Pages

09 June 2010

மிச்சமிருக்கிறது கண்ணீரும் நம்பிக்கையும்!



1984ஆம் ஆண்டு டிசம்பர் 2-3. போபாலின் மக்கள் அதிகம் வாழும் பகுதியிலிருந்தது அந்தத் தொழிற்சாலை. யூனியன் கார்பைட் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் தொழிற்சாலை அது. திடீரென அதிலிருந்து 40டன் அளவிற்கு மித்தைல் ஐசோ சைனைட் என்னும் ஆபத்தான வாயு வெளியேறியது. இந்த விஷவாயுக் கசிவு 15134 பேரைக் கொன்றது. 5.75 லட்சம் பேர் அதனால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து இன்னும் அதே மண்ணில் வாழ்ந்தும் வருகின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இப்போதும் அங்கே 400டன் அளவிலான கொடிய வேதிப்பொருட்கள் போபாலில் எஞ்சி இருக்கிறது. நிலத்தையும் நிலத்தடிநீரையும் கூட பாழாக்கி வருகின்றது. நம் செய்வதற்கொன்றுமில்லை. நல்ல வேளையாக எழுதிய நானும் படிக்கும் நீங்களும் அங்கே வாழவில்லை. ஆனால் அது மாதிரியான சூழலில் நீங்களும் நானும் வாழும் நாள் தூரத்தில் இல்லை.. சென்னைக்கு மிக அருகில்தான் இருக்கிறது.

உலகை உலுக்கிய போபால் விஷ வாயு சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஒரு வழியாக சிபிஐ கோர்ட்டு உள்ளிட்ட மயிறு மற்றும் மேலும் பல மாங்கொட்டைகளின் மூலமும், வாக்குறுதிகளின் அரசியல்வாதிகளினாலும் தமக்கு நீதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்த பல லட்சம் இந்தியர்களின் முகத்தில் மீண்டும் ஒருமுறை கரிபூசியிருக்கிறது , காரி உமிழ்ந்திருக்கிறது இந்திய நீதித்துறை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் ஏழு இந்திய அதிகாரிகளுக்கு (முன்னாள்) இரண்டு ஆண்டு ஜெயிலும் ஒரு லட்சரூபாய் தண்டனையும். அதுவும் உடனடியாக பெயிலும்.

கிழிந்து தொங்குகிறது இந்திய நீதித்துறையின் அவலட்சணமான முகம். இந்திய உயிரின் விலை மிகமிக மலிவானது என்பதை உலகிற்கே பறைசாற்றுகிறது நம் நீதிபதிகளின் தீர்ப்பு. முதலில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்க எதற்காக 25 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளாக மயிரைப்புடுங்கி ஆறு பேர் குற்றவாளிகள் என்பதை கண்டறியவா? அவர்களுக்கு உடனடி பெயில் வழங்கவா? இப்படி ஒரு கொடூரமான மரணங்கள் நிகழக்காரணமாயிருந்த யுசிஐஎல் நிறுவனத்திற்கு ஐந்து லட்சம் அபாரதம் விதிக்கவா? கொடுக்கற நீதியும் காலம் கடந்து.. அதுவும் ஏனோதானோ என்றிருந்தால்.. என்னத்தைச் சொல்வது. எரிச்சல் மட்டுமே மிச்சமாயிருக்கிறது.

இத்தனை மரணங்களுக்கும் காரணமாயிருந்த நிறுவனத்தின் சிஇஓ வாரன் ஆண்டர்சன் என்னும் முக்கிய குற்றவாளி , அவன் மேல் இதுவரை ஒரு தூசோ துறும்போ படாமல் , 1984ல் ஒரே ஒருமுறை கைது செய்து அப்போது ரிலீஸாகி... பின் 1992ல் அவனுக்கு சிபிஏ பல சம்மன்கள் அனுப்ப அவனோ அதையெல்லாம் மறுத்து.. அவன் அமெரிக்காவுக்கு ராஜமரியாதையோடு தப்பியதாக செய்தி வந்து.. 2004ல் அமெரிக்காவிடம் ஆண்டர்சன் குற்றவாளி அவரை ஒப்படையுங்கள் எனக்கேட்டு , அவர்கள் இந்தியாவின் முகத்தில் காரித்துப்பி அதெல்லாம் முடியாது போங்கடா வெளக்கெண்ணைகளா என்று கூற.. இதோ கடைசிவரைக்கும் உல்லாசமாக இருக்கிறான் வாரன் ஆண்டர்சன். அவருக்கு இப்போது வயது 90.. இன்னும் சில ஆண்டுகளில் செத்துப்போய்விடுவார். அப்போதாவது அவருக்கு ஏதாவது மரணதண்டனையோ ஆயுள்தண்டனையோ சில ஆயிரம் டாலர்கள் விதிக்கட்டும் இந்திய நீதி.

