Pages

15 January 2009

திருமங்கலம் - அசத்திய திமுகவும் அலறிய அதிமுகவும்!


இதோ திருமங்கலம் தேர்தல் அடாவடியாய் அல்லது அதிரிபுதிரியாய் முடிந்தேவிட்டது. திமுகவும் இமாலய வெற்றியைப் பெற்றும் விட்டது. திமுகவே எதிர்பார்த்திராத வெற்றி அது. தமிழ்நாட்டின் எந்த திமுக தொண்டரும் இப்படி ஒரு வெற்றியை அக்கட்சி பெறும் என எதிர்பார்த்திருக்கவில்லை. அவ்வெற்றித் தந்த உற்சாகம் அக்கட்சியனரின் முகத்தில் ஜொலிப்பதற்கு வலையுல திமுக தொண்டர்களின் முகமலர்ச்சியே சாட்சி.

அவ்வெற்றி திமுகவின் ஆட்சிக்குளறுபடிகளால் சரிந்திருந்த செல்வாக்கை மக்களிடையே அதிகமாக்கியிருப்பதாய் கட்சிதலைமையிலிருந்து போஸ்டர் ஒட்டும் முத்துராமன்,முருகன் வரை எண்ணுகின்றனர். அழகிரி இந்த வெற்றியை ஏற்கனவே முதல்வருக்கு சமர்பித்தும் விட்டார். இம்முறை ஜெயிக்காத ஜெவும் தன் பங்கிற்கு தேர்தல் குளறுபடி , அடாவடி, ரவுடி ,லொட்டு லொசுக்கு என்று சாக்கு போக்கு சொல்லி மக்களுக்கு அறிக்கை வெளியிட்டுவிட்டார். விஜயகாந்தும் எப்போதும் போல பணம் விளையாடிவிட்டது , அதிகாரம் ஜெயித்துவிட்டது என ரமணா பாணியில் பேசிவிட்டார். சமக தலைவர் சரத்குமாரை மக்களே பேச விடாமல் காயடித்த காளையைப் போல அடக்கிவிட்டனர். வைகோ வோ இதற்காக வரலாற்று உதாரணங்களில் எதைக்குறிப்பிடலாமென கன்னிமாரா லைப்ரரியில் அடைக்கலாமாகிவிட்டதாகவும் தெரிகிறது.

வெற்றியடைந்த திமுக அதன் வெற்றிக்கான காரணங்களையும் தேடி வருகிறார்கள் . ஆனால் தோற்றுப்போன அதிமுக கூட அதையே செய்கிறது. அதற்கான காரணம் திமுகவின் இம்மிகப்பெரியவெற்றி. யாருமே இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. அதிமுகவின் வாக்குவங்கியை தேமுதிக பகிர்ந்து கொண்டது எனச்சொல்லுபவர்கள் கூட வாயடைத்துப்போய்தான் இருக்கின்றனர். வலையுலகில் பிரபலமான காங்கிரஸ் தொண்ரான ஒரு பதிவர் கூட எதிர்கால கூட்டணியை கருதி அவர் சார்ந்த கட்சியைப் போலவே (இந்த தேர்தல் கூட்டணியை மறந்து ) அதிமுகதான் வெற்றிபெறும் என கூறிவந்தார். இந்த தேர்தல் பாரளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் என நேற்று வரை கூவி வந்த பத்திரிக்கை கும்பல்கள் கூட குழம்பிப்போய் விஜய்யின் வில்லையும் நயன்தாராவின் பல்லையும் படம் பிடிக்க கிளம்பி விட்டன.

திருமங்கலத்தில் அப்படி என்னதான் நடந்தது? , எப்படி கிடைத்தது இம்மாம் பெரிய வெற்றி?. மக்களுக்கு கலைஞர் ஆட்சி மகிழ்ச்சியளித்துவிட்டதா ? மாறன்-அழகிரி சகோதரர்களின் இணைப்பு திமுகவின் இழந்த செல்வாக்கை மீட்டுக்கொடுத்ததா(சன்டிவி மூலமாக) ?சென்ற தேர்தலைவிடவும் குறைந்த அளவு வாக்குகளையே விஜயகாந்த் பெற்றிருப்பது அவரது செல்வாக்கின் சரிவைக்காட்டுகிறதா? சரத்குமார் பெற்ற 841 ஓட்டுகள் யார் போட்டது என அக்கட்சி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமா? ஜெயலலிதாவின் எதிர்காலமும் அதிமுகவின் எதிர்காலமும் ( அப்படி ஒன்று இருக்கிறதா?) இனி கேள்விக்குறிதானா? இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா? அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழகத்தின் அதிக சீட்டுகள் கிடைக்குமா? பல நாட்களாக பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போன்று மூலையில் கிடக்கும் பாமக பாரளுமன்ற தேர்தலில் என்ன கூட்டணி கொள்கையை எடுக்கும் ? இப்படி ஆதிசேஷன் வாலைப்போல ஆயிரமாயிரம் கேள்விகள். எனவே இத்தோடு வாலை ஒட்ட நறுக்கிவிட்டு , அக்கேள்விகளுக்கான விடைகளை ஆராய முற்படலாம் .

