Pages

02 March 2010

இலங்கை இறுதி யுத்தம்



இலங்கையில் நடந்த நான்காவது ஈழப்போர் சென்ற ஆண்டின் மத்தியில் முடிவுக்கு வந்தது அரதப் பழைய செய்தி . போரின்  இறுதியில் நிகழ்ந்தவை ஒரு சாரருக்கு பேரதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியையும் அளித்தது. அந்த இறுதி நிகழ்வுகளையும் , 25 ஆண்டுகால நீண்ட போரின் முடிவையும் இலங்கை ராணுவம் எப்படி தன் வசமாக்கி வெற்றிகொண்டது,  பல லட்சம் மக்கள் அகதியானதன் பிண்ணனி  என்ன என்பது மாதிரியான விஷயங்களை விளக்க முனைகிறது இலங்கை இறுதி யுத்தம் நூல்.
 என்டிடிவியின் பாதுகாப்பு மற்றும் ராணுவ விஷயங்கள் தொடர்பான ஆசிரியர் நிதின் கோகலே. அவர் எழுதிய ‘SRILANKA : FROM WAR TO PEACE “ என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்து கிழக்குப் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளனர். (மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லை)
இந்த நூலின் விமர்சனத்தினை அதன் முன்னுரையிலிருந்தே துவங்கலாம். முதலில் அதிலிருந்து இரண்டு சாம்பிள் பத்திகள்.
1 . ‘உலகின் மிகக் கொடூரமான ஒரு தீவிரவாதக் குழுவை எப்படி இலங்கை ராணுவம் ஒழித்துக் கட்டியது என்கிற கதை எழுதப்பட்டே ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியது’’
2. ‘ இந்த புத்தகத்தின் உருவாக்கத்தில் சிலரது பெயர்களை நிச்சயமாக சொல்லமுடியும் , மூத்த பத்திரிக்கையாளர் இலங்கை விவகாரத்தை கூர்ந்து கவனிக்கும் நோக்கர் பி.கே.பாலசந்திரன் , இலங்கை பாதுகாப்பு துறைச் செயலர் கோதபாய ராஜபக்சே , ஜெனரல் சரத் பொன்சேகா , ஹை கமிஷனர் ரொமேஷ் ஜெயசிங்கே , இலங்கை வெளியுறவுத் துறை செயலர் பலித கோஹனே... ‘
என்று அந்த பட்டியல் அந்தக்கால கோயபல்ஸுக்கு இணையாக மேற்கத்திய நாடுகள் சித்தரித்த இன்னும் பலரது பெயர்களுடன் நீள்கிறது.
இந்த புத்தகம் எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கும் என்பதை முதலிலேயே விளக்கிவிடுவதும் , ஈழப்போராட்டம் குறித்தான ஆசிரியரது பார்வையையும் தெளிவாக்கிவிட்டு புத்தகம் குறித்து பேசுவதுமே சரியாக இருக்கும். அதை மேலுள்ள இரண்டு பத்திகள் முழுமையாக விளக்கியிருக்கும். இது ராஜபக்சேவுக்கு நன்றி விசுவாசத்துடன் எழுதப்பட்ட உண்மையான வரலாறு.
19 மே 2009லிருந்து புத்தகம் துவங்குகிறது. அன்றைக்கு பிரபாகரனின் இறந்த சடலத்தினை ஆய்வு செய்யும் கருணா , அது அவர்தான் என்று சான்றளிக்கிறார். அதைத்தொடர்ந்து சரத் பொன்சேகா , பிரபாகரனை கொன்றது எப்படி என்று விளக்குகிறார். அதைத்தொடர்ந்து அந்த கடைசிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தின் வீரதீர சாகசங்கள் அல்லது அவர்களுடைய திட்டமிடலும் போர்த்தந்திரங்களும்.
அதற்குடுத்தடுத்த அத்தியாங்களில் பிரபாகரன் என்னும் ஒற்றை ஆள் , எப்படி இலங்கையின் 65000 கி.மீ சதுர கி.மீ பரப்பளவில் 16000ஐ தன்னுடைய முழுமையான நிர்வாக கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதனையும் , அந்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் ஆராய்கிறார். செப்டம்பர் 11க்கு பிறகான உலக அரசியலை சரியாக கணிக்காமல் விட்டது. கருணாவை துரத்தியது. ரணிலுக்கு மாற்றாக ராஜபக்சேவை ஆதரித்து தேர்தலை புறக்கணித்தது, இலங்கை இராணுவத்தின் பலத்தை தவறாக கணித்தது. முழு அமைப்பையும் பிரபாகரன் என்னும் ஒருவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ராஜிவ் காந்தி படுகொலையை நிகழ்த்தியதால் உருவான பிரச்சனைகள் என்று பல காரணங்களை முன்வைக்கிறார்.
