Pages

30 March 2010

அங்காடித்தெரு - யதார்த்தமான அபத்தம்



சோகம் தாங்கமுடியவில்லை. கதறி அழவேண்டும் போல் இருக்கிறது. அய்யகோ! என்ன கொடுமை இது. இதற்கு மேல் தாங்காது! தமிழில் இதுவரை வெளியானதிலேயே இதுதாண்டா சூப்பர் படம். உலக சினிமாவே இங்கே பார் என் தமிழன் எப்படிப்பட்ட படம் எடுத்திருக்கிறான். இப்படி ஒரு படம் இதுவரை தமிழில் வந்ததே இல்லை. அடேங்கப்பா என்ன ஒரு உழைப்பு. என்ன நடிப்பு. இப்படி ஒரு கதைக்களம் எந்த இயக்குனராலாவது கையாள முடியுமா? கண்களில் நீர் தாரைதாரையாக வழிகிறது. உணர்வுகள் , பிம்பங்கள் , காட்சிப்படிமங்கள் . தடிமங்கள் , மற்றும் பல மண்ணாங்கட்டிகள் ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் பலே பலே! அங்காடித்தெரு! – ஒரு உணர்ச்சிகுவியலில் கண்டெடுத்த வைரம்.. ஓவ் ஓவ் ஓவ்...  (கதறி அழுகிறேன்... ஸாரி என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. தயவு செய்து தியேட்டரில் பார்த்து நீங்களும் அழவும் )



____________________________________________________________________________________

மன்னிக்கவும். அ.தெரு படம் உங்களுக்கு பிடித்திருந்தால் , அதை நீங்கள் உளமாற நேசிப்பவராக இருந்தால் , உங்களுக்கான விமர்சனம் மேலே.. இதற்கு மேல் படிக்க வேண்டாம். மேலே இருக்கும் கோட்டைத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரவேண்டாம். இல்லை மேலும் படித்து உங்கள் மனதை புண்ணாக்கிக் கொள்ள விருப்பமிருப்பவர்களும் மற்றவர்களும் தொடரலாம்.

மேலே கண்ட விமர்சனம் உங்கள் கண்களால் படம் பார்த்து எழுதியதாக இருக்கலாம். இனி என் கண்ணால் நான் கண்ட அங்காடித்தெரு அனுபவம்.

விஜய.டீ.ராஜேந்தரை தெரியாதவர்கள் யாராவது தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? அவருடைய படத்திலிருந்து ஒருகாட்சி. அண்ணனைவிட்டு ஓடிப்போன தங்கை. வறுமை தாளாமல் ரோட்டில் சோப்பு விற்பாள். ரிக்சா ஓட்டிக்கொண்டு வரும் அண்ணன் அவளை பார்க்கிறான். அவளோ கடுமையான வறுமையில் வாடி வதங்கி வயிறு ஒட்டி ஒல்லியாய் கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்தும் தலைகுனிந்து கடந்து செல்கிறாள். அவனால் அவளிடம் பேசமுடியவில்லை. கோபம் தடுக்கிறது. தன் ரிக்சாவின் கைப்பிடியை இறுகப்பற்றிக்கொள்கிறான். கேமரா அவளது தலையிலிருந்து மெல்ல கீழிறங்கி கால்களை காட்டுகிறது , கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் நடந்து செல்கிறாள். அண்ணன் ஓவென்று கதறி அழுகிறான். அதைப்பார்த்துக் கொண்டிருந்த தியேட்டரே கதறி அழுகிறது. அம்மா அழுகிறார் என்று சின்ன பையனான நானும் காரணம் தெரியாமல் கதறி அழுகிறேன். துலாபாரம் என்று ஒருபடம் பலருக்கும் நினைவிருக்கலாம். சமீபத்தில் வெளியான நான்கடவுள் கூட அதே ரகம்தான். அட அந்த காலத்து அரிசந்திரா நாடகங்கள் கூட இதே வகைதான். அதே அழுகாச்சி மசாலாவை ரங்கநாதன் தெருவின் ஜனசந்தடிகளுக்கு நடுவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோடும் பாத்திரங்களோடும் படமாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.

