Pages

30 July 2009

கன்ட்ரோல் X + கன்ட்ரோல் V




உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லை. மூன்று பேரும் பூமி அதிர ஓடிக்கொண்டிருந்தனர். ராகவ் அதீத வேகத்தில் மின்னல் போல ஓடிக்கொண்டிருந்தான். மானிட்டரில் 85KMPH எனக்காட்டியது. அருகில் ஓடிக்கொண்டிருந்த இளாவின் மானிட்டரில் 83தான் காட்டியது. அது ஒரு ஓடும் இயந்திரம் நின்ற இடத்திலேயே ஒடிக்கொண்டிருக்கவல்ல இயந்திரம். டிரட்மில் போன்றிருந்தாலும் இது லேட்டஸ்ட் மாடல். உங்கள் பிளட் பிரஷர் , உடல் இயக்கம் , வேகம் , இதயத்துடிப்பு என சகலத்தையும் மானிட்டரில் காட்டிவிடும். நின்ற இடத்தில் ஓட பயிற்றுவிக்கும் இயந்திரம் அது. மூவருக்கும் தெரிந்த விளையாட்டு பொழுதுபோக்கு எல்லாமே விபரம் தெரிந்ததில் இருந்து அதுதான்.

அவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் தெரியாது. விபரம் தெரிந்ததில் இருந்து அந்த இடத்தில்தான் வாசம். தினமும் வகுப்புகள் முடிந்து அரைமணிநேரம் சுதந்திரம் அந்த நேரத்தில் நடக்கலாம் , ஆடலாம் , பாடலாம் , சிரிக்கலாம், சக நண்பர்களோடு பேசலாம் , அல்லது இதோ இங்கே ஓடலாம்.

சூரியன் மறைந்துவிட்டால் ராகவ்,இளா,சுந்தர் மூவருக்கும் இதுதான் முதல் வேலை. ஓடிக்கொண்டேயிருப்பார்கள். யார் குறைந்த வேகத்தில் ஓடுகிறார்களோ அவர் மற்றவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டும். கப்பம் என்றால் பெரிதாய் ஒன்றுமில்லை. ஹாஸ்டலில் இரவு உணவில் தரப்படும் நான்கு வெந்த உருளைக்கிழங்குகளில் இரண்டை தந்துவிட வேண்டும். எப்போதும் ராகவும் இளாவும்தான் ஜெயிப்பார்கள். சுந்தர் எப்போதாவதுதான் உருளைக்கிழங்கு வாங்கியிருக்கிறான்.

நாளை ஆர்ட்டிபீசியல் இன்ட்டலிஜென்ஸ் பாடத்தின் செய்முறை தேர்வு. ராகவும் இளாவும் படிப்பில் லேசாய் மக்கு. சுந்தர் சுமார். ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களின் அறிவு குறித்த அந்த பாடம் கொஞ்சம் சிரமமானது. மற்றபாடங்களும் சிரமமானதுதான். மற்றவையும் ரோபோக்களை பற்றியதுதான். ரோபோக்கள் மட்டும்தான் பாடம். நிறைய கணக்கு போடவேண்டும். பல பார்முலாக்களை மனப்பாடம் செய்ய வேண்டும். நம்மவர்கள் அதில் கொஞ்சம் வீக்கு. கொஞ்சமல்ல நிறைய வீக்கு.

''டேய் எப்படிடா! நாளைக்கு பாஸாகாட்டி அவ்ளோதான்.. நாம சாகவேண்டியதுதான்..? '' மெதுவாக ஓடியபடி இளா பேச ஆரம்பித்தான். வேகம் 35 காட்டியது.

தேர்வில் தோற்கும் மாணவர்களில் அறிவில் குறைந்தவர்களாக தெரிபவர்களை அரசாங்கம் பரிசோதித்து பார்க்கும் . வேலைக்கு ஆகாவிட்டால் அவர்களை கொன்று அவர்களது மூளையை எடுத்து மின்வினியோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் என ஏற்கனவே மீரானையும் கிரியையும் பிடித்துக்கொண்டு போனபோது பக்கத்து பெஞ்சு பரமு சொல்லியிருந்தான் . அந்த பயம்தான் இவர்களை பாடாய் படுத்தியது.