திருமங்கலத்தில் திமுக , வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது . ஆனால் உண்மை என்னவென்றால் அங்கே போட்டியிட்ட எல்லா கட்சிகளுமே பணம் கொடுத்திருக்கின்றன. முறையே ஓட்டுக்கு தலா 5000,2500,1500,500 என்று . கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்தியா ஏழை நாடென்று யார் சொன்னது. மக்களின் வாக்குக்கு மரியாதை இல்லை என்றும் யார் சொன்னது. பாருங்கடா பிச்சைக்கார நாடுகளா என் இந்தியாவை என்று கத்தி கூச்சலிட தோன்றுகிறது.

ஆனால் இந்த பணத்தைவிடவும் மிக அதிக அளவில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தியது சமீபத்தில் தரப்பட்ட வெள்ள நிவாரண நிதி . வீட்டுக்கு 2000 ரூ. வெள்ளம் வந்து வீடே இழந்தவனுக்கும் அதே , ஓரு துளிகூட வீட்டிற்குள் தண்ணீர்வராமல் காலையும் வாலையும் ஆட்டிக்கொண்டிருந்தவனுக்கும் அதே (என்னே சமத்துவம்) . எனக்குத்தெரிந்த வலையுல பிரபலம் அவர் , அவர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வெள்ள நிவாரணம் பெற்ற செய்தியெல்லாம் கேட்கும் போது வயிறு பற்றி எரிகிறது(அவர் வீட்டில் மொத்தமாய் பத்துபேராம்) . அது தவிர அவர் தான் பெற்றுக்கொண்ட தொகையில் ஒரு பகுதியை வலையுலகில் திமுக ஆதரவோடு செயல்படும் சில பதிவர்களுக்கு பகிர்ந்தளித்ததாகவும் கேள்வி ( ஒரு அமெரிக்கப்பதிவருக்கு இங்கிருந்து மணியார்டரெல்லாம் செய்ய முயன்றாராம் அந்த திமுக தொண்டர்) . அதேபோல வலையுலகில் திமுகவை சாராமாரியாய் எதிர்க்கும் பலரும் 2000 ரூபாய் என்றதும் நம்மவா காசதான நமக்கே கொடுக்கறா என்று மிக நீண்ட க்யூவில் நின்றதாய் ஒரு மடிப்பாக்கம் திமுக தொண்டர் தகவல் தெரிவித்தார் .

இந்த வெள்ளநிவாரணத் தொகை திமுகவால் இத்தேர்தலில் மிகச்சரியான ஆயுதமாக திருமங்கலத்தின் ஒவ்வோர் வீட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கலைஞர் பெயரைச் சொல்லி சொல்லி மண்டையில் ஏற்றி அந்த பணம் தரப்பட்டுள்ளது. அதே போல அழகிரியின் தலைமையில் கட்சியின் அடிமட்ட தலைமைகளின் கட்டமைப்பும் , அவர்களது செயல்பாடுகளும் முழுவீச்சில் முடுக்கிவிட்டப்பட்டதும். இது வரை இருந்துவந்த திமுக கோஷ்டி மோதல்களை அதன் தொண்டர்கள் கைவிடும் வண்ணம் அழகிரியும் ஸ்டாலினும் இத்தேர்தலில் இணைந்து செயலாற்றியதும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மின்வெட்டு,விலைவாசி உயர்வு என்று அனுதினமும் இந்த ஆட்சியால் நம் மக்கள் அடிவாங்கினாலும் திருமங்கலத்தில் உண்டான திடீர் பணப்புழக்கம் அதையெல்லாம் மக்களை மறக்கடிக்க செய்திருக்க வேணும். பசி வந்தால் மட்டுமல்ல பணம் வந்தாலும் பத்தும் பறந்து போகும் போலிருக்கிறது. நம் மக்களுக்கும் இத்தனை ஞாபக மறதி கூடாது.

அழகிரியின் செயல்பாடுகள் இந்த தேர்தலில் எப்படிப்பட்டதாய் இருந்திருக்க முடியும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதிகம் பேசினால் ஆட்டோவும் அது நிறைய ஆட்களும் அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகளும் வரக்கூடும் .

