Pages

27 December 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி.(5) - கண்ணகிகளின் மெரினா பீச்!!



என் செல்லக்குட்டிக்கு,

உங்கள் பெயர் எனக்குத் தெரியாது . ஆனால் உங்களை எனக்குத் தெரியும் . பல முறை உங்களை சந்தித்திருக்கிறேன் . பேசியிருக்கிறேன் . உங்களை என்னையும் அறியாமல் காதலிக்க துவங்கிவிட்டேன். நீங்களும் என்னை காதலிப்பதாய் உணர்கிறேன் . இதுவரை என்னை காதலிக்கவில்லை என்றாலும் இனி என்னை கட்டாயம் நீங்கள் என்னை காதலிப்பீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது , என்னால் எதிலும் கான்சன்ட்ரேட் செய்ய முடியாமல் தவிக்கிறேன். என்னை நீங்கள் காதலிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வேன் என்று இதுவரை யோசிக்ககூட இல்லை . நிச்சயம் செத்துவிடுவேன்.

ஐ லவ் யூ டா குட்டிமா...
இப்படிக்கு,

தங்கள் மேல் அளவில்லா

காதலுடன்

நித்யா.

(கூவம் ஆற்றங்கரையில் கரையொதுங்கிய ஈரமான காகிதத்தில் எழுதப்பட்டிருந்தவை)


**********************

மெரினா பீச் , ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று .. காணும் பொங்கல் . அவளுக்கு அன்று பீச்சில் டியூட்டி . போலீசுக்கு மட்டும் விழாவும் விடுமுறைகளும் கிடையாது போலும் . கையில் ஒரு லட்டியுடன் மணலை நோண்டி நோண்டி விமலாவுடன் நடந்தபடியிருந்தாள். எதுவுமே பேசாமல் கடலையே பார்த்தபடி கடற்கரை ஓரத்தில் இருவரும் நடந்தபடியிருந்தனர். நித்யா அங்கிருந்த குடும்பங்களை ஏக்கமாக பார்த்தபடி இருந்தாள்.

''நித்து என்னடி , ஒன்னும் பேசாம வர ''

''ஒன்னுமில்லடா , அவன் நியாபகமாவே இருக்கு ''

''அவன் யாருனே தெரியாது , அவன் எங்கருக்கான் , யாரு ஒன்னும் தெரியாது , என்னங்கடி உங்க காதல் , கக்கூஸ் காதல் !! ஏதாவது தெரிஞ்சுக்க முயற்சியாவது பண்ணியா''

''இல்லடா, அவன்கிட்ட என்னோட லவ்வ அடுத்த முறை பாக்கும் போது கட்டாயம் சொல்லிடனும் ''
''ஒரு லெட்டர் எழுதி குடுத்துடு , மூணு நாள் இருக்குல்ல, ஸ்பென்சர் பக்கத்திலதான் திங்க கிழம டியூட்டி , அவன் வர நேரம் அவன்கிட்ட லெட்டர குடுத்துடு ''

''ஐயயோ லெட்டரா, வேண்டான்டா , தப்பா நினைச்சிட்டா , எப்பவும் பசங்கதான் பொண்ணுங்களுக்கு லெட்டர் தருவாங்க , அப்புறம் அவனுக்கு என்ன புடிக்காம போய்ட்டா?''

''அதுக்கென்ன நாம குடுப்போம், பொண்ணுங்களும் இப்பலாம் குடுக்கறாங்களான்டி , உன்னை ஒருத்தனுக்கு புடிக்காம போகுமா.. ஹாஹா , அப்படியே புடிக்காம போச்சுனா , லாக்கப்ல வச்சு பிரிச்சிரலாம்!!! ''

பேசிக்கொண்டிருக்க , கண்ணகி சிலைக்கு கீழே ஏதோ கூட்டம் . மணலில் ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து நகரத்துவங்கினர் . கூட்டத்தை விலக்கி விட்டு எட்டிப் பார்க்க , பெண்ணொருத்தி மயங்கிகிடந்தாள் , அவளை ஒரு வயதான அம்மா மடியில் போட்டுக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார்.

விமலாவும் நித்துவும் கூட்டத்தை கலைக்க முற்ப்பட்டனர் .