''டேய் இந்த மாதிரி படிச்சிட்டு , எவனோ ஊர் பேர் தெரியாத ஒரு இயந்திரத்துக்கு அடிமையா வாழறத விட செத்துப் போயிடலாம்டா '' தன் முகத்தில் வழியும் வியர்வையை காயவைக்க உஸ் என காற்றடிக்கும் ஏதோ இயந்திரத்தில் முகத்தை மட்டும் காட்டியபடி பேசினான் சுந்தர்.

''இல்லடா மச்சான்! இங்க படிக்கற பசங்கள பாரு எவனுக்கும் சொரணைன்றது கொஞ்சம் கூட கிடையாது... ஏதோ நாமதான் கொஞ்சூண்டாவது புரட்சி பத்தின பழங்காலத்து மெமரி ஸ்டோரேஜ்லாம் பொறுக்கி படிச்சு ஓரளவுக்கு சூடு சொரணையோட இருக்கோம்..'' சலித்துக்கொண்டான் ராகவ்.

''டே லூசுங்களா நாளைக்கு எப்படி பாசாகறது அதுக்கு வழி சொல்லுங்க..! '' எரிச்சலோடு கத்தினான் இளா! அவனது கத்தலில் மரண பயம் கவ்வியிருந்தது கச்சிதமாய் தெரிந்தது.

''நாளைக்கு எக்ஸாம்க்கு யாருடா டியூட்டர் ''

''நம்ம ஏ-2371 தான் ''

''ம்ம்.. அதுவா.. அது சி-5556 மாடல் இயந்திரமாச்சே , அதோட கண்ணு அப்புறம் சென்சிட்டிவிட்டி எப்படி இயங்குதுனு முதல்ல தெரிஞ்சுக்கணும் , இளா நீ அந்த பழைய விக்கிபீடியா டேடாபேஸோட மெமரி சிப் தோட்டத்துல இருக்கற மூடின சுரங்கத்தோட வாசல்ல பொதஞ்சிருக்கு எடுத்துட்டு வாயேன்...! ''

நூறாண்டுகளுக்கு முந்தைய கையடக்க கணினி ஒன்றினை சுரங்கங்களில் பணியாற்றுகையில் பூமிக்கடியில் இருந்து எடுத்திருந்தனர். வாரமிருமுறை சுரங்ககங்களில் வேலை இவர்களுக்கு. தோண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் கம்பியை விட்டு நோண்டி விடும்கள் அந்த இயந்திரங்கள்.

அங்கேதான் அழிந்து போன பூமியின் பல சொச்சங்கள் அழியாமல் அவர்களிடம் கிடைத்திருந்தது. ஏபிசிடி புத்தகங்கள், பென் டிரைவ் , என்சைக்ளோபீடியா , இதோ இந்த கூகிள் சிப் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் , பொதுவாய் மற்ற மாணவர்கள் அது மாதிரி கிடைக்கும் போது அதை தங்களது டீயுட்டரிடம் ஓப்படைத்து விட வேண்டும். எத்தனை பொருட்கள் தருகிறார்களோ அத்தனை மதிப்பெண்கள். அந்த சுரங்க வேலைப்பாடத்தில் இவர்களுக்கு எப்போதுமே சரியாக பாஸ் மார்க்தான்.

கையடக்க கணினியில் அந்த சிப்பை இணைத்து முடுக்கிவிட்டான் இளா. அது ஓளிர்ந்து விக்கிபீடியா டேடாபேஸ் திறந்தது. சி-5556 என்று டைப் செய்து SEARCH பட்டனை அழுத்த அது இரண்டு விநாடிகளில் மொத்தமாய் விபரங்களை குவித்தது.

