Pages

07 October 2009

அலங்கல் - 2

சென்றவாரம் கிழக்குப்பதிப்பக மொட்டைமாடியில் தி லெஜன்ட் ஆப் 1900 என்கிற படம் திரையிடப்பட்டது. அருமையான படம். நல்ல கதை. உணர்வுகளை தட்டி எழுப்பி கண்ணுக்குள் விரலை விட்டு கசக்கி கண்ணீரை வரவழைக்கும் காவியம். பார்த்துக்கொண்டிருந்த பலரும் அப்படியே பிரமித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் முடிந்த பின் மனதில் ஒரே ஒரு சந்தேகம் எழும்பியது. A small doubt! ஏன் எல்லா உலக சினிமாவும் சோகமான உணர்வுகளையே பிரதிபலிப்பதாய் , மனதுக்கு பாரமாய் , அழுகாச்சி காவியங்களாகவே இருக்கின்றன. ( சினிமா ஆர்வலர்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பெரும்பாலான உலகசினிமாக்கள் அதுபோலவே அமைந்து விடுவதால் எனக்கு அப்படி இருந்திருக்கலாம் )

மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை நகைச்சுவையை வெளிப்படுத்தும் உலகசினிமாக்களையும் நண்பர்கள் அறிமுகப்படுத்தலாம். ஏற்கனவே ஒரளவு அடி வாங்கியிருக்கும் எங்கள் சொம்புகள் கொஞ்சம் சிரித்து மகிழவும் அதை பகிர்ந்து கொள்ளவும் ஏற்புடைய திரைப்படங்கள் திரையிடலாம். உரையாடல் திரைப்படவிழாக்குழுவினர் இது குறித்து ஆலோசித்து ஒன்றிரண்டு காமெடி உலக சினிமாக்கள் போடலாம். மாதாமாதம் இருட்டறையில் முரட்டு குத்து என்பது போல சோக கீதமாய் படங்கள் போடாமல் கொஞ்சம் சிரிப்புக்கும் இடமளிக்கலாம்!. நிறைய மக்களும் வர வசதியாய் இருக்கும். மற்றபடி 1900 திரைப்படம் நிச்சயம் அருமையாகவே இருந்தது. குறையொன்றும் இல்லை! கிடைத்தால் பாருங்க!

போன வருடம் ஒரு ஆடி மாதம் வாங்கி வைத்திருந்தேன் அந்த திரைப்படத்தை. கடைசி அமாவசை அன்றுதான் அது என் கண்ணில் பட்டது. இத்தாலிய திரைப்படம். சப்டைட்டில் இல்லை. பிரிண்ட் மட்டம் என பல கொடுமையான பிரச்சனைகளை கடந்து அதை காண வேண்டிய நிர்பந்தம். ( அந்த காரணங்களை சில பல சொல்ல முடியாத காரணங்களால் அதை இங்கே சொல்ல முடியாது ) . அந்த திரைப்படத்தின் பல காட்சிகள் பொல்லாதவன் திரைப்படத்தை நினைவூட்டியது. அந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ். ஆனால் ஒரிஜினலுக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாய் தெரியவில்லை. வண்டி தொலைந்து போவது மட்டும்தான் சேம். மற்றதெல்லாம் வேறு வேறு. பொல்லாதவன் லோவர் மிடில் கிளாஸ் இளைஞனின் தவிப்பையும் அவனது கொண்டாட்டம் காதல் கோபம் என விரிவான தளத்தில் இயங்கும் திரைப்படம். பை.தீ படம் ரோமின் ஏழை ஒருவனின் சைக்கிள் தொலைந்து போவதும் அதை அவன் தேடி அலைவதுமாய் மனதை பிழியும் இன்னொரு உணர்ச்சிக்காவியம். ( படத்தின் கிளைமாக்ஸில் கண்களில் நீர்வர பார்த்துக்கொண்டிருந்தேன்!). அந்த படத்தை இயக்கியவர் நிச்சயம் என்னைப்போல சாருவைப்போல பரம ஏழை படைப்பாளியா இருக்க வேண்டும். வாய்ப்புகிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.