நான்காவது ஈழப்போர் கிழக்கில் மாவிலாறு அணைக்கட்டில் துவங்குகிறது. அங்கிருந்து கிழக்கை முழுமையாக இலங்கை இராணுவம் கைப்பற்றுதல். அதைத்தொடர்ந்த ராஜபக்சேவின் வெற்றியுரை வடக்கில் நிகழ்ந்த போர் போர் போர் ஒயாத போர்தான்.
இதற்கெல்லாம் மத்தியில் ராஜபக்சேவின் நேர்த்தியான நுணுக்கமான ராஜதந்திரமான திட்டமிடல் (புத்தகத்தில் பல இடங்களில் அதை அப்படித்தான் விவரிக்கிறார்) , வீரம் சொறிந்த கொத்தபாய மற்றும் ஃபொன்செகா இணைந்த வரலாறு , இந்த மூவரது கூட்டணி இலங்கை இராணுவத்தில் செய்த புரட்சிகரமான மாற்றங்கள். அவர்கள் இந்தியாவிற்கு அல்வா கொடுத்து சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஆயுத பேரங்கள் என்று செல்கிறது.
ஆசிரியர் ஒரு தீவிர இந்தியனாதலால் ஈழப்போரில் இந்தியாவின் பங்கைப்பற்றி எழுதும் போது அடக்கி முடக்கி வாசிக்கிறார். ஐபிகேஎப் இலங்கையில் எதையுமே செய்யவில்லை , புலிகள்தான் போலியான செய்திகளை அது சார்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பின என்றெல்லாம் எழுதுகிறார்.
புலிகள் தமிழ்நெட் மூலம் பொய் பிரச்சாரம் செய்வதை தடுக்க இலங்கை பல கோடி செலவில் டிபன்ஸ்.எல்கே இணையதளத்தை துவக்கி உண்மை பிரச்சாரம் செய்து இந்த போரில் வெற்றிபெற்றதாம். இலங்கை இராணும் செய்தியாளர்களை மதித்து அவர்களுக்கு தேவையான ‘உதவிகளை செய்தார்களாம். நிதின் கோகுலே நன்றாக “COVER”age செய்திருக்கிறார்.
போகிற போக்கில் இலங்கை அரசு யாரோ 14 பத்திரிக்கையாளர்களை கொன்றார்களாமாப்பா என்று சர்வசாதரணமாக சொல்லிவிட்டு செல்கிறார். ராஜபக்சேவைப்பற்றி எழுதும் போது நரம்புகள் புடைக்க பூரிப்போடு எழுதும் பேனா இறந்து போன சக பத்திரிக்கையாளன் குறித்து எழுதும் போது மண்டையை சொறிகிறது.
புத்தகம் முழுக்க ஒரு பிரச்சனையை நேர்த்தியாக சொல்லிச் செல்கிறார். இலங்கை ராணுவம் எப்போதும் போர்க்காலங்களில் சிவிலியன்களின் உயிரை மதித்து அவர்களுக்காகவே போர்களில் தோற்றது. புலிகள் எப்போதும் சிவிலியன்களின் உயிரை மதிக்கவில்லை. மாவிலாறு பிரச்சனையில் துவங்கி இறுதியுத்தம் முல்லைத்தீவின் 300 கிலோமீட்டர் பரப்பளவில் சுருங்கிய போதும் சிவிலியன்களை கொல்வதும் அவர்களை அகதிகளாக்குவதும் புலிகள் , அவர்களை விடுவிப்பதும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் இலங்கை இராணுவம் என்கிற தொனியோடு எழுதப்பட்டிருக்கிறது.
அது தவிர ஈழப்போர் துவங்க 1980களில் உருவான சிறிய போராளி குழுக்களே காரணம் , அதற்கு முன் என்ன நடந்தது , போராளிக்குழுக்கள் ஏன் உருவாயிற்று , அவை எதற்காக வங்கிகளை சூறையாடின , தகவல்கள் இல்லை.. பாவம் இலங்கை அமைதியாக இருந்தது , இந்த போராளிகள்தான் அதை கெடுத்துவிட்டார்கள், என்பதே ஆசிரியரின் முனைப்பாக இருக்கிறது.