அதேபோல சன்டிவியின் ஆமைவேக திமுக ஆதரவு பல்டியும் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்திருக்க கூடும். அதுவே விஜயகாந்த் மற்றும் சமகவின் வாக்கு வங்கியை(?) தகர்க்க உதவியிருக்கலாம். திமுக ஆதரவு அலையை மிக அற்புதமாக நடுநிலை என்ற பெயரில் நாசூக்காக பரப்பும் வேலையை சன்டிவி செய்தது குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்டுகளின் அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பாதகமாய் போய்விட்டதாகவும் ஒரு திருமங்கலைத்தைச் சேர்ந்த வலையுலக நண்பர் தெரிவித்தார். உத்தபுரம் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் அங்கிருந்த பெரும்பான்மை பிள்ளைமார்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டதாகவே அச்சமூகத்தினர் கருதி வருகின்றனர். திருமங்கலத்தில் ஒரு பகுதி பெரும்பான்மை பிள்ளைமார்கள் வாக்குகளைக் கொண்டதென்றும் அதனால் கம்யூனிஸ்ட் எதிர்ப்பலை அதிமுகவிற்கு எதிராய் திரும்பியிருக்க வாய்ப்புண்டு என்றும் கூறினார் . அதே போல மதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட்டது அக்கட்சியின் செல்வாக்கை குறைத்திருக்க கூடும் எனவும் தெரிவித்தார். அதில் உண்மையிருப்பதாகவே நானும் கருதுகிறேன்.

அதிமுக இனிமேலாவது அடுத்தவரை குற்றம் சாட்டும் அரசியலை கைவிட்டு உருப்படியாக எதையாவது செய்யலாம். இனிமேலும் எம்ஜிஆர் படத்தையே காட்டி ஓட்டுவாங்கும் அரசியல் இங்கே வேலைக்கு ஆகாது என்பதற்கு இந்த தோல்வி நல்ல உதாரணம். திமுகவின் வெற்றிக்கு காரணங்கள் தேடாமல் , தங்களது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அதை களைந்து மக்கள் ஆதரவை பெற முயற்சிக்கலாம் ( ?) . அதற்கான வாய்ப்புகள் அக்கட்சியில் மிகக்குறைவே!. தலைமையை மாற்றலாம். அது உதவும்.

சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் மிகக்குறைந்த சதவீத வாக்குகளையே பெற்ற விஜயகாந்தின் தேமுதிகவை இந்த ஒரு தொகுதியை வைத்து கணக்கிட இயலாது , அக்கட்சிபெற்ற 13000 வாக்குகள் நிச்சயம் அதிமுகவிற்கு விழவேண்டியவை. அதை அவர் உடைத்திருக்கிறார் என்பது நிதர்சனம். ஆனால் அவரால் திமுகவின் வாக்கு வங்கியில் கணிசமாக ஓட்டுக்கள் பெற இயலாமல் போயிருக்கலாம். தேமுதிகவும் வளர்ந்து வருகிறது என்பதற்கு இந்த தேர்தலில் அக்கட்சி பெற்றிருக்கும் இந்த ஓட்டுக்கள் நல்ல உதாரணம். இப்போதிருக்கும் நிலையை அடுத்த தேர்தல் வரைக்கும் அப்படியே எடுத்துச்சென்றால் இன்னும் அதிக சதவீத பங்கு வாக்குகள் பெறலாம் . விஜயகாந்தின் பின்னங்கால்கள் திமுகவின் வாக்குவங்கியையும் உடைத்தெறியக்கூடும்

தனித்துப்போட்டியிட்ட சமக பெற்ற 841 வாக்குகள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவரது கட்சியில் இது வரை அவரும் அவரது மனைவி மட்டுமே உறுப்பினர்கள் என எண்ணி வந்த தமிழ்மக்களுக்கு தன் கட்சிக்கும் நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள் என நிரூபித்திருக்கிறார் நாட்டாமை. அடுத்த தேர்தல் வரைக்கும் அவர் கட்சி உயிரோடிருந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்து விடுவார்கள்.

பாமக திருமங்கலம் வெற்றியால் மிகவும் அதிர்ந்து போயிருப்பதாகவே தெரிகிறது. பாமகவால் தனித்து போட்டியிடும் அளவுக்கு ஆண்மை கிடையாது. அதனால் அடுத்த தேர்தலிலும் திமுகவுடனேயே காலை கையை பிடித்தாவது தற்போதைய கூட்டணியில் தொடர முயற்சிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

ஆனால் இந்த வெற்றி எந்த அளவிற்கு பாரளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக பாரளுமன்ற கூட்டணிகளுக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். ஆனால் அந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவுமென்று தெரியவில்லை.

மொத்தத்தில் திமுகவின் இந்த திருமங்கல வெற்றி சும்மா கிடைத்துவிடவில்லை. கலைஞர் என்னும் மிகப்பெரிய அரசியல் விஞ்ஞானியின் சக்ஸஸ் பார்முலாவும் , அழகிரி என்னும் தளபதியின் தலைமையிலான படைபலமும் பணபலமும் ஆட்சிஅதிகாரமும் இணைந்து மக்கள் ஆதரவை வலிந்து இழுத்துக்கொண்டு பெற்ற வெற்றியாகவே தெரிகிறது. இதே ஆதரவை பாராளுமன்றத்தேர்தலிலும் திமுக பெறுமா என்பதற்கான விடை மக்களிடம்தான் உள்ளது.

********************************