Pages

17 April 2010

உன்மத்தர்களின் உலகிலிருந்து...

மிக பாதுகாப்பான வசதியான சிறைச்சாலையில் எல்லா வசதிகளும் உண்டு. அதில் அடைக்கப்பட்ட கைதிகளான நம்மால் நிரம்பியது இவ்வுலகம். அது கட்டுப்பாடுகள் வரையறைகள் விதிகள் இத்யாதிகளால் எழும்பியது. அதைத் தாண்டி நீங்களும் நானும் சிந்திக்க எத்தனிக்கும் நொடிகளில், நசுக்கப்படுகிறோம். கட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயல்கிறவன் இங்கே மழுங்கடிக்கப்படுகிறான். புறந்தள்ளப்படுகிறான். எதையும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள வீட்டிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறோம். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , வேலைக்கு செல்லும் இடங்களிலும், சமூகக்கூடங்களிலும் கூட என நம்மைச்சுற்றி முழுக்கவே நடைபிணங்களைப்போல விரும்பியதை செய்ய முடியாமல் எதையோ தேடிக்கொண்டு அலையும் மனநிலை பிறழ்ந்தவனைப்போல் அலைகிறது. மாற்று விமர்சனங்களால் இவர்களுக்கு நடுவே முளைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் முற்றாக மண்கொண்டு மூடப்படும் என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் உண்டு.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த மனநல மருத்துவமனை. விதவிதமான நோயாளிகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். சிலர் தாமகவே அங்கே தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர். சிலர் சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். பயம் , கோபம், ஆத்திரம், அமைதி, வெறுப்பு, சிரிப்பு என உலகின் மனிதர்களுக்கு மட்டுமே உண்டான சகல குணங்களையும் கொண்ட நோயாளிகள் அங்கே நிறைந்திருந்தனர். மெக்மர்பி அன்றாடம் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் செல்பவன். வயது குறைந்த பெண்ணோடு உடலுறவில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறான். அவனுடைய பழைய குற்றங்களையும் எண்ணி அவனுடைய மனநலம் குறித்து பரிசோதிக்க அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறான். ஆனால் அவனுக்கு எந்த மனநல குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை.

மருத்துவமனையில் மெக்மர்பி அனுமதிக்கப்படும் வார்டில் 18 நோயாளிகளும், அமைதியான , அதிக மௌனத்தையும் நோயாளிகளின் மேல் அதே அளவு அதிகாரத்தையும் கொண்ட நர்ஸ் ராட்செட்டும் இருக்கிறாள். மெக்மர்பி நோயாளிகளோடு நட்பு பாராட்டுகிறான். நோயாளிகள் அந்த மருத்துவமனையில் நடத்தப்படும் விதமும், குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களை வருத்திக்கொண்டு வாழ பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். மருத்துவமனைக்கு வெளியே எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

குழுவாக அமர்ந்த நோயாளிகளுக்குத் தரப்படும் கவுன்சிலிங்கிலும் எதிர்த்துப்பேசுபவர்கள் மனதளவில் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். மெக்மர்பி இதையெல்லாம் பார்த்து கோபமடைகிறான். அவர்களோடு சீட்டு விளையாடுகிறான். அதனையும் தடை செய்கிறார் ராட்செட். சிகரட்டுக்காக கதறும் நோயாளி தண்டிக்கப்படுகிறார் . நடைபிணங்களாக அலையும் நோயாளிகளை தன்னுடைய மகிழ்ச்சியான நடவடிக்கைகளால் ஓரளவு வெளி உலகை உணரும் படிக்கு செய்கிறான் மர்பி.

