Pages

12 July 2010

உலக கோப்பையன்!



ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் நலனுக்காக இனி விடுமுறை நாட்களிலும் விவாகரத்து வழங்கப்படும் என நம் அரசு அறிவித்துள்ளது. இப்படி ஒரு நல்ல செய்தியோடு உலக கோப்பை குறித்த இந்த கட்டுரையை தொடