Pages

13 November 2008

சட்டக்கல்லூரி மாணவர்களின் வன்முறை


இந்தியாவின் வருங்கால தூண்களாம் இவர்கள்... இவர்கள் கையில் சட்டத்துறையை கொடுத்தால் நாளை இந்தியாவின் நீதித்துறை என்ன கதியாகும் . இவர்களுக்குள் இத்தனை வன்முறை எங்கிருந்து வந்ததது . பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் போலீசும் பார்த்துக்கொண்டிருக்க ஒரு சக மாணவனை ஈவிரக்கமின்றி அடித்து அம்மாணவன் சுயநினைவின்றி கிடக்கையிலும் கூட அவனை விடாமல் இரும்பு கம்பிகளாலும் உருட்டுக்கட்டைகளாலும் அடிக்கும் அளவுக்கு ஏன் இந்த வன்முறை ... அம்மாணவர்களின் கண்களில்தான் எவ்வளவு வன்மம் ... இதை ஏன் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த போலீசும் பார்த்துக்கொண்டிருந்தது , அக்கல்லூரி முதல்வர் அந்நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ...

இப்படி பல கேள்விகள் நேற்று தொலைக்காட்சி செய்திகளை பார்க்கையில் மனதில் எழுந்தது , சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களின் இரண்டு பிரிவினரிடையே நடைபெற்ற இந்த வன்முறையில் இரண்டு மாணவர்கள் இன்று உயிருக்கு போராடி வருகின்றனர் , ஒரு மாணவனின் காதறுந்து கிடக்கிறான் .

பொதுவாகவே சட்டக்கல்லூரி மாணவர்களிடையே இது போன்ற கோஷ்டி மோதல்கள் சகஜமாக நடப்பது என்றாலும் நேற்றுதான் முதல்முறையாக அது செய்தி ஊடகங்களின் வழியே வெளி வந்திருக்கிறது .

கடந்த 30 ஆம் தேதி ஒரு முக்கிய தேசிய தலைவரின் பிறந்தநாள் விழாவிற்கு போஸ்டர் ஒட்டும் போது தங்களது கல்லூரியின் பெயரை ( டாக்டர்.அம்பேத்கர் சட்டக்கல்லூரி ) என்று முழுமையாக போடாமல் வெறும் சென்னை சட்டக்கல்லூரி என்று போட்டதாகவும் அதனால் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் மூன்றாம்ஆண்டு மாணவர்களுக்கும் இடையை மோதல் இருந்ததாக கூறப்படுகிறது . இவ்விடயம் நேற்று உச்சத்தை அடைந்து இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் பலர் நேற்று தேர்வெழுத வந்த மூன்றாமாண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் . அதில் பல மாணவர்களும் தப்பி ஓடிவிட நான்கு மாணவர்கள் மட்டும் இந்த வெறி கும்பலிடம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது . அந்த நால்வரை இரும்புகம்பி,கற்கள்,கத்தி, மண்வெட்டி முதலான ஆயதங்களோடு தாக்கியுள்ளனர் . இச்சம்பவம் நடக்கையில் இப்படி ஒரு பிரச்சனை இன்று ஏற்படுமென தெரிந்து அங்கு வந்திருந்த போலீசார் அந்த மோதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது , அதிர்ச்சயளித்தது .

ஆனால் பொதுவாகவே சட்டக்கல்லூரிகளில் நடக்கும் இது போன்ற பிரச்சனைகளில் தலையிடும் போலீசார் மீதே பிரச்சனையை திசைதிருப்பி விடும் மாணவர்கள் நம் சட்டக்கல்லூரி மாணவர்கள் . இப்பிரச்சனையில் போலீசார் நுழைந்து அதை தடுக்க முயன்றிருந்தால் நமது பத்திரிக்கையாளர்களும் போலீசார் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் என்று செய்தியை மாற்றியிருப்பார்கள் . சட்டக்கல்லூரி மாணவர்களை அடித்தால் நமது வழக்கறிஞர்களும் ஐயகோ என முறையிட்டு நீதிமன்ற வாயிலில் கொடி பிடித்து உட்கார்ந்து கொள்வர் .

இரண்டாவது இப்பிரச்சனை சாதீயரீதியிலான மோதலாகவும் இருக்கிறது . மாணவர்களிடையே எப்படி பரவியது இச்சாதிவெறி . இன்று சட்டக்கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணக்கர்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவர்களும் ஆதிதிராவிட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருமே ஆவர் . இவர்களில் பலருக்கு பின்னும் பல சாதீய அமைப்புகளின் பின்புலம் இருப்பது அதிர்ச்சியான தகவல் .

நேற்று உண்டான மோதல் கூட ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கிப்படிக்கின்ற மாணவர்களாலேயே நடத்தப்பட்டதாக தெரிகிறது . இப்பிரச்சனை மேலும் வலுவடையும் பட்சத்தில் இது சாதிப்பிரச்சனையாகவும் உருவாகலாம் . தென்தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று சாதிக்கலவரங்கள் நடைபெறுகிறதென்றால் அதற்கு அவர்களது அறியாமையும் படிப்பறிவின்மையுமே காரணமாக கருதலாம் . ஆனால் இன்று சட்ட கல்லூரியில் பயிலும் இம்மாணவர்களிடையே நிலவும் இச்சண்டைகளும் மோதல்களும் இச்சாதிக்கலவரங்களின் காரணிகளின் ஆணிவேர் வேறெதுவோ என எண்ணத்தூண்டுகிறது .

நாளைய வழக்கறிஞர்களாக ஆக இருக்கும் இம்மாணவர்கள் இப்படி சட்டத்தை சிறிதும் மதிக்காமல் , போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஒரு சக மாணவனை இது போல அடித்து நொறுக்குவதை காணும் போது , நமது நீதித்துறையின் எதிர்காலத்தை நினைத்து பார்த்தாலே இருள் சூழ்கிறது .

நமது அரசு இப்படிப்பட்ட பிரச்சனைகளில் தலையிடாமல் மெத்தனமாக இத்தனை ஆண்டுகளாகவும் இருந்து வந்திருக்கிறது . என்றாவது ஒரு நாள் இது போன்ற பிரச்சனையால் ஒரு உயிரிழப்பு ஏற்படும் வரை அது தொடருமோ என்றே தோன்றுகிறது . நமது ஊடகங்களும் கூட உயிரிழப்பு என்ற ஒன்று ஏற்படாதவரை இது போன்ற பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை . ராகிங் பிரச்சனையிலும் கும்பகோணம் பிரச்சனையிலும் உயிரிழப்புகள் ஏற்ப்பட்ட பிறகே நம் அரசு இதை தடுக்க முன்வந்தது . இப்பிரச்சனையிலாவது இது போன்ற ஒரு சாவு நிகழ்வதற்கு முன் இப்பிரச்சனையில் தமிழகஅரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். கல்லூரிகளின் விதிமுறைகள்

இந்நிகழ்வை வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்த போலீசுக்குத்தான் _______ என்றால் பொதுமக்களாவது கண்முன்னே நிகழும் கொடூரத்தை தடுக்க முயன்றிருக்கலாம் . எது நடந்தாலும் அதை கூடி நின்று சுற்றிப்பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் மக்களும் கொஞ்சம் மாறவேண்டும் . சாதீகள் இல்லா சமுதாயம் அமையும் வரை இது போன்ற சாதீய வன்முறைகளும் கலவரங்களும் இருந்து கொண்டுதானிருக்குமோ ...?