இதை விட மோசமான அழுகாச்சிப்படங்களும் தமிழில் உண்டு. அங்காடித்தெரு அந்த ஆயிரத்தில் ஒன்று. கிளிசேக்கள் நிரம்பி வழியும் ஒரு திரைப்படம். முதல் காட்சியிலேயே சாவு. அடுத்த அரைமணிநேரத்தில் இன்னொரு சாவு. மீண்டும் கால் மணிநேரத்தில் இன்னொரு சாவு. இப்படி படம் நெடுக ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கு ஒரு முறை யாராவது சாகின்றனர். சினிமா தியேட்டரில் படம் பார்க்கிறோமா அல்லது ஆபரேஷன் தியேட்டரிலா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அத்தனை மரணங்கள். விதவிதமாய். கால் நாறி அழுகிப் போய் ஒருவர் சாகிறார், தற்கொலை செய்துகொண்டு ஒருவர் , விபத்து, விபத்துகள்... தொடர்ச்சியாக. அதிலும் ஒவ்வொரும் இறந்து போனதும் கடுமையான ஓலம். மண்டை காய்கிறது. சாவு வீட்டுக்குள் நுழைந்தது போல விடாமல் துரத்தும் மன உளைச்சல்... அடப்போங்கப்பா இதைவிட கடுமையான மரணங்களையும் அதற்கு பிறகான பிற்சேர்க்கைகளையும் சங்கதிகளையும் தமிழ்சினிமாவில் நிறைய பார்த்திருக்கிறோம்? இதுக்குத்தான் 80 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோமா?

முக்கால்ப் படம் துணிக்கடையின் உள்ளேயே நடக்கிறது. எப்போதும் முறைத்துக் கொண்டே அலையும் சூப்பர்வைசர். கொஞ்சி குலாவித்திரியும் அப்பாவி ஏழைத் தொழிலாளர்கள். பொழுதன்னைக்கும் அவர்களை தூக்கிப்போட்டு தூர்வாரும் முதலாளி வர்க்கம். எந்த நேரத்தில் எவனை போட்டு அடித்து ரத்தம் காட்டுவார்களோ என்ற பயத்தோடே படத்தை அணுக வேண்டியிருக்கிறது. எனக்கு சத்தியமாக ரத்தம் என்றாலே அலர்ஜி. அதுவும் பெண்களை முடியை பிடித்து இழுத்துப்போட்டு மிதிமிதி என்று மிதிக்கும் வன்முறையெல்லாம்... தேர்ந்த சைக்கோக்களால் மட்டுமே ரசிக்க முடியும். என்னால் அதை பார்க்க முடியாமல் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டேன்.

யதார்த்தம் அதுவாகவே இருந்தாலும் பதார்த்தம் வாயில் வைக்க முடியவில்லையென்றால் வாந்திதான் எடுக்க வேண்டும். அதிலும் அந்த சூப்பர்வைஸர் காட்சிகள். டிபிகல் தமிழ்சினிமா வில்லன். பெண்களை போட்டு அடித்து துவைத்து பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுபவர். படத்தில் இப்படி பல வில்லன்கள் முதலாளி வில்லன், போலீஸ் வில்லன் . சாமி கும்பிட்டுவிட்டு ஏழைகளை கட்டிவைத்து உதைக்கும் வில்லன்களை எம்.ஜி.ஆர் படங்களிலேயே நிறைய பார்த்தாகிவிட்டது. சேம் கிளிசே! மைகாட்! சேம் பிளட்.
துவக்கக் காட்சிகளில் சோற்றுக்கும் இருப்பிடத்துக்கும் முண்டியடித்துக் கொள்வதாய் காட்டப்படும் ஹாஸ்டல்கள் பாதி படத்திலேயே அடிதடி இல்லாமல் நெருக்கடி இல்லாமல் நார்மலாகிவிடுகிறது. படத்தின் கதைக்களத்தைவிட அதில் சொல்லப்பட்ட காதல் பிரதானமாக இருந்தாலும் அதுவும் சரியில்லை. மனதில் ஒட்டவில்லை.

