Pages

03 January 2009

கஜினி - அச்சா ஹை.. பொகுத் அச்சா ஹை..!


ஒரு பாக்யராஜ் திரைப்படத்தில் ஒரு ஹிந்தி பண்டிட்டும்(!) ஒரு மாணவனும் இடம் பெறும் காட்சி. அதில் மிகப்பிரபலமான ஒரு வசனம் உண்டு. அது ஏக் காவ் மே ஏக் கிசான் ரகதாத்தா என்று வரும். இன்று வரை அதன் அர்த்தம் கூட என்னவென்று எனக்குத் தெரியாது. அந்த மாணவனைவிட மிக மோசமான இந்தி எதிர்ப்பாளன் நான் ( நமக்கு வராத மொழியை எதிர்ப்பதுதானே முறை ) . அதனாலேயே என்னவோ எனக்கு ஹிந்தி திரைப்படங்கள் என்றாலே அலர்ஜி. அதையும் மீறி டிவிடிகளில் ஹிந்திப்படங்கள் பார்ப்பதுண்டு , போதையில் கூட தியேட்டரில் ஹிந்திப் படங்கள் பார்ப்பதில்லை. டிவிடியில் பார்ப்பதன் சவுகரியம் என்னவென்றால் அதில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் வந்துவிடும். நமக்கு ஹிந்திதான் பூஜ்யம் என்றாலும் ஆங்கிலம் சூப்பர் இல்லை என்றாலும் சுமார்.

கஜினி திரைப்படம் பார்க்க தோழர் ஒருவர் அழைத்தப்போது மேற்கூறிய பத்தியை லகுடபாண்டி லாங்குவேஜில் விவரித்தேன். அவரோ இது ரீமேக் தான் அதனால் உங்களுக்கு முழுதும் புரியவில்லை என்றாலும் முக்கால்வாசி புரிந்துவிடுமென்றார். முக்கால்வாசிக்கும் மேல் புரிந்தது.

தமிழில் வெளியான கஜினி திரைப்படத்தில் சூர்யாவை மட்டும் கிராபிக்ஸில் அழித்துவிட்டு அதற்கு பதிலாய் அமீர்கானின் முகத்தை போட்டிருந்தால் என்ன வரும்? அதுதான் ஹிந்தி கஜினி.

இரண்டு படங்களுக்கும் இடையே குமுதம் பாணியில் ஆறு வித்தியாசங்கள் வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம்.

1.கிளைமாக்ஸில் மாற்றம்.

2.இசையமைப்பாளர் மாற்றம் . அதனால் பாடல் மற்றும் பிண்ணனி இசை

3.அமீர்கானின் நடிப்பு

4.கேமரா அல்லது ஓளிப்பதிவு

5.ஓலிப்பதிவு

6.கலை

மற்ற படி தமிழ் மற்றும் ஹிந்தி இரண்டுமே அச்சு அசலாகத்தான் காண முடிகிறது. அதனால் கதை திரைக்கதை இயக்கம் குறித்த விமர்சனங்களுக்கு தமிழ் கஜினி விமர்சனம் படித்துக்கொள்ளலாம்.

வித்தியாசங்களின் விமர்சனங்களை மட்டும் பார்ப்போம்..!

1.கிளைமாக்ஸ் -

தமிழ் கஜினியோடு ஒப்பிடுகையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் அசத்தல். தமிழில் சேமியாவைப்போல சுற்றி சுற்றி டீலில் விட்டு ரீலை பிடித்திருப்பார்கள். ஹிந்தியில் நங் என மண்டையில் ( ஐயோ கிளைமாக்ஸ சொல்லிட்டேனோ) அடித்த மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. அதுக்கு ஒரு சபாஷ்.

2.இசையமைப்பாளரின் மாற்றம் -

ஹாரிஸை விடவும் சிறப்பாக இசையமைக்க வேண்டிய கட்டாயத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார் போலும். எல்லா பாடல்களும் ராக்கிங். அதுவும் அமீர்கானும் அஸினும் இடம்பெறும் அந்த பாலைவனப்பாடல் ( குஜாரீஸ் ) படம் முடிந்து வந்த பின்னும் மனதிற்குள் இரண்டு நாட்களாய் ரீங்காரமிடுகிறது. அதே போல பிண்ணனி இசை காட்சியின் இயல்போடு அதுவும் பயணிக்கிறது. அஸினுடனான மென்மையான காட்சியில் மிருதுவான பஞ்சுபோலவும், மொட்டை அமீரின் ஆக்சன் மற்றும் சேஸிங்கில் நம்மையும் சேர்த்து அவரோடு ஓடவும் சண்டைபோடவும் செய்கிறது. மந்திர பிண்ணனி இசையின் பிண்ணனி புரியவில்லை. ரஹ்மான் ராக்ஸ். அவருக்கு ஒரு சபாஷ்.