நல்ல நீதி.. தனிநபரைத்தானே தப்பவிட்டது.. அந்த பன்னாட்டு நிறுவனத்தை பிடித்து உலுக்கி தேவையான நிவாரணத்தை பெற்றுத்தந்திருக்கலாமே? தந்திருக்கலாம்தான்.. இறந்து போனவன் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தானா? இறந்தவனெல்லாம் அன்னாடங்காச்சிகள். ஏழைகள். ஓட்டுமட்டுமே போடும் இந்திய குடிமகன்கள்.
1989ல் யூனியன் கார்பைடோடு இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது அதாவது அந்த நிறுவனம் ஒரு தொகையை நிவாரணமாக கொடுத்துவிட்டால் எல்லா வழக்கும் வாபஸ்! அந்த நிறுவனம் கொடுத்த 43கோடி டாலர்களை வைத்து நிவாரணம் அளித்தால், இதில் இறந்து போனவர்களுக்கு ஆளு ஒரு லட்சம் கூட கொடுக்க முடியாது. ஆனாலும் நம்முடைய ஜனநாயக அரசு ஏற்றுக்கொண்டது. 1999ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் வாங்கிக்கொண்டதோடு, இனி எங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று கைகழுவிக்கொண்டது. இப்போதும் அமெரிக்காவின் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தன் கிளையைத் தொடங்க ஆயத்தமாகத்தான் இருக்கிறது. அதற்கு இந்திய அரசின் முழு உதவியும் இல்லாமலில்லை.

இதே குற்றத்தை அமெரிக்காவில் எவனாவது செய்துவிட்டு இப்படி சுதந்திரமாக நடமாட முடியுமா? எந்த நிறுவனமாக இயங்கிவிடத்தான் முடியுமா? செப்டம்பர் 11ல் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்காக போர் தொடுத்த நாடாச்சே! இப்படி ஒரு நீதி இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் எனக்குத்தெரிந்த பிரபல அரசியல் குற்றவாளிகள். இப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதெல்லாம் காலம் கடந்த நிவாரண உதவியல்ல..? அந்த தொகையை வாங்கி இனி அவர்களோ அவர்களுடைய குடும்பமோ மகிழ்ச்சியாக இருந்துவிடப்போவதுமில்லை. குற்றவாளிகளுக்க சரியான தண்டனை! நிச்சயம் அதை இந்திய நீதி கொடுக்கும் என்கிற நம்பிக்கை இன்னும்கூட அவர்களிடம் இருக்கிறது. இதோ உயர்நீதி மன்றத்திற்கு செல்கின்றனர் மீண்டும்!

நீதி புதைக்கப்பட்டது, நீதி மறுக்கப்பட்டது, நீதி தாமதமானது என்று இந்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி அறிக்கை விடுகிறார். சரிதான்! பச்சை வேட்டை என்ற பெயரில் பணக்கார நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அப்பாவி ஆதிவாசிகளை கொல்வதில் காட்டும் முனைப்பை , பன்னாட்டு நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை கைப்பற்றிக்கொடுப்பதில் காட்டும் முனைப்பை, பக்கத்து நாட்டில் நடக்கும் இன அழிப்புக்கு முதுகு சொரிந்துவிட்ட முனைப்பையும் காணும் போது நமக்கும் நீதியாவது தேசியமாவது மண்ணாங்கட்டியாவது என்று தோன்றுவதில் வியப்பில்லை..

இதோ தொடங்கிவிட்டது அறிக்கைப்போர். சிபிஐ மீது குற்றஞ்சாட்டுகிறது அரசு. அரசின் மீது அதே பழியைப்போடுகிறது சிபிஐ. வாயைப்பிழந்த படி நாமும் இதையெல்லாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டும். எப்படியோ மாறிமாறி குற்றஞ்சாட்டிக்கொண்டு அனைவருக்கும் அல்வா கொடுக்கும் வித்தையை உலகமே இந்தியாவிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்திய உயிருக்கே மரியாதை இல்லை.. இதில் ஈழ உயிருக்கு எங்கிருந்து மரியாதை வந்துவிடப்போகிறது. இதோ மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயரப்போகிறதாம்! நம்மை சிந்திக்கவிடாமல் பிரச்சனைகள் எப்போதும் போல தொடர்கின்றன..