Pages

19 June 2010

ராவணன் - டன்டன் டன்டணக்கா




பக்பக்பக்பக்பக்... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... இப்படியாக ராவணன் படத்தின் ஒரு காட்சியில் அபாரமாக வசனம் பேசுகிறார் விக்ரம்.

படத்தின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு முறை காட்டுத்தனமாக யாராவது உயிரைக்கொடுத்து கத்துகிறார்கள். நமக்கு தலைவலிக்க தொடங்குகிற அமானுஷ்யபுள்ளியே அதுதான். ஐஸ்வர்யா கத்துவார், விக்ரம் கத்துவார் , ப்ரிதிவிராஜ் கத்துவார்.. பிரபு,கார்த்திக்,ப்ரியாமணி அனைவரும் அவரவர் பங்குக்கு காட்டுக்கத்தல் கத்துகிறார்கள். யாரும் கத்தாத போதெல்லாம் குண்டு வெடிக்கிறது அல்லது துப்பாக்கி. ஒலி – ரசூல் பூக்குட்டி... ஓவர்டைம் வேலை பார்த்திருப்பார் போல.. படம் முடியும் போது தலையெல்லாம் பாரமாய்..

அதிகம் மெனக்கெட்டு சமைப்பது சில நேரங்களில் நாசாமாகி வாயில் வைக்கமுடியாத அளவுக்கு , அல்லது காரித்துப்பிவிடுகிற அளவுக்கு சுவையில்லாமல் போய்விடும். ராவணன் படமும் அந்த ரகம்தான். பல ஆண்டுகளாக காடு மலை மேடெல்லாம் அலைந்து , இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கலாம். ஏதேதோ செய்திருக்கிறார்கள் ராவணனிலும்! மணிரத்னத்தின் செப்படி வித்தைகளை டிரைலரில் ரசிக்க முடிந்த அளவுக்குக் கூட திரையில் ரசிக்க முடியவில்லை.

டினோசருக்கெல்லாம் அடிசறுக்கும் காலத்தில் மணிரத்னம் மீடியாக்களால், இந்தியாவின் அதிகபட்ச டாப் படைப்பாளியாக சித்தரிக்கப்பட்ட டைனோசர் பொம்மைதான். இந்த முறை அடி பலம். உலக சினிமாக்காரர்களெல்லாம் கதைகதை என்று ஊரெல்லாம் திரிஞ்சா.. மணிசாருக்கு கதை பிடிப்பது மிகமிக ஈஸி. வால்மீகி , வியாசரெல்லாம் எதற்கு கதை எழுதினார்களோ இல்லையோ மணிசார் சரியாக அதை பயன்படுத்தி வருகிறார். அடுத்து சிலப்பதிகாரத்தை அபிஷேக் ஐஸ்வர்யாராய் காம்பினேஷனில் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்குள் ஐஸுக்கு வயசு 50தை தாண்டிவிடும். இந்த படத்திலேயே முதிர்ச்சி தெரிகிறது. குளோசப்பில் பார்க்க 50களின் தமிழ் ஹீரோயின்களை நினைவூட்டி பயமுறுத்துகிறார்.

விக்ரம் , கந்தசாமி சூட்டிங்கிலிருந்து அப்படியே வந்திருப்பார் போல, அந்த படத்திற்காக கையில் போட்டுக்கொண்டு சூரிய டாட்டூவை கூட அழிக்கவில்லை. படம் முழுக்க மேலே சொன்ன அந்த வசனத்தை சொல்லி சொல்லி சாவடிக்கிறார். படம் முழுக்க கலர் கலராக முகத்தில் எதையாவது அப்பிக்கொண்டே அலைகிறார். இலக்கியவாதிகள் அல்லது உலகசினிமா ஆர்வலர்கள் அதற்கு ஏதாவது குறியீடுகள் வைத்திருக்கலாம். நமக்கு எரிச்சல் மட்டுமே.

அடைத்துக்கொண்ட வாஷ்பேசின் போல முதல் காட்சியிலிருந்து கதை நகரவேயில்லை. இடைவேளை கூட எந்த சலனமும் இல்லாமல் வந்து போகிறது. நடுவில் வரும் ப்ரியாமணி பிளாஷ்பேக் இதுவரை தமிழ்சினிமா உலகம் எங்கும் கண்டிராதது. கார்த்திக் காரணமேயில்லாமல் மரங்களின் மேல் தாவுவதும் , அவர் அனுமான் என்பதால் படம் முழுக்க மங்கி தொப்பி போட்டுக்கொண்டு வருவதும் , சகிக்கவில்லை. பிரபு கும்பகர்ணனாம், அதற்காக அவரை எப்போதும் சாப்பிடுவது அல்லது சாப்பாடு தருவது மாதிரியான காட்சிகள் அமைத்திருப்பது டூமச்.

படம் முழுக்க உலக சினிமா பாதிப்பு. கொரிய படங்களைப்போல பிண்ணனியில் ஸ்லோ மோசனில் இசை ஒலிக்க , பாத்திரங்கள் பொறுமையாக திரும்பி , வசனம் பேசுவதற்குள்....எரிச்சலாக இருக்கிறது. படம் முழுக்க விக்ரம் போர்வையை போர்த்திக்கொண்டு போஸ் கொடுக்கிறார். கடைசியாக பில்லாவில் அஜித் இப்படி படம் முழுக்க நடப்பதும் போஸ் கொடுப்பதுமாக நடித்த்தாக நினைவு.

ஈரம் சொட்ட சொட்ட கேமரா படம் பிடித்திருக்கிறது. நீர்வீழ்ச்சிகள் , மலைகள், காடுகள், இருட்டு எல்லாமே அழகுதான். அதிலும் இசைக்காரர் ரஹ்மான் நன்றாகவே இசையமைத்திருந்தாலும்.. பாகவதர் படம் போல ஐந்து நிமிடத்திற்கு ஏதோ பாட்டுபடுவது போலவே இருக்கிறது. ஜெயாடிவியில் எல்லா திரைப்படங்களையும் பிரித்து மேயும் சுஹாசினி இந்த படத்திற்கு வசனம். ஏலே வாலே போலே என்றால் திருநெல்வேலி பாஷையாம். மணிரத்னம் படங்கள்னாலே வசனம் பாதி கேட்காது மீதி புரியாது.. இதில் இன்னும் சுத்தம் , அதிலும் கண்ணைக்கட்டி ஐஸ்வர்யாராயை கட்டிப்போட்டுவைத்திருக்கும் போது அவர் பாரதியார் பாட்டு பாடுவதும், அதன் மீதியை காட்டுவாசி விக்ரம் பாடுவதும் அட அட அட!

அற்புதமான மேக்கிங் , ஹாலிவுட் தரம் , ஒலி ஒளி , இசை என நிறைய பிளஸ்கள. ஆனால் மைக்ரோஸ்கோப்பில் படிக்க முடிகிற கதை, எரிச்சலூட்டும் வசனங்கள் , கொஞ்சமும் வேகமில்லாத கருவாட்டு திரைக்கதை, நாடகத்தனமான காட்சி அமைப்புகள் மொத்தபடமும் ஒட்டு மொத்தமாய் ஆயிரம் பாட்டில் அமிர்தாஞ்சன் போட்டாலும் தீராத மெகா தலைவலியை மட்டுமே நமக்கு பரிசளிக்கிறது.

கிளைமாக்ஸில் சோகமாக அழுதபடி ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் பக்...பக்...பக் என்று கந்தசாமி போல மிமிக்ரி பண்ண.. கண்ணீர் வடிய விக்ரமும் பக்...பக்...பக்..