ஒரு நாள் நோயாளிகளோடு ஒரு பள்ளிப்பேருந்தில் தப்பிச்சென்று கடலில் படகுப்பயணம் செய்துவிட்டு மருத்துவமனைக்கே திரும்புகிறான். நோயாளிகளுக்கு அது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அது அவர்களை குணமாக்குகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத ராட்செட் மருத்துவமனையில் பேசி மக்மர்பியோடு இன்னும் சிலருக்கு மின்சார சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மெக்மர்பி நோயாளிகளோடு இது மாதிரியான சேட்டைகளில் ஈடுப்பட்டே வருகிறான். ஒரு நள்ளிரவில் இரண்டு பெண்களை மருத்துவமனைக்கு திருட்டுத்தனமாக வரவழைத்து நோயாளிகளோடு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். வார்டு முழுக்கவே கந்தலாக கிடக்கும் காட்சியை காலையில் பணிக்கு வரும் ராட்செட் பார்க்கிறாள். அவளால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைகிறாள். தாழ்வுமனப்பான்மையாலும் திக்கு வாய் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட பில்லி முந்தைய இரவில் மர்பி அழைத்து வந்த பெண்ணோடு ஒரு அறையில் படுத்திருக்கிறான். அவனை அழைத்து பேசுகிறாள் ராட்செட்.

அவன் முதல்முறையாக திக்காமல் பேசுகிறான். தன்னம்பிக்கையோடு பார்க்கிறான். அவனிடம் உன் அம்மாவிற்கு இது தெரிந்தால் அவர் என்ன நினைப்பார், உன் அம்மா என்னுடைய பால்ய சினேகிதி என்பது உனக்கு தெரியமல்லவா என்கிறாள். மீண்டும் திக்குகிறான். அவனால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அருகிலிருக்கும் அறைக்குள் ஓடி கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு சாகிறான். மக்மர்பி கோபமடைந்து ராட்செட்டின் கழுத்தை நெரித்து கொள்ளப்பார்க்கிறான். ஆனால் அவள் தப்பிவிடுகிறாள். தலையில் தாக்கப்பட்ட மர்பி மயக்கமாகிறான்.

அடுத்த காட்சியில் மர்பி சீட்டு விளையாடுவதைப்போல மற்ற நோயாளிகள் விளையாடுகின்றனர். அதில் ஒருவன் மர்பி தப்பிவிட்டதாக கூறுகிறான். இன்னொருவனோ மர்பி மேல் மாடியில் இருப்பதாக கூறுகிறான். மர்பியின் நெருங்கிய நண்பன் உயரமான சீஃப் என்பவன் அமைதியாக இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறான். அன்றைக்கு இரவு மர்பி மீண்டும் அந்த வார்டிற்கு அழைத்து வரப்படுகிறான். சலனமில்லாமல் நடத்தி அழைத்து வரப்படுபவன் , கட்டிலில் படுக்க வைக்கப்படுகிறான். காவலர்கள் விலகியபின் சீஃப் அவனுக்கு அருகில் வந்து வா தப்பிவிடலாம் என்று அழைக்கிறான். அவன் கண்கள் திறந்தபடி சலனமின்றி சீஃப்ஐ பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தளும்புகள் இருக்கிறது. சீஃப் மர்பிக்கு லோபோடோமி செய்யப்பட்டதை உணர்கிறான். ( மூளையின் ஒரு பகுதியை செயலிழக்க செய்யும் முறை) அவனால் இனி எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்கிறான். ஒரு தலையணையை எடுத்து அவனது மர்பியின் முகத்தில் அழுத்தி அவனை கொல்கிறான். சீஃப் அங்கிருந்து தப்பி ஓட படம் முடிகிறது..

ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் (ONE FLEW OVER THE COCKOOS NEST) 1975ல் வெளியான அமெரிக்க திரைப்படம். இது அதே பெயரைக் கொண்ட கென் கெஸ்ஸியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சிறந்த படம், நடிகர்,நடிகை உட்பட ஐந்து ஆஸ்கார்களை வென்ற படமாகும்.

