Pages

08 March 2009

எ.வீ.ஜ-2 - ஜே.கே.ரித்தீஷ்,கிரிக்கெட்,அப்துல் ஜப்பார் மற்றும் பலர்


எதிர்வீட்டு ஜன்னல்கள் - 2


ஆயிரம் பேர் இருக்கும் சபையிலும் என்னை தனிமையாக உணருகிற ஏதோ ஒரு ஆழ்மன சிக்கல் என் மனதில் விபரம் தெரிந்ததிலிருந்தே இருக்கிறது. அதன் மனவருத்தம் எனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் உச்சம் பெரும். நமக்கு வாழ்த்துக்கூற ஒரு ஜீவன் இல்லையே என்பதாக. இம்முறை அது அப்படியில்லை. என் வலைப்பதிவின் மூலமாக மட்டுமே அறிமுகமான நண்பர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியிருக்கிறது. அதில் 200க்கும் மேல் வெவ்வேறு வடிவங்களில் தன் வாழ்த்தினை தெரிவித்தது மிக மகிழ்ச்சியாய் இருந்தது. '' நான் தனி ஆள் இல்ல'' என்பதை புரியவைத்த மார்ச் 6 இது . மார்ச் 6 என் அல்லது நான் பிறந்தநாள்!

மார்ச் 5 பதிவுலகில் மிகப்பிரபலமான அல்லது பதிவுலகால் பிரபலமான நடிகர் ஜேகே.ரித்திஷின் பிறந்தநாள். நல்லவேளையாக மார்ச் 6 இல்லை. அன்னார் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ அனைத்து பதிவர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்த்துப் போஸ்டர்கள் வடபழனி ஏரியாவையே ஆட்டி ஓட்டி துவட்டி துண்டை கழட்டியது. சில பல போஸ்டர்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது. பாஸிட்டிவ் பப்ளிஷிட்டி , நெகட்டிவ் பப்ளிஷிட்டி என்பதையெல்லாம் தாண்டி வித்தியாசமான காமெடி பப்ளிஷிட்டியால் வளர்ந்து வரும் அவர் விரைவில் தமிழக முதல்வராகவோ அல்லது அமெரிக்க அதிபராகவோ ஆகி தமிழரின் துயர் துடைக்கவில்லையென்றாலும் எதையாவது துடைக்க அனைவரும் வாழ்த்தி வணங்குவோம்.

எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து ஸ்டார்கிரிக்கெட் என்பது வெள்ள நிவாரணம், போர்க்கால நிதி , பூகம்ப நிதி என்கிற அளவிலேயே இருந்துவந்தது. கார்கிலுக்காக ஒரு போட்டி நடந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன். ஸ்டேடியம் முழுக்க மக்கள் வெள்ளம். அதற்கு பின் சென்றவாரம் மார்ச் 7 அன்று எந்த காரணமும் இன்றி முதல்வர் நிவாரணநிதிக்காக(ஜே.கே.ஆர் மற்றும் அதிஷா பிறந்தநாளிற்காகவும்) ஒரு ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஜே.கே.ரித்திஷ்குமார் அவர்களின் (செலவில்?) ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது அதில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். இதில் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் தலைமையில் ஆந்திர நடிகர்கள் அணியும் ஜே.கே.ரித்திஷ் தலைமையில் ( எ.கொ.சார் இது! ) தமிழக நடிகர்கள் அணியும் மோதின. இதில் தமிழக அணி அபார வெற்றிபெற்றது. ஸ்கோர் விபரங்கள் தெரியவில்லை. தெரிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆட்டத்தை மொத்தமாய் 150பேர் பார்த்ததாக தெரிகிறது, என்னையும் சேர்த்து 151. அவர்களது கைகளில் ரித்திஷின் வாழ்த்து போஸ்டர்கள் இருந்ததாகவும் தெரிகிறது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான இப்போட்டியை சின்னிஜெயந்தும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல்ஜப்பாரும் தொகுத்து வழங்கினர்.

சென்னை வானொலியில் இரண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள்(அல்லது வர்ணனையாளர்கள்) பெயர்கள் தமிழகபிரசித்தம். ஒன்று சரோஜ் நாராயணசுவாமி மற்றொன்று அப்துல்ஜப்பார். எனக்கு கிரிக்கெட்டை முதன்முதலில் கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அவர். கீழ்த்தட்டு நடுத்தரவர்க்கத்தினரின் வீடுகளில் வானொலிகளால் நிறைந்திருந்த 1990களின் ஆரம்பத்தில் கிரிக்கெட் தெரியாத ஒரு கிராமத்து சிறுவனுக்கும் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாய் கற்றுக்கொடுத்த குரலது. அவரது கிரிக்கெட் வர்ணனைகளில் தெரித்து ஓடும் தமிழ் இன்னும் பலருக்கும் மறந்திருக்காது. கிரிக்கெட்டின் பல விடயங்களுக்கும் தமிழில் எளியோருக்கும் விளங்கும் வண்ணம் அவர் மொழிபெயர்த்த வார்த்தைகள் எண்ணிலடங்கா.பீல்டிங்கை வியூகம் என வர்ணிக்கும் பாங்கே அதற்கான சாட்சி. அவரை அசிங்கப்படுத்துவது போல ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் சின்னிஜெயந்துடன் ஒப்புக்கு சப்பாணியாக ஒரு லெஜண்டை பேச வைத்தது வருத்தமாக இருந்தது.