3.அமீர்கானின் நடிப்பு -

லகான்,தாரே ஜமீன் பர் , ரங் தே பசந்தி படங்களில் பார்த்த துள்ளல் அமீர் இந்த படத்தில் மிஸ்ஸிங் . அந்த படங்களின் பாதிப்போ என்னவோ அவரை மொட்டை கெட்டப்பில் பார்த்தாலும் டெரராக இல்லை. அமீருக்கு பிஞ்சு மூஞ்சி. புருவத்தை உயர்த்தி , கண்ணை முழித்து முழித்து பார்க்கிறார் , ஆனாலும் அது பயம் காட்டவில்லை. ஆனால் அஸினின் காதலனாக சூர்யாவை தோற்கடிக்கிறார் . அந்த கால காதலன் அமீரை( பாப்பாக்கி தேரே படா நாம் கரேகா காலத்து கிதார் அமீர் ) இத்தனை நாளாய் இழந்திருக்கிறோம். ச்சோ சார்மிங் . அதுவும் அந்த பணக்கார தோரணையும் அஸினிடம் எல்லாவற்றிலும் தானாக தோற்பதை ரசிப்பதும் ... அதுக்கு ஒரு சபாஷ்..

4.கேமரா - ஓளிப்பதிவு -

தமிழில் மேட்ரிக்ஸ் கலரில் சூர்யாவின் அப்பார்ட்மென்ட் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். ஹிந்தியில் அது இல்லாமல் புது கலரில் முயன்றிருக்கிறார் . படம் முழுக்க தெரிக்கும் ரிச்னஸ். சேஸிங் காட்சிகளில் அமீர்கானோடு நாமும் சேர்ந்து ஓடுவதைப்போல ஒரு உணர்வு வருகிறது , அமீரோடு கேமராவும் ஒடுகிறது , அடிக்கிறது , நடிக்கிறது! . அவ்வளவு நேர்த்தி. மொத்தத்தில் கிளாஸ் அண்டு கலர்ஃபுல். அதுக்கு ஒரு சபாஷ்.

5.ஒலிப்பதிவு-

தமிழில் மிகச்சிறந்த ஒலிப்பதிவாக இதுவரை இப்படத்தின் தமிழ் பதிப்பையே நினைத்திருந்தேன். அதைவிட இரண்டு மடங்கு உழைப்பு தெரிகிறது . நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். கலக்கல். அதுக்கு ஒரு சபாஷ்..

6.கலை -

கலை , ஒரிஜினலை விட அசத்தல்தான். தமிழில் காட்டப்படும் அப்பார்ட்மென்ட் டிடி காலத்து வீட்டு செட்டைப்போல இருக்கும். இந்த படத்தில் நிஜ அப்பார்ட் மென்ட் போல ஒரு உணர்வு, (நிஜமாகவும் இருக்கலாம்) . அதே போல படம் முழுக்க வியாபித்திருக்கும் ரிச்னஸ் , அதன்பின்னால் ஒளிந்திருக்கும் கலை இயக்குனரில் உழைப்பு அசத்தல். அதற்கு ஒரு சபாஷ்..

கஜினி படத்தை தமிழில் பார்த்தவர்களுக்கு இப்படம் எவ்வளவு பிடிக்கும் என்று தெரியவில்லை. மேற்கூறிய சில வித்தியாசங்களைத்தவிர படத்தில் மற்ற எல்லாமே ஒன்றுதான்.

நான் ஏற்கனவே தமிழில் பார்த்திருந்தாலும் , ஹிந்தியில் பார்க்கும் போது அதே விறுவிறுப்பு , அதே சுறுசுறுப்பு. அஸின் மீண்டும் ஒரு முறை மனதை கொள்ளையடிக்கிறார். அமீர்கான் அசத்துகிறார். முருகதாஸ் கொடி ஹிந்தியிலும் பறக்கிறது. ஹிந்தி தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை , படம் முழுக்க புரிகிறது( தமிழ் வசனங்கள் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ) .

மொத்தத்தில் கஜினி அச்சா ஹை..!

புத்தாண்டில் பார்த்த முதல் படம் மொக்கையாகி விடக்கூடாதே என்கிற பயத்தோடு போய் பார்த்த படம். ஏமாற்றவில்லை. ஒரு வாட்டி பாருங்கலே...!