படத்தில் மர்பியாக நடித்த ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பை ஏற்கனவே ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங்கில் (SHINING) பார்த்து மிரண்டு போய்தான் இந்த படத்தை பார்க்க ஆவலாகினேன். பில்லியை ஒரு பெண்ணோடு அறைக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு சோகமாக வந்து அமர்வார். முகத்தில் எந்த உணர்வுமின்றி பார்த்துக்கொண்டேயிருப்பார். பிண்ணனியல் பில்லி உடலுறவில் ஈடுபடுவதாக சப்தம் கேட்கும் , குளோசப்பில் ஜேக்கின் முகம் மார்ஃபிங் செய்ததைப் போல மெதுவாக மாறி அது மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதாக மாறும். ஒவ்வொரு மனநோயாளிகளிடத்திலும் ஒவ்வொருவிதமான அணுகுமுறை அவர்களுடனான நட்பும் புரிதலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.

அதைப்போலவே ராட்செட்டாக நடித்த லூயிஸ் பிளட்சருடைய நடிப்பும். சர்வாதிகாரிகள் என்றால் எப்போதும் புருவம் உயர்த்தி முறைத்து முறைத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையின்றி வெறுமையாக அமைதியாக இருந்தாலே போதும், அது தரும் கடுமை அபாரமானது. அதை முழுமையாக வெளிகாட்டியமைக்கே அவருக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்.

படத்தின் நீளம் பெரிய குறையாக இருந்தாலும் கூட ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பு அதையெல்லாம் தூக்கித் தின்று விடுகிறது. மனநோயளிகளின் வாழ்க்கை கொடுமையானதுதான் ஆனால் அந்த துன்பங்களின் பின்னாலிருக்கும் சின்னசின்ன சந்தோசங்களையும்அழகாக சொல்கிறது இந்தப்படம். அதனால் மனச்சோர்வின்றி படத்தை அணுக முடிகிறது. அதிலும் அந்த இறுதிக்காட்சியில் லோபோடமி குறித்த அதிர்ச்சி நிஜமாகவே அதிர வைக்கிறது. (இதே கதைக்கருவை அடிப்படையாக வைத்து மனசுக்குள் மத்தாப்பு என்றொரு படம் தமிழில் வெளியாகியுள்ளது)

சமூகம் சிக்கலானது. அந்த மன நல மருத்துவமனையை ஒத்தது. இங்கும் பலவித மனநோயாளிகள் நிறைந்துள்ளனர். இங்கும் கட்டுப்பாடுகள் உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதிக்கம் உண்டு. அதையெல்லாம் மீறி மகிழ்ச்சியில் திளைக்க எத்தனிக்கும் கோடி மக்மர்பிக்களும் உண்டு. ஆனால் மர்பிக்கு செய்யப்பட்ட லோபோடோமி சிகிச்சை(?)யை இங்கே நமக்கு நாமே செய்து கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் தடம் மாறி எதையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமாக ஆகிவிட்டிருக்கிறோம். ஒன்று நாம் செயலிழக்கிறோம் அல்லது படுகிறோம். அதையும் மீறி செயல்படுபவர்கள் இன்னல்களுக்கு ஆளாகி லோபோடோமி செய்யப்பட்டவர்களாக திரிவதையும் காண்கிறோம்.

மனநோயாளிகள் மனநோயாளிகளாகவே சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்,நடத்தப்படுகின்றனர்,மதிக்கப்படுகின்றனர். அவர்களும் சகமனிதர்களே என்பதை உணர்த்துக்கிறது இப்படம். அவர்களுடைய உலகம் நம்முடையதிலிருந்து எந்த விதத்திலும் அன்னியமானதல்ல என்பதையும் விளக்குகிறது. இப்பபடத்தில் காட்டப்படும் சிகிச்சை முறைகளைக் காட்டிலும் மோசமான சிகிச்சைகளும் , மருத்துவர்களும் நம்மூரிலும் இருக்கக்கூடும். ஆனால் அதற்கும் நம்மால் எதையும் செய்துவிட முடியாது (மீண்டும் லோபோடோமி). இந்தப் படம்ப் பார்த்தபின் சக மனநோயளிகளிடத்தில் நம் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம். அதற்காகவேணும் ஒரு முறை பார்க்கலாம்.