''மச்சான் அந்த மாடல் ரோபோவுக்கு கையெழுத்த படிக்க தெரியாதாம்.. அது ஒன்னுதான் வழி.. ''

''ஆனா நமக்கு யாருக்குமே கையால எழுத வராதேடா''

''ம்ம்.. நான் அந்த ஏபிசிடி புக் படிச்சு சுரங்கத்தில கிடைச்ச கரிய வச்சு ஓருமாதிரி எழுதி பழகிருக்கேன்டா.. ''

வெறும் மானிட்டரில் மட்டுமே எழுத்துக்களை பார்த்து பழகிய தன் நண்பர்களிடம் குஷியாய் சொன்னான் சுந்தர் .

''சரி எங்க எழுதுவ என்ன எழுதுவ.. ''

''ம்ம்ம் இதோ நம்ம உடம்புலதான்.. ''

''கரியால நம்ம உடம்புல எழுதினா..நாம எப்படி படிக்கறது..''

''என் முதுகுல எழுதிருக்கறத நீ படி.. உன் முதுகுல எழுதிருக்கறத நான் படிக்கறேன்.. அவ்ளோதான்.. ''

''அப்போ நான்..''

''டேய் நீ என்னோட முதுகுல படி ''

உடையே வாழ்க்கையில் பார்த்திராத அவர்களுக்கு இந்த யோசனை எளிதாய் இருந்தது. தத்தமது பெட்டிகளுக்குள் போய் உட்கார்ந்தபடி சில வயர்களை எடுத்து நெற்றி ஓரங்களில் மாட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தனர்.

விடிந்தது. கரிக்கட்டையை எடுத்து சுந்தர், இருவரது ஓப்பன் முதுகிலும் எழுதத்துவங்கினான் .

''மச்சான் எக்ஸ் எப்படி எழுதணும். அப்புறம் வி ... அப்பறம் ஸ்கோயர் எப்படி போடணும் "

''டேய் நீதானடா எனக்கு எழுதவரும்னு சொன்னே.. இப்ப என்னடா! எங்கிட்ட கேட்டா! ''

''இரு .. யோசிக்கிறேன்.. ''

''ஓகேடா முடிச்சிட்டேன்.. ''

''டேய் என் முதுகுல யார்டா எழுதுவா..! ''

''ரெண்டு பேர் முதுகுல எழுதினது போதும்... நீ வரிசைல கடைசியா பின்னாலதான நிப்ப என் முதுக பாத்து எழுது '' அதட்டினான் இளா

தேர்வு துவங்கியது. எதிரில் இருந்த உயிரில்லாத மாதிரிரோபோக்களின் இதயப்பகுதியில் தனது கீபோர்டை இணைத்து தட்டச்ச துவங்கினர்.

இவர்களது ஊடாக அவர்களது டியூட்டர் இயந்திரம் நடந்து கொண்டே இருந்தது. கீ கீ கீ கீ. தேர்வு முடிந்தது.

இன்னும் 23 விநாடிகளில் முடிவுகள் அறிவிக்கப்படும். அசரீரயாய் ஒரு குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

''அமீர் - பாஸ் , அஜ்மல் - பாஸ் ... '' வரிசையாய் அறிவித்துக்கொண்டிருந்தது அந்த குரல். மூவரது பெயர் மட்டும் மிஸ்ஸிங்.

''இளா,சுந்தர்,ராகவ் மூவரும் தங்களது டியூட்டரான ஐ-2323யின் அறைக்கு உடனே வரவும்'' என்றது அந்த அசரீரி குரல்.

அறையில் தனது இதயப்பகுதியில் இருந்த எதையோ கழட்டி துடைத்துக்கொண்டிருந்தது அந்த ஐ-2323 என்னும் ரோபோட்.

''அமருங்கள் . நீங்கள் மூவரும் தேர்வில் வெற்றியடைந்து விட்டீர்கள்..! ''

மூன்று பேர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசமாய் ஒளிர்ந்தது.

''நீங்கள் செய்த புரோகிராமில் மட்டும் ஒரு பிழை இருக்கிறது. கன்ட்ரோல் வீ மற்றும் எக்ஸ் இடம் மாற்றி இடப்பட்டிருக்கிறது , அது பெரிய பாதிப்பை உண்டாக்காது.. இருந்தாலும்...''

மூவருக்கும் லேசாய் வேர்த்துக்கொண்டிருந்தது. ராகவ் சுந்தரைப் பார்த்து பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான்.

