Pages

18 January 2009

பொதுஇடங்களில் புகைபிடிக்கலாம் வாங்க!



பொதுஇடங்களில் புகைபிடிக்க சில மாதங்களுக்கு முன் தடைவிதித்து இந்திய அரசு சட்டம் நிறைவேற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலருக்கும் மறந்தும் போயிருக்க வாய்ப்புண்டு.


அது முதலில் காட்டுத்தீ போல பரவி பின் அணைந்து புகைந்து மண்ணாய் போனது அனைவருக்கும் நினைவிருக்கும். இருந்தாலும் நம் மக்களுக்கு பொது இடத்தில் புகைப்பிடிக்கையில் இருந்த தயக்கத்தையும் போலீஸ் வசூலின் மீதான அச்சத்தையும் போக்கும் வகையில் சென்னை பீடி சிகரெட் விற்பனையாளர்கள் சங்கத்தினர் சென்னை முழுவதும் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முதலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை பார்த்துவிடுவோம் .






இந்த வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதாகத்தான் தெரிகிறது. அரசுதரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராத சூழலில் தன்னிச்சையாக அந்த சங்கத்தினர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் சென்னையின் எல்லா இடங்களிலிலும் புற்றீசல் போல பரவியிருக்க கூடிய ஒன்று. வண்டிகள் நிறுத்துமிடங்கள் பொதுஇடமில்லையா? . தெருக்கள் மற்றும் சாலைகள் பொது இடமில்லையா? அமைச்சர் அன்புமணி இது குறித்து அறிவாரா? இச்சங்கத்தினர் இதற்காக அரசிடம் அனுமதி பெற்றனரா?


பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கியமான காரணம் , PASSIVE SMOKING எனப்படும் சிகரட் பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அடையும் பாதிப்புதான். இந்தியாவில் புற்றுநோய் பரவ மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பாஸிவ் ஸ்மோக்கிங். ஆனால் இந்த அறிவிப்பு அந்த காரணத்தையும் அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கேலியாக்குகிறதே!


பொது இடத்தில் புகைப்பிடிக்க தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை ஆதரித்துப் பேசிய பலரும் இப்போது எங்கே போயினர். அதை அமலாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கோவில்களில் ஆடு மாடு வெட்ட தடைச்சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டுவந்து விட்டு , பின் அதை அமலாக்க இயலாமல் பரிதவிக்கும் நிலையே உள்ளது.


இன்று பெரும்பாலான பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடை என்கிற பலகை மட்டுமே உள்ளது , அதை யாரும் மதிப்பதில்லை என்பதுமே நிதர்சனமான உண்மை.


எந்த ஒரு சட்டமும் மக்களின் ஆதரவால் மட்டுமே செயல்வடிவம் பெறும். தனது விளம்பரத்திற்காக நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் நிலைக்காது. அது பொதுஇடபுகைப்பிடிக்க தடைச்சட்டம் போல புகைந்துதான் போகும்.


இனிமேலாவது இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும் முன் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து , அதை எப்படி சரியான முறையில் செயல்படுத்த இயலும் என்பதையும் ஆராய்ந்து நிறைவேற்றினால் நல்லது.
சிலபலநாட்களாக மிக அமைதியாக இருக்கும் அன்புமணிராமதாசு இது குறித்து அறிந்துகொண்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் மிக நல்லது.