Pages

08 January 2009

சாருநிவேதிதா,அமீர்,பிரபஞ்சன் மற்றும் பலர்



ஓரு ஆச்சர்யம் -



அது ஒரு புத்தகவெளியீட்டுவிழா! மேடையில் பல்துறைப் பிரபலங்கள் . அரங்கு நிறைந்த கூட்டம். பலரும் அரங்கத்தை சுற்றி ஆர்வமிகுதியால் நின்று கொண்டுகூட இருந்தனர். யாருக்கும் கால்வலி கூட தெரியவில்லை போல . எனக்கு கால்கள் வலித்திருக்க வேண்டும். அதனால் அங்கே தரைமட்ட அளவில் இருந்த ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன். ஜன்னலுக்கு ஒரு புறத்தில் நான் இன்னொரு பக்கம் அவர்கள். அவர்கள் என்றால் உங்களைப்போலவே எனக்கும் அவர்கள் யார் என்று நிச்சயம் தெரியாது. ஏனோ ஒரு விசும்பலும் பேச்சும் அவர்களினூடே ஒலித்தபடியே இருந்தது.



அந்த பெண் அவளருகில் இருந்த ஆடவனின் மிக அருகில் நெருக்கமாக அமர்ந்திருக்கிறாள். அவளது தலை அவனது தோளோடு ஒட்டி இருக்கிறது. இருவரது கைகளும் கோர்த்திருந்தன. அவள் கழுத்திலும் கால்விரலிலும் திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை. விரலிலும் மோதிரமில்லை. அவள் கண்களில் கண்ணீராய் இருக்கவேண்டும். அவள் அவரை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறாள் போல. அவரை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே அவளது குறிக்கோள். அவள் வாயிலிருந்து அடிநாதமாய் அல்லது சன்னமாய் அல்லது கிசுகிசுப்பாய் ஓலிக்கிறது அவள் குரல்.



'அவரை பார்க்க முடியுமா!! '



'தெரியலடா ',



'ஒரே ஒருவாட்டி அவரை ரொம்ப பக்கத்தில பாக்கணும்'


'டிரைப்பண்ணலாம்டா , ம்மா உன் கையெல்லாம் ஏன் சில்லுனு இருக்கு'

'தெரியலடா , முதல்தடவ இப்போதான அவரை நேர்ல பாக்கறேன் அதான் ! , நம்ம ரெண்டு பேரும் முத தடவை அது பண்ணோம்ல , அத விட .... இது எப்படி சொல்றதுனு தெரியலடா!! '


அவர் நோபல் பரிசைப்பற்றியும் இலக்கிய உலகம் குறித்தும் நிறைய பேசுகிறார். சுவிஷேச கூட்டங்களில் பேசுபவர் பேசியதையே மீண்டும் மீண்டும் பேசினாலும் அதை கவனிக்காது உணர்ச்சிமேலிட கண்ணீர் வடிக்கும் கூட்டத்தைப்போல அவளும் அவர் பேசுவதை சற்றும் கவனிக்காமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். மேடையில் அந்த பிரபலம் பேசி முடிக்கிறார் . அவருக்கு 10 அடி தூரத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி பேசலாமா வேண்டாமா என்று அந்த இருவரும் காத்திருக்கின்றனர். அவர் பலரையும் பார்க்கிறார் . எல்லாரிடமும் கைகுலுக்குகிறார். அவராகவே எல்லாரிடமும் பேசுகிறார். அவர்களது தயக்கம் நீங்குவதற்குள் கையில் அலைபேசியுடன் அரங்கை விட்டு வெளியேறுகிறார். அந்த இருவரும் அவர் பின்னால் ஓட்டநடையாய் பறக்கின்றனர். அப்பெண்ணின் கண்களில் ஆவல் தீர்ந்து கேவலாக மாறிக்கொண்டிருந்தது. அவருக்காக வெளியே ஒரு கார் காத்திருக்கின்றது. அதிலேறி அவர் பறக்கிறார். வெளியே ஜோரான மழை.



********************************



ஒரு அதிர்ச்சி -


அது ஒரு புத்தகவெளியீட்டு விழா. அவர் ஒரு பிரபல இயக்குனர் . மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் இரண்டு மிகப்பெரிய வெற்றியடைந்தவை. தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமானவர். தற்காலங்களில் புத்தகவெளியீட்டு விழாக்களில் இப்போதெல்லாம் அடிக்கடி அவர் பெயரும் அடிபடுகிறது. அவர் பேசத்துவங்குகிறார்.


தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது என்றும் தான் இதற்கு முன் புத்தகங்கள் படித்ததே இல்லை என்றும் , அந்த எழுத்தாளரையையே அவரது தனது படத்தின் விமர்சனம் மூலமாகத்தான் தெரியும் என்றும் பேசுகிறார். தன்னை இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னால் , தன்னை அழைத்து இந்த புத்தகத்தை அந்த ஆசிரியர் கொடுத்தார் நானும் படிக்க முற்பட்டு படிக்க இயலாமல் போய்விட்டதென்றும் பெருமையாய் பேசுகிறார் . கைதட்டல் பலமாக இருக்கிறது .