''மூவரும் அதே தவறை செய்திருப்பதால் நீங்கள் %$@$&%$@&%$@%$@*@*@*$$*@%))%)% எனவே உங்களை பரிசோதித்த பின் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.. '' என்று பேசிய படியே அருகிலிருந்த பொத்தானை அழுத்த இரண்டு நீலநிற ரோபோக்கள் வந்து மூவரையும் அழைத்து சென்றது.

(நடுவில் வந்த $&$@#&$&@@%$& ரோபோக்களின் கெட்ட வார்த்தை )

***************

அந்த மனிதகொலைக்களத்தை இப்போதுதான் முதல்முறை பார்க்கின்றனர். இரண்டு ரோபோக்களும் அவர்களை பிடித்திருந்த பிடியை தளர்த்தியது. இளா துருதுருவென அங்கிருந்து தப்பிக்க நினைத்தான். எப்படி? வழி? எதுவும் தெரியாது. அந்த பெரிய அறையின் கதவு திறந்துதான் இருந்தது. எப்படியாவது அங்கிருந்து தப்ப வேண்டும். உயிர்! . ஓடு ஓடு ஓடு என மனது சொல்லியது. உடல் வலிமையை மொத்தமாய் திரட்டி மின்னல் வேகத்தில் ஓடித்துவங்கினான். ஓடினான். ஓடினான். நிச்சயம் 90 ஐ தொட்டிருப்பான். ஆனால் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தான். அப்படித்தான் அந்த இயந்திரம் அவர்களை பழக்கப்படுத்தியிருந்தது. அருகில் எந்த சலனமும் இன்றி இரண்டு ரோபோக்களும் அவனை பார்த்துக்கொண்டிருந்தன.

ஓடிக்கொண்டிருந்தவனின் அருகில் போய் ''போகலாமா? '' என்றது நீலநிற சைத்தான்.

இளா மெதுமெதுவாய் வேகம் குறைத்து. அவைகளோடு நடக்கத் துவங்கினான்.

அவர்கள் ஒவ்வொருவரும் வசிக்க இதே போல பெட்டிகள் கொடுத்திருந்தனர். ஆபீஸ் டேபிளை கவுத்துப் போட்டது போலிருந்த அந்த டேபிளுக்குள்தான் இப்போதும் அனுப்புகின்றனர்.

''டேய் என்னடா இது நம்ம தங்கற பெட்டி மாதிரி இருக்கு இதுக்குள்ள போட்டு என்ன பண்ணுவானுங்க , வேகவைப்பானுங்களா!''

''தோழர்களே நீங்கள் இங்கே பேசத்தடை இருக்கிறது.. மீறி பேசினால் , நாக்கு துண்டாக்கப்பட்ட பின் கொல்லப்படுவீர்கள் ''

மூவரும் கப்சிப்.

அங்கிருந்த பெட்டிக்குள் மூவரும் அடைக்கப்பட்டனர்.

அதன் மேல்கதவுகள் மூடப்பட்டன. அந்த நீலநிற ஜந்துக்களின் கையோடு இணைந்திருந்த குட்டி கணினி போன்ற ஒன்றில் ,

ஆப்சன் 4
கன்ட்ரோல் எக்ஸ்
கன்ட்ரோல் வி

என டைப்படிக்க.

சில நிமிடங்களுக்கு பின் அந்த கதவுகள் திறக்கப்பட மூவரும் எழுந்தனர் உயிருடன்.

அந்த பெட்டி முழுக்க ஓரே புகை. திருதிருவென விழித்த படி நிர்வாணமாய் நின்றனர். ராகவ் சிரித்தான் . சுந்தர் அழுதுகொண்டிருந்தான் . இளா மட்டும் பெட்டிக்குள் ஓடிக்கொண்டேயிருந்தான். அதே வேகம் 90ஐ தொட்டிருப்பான். அவர்களில் மிகச்'சிறிய' மாற்றம். உயரம் மட்டும் குறைவாய் , பால் பற்களுடன் நான்கு வயது பாலகர்களாய்.