படத்திற்கோ கதைக்கோ டைரக்டருக்கோ படம் எடுத்தவருக்கோ பார்ப்பவனுக்கோ வெளியே டிக்கட் கிளிப்பவருக்கோ , சமோசா விற்பவருக்கோ சம்பந்தமேயில்லாத காட்சிகள் ஒரு மணிநேரம் படத்தை நிறைத்திருக்கிறது. பாலகுமாரன் நாவல்களில் கதை போய்க்கொண்டிருக்க திடீரென மைக்கைப்பிடித்து எழுத்தாளர் அறிவுரை சொல்லுவாரே அதே பாணியில் திடீரென ஈசாப் கதைகளுக்கு இணையான கட்டணமுறை கழிப்பிட கதை வருகிறது. கழிப்பிடத்தை கழுவியன் அடர் கறுப்பாகத்தான் இருந்தான். குள்ளமான ஒருவனுடைய கல்யாணக்கதை வருகிறது. இஸ்லாமிய பெரியவர் ஒருவருடைய கதை வருகிறது. நடுவில் வயசுக்கு வந்த ஏழைத் தங்கையின் கதை வருகிறது. யூஸ்ட் டிஷர்ட் விற்பவனின் கதை எதற்கு வருகிறதென்று யாருக்குமே தெரியாது. மெகாசீரியல்களில் 52 எபிசோட்களில் மையப்பாத்திரத்தின் கதை பத்து எபிசோட்களில்தான் வரும். அதைப்போல மையக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அனுமானிப்பதற்குள் படத்தின் கிளைமாக்ஸ் வந்து கதறி கதறி அனைவரும் அழுகின்றனர். நமக்கு திருமதி செல்வம் சீரியலின் நாற்பது எபிசோட்களை ஒட்டுமொத்தமாக பார்த்த எஃபக்ட். ஸ்ஸ்ப்பா..

கிளைமாக்ஸ் என்று எதையாவது வைக்கவேண்டுமே.. அதற்காக கதாநாயகி காலைவெட்டி , அவரை ஏற்பாரா நாயகன் என்று கேள்வியெழுப்பும் காட்சிகளை வைத்து எல்லா படத்திலும் வரும் அதே மொக்கை கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்ஸுக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். தேவையில்லாத அதிர்ச்சி மதிப்பீட்டைத் தவிர வேறேதும் தராத கிளைமாக்ஸ். படத்தில் பல இடங்களில் அதிர்ச்சிக்காக சில பின்னல்களை செருகியிருக்கிறார் இயக்குனர். ஒரு சிலதைத் தவிர வேறேதும் படத்தின் இறுதிக்காட்சியைப்போலவே ஒட்டவில்லை.

படத்தின் பிண்ணனி இசை சகிக்கவில்லை. விஜய் ஆண்டனி வார் ஆப் தி வேர்ல்ட் கிளாஸ் ஆப்தி டைட்டன்ஸ் மாதிரியான படங்களுக்கு அடிக்கும் கும்மாங்குத்தை இந்த படத்திற்கு அடித்திருக்கிறார். எரிச்சல்தான் மிச்சம். அவள் அப்படியொன்று அழகில்லை பாடலைத்தவிர மற்றது எதுவும் நினைவில்லை. ஜி.வி.பிரகாஷ் நான்கு பாட்டாம்.ம்ஹும்.
படத்தின் நாயகன், அவருடைய நண்பன், கிராமத்து குடும்பம் என பல புதிய நடிகர்கள் நன்றாக நடித்துள்ளனர். ஏ.வெங்கடேஷ் அவர் எடுக்கும் படத்தில் வரும் வில்லனைப்போலவே கண்களை உருட்டி உருட்டி நடித்திருக்கிறார். ரங்கநாதன் தெருவை அருமையாக படம் பிடித்த காமரா மேனுக்கு வாழ்த்துக்கள். அஞ்சலி கிளைமாக்ஸில் அழுகிறார். மற்றபடி ஜோதிகா லெவலுக்கு இல்லை. கற்றது தமிழ்தான் அவருடைய ஆகச்சிறந்த படம்.