இப்படிப்பட ஒருவரை விழாக்குழுவினர் எதற்காக அந்த கூட்டத்திற்கு அழைத்தனர் எனபது அவர்களுக்கே வெளிச்சம். அதே போல ஒரு எழுத்தாளரை ஒரு சினிமா பாடல் வெளியீட்டுக்கோ , திரைப்பட நூறாவது நாள் விழாவிற்கோ அழைத்து அவரும் தான் சினிமாவே பார்த்ததில்லை அப்படி பார்த்ததும் ஷகிலா திரைப்படங்கள் மட்டும்தான் , இந்த படத்தின் இயக்குனர் கூட இப்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்க சொன்னார் அதைக்கூட எனது சீரிய இலக்கிய பணிக்கு நடுவில் பார்க்க இயலவில்லை , இருந்தாலும் நான் சொல்கிறேன் இந்த இயக்குனர் ஒரு சிறந்த இயக்குனர் என்று பேசினால் தமிழ்கூறும் நல்லுலகம் பொறுத்துக்கொள்ளுமா?


புத்தகவெளியீட்டுக்கு திரைப்படகலைஞர்கள் எதற்கு என்று இனியாவது நம்மவர்கள் கட்டாயம் சிந்திக்கவேண்டும்..! அப்படி அழைக்கும் போது புத்தகங்களை மதிக்கும் சிலரையாவது அது நமீதாவாய் இருந்தாலும் ஷகிலாவாய் இருந்தாலும் கட்டாயம் அழைக்கலாம் . அவனவனுக்கு அவனவன் துறைதான் பெரியது!




**************************



ஒரு அருவெறுப்பு -





அது ஒரு புத்தகவெளியீட்டுவிழா , அவர் ஒரு பிரபல எழுத்தாளர் . அவர் நிறையப்படித்தவர் . வயதிலும் அறிவிலும் நல்ல அனுபவசாலி . பல புத்தகங்கள் எழுதியவர். யாருக்காக அந்த விழா நடக்கிறதோ அவரே தனது குரு அவர்தான் என்று பெருமையடைபவர். அது ஒரு வட்டமான மேசை அதில் ஒரு விருந்து நடக்கிறது . அப்பேர்ப்பட்ட ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் அந்த வட்டமான மேசையில் ஒருவருக்கும் அவரை பேசவைத்து கேட்பதில் மகிழ்ச்சியில்லை. எல்லோரும் எல்லாமும் தெரிந்தது போல பேசிக்கொண்டிருக்க அவர் மட்டும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருந்தார்.





இன்னொரு பிரபல எழுத்தாளர் அவர் , அவரோ உச்சகட்ட போதையிலிருந்தார்! .சுண்டிவிரலால் தள்ளிவிட்டாலே விழுந்து விடும் போதை. அவர் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் மிக உச்சஸ்தாயில் கத்தி கத்தி ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தார். ஆனால் அவரால் எதையுமே முழுமையாய் பேச இயலவில்லை. பலரது நகைப்புக்கு ஆளாக நேரிட்டது அவர் செய்கைகள். நான் மிகவும் மதிக்கும் சிலரில் ஒருவர் அவர் . அவர் அங்கே கூடியிருந்த பல பிரபலங்களிலைவிடவும் விழாநாயகரைவிடவும் திறமையானவர் என்று எண்ணிவருபவன்.





இன்னும் சிலர் குடித்துவிட்டு மிக மரியாதைக்குறைவாய் மேற்ச்சொன்ன இருவரிடம் மட்டுமல்லாது விழாநாயகரான பிரபல எழுத்தாளரிடமும் கூட பேசியும் நடந்தும் கொண்டிருந்தனர். அதில் பலருக்கும் வயது மிகமிகக்குறைவு . அதில் சிலரிடம் விடிந்தபின் இது குறித்துக் கேட்ட போது அந்த இரவில் அதிகப்பட்ச போதையில் இருந்ததால் அப்படி பேசியிருக்கலாம் என்று கூறினர்.


***************************



ஒரு செய்தி-


கனடாவைச்சேர்ந்த சில குடிகாரர்கள் ஒன்றிணைந்து குடிகார கவிஞர்கள் சங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இக்கவிஞர்கள் திங்கள்க்கிழமைதோறும் அல்பர்ட்டா மாகாணத்தின் கால்கரி நகரில் இருக்கும் ஒரு பிரபலமான பாரில் கூடி அங்கே இரவு 9-9.30 வரை கூடி கவிதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். அக்கவிதைகள் இது வரை எங்கும் பிரசுரமாகதவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. இச்சங்கத்தில் நீங்க உறுப்பினராக எந்த கட்டணமும் இல்லை. அதேபோல அந்த பாரில் சங்கம் உங்களுக்கு சரக்கு வாங்கித்தருவதில்லை. நமக்கு நாமே திட்டம்தானாம்.


இதுவரை பல திங்கள்கிழமைகளை வெற்றிகரமாக கடந்த அந்த சங்கத்தில் இது வரை யாருமே போதையில் அதிகமாகி சண்டை சர்ச்சைகளில் ஈடுப்பட்டதில்லையாம். அச்சங்கத்தின் உறுப்பினர் அதற்கு காரணம் அவரவர்க்கு வேண்டிய மதுவை அவரவரே வாங்கிக்கொள்வதே காரணம் என்கிறார்.


அவர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மிக வேடிக்கையாய் சொல்லப்படுபவை. மிக சுவாரசியமானவை. அதில் ஒன்று உங்களுக்காக. LIARS NOSE என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கவிதை , 2 போத்தல் ரம்மை ராவாக அடித்தபின் எழுதிய ஒன்றாம் .







அந்த கவிதை மற்றும் சங்கத்திற்கான சுட்டி இங்கே




************************************




தனது பத்து புத்தகங்களை ஒரே நாளில் வெளியிட்டுள்ள சாரு நிவேதிதாவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.




*************************************