ICC (international cricket council) தனது நூறாவது வருடத்தை இவ்வருடம் கொண்டாடி வருகிறது. 1909ல் imperial cricket council என்கிற பெயரில் ஆஸ்திரேலியா,தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னால் ஐசிசி ஆக கிரிக்கெட் ஆடும் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து 1965ல் துவக்கப்பட்டது அப்போது அந்த அமைப்பின் பெயர் international cricket conference . 1989ல் அது இப்போதிருக்கும் ஐசிசி ஆக பெயர்பெற்றது குறிப்பிடத்தக்கது. 104 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.

பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அணியின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதில் காயமடைந்த இலங்கை கிரிக்கெட் அணிவீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . அவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் மட்டையையும் பந்தையும் பிடித்து விளையாட ஆண்டவனை வேண்டுகிறோம். அதே வேளையில் இன அழிப்பில் மும்முரமாய் இறங்கி இருக்கும் இலங்கை ராஜபஜ்ஜி அரசால் ஈழத்தில் தமிழின மக்கள் கொத்து கொத்துதாய் செத்து மடிகையில் கொழும்புவில் இந்திய அணியுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்த இலங்கை அணி வீரர்களுக்கு இனியாவது வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் மணமும் துயரமும் தெரியட்டும். தன் சொந்த மண்ணில் செத்து மடியும் சக இலங்கை பிரஜைக்காக இனியாவது கால் டீஸ்பூன் சிந்திக்கட்டும். ( இங்கே இந்திய அணியை நம்மால் விமர்சனம் செய்ய இயலாது.. சொந்த நாட்டினருக்கே இல்லாத அக்கறையை மொழிவாரியாய் அடித்துக்கொண்டு கிடக்கும் இந்தியாவிடம் எதிர்பார்ப்பது மூடத்தனம்... இரண்டாவது தேசியத்திற்கெதிராக பேசினாலோ எழுதினாலோ உடனடியாக இங்கே கைது செய்யப்படும் அபாயம் இருக்கிறது)

சக வலையுலக நண்பரின் திரைப்படவிமர்சனம் ஒன்றிற்க்கு சென்ற வாரம் வந்த பின்னூட்டத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். ''ஈழத்தில் மக்கள் செத்து மடிகிறார்கள் உங்களுக்கு சினிமா விமர்சனம் கேட்கிறதா!! '' என்று அந்த பின்னூட்டத்தில் அனானியாக வந்திருந்தது. அவரிடம் இது குறித்த கேட்டபோது யாரோ பிரான்சிலிருந்து அப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருப்பதாக சொன்னார். அவர் கொண்டைகளை கண்டறிவதில் வல்லவர். அந்த பின்னூட்டத்தின் தர்க்கம் விளங்கவில்லை.

சிலபல பதிவர்களின் அரசியல் பதிவுகளை காணநேர்ந்தது. பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் மிகச்சூடான பல பதிவுகளும் அதை ஒட்டி இருந்தன. இது போன்ற பதிவெழுதுபவர்களில் பலரும் வெளிநாட்டினராகவும் வெளிமாநிலத்தில் வசிப்பவராக இருக்கின்றனர். பக்கம் பக்கமாய் தேர்தல் பதிவெழுதி விட்டு தனது வாக்கை வெளிநாட்டில் இருந்துகொண்டு எப்படி பதிவு செய்வார்கள் என்கிற கேள்வி எழுந்தது.. தன் ஓட்டைக்கூட போட முடியாத..... ச்சூ ச்சூ .... அதெல்லாம் நீ ஏன் கேக்கற என்று பிரகாஷ்ராஜ் வாய்ஸ் ஒன்று இப்போதெல்லாம் அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது...


சமீபத்தில் பதிவெழுதுவதை நிறுத்திவிட்ட ஒரு உடன்பிறப்பிடம் ( லக்கிலுக் அல்ல, இவர் வேறு) யாரோ ஒரு வாசகர் திமுகவின் வலையுலக தூண் தாங்கள்தான் நீங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டால் திமுகவிற்காக யார் எழுதுவார்கள் என்று கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். திமுகவில் மிக உயரிய பதவியில் இருக்கும் அவரோ ''யோ போயா வெண்ணை வெறும் 3000 ஓட்டுக்காக நைட்டும் பகலும் உக்காந்து வலைப்பதிவு போடறத விட 30000 கள்ள ஓட்டு போட்டு ஜெயிச்சுக்குறோம்யா '' என்றிருக்கிறார். '' அதோடு விடாமல்.. விஜயகாந்தைப் போல கணக்கும் கூற ஆரம்பித்துவிட்டார். '' தினமும் வலைப்பதிவுகள் படிக்கறவன் 3000 பேர்.. இதுல அரசியல் பதிவு படிக்கிறவன் 2000 பேர்.. இதுல வெளிநாட்டிலருந்து படிக்கறவன் 1000 பேர்.. அதுல பாதி பேரு அதவாது 500 பேரு வெளிநாடு மற்றும் உள்நாட்டு இலங்கைத்தமிழன்.. மீதி 500 பேர்ல 300 பேர்தான் தமிழ்நாட்டில் இருக்கான்.. அந்த 300 பேர் ஓட்டுக்காக ... '' எனக்கு தலைசுற்றியது .


டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஓட்டளிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை துவங்கியிருப்பதாக தெரிகிறது . அது குறித்த மேலதிக தகவல்கள் தந்தால் அடுத்த வாரங்களில் எழுதுகிறேன்.


இன்று மார்ச் 9 ( பௌர்ணமியாம்) , இன்று காலையிலிருந்து ஈழத்தமிழருக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதாக தெரிகிறது. கடைசித்தகவல் இலங்கைத்தமிழரின் தனிநாடு கோரிக்கையை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளாராம்! . அடடே!!


சுஜாதாவின் 'ஏன் எதற்கு எப்படி'யில் ஒரு கேள்வி-


கே - பெண்களுக்கு ஏன் பின்புறம் ஆண்களைவிட பெரிதாக இருக்கிறது ?



பதில் - அவசியம்தான் , பெண்களில் பயலாஜிக்கல் ரோல் பிள்ளை பெறுவது , அதற்காக அவர்களது பெல்விஸ் பகுதி சற்று அகலமாக இருக்கும்.ஆண்களின் கவனத்தை கவரும் இரண்டாம் பட்ச காரணமும் இருக்கிறது. கமல் ஒரு அறிவியல்ரீதியான காரணத்தை சொன்னார். ஆதிவாசிப்பெண்கள் தொடர்ந்து உணவில்லாமல் இருக்க நேரிடலாம் என்று பின்ப்பக்கத்தில் சதை சேர்த்து வைப்பார்களாம். கொழுப்பு சேர்ந்திருப்பதால் அவர்களால் காந்தியை விட அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருக்க இயலுமாம்.



சமீபத்தில் ஒரு விளம்பரம் மிக மிக எரிச்சலூட்டியது . கேனத்தனமாக இருந்தது. அது தீ படத்தின் டிரெயிலர். அதில் ஹிந்துஸ்தான் பெட்ரால்பங்கில இந்துக்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் போடறாங்களா காதர்பாய் கடைல முஸ்லீம்கள் மட்டும்தான் கறிவாங்குறாங்களா என்பதாக இருந்தது. காறி துப்பியிருப்பேன். டிவி என்னுடையது. இது தவிர அந்த படத்தில் இடம்பெறும் இன்னும் பல காறி துப்ப.. கூடிய வசனங்களும் அடிக்கடி ஒளிபரப்பாவது கண்டு காரி காரி தொண்டை வலிக்கிறது.

காரித்துப்புவதில் உலக அளவில் இதுவரை 100 அடி தூரத்திற்கு துப்பியதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது என்று அமெரிக்கன்ஸ்லைப்ரரி.காம் சொல்கிறது. விரைவில் அந்த சாதனை தமிழர்களால் முறியடிக்கப்படலாம்.

சென்றவார எதிர்வீட்டு ஜன்னலைப்படித்த பலரும் ஏன் வாரம் ஒன்று எழுதவேண்டும் வாரமிறுமுறை எழுதலாமே என்று கேட்டுக் கொண்டனர். கம்பேனியில் கம்பியை பழுக்க காய்ச்சி என் மெல்லிய உடலில் துளையிருக்கும் இடமெல்லாம் விட்டு குடைந்து வேலை வாங்கி வருகின்றனர். அதனால் வாரத்திற்கு ஒரு பதிவு போடுவதற்கே தாவூ தீர்ந்து டவுசர் கிழிகிறது. இருந்தாலும் என்னால் முடிந்தவரை வாரம் இரு முறை முயல்கிறேன்.



சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த பதிவுகள் சில..


டாக்டர் ருத்ரன் அவர்களின் ஆன்மீகசந்தை ( வினவின் தமிழாக்கம்) தொடர்...

www.vinavu.wordpress.com/2009/03/06/gurus/

பாலுணர்வு புணர்ச்சி விதிகள் ( கண்டிப்பாக வயதுவந்தோர்க்கு மட்டும்)

http://tamil-uyir.blogspot.com/2009/03/blog-post_06.html
செந்தழல்ரவியின் அடாவடி பேட்டி - மோகன் கந்தசாமியின் வலைப்பூவில்
http://mohankandasami.blogspot.com/2009/03/blog-post_05.html

**********************************************************************************

பலமுறை சொல்லியும் கேளாமல் அளவுக்கதிகமான அன்போடு தனது நட்சத்திர வாரத்தில் எனக்காக ஒரு பதிவிட்டு வாழ்த்துச்சொன்ன வால்பையனுக்கு - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு . நேரிலும் போனிலும் மின்னஞ்சலிலும் ஆர்குட்டிலும் வால்பையன் பதிவிலும் எனது கடைசி பதிவிலும் எனக்கு வாழ்த்துச்சொல்லிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.