படத்தின் துவக்கத்தில் நன்றி சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் என்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்டமாய் சரவணா தொடங்குவதற்கு சற்று முன் தொடங்கி சூப்பர் ஹிட்டாகி , பிரமாண்டமாயால் வியாபரம் சரிந்த துணிக்கடை. படம் முழுக்க சரவணாவை குறிவைத்து அடித்திருக்கிறார் இயக்குனர். அதற்கேற்ற படி கிளைமாக்ஸுக்கு முன்னால் தேவையே இல்லாமல் சிநேகா ஆட்டம் போடுகிறார். என்னைப்போன்ற அறிவுஜீவிக்கு சங்கரபாண்டியனுக்கும் சரவணாவுக்கும் முடிச்சுப்போட்டு பார்க்கத் தெரியவில்லை.

படத்தின் பிளஸ்கள் , சோபியாவாக வரும் அந்த கறுப்புப் பெண்ணும் ஜெமோவும். நறுக் வசனங்களால் கவர்கிறார் ஜெமோ. தெனாவெட்டு பார்வைகளாலும் உடல்மொழியாலும் சோபியா. மற்றபடி படத்தில் ஆங்காங்கே சொல்லப்பட்ட கவித்துவமான குறியீடுகள் அடங்கிய காட்சியமைப்புகள் உலக சினிமாவுக்கே சவால் விடக்கூடியவை. ஏனோ அந்த கருமாந்திரங்களெல்லாம் என்னைப்போன்ற உலக சினிமாவை பர்மாபஜாரில் எட்டிப்பார்க்கும் ஏகலைவன்களுக்கு தெரிவதில்லை.

படத்தின் திரைக்கதையும் இயக்கமும் காட்சியமைப்புகளும் ஜெமோவின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இணையானதாக இருக்கலாம். அல்லது சு.ராவின் புளியமரத்தின் கதையைப்போல உன்னதமான அனுபவத்தை தரலாம். என்னைப் போல் முன் வரிசையில் விசிலடிக்கும் தமிழ்ரசிகர்கள் இன்னும் ரமணிச்சந்திரனையும் சுஜாதவையுமே தாண்டவில்லை என்பதே யதார்த்தம். உலக சினிமா என்று சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தில் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. நான் பார்த்த உலக சினிமாக்கள் வேறு மாதிரியானவை. அவை எமக்கு மன உளைச்சலை அளித்ததில்லை...

வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அம்மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்த முற்பட்ட வசந்த பாலனுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆவணப்படத்தை எடுத்து அதில் ஆயிரத்தெட்டு கிளிசேக்களை நுழைத்து ஸ்கிரீனிலிருந்து கைகளை விட்டு கண்களை கசக்கி அழவைக்கும் படத்தை என்னவென்று சொல்வது. தமிழ்சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் புதிதாக இருந்தாலும் மற்றதெல்லாமே பழசுதான். இலவசமாக திரையிடப்படும் ஆவணப்படமாக இருந்தால் இது சூப்பர்தான்.. 80 ரூபாய் டிக்கட் வாங்கிப்பார்க்கும் அதே துணிக்கடை ஊழியனுக்கு இது நிச்சயம் எரிச்சலை உண்டாக்கக் கூடும். இதற்கு அசல்களும் வேட்டைக்காரன்களும் சில மணிநேர குதூகலத்தையும் போதையையுமாவது அவனுக்கு தரக்கூடும். மன உளைச்சலை அல்ல..! காசு கொடுத்து இங்கு யாரும் மன உளைச்சலை விலைக்கு வாங்குவதில்லை.
படத்தில் காட்டப்படும் மனிதர்களின் உண்மை நிலை தெரியாத மேல்தட்டு மேதாவிகள் , கதைமாந்தர்களின் வாழ்க்கையாக காட்டப்படும் கோரமான காட்சிகளைக் கண்டு மனம் குமுரலாம். சராசரி ஏழைத் தமிழ் ரசிகன் அதை பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ள மாட்டான். அவனுக்கு வாழ்க்கையின் உண்மைநிலை தெரிந்திருக்கிறது. அவன் எதற்காக சினிமா பார்க்கிறான் என்பதுஉம் அவனுக்கு தெரிந்திருக்கிறது.

இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவே இல்லை என்பதே யதார்த்தம். எதுவுமே இல்லாட்டியும் படம் எடுத்தவன் பக்கிரினா யதார்த்த சினிமானு தலைல தூக்கிவச்சுதான் கொண்டாடனுமோ?

வசந்தபாலன் குழுவினரின் கடுமையான உழைப்புக்காக நிச்சயம் ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.