''சார் போங்க , போங்க போங்க '' நித்து விரட்டினாள் .

கூட்டத்தில் வினோ தனியாக நின்றுகொண்டு கையில் சோளம் ஒன்றை கொறித்தபடி நின்றிருந்தான் . நித்யாவுக்கு உடல் ஒரு நிமிடம் சிலிர்த்திருக்கவேண்டும். சிலிர்த்தது . கூட்டம் கலைகையில் அவனும் அங்கிருந்து நகர்ந்து போய் ஒரு திட்டில் அமர்ந்து கொண்டான் .

விமலாவிடம் நித்து , அவனது வருகை குறித்து கூறினாள் . விமலாவிற்கு வினோவை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாவே இருந்தது . தூரத்தில் அமர்ந்திருந்தவனை விமலாவிற்கு காட்டினாள்.

''சூப்பரா இல்லாட்டியும் நல்லாத்தான்டி இருக்கான் உன் ஆளு , என்ன மீசை வச்சா இன்னும் அழகா இருப்பான் ''

''ரொம்ப ரசிக்காத அவன் என் ஆளு! ''

''சரித்தா , உங்காள நீங்களே ரசிங்க , வா போய் பேசலாம் ''

'' எனக்கு பயமாருக்குப்பா , நீ ஒன்னு பண்றியா அவரை ஏதாவது சொல்லி காந்தி சிலை பின்னாடி இருக்கற காஞ்சு போன குளம் பக்கம் கூட்டிட்டு வரியா , அங்க பேசிக்கலாம் , இதா இங்க நம்ம பாண்டி அண்ணன்தான் டியூட்டி ஏதாவது வஞ்சுட்டாருன்னா , அங்க நம்ம லதாக்கா இருப்பாங்க பிரச்சனை இல்ல , நான் காந்தி சிலை பின்னால வெயிட் பண்றேன் ''
விமலா அங்கிருந்து வினோவை நோக்கி நடக்க , இவள் பதட்டத்துடன் காந்தி சிலையை நோக்கி நடக்கலானாள்.

''ஹலோ சார், '' , தேமேவென்று சோளம் கொறித்துக்கொண்டு கடலை வெரித்துப்பார்த்து கொண்டிருந்தவனை லத்தியால் முதுகில் தட்டி கூப்பிட்டாள். விமலாவின் உருவம் பிரமாண்டமாய் இருக்கும் , அகண்ட தோள் , கறுத்த உருவம் , கடுமையான முகம் , அதையெல்லாம் பார்த்தும் ஒருவன் பயம் கொள்ளவில்லையென்றால் , அவன் குருடனாகத்தான் இருக்கவேண்டும் . வினோ அவள் முன்னால் ஒரு வெள்ளெலி போல இருப்பான். அவளது கட்டையான குரலும் அதற்கேற்ற ஆஜானுபாகுவான உடலும் வினோவை பயமுறுத்தியது.

'' என்னையா மேடம் , '' பம்மினான்..

''ஆமா மிஸ்டர் , வாங்க , உங்களை எங்க ஏட்டய்யா கூட்டிட்டு வரச்சொன்னாரு '' , அதற்கே வினோவிற்கு வேர்த்துக்கொட்டியது , ஏற்கனவே ஒரு முறை நாயை கொன்றதற்காக சின்ன வயதில் வாங்கிய அடி பெடக்சில் இப்போது வலித்திருக்கவேண்டும். ஒரு மாதிரியாக பாக்யராஜைப்போல முகத்தை வீரமாக வைத்துக்கொண்டு

''நான் என்ன தப்பு பண்ணேன், எதுக்கு என்னை கூப்பிடறீங்கனு தெரிஞ்சுக்கலாமா ?''

''சார் அதெல்லாம் , அவர்கிட்ட பேசிக்கோங்க , இப்போ வரீங்களா இல்லையா ''

''என்னங்க , இப்படி மிரட்டுறீங்க , எனக்கு மனித உரிமை கழகத்திலலாம் ஆள் இருக்கு ''

''அதுலாம் மனுசங்களுக்கு ,'' மெலிதாக சிரித்துக்கொண்டாள் , '' சார் இப்போ வரமுடியுமா முடியாதா '' முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டாள் .
''சரி வாங்க போலாம் '' வீரத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினான்.