இறுதியுத்தம் நடைபெறும் போது செத்து மடியும் அப்பாவிகளுக்காக போரை நிறுத்த வலியுறுத்திய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடுகிறார். அவை பிரபாகரனை சாவிலிருந்து காக்கவே முயன்றன என்றும் மக்கள் குறித்து அந்த நாடுகளுக்கு அக்கறையில்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக அதே நாடுகள் இலங்கையின் மீதும் ராஜபக்சேவின் மீதும் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு , கொத்தபாய ராஜபக்சேவின் குரலில் தன் பார்வையை வைக்கிறார் அது ’’அமெரிக்காவும் பிரிட்டனும் முதலில் தங்கள் செயற்பாடுகளை கவனிக்கட்டும்’’ என்று ஆணவத்துடன் அலறுகிறார். தொடர்ந்து ஒரு சின்ன நாடு மிகப்பெரிய தீவிரவாத அமைப்பை அழித்துவிட்டதே என்னும் பொறாமையில் மேற்கத்திய நாடுகள் இலங்கையின் மீது குற்றஞ்சாட்டுகிறது என்கிறார். அடப்போங்கடா! என்றிருக்கிறது படிக்கும் நமக்கு.
புத்தகம் முழுக்கவே இலங்கை இராணுவத்தின் வீரதீர சாகசங்களும் , போர்த்தந்திரங்களும் , நுணக்கங்களும் என முழுக்க முழுக்க சரத் பொன்சேகாய நமக.. ராஜபக்ஷாய நமஹ என்று ஆசிரியரின் பஜனை புத்தகம் முழுக்கவே ஒலிக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று
ஆஜானு பாகுவான உருவம் கொண்ட ஃபொன்சேகா , அதற்கு ஏற்றார்போல  வலுவான இதயமும் கூர்மையான ராணுவ சாதுர்யமும் கொண்டவர்’’
புலிகள் தங்களுடைய போர்முறைகளையும் ஆயுதங்களையும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லை. செப்டம்பர்11 தாக்குதலுக்கு பின் தங்களுடைய அயல்நாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்திருக்க வேண்டும். உலக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் குணத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் , இலங்கை ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டது என்பது மாதிரியான தவறுகள் யோசனைகள் நமக்கே தெரியும். அந்த மாவை நைய ஆட்டி புலிகள் மேல் மேலும் குற்றப்பத்திரிக்கை வாசித்திருக்கிறார் ஆசிரியர்.
இப்படி புத்தகம் முழுக்கவே பஜனையாக இருக்கையில் நூலின் ஆசிரியர் சில இடங்களிலாவது உண்மையை சொல்லியிருந்தாலும் அதன் நம்பகத்தன்மையையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. புலி ஆதரவாக எழுதவேண்டும் என்பதல்ல நமது நோக்கம் , ஆனால் மக்கள் ஆதரவாகவாவது எழுதியிருக்கலாம். அது பக்கசார்பற்ற உண்மையான வரலாறாக இருந்திருக்கலாம.
பிரபாகரனுக்கு இறுதியில் நிகழ்ந்தது என்ன? விடைகள் இல்லை. புலிகள் மக்களை தடுப்பு அரண்கள் மூலம் ஓரிடத்தில் முடக்கி வைத்திருந்தனர். தப்பிச் சென்றவர்களை சுட்டுக்கொன்றனர் என்பது மாதிரியான வசதியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
வரலாறு வெற்றிப்பெற்றவனின் பார்வையிலேயே பதிவாகிறது என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நிதின் கோகலே அப்படிப்பட்ட ஒற்றை சார்புடைய பார்வையை இந்த புத்தகத்தில் முன்வைக்கிறார். ஒருவேளை இந்த நூல் இலங்கையில் வாழும் சிங்களவர்களையும் , இந்தியாவில் வாழும் என்டிடிவி பார்க்கும் அறிவுஜீவி வடநாட்டினரையும் குறிவைத்து எழுதப்பட்டிருக்கலாம். எது எப்படியோ இரண்டு டைனோசர்களின் சண்டையில் பல லட்சம் மக்களின் வாழ்வியல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமாவது இறுதியில் சொல்கிறார். அதற்கு நன்றி.
புத்தகத்தில் பல இடங்களில் உண்மையை சொல்வது போல் தெரிந்தாலும் , அதற்கு அடுத்த சீனிலேயே பல்டி அடித்து மீண்டும் ராஜபக்சாய நமக.. என்று பழைய பஜனையையே நூலாசிரியர் ஆரம்பிப்பததால் ஆவ்வ்வ்...
இது மாதிரியான புத்தகங்களை படிக்காமலிருப்பதே நல்லது.