒவ்வொரு காட்சியும் எப்படி முடியப்போகிறதோ என்கிற ஒரு சஸ்பென்ஸுடன் படம் நம்மை சீட்டின் நுனிக்கே வரவழைக்கின்றன . அதுவும் வில்லன் நாசரை ஏமாற்ற சதி செய்து ஒவ்வொரு பிளானிலும் சொதப்பி விடுவார்களோ என்கிற ஒரு பயத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனின் மனதிலும் பதிய விட்டுள்ளனர்.

படத்தில் நடித்துள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் தனிதனி குணாதிசயத்தை வைத்து அப்பாத்திரங்களும் அதற்கேற்ற படி நடித்திருப்பதும் படத்தின் மிக பெரிய பலம் .
பல நாட்களுக்கு பிறகு மௌலி , படத்தின் ஹீரோ அவர்தான் என்றால் மிகையாகாது , அவரது இயல்பான நகைச்சுவை நடை அப்பாத்திரத்திற்கு மட்டுமல்ல படத்திற்கே அழகு. அவரது டைமிங் காமெடியும் அலட்டலில்லாத நடிப்பும் முகபாவனைகளும் வெடிச்சிரிப்பை தருகிறது . செண்டிமென்ட் காட்சிகளில் மனுஷன் கலக்குகிறார்.

படத்தின் இன்னொரு ஹீரோ நாசர் பாடி உடலசைவு மொழியில் அசத்துகிறார் , அதுவும் பெண்களை பார்த்தால் அவர் செய்யும் சேட்டைகளில் தியேட்டர் அதிருகிறது . குடித்துவிட்டு அவர் செய்யும் ரகளைகள் கட்டாயம் யாரையும் சிரிக்க வைக்கும்.

படத்தின் மற்றுமொறு முக்கிய பாத்திரத்தில் நெடுமுடிவேணு ( இந்தியன் படத்தில் சி.பி.ஐ ஆபீசராக வருவார் ) படம் முழுக்க அவரை சுற்றியே வருகிறது , அப்பாவி நடுத்தர வர்க்க குடும்பஸ்தனை கண் முன் நிறுத்துகிறார் . அதுவும் அவரது இயலாமை குறித்த காட்சிகளில் மிக சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார் . ( நம்மவர்கள் இது போன்ற நல்ல நடிகர்களை சரியாக கவனிக்கவில்லை போலும் , அப்பா வேடமென்றால் சமீபகாலமாக விஜயகுமாரையும் ராஜ்கிரணையும் பார்த்து சலித்தவர்களுக்கு ஒரு நல்ல மாறுதல் ).

வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வேடம் மட்டுமே போட்டு வந்த கார்த்திக்கு இப்படத்தில் ஹீரோ வேடம் , உம்மனாமூஞ்சி அல்லது ஊமைகுசும்பு கணினி பொறியாளர் வேடம் , அசத்துகிறார் . நாயகி புதுமுகமாம் நன்கு நடிக்கவும் செய்கிறார் ( குரல் மிர்ச்சி சுச்சி - கார்த்தியின் நிஜ ஹீரோயின் )

இது தவிர பிக் பாலாஜி, பாஸ்கி,ஓம் ( புதுமுகம் ஆசை அஜித்குமாரை நினைவூட்டுகிறார் ) , கொச்சின் ஹனீபா , டெல்லிகணேஷ் , நாசரின் உதவியாளராக வருபவர் என பலரும் நகைச்சுவையை அள்ளி கொட்டுகிறார்கள் .

படத்தின் பல காட்சிகளிலும் நகைச்சுவை துணுக்குகளை தெளித்திருப்பது நல்ல யுக்தி , அதே போல் பாடல்களை படத்தின் நடுவில் இடைஞ்சலாக இல்லாமல் படத்தின் ஓட்டத்தில் கலந்து தந்திருப்பதும் .

கண்ணை உருத்தாத ஒளிப்பதிவு ( அர்விந்த் கிருஷ்ணா - அவரும் படத்ததில் கௌரவ வேடத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் ) , நேர்த்தியான எடிட்டிங் , எரிச்சலூட்டாத பிண்ணனி இசை என படத்தில் பணியாற்றிய அனைவரும் மிக அருமையாக பணியாற்றியுள்ளனர் .

படத்தின் மைனஸாக நான் கருதுவது படத்தின் பல காட்சிகள் நாடகப்பாணியில் இருப்பதும் , சில நீளமான செண்டிமெண்ட் காட்சிகளும் , மனதில் ஒட்டாத பாடல்களுமே .

மற்றபடி எல்லாமே பிளஸ்தான் , அதனாலேயே என்னவோ படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது . படம் முழுக்க வியாபித்திருக்கும் இளமை துள்ளல் ம்மற்றும் ஒரு சிறப்பு .

பல நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்பத்தோடு பார்க்க தகுந்த ஒரு நகைச்சுவை படம் தந்த இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள் , அவரது முந்தைய படமான '' கீரிடம் '' நூறு மடங்கு இந்த படம் சிறப்பாக உள்ளது .

ஆனால் இந்த படம் எந்த அளவிற்கு வெகுஜன மக்களுக்கு பிடிக்கும் என்பது கேள்விக்குறியே , இப்படம் நிச்சயம் '' சி '' கிளாஸ் மக்களை கவருவது கடினம் என்பது அடியேனின் கருத்து . மற்றபடி இது ஏ & பி ரசிகர்களை கவரும் .

இப்படம் மென்மையான நகைச்சுவையை ரசிக்கும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை . தமிழில் இது போன்ற நகைச்சுவைப்பட முயற்சிகளை 1960களில் வெளியான பாலச்சந்தரின் படங்களுக்கு பிறகு யாரும் முயற்சிக்காத நிலையில் இப்படம் அந்த குறையை போக்குகிறது .

மொத்தத்தில்

பொய் சொல்லப் போறோம் - அழகான கவிதையில் பொய்
42/100
____________________________________________________________________________
புகைப்பட உதவி : indiaglitz.com