''நீங்க முன்னால நடங்க நான் பின்னாலயே வரேன், பப்ளீக் பாக்கறாங்கல்ல, ப்ளீஸ் மேடம்''
மெலிதாக சிரித்துக்கொண்டாள் விமலா. அவள் முன்னால் நடக்க , அவன் பின்னாலேயே
நித்யாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. நகம் கடித்துக்கொண்டிருந்தாள் . வியர்த்திருந்ததது . கைகள் குளிர்ந்திருந்தது . அவனிடம் எப்படி பேசுவது என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்தாள் . அவள் அருகில் இருந்த தண்ணீரில்லாத குளத்தில் காந்தி சிலைக்கு கீழ் பத்து பதினைந்து பேர் பின்னூட்டம் பதிவு என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஏதோ வேற்று கிரகவாசியைப்போல பார்த்துக்கொண்டிருந்தாள்.

நேரம் ஆக ஆக அவளுக்கு பதட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது . பதட்டத்துக்கு நடுவில் அந்த கூட்டத்தின் பேச்சு எரிச்சலாய் இருந்திருக்கவேண்டும்.
''சார் , என்ன சார் உம் னு வரீங்க , உங்க பேர் என்னனு சொல்லவே இல்லையே ''

''.................''

''ஆமா உங்களுக்கு நித்யாவைத் தெரியுமா ''

''ஏன்ங்க இப்படி நொய்நொய்னு ஏதாவது கேட்டுட்டே வரீங்க , ஏங்க எனக்கு எந்த நித்யா வித்யாவும் தெரியாது ''

''இல்லையே தினமும் , காயிதே மில்லத் காலேஜ் பக்கம் , நித்யானு ஒரு லேடி கான்ஸ்டபிள கணக்கு பண்றீங்களாமே , என்ன சார் , லவ்வா? , கிகிகி '' களுக்கென்று நாணத்தோடு ஒரு சிரிப்பு , வித்யாவின் ஆஜானு பாகுவான உருவத்தில் அப்படி ஒரு சிரிப்பை பார்த்து வினோ பயந்துவிட்டிருக்க வேண்டும்.

''.....................''

முன்னால் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தவள் . திரும்பி பார்க்க வினோவை காணவில்லை . கண்ணகி சிலைக்கு அருகில் அவளிடமிருந்து வெகு தூரத்தில் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான். வினோவின் ஓட்டம் பார்க்க தமாசாய் இருந்திருக்க வேண்டும். லூஸ்ஃபிட் ஜீன்ஸும் சார்ட் சர்ட்டும் அணிந்திருந்ததால் பிருஷடத்தின் கோடுகள் தெரிந்தது...

விமலாவால் சிரிப்பை அடக்கமுடியாமல் நடுரோட்டில் நின்று கொண்டு ஹாஹாஹாஹாஹா என்று கத்தி சிரித்தாள். வினோ மூச்சிறைக்க ஓடி அங்கே வந்த ஓரு பேருந்தில் ஏறி தப்பினான். காந்தி சிலை அருகே பேருந்து சிக்னலில் நின்றது . ஜன்னல் வழியே காந்திசிலைக்கு பின்னால் பார்த்தான் . நித்யா! . இறங்கிவிடலாமா என்று நினைத்தான் . அவளருகில் அந்த ஆஜானு பாகுவான போலீஸ் விமலா. அருகில் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆண் போலீஸ் . அவன் முடிவை மாற்றிக்கொள்ள சிக்னலில் பச்சை விளக்கு பஸ் சிவாஜி சிலையை சுற்றியது.


*************************


nithya kuti ,
oru varam agiruchu unnoda pesi , enakku paithyam pidikudhuda , aenda enkitta pesa mattendra , plsma enna purinjikko , indha smskku nee reply pannati enna nee uyirodayae pakka mudiyadhu... nichayam sethiduven...
(வினோ நித்யாவுக்கு அனுப்ப டைப் செய்து அவளுக்கு அனுப்பாத ஒரு எஸ்எம்எஸ் அல்லது பல முறை அனுப்ப தனது டிராப்டில் வைத்திருக்கும் ஒரு எஸ்எம்எஸ்)


************************