மிதிவண்டி திருடர்கள் படத்தை சார்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் நிறைய படங்கள் வந்திருப்பதாய் எண்ணுகிறேன். சில்ரன் ஆப் ஹெவன் படமும் பதேர் பஞ்சாலியும் கூட பை.தீவ்ஸ் படத்தின் கதையை ஒட்டி வருவதாகவே படுகிறது. ஆனால் ஒவ்வொன்றும் ஒருவிதம். நிச்சயம் அது காப்பி அடிக்கப்பட்டது என்று சொல்லிவிட இயலாது. ஏழைக்கு எது தொலைந்தாலும் சிக்கல்தான். கிட்னியாக இருந்தாலும் சரி இலையில் வைத்த சட்னியாக இருந்தாலும் சரி. தொலைந்து போனால் சிக்கல்தான். அது ரோமில் தொலைந்தாலும் ஈரானில் தொலைந்தாலும் சிக்கல்களும் அது சார்ந்த பிரச்சனைகளும் ஒன்றுதான். தமிழிலும் இது போல எதையாவது தொலைத்துவிடும் உலக சினிமா யாராவது எடுக்கலாம்!

ஏதோ ஒரு நள்ளிரவில் டிவியில் எதையோ தேடிக்கொண்டிருந்த போது ஜீவன் நடித்த படம் ஒன்றின் டிரைலர் பார்த்தேன். அதில் கேட்ட வசனம் படு சுவாரஸ்யமாக இருந்தது (எனக்கு!).
‘’தல இருக்கறவன்லாம் தலைவன் இல்ல.. தண்டவாளத்தில தலய வச்சான் பார் அவன்தான்டா தலைவன்’’ . படுபயங்கரமாக வசனம் எழுதிய இயக்குனர் ஸெல்வனுக்கு வாழ்த்துக்கள்.

இந்த மாத உயிர்மை இதழில் உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் குறித்து எந்த கருமாந்திரத்தையாவது எழுதுவார்கள் என ஆவலுடன் காத்திருந்தேன். கமினே திரைப்பட விமர்சனம் மட்டும் சாரு எழுதியிருந்தார். அதில் நாடோடிகள் திரைப்படத்தை கடுமையாக கடித்து குதறியிருக்கிறார். பொக்கிஷம் கந்தசாமி வைகை என சமீபத்தில் தமிழ்திரையை ஆக்கிரமித்த அரைடஜன் படங்களை குறித்து விலாவாரியாக விளாசி இருக்கிறார். ஆனால் உ.போ.ஓ பற்றி ஏதும் பேசக்காணோம்!. யுவன் சந்திரசேகரின் சிறுகதை ஒன்றும் வெளியாகி இருந்தது முக்கால் கதை படிப்பதற்குள்ளேயே ஆஆஆவ்.. யுவன் நன்றாக பேசுகிறார் ( புரியும் படி! சுவையாக!) எழுதும் போது ஏதோ சைத்தான் புகுந்துவிடும் போலிருக்கிறது! காலச்சுவடில் மிக காட்டமான விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஒரளவு உண்மையை உரைப்பதாய் உ.போ.ஒ குறித்த பார்வை வெளியாகியுள்ளது.

சென்ற வாரம் நாகார்ஜூனன் புக்பாயிண்டில் பேசுகிறார் என பைத்தியக்காரன் பதிவு போட்டிருந்தார். அதில் அவர் எதைகுறித்து பேசுகிறார் என கேட்டிருந்தேன். அவர் பதிலளிக்காததால் நேரில் போய் என்ன பேசுகிறார் என்று பார்த்தேன். கொஞ்சம் தாமதமாக செல்ல வேண்டியிருந்ததால் நான் போகும் போது பேசத்துவங்கியிருந்தார். முக்கால்வாசி படம் முடிந்திருந்தது. நாகார்ஜீனன் முறுக்கு மீசையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்க கும்சாகத்தான் இருந்தார். நான் நினைத்திருந்த உருவம் வேறுமாதிரி இருந்தது. அரசியல் சட்டம் , மலேரியா காய்ச்சல் , மாம்பலம் மெஸ், பாகிஸ்தான் பிரிவினை என கொச்ச கொச்ச வழவழா கொழகொழா என கலந்து கட்டிப்பேசிக்கொண்டிருந்தார். பிச்சி போட்ட இட்லி போல மொக்கையாக இருந்தது. ஒரு மண்ணும் புரியவில்லை. அறிவுஜீவிகள் நிரம்பிய சபையில் நமக்கென்ன வேலை என புக் பாயிண்டில் சில புத்தகங்கள் பார்த்தேன். பல புத்தகங்கள் நம்ம நண்பர்கள் எழுதியதாக கண்ணில் பட்டது. என்றைக்காவது நம்ம புக்கும் இங்க விக்கணும் என நினைத்தபடி அங்கிருந்த நகர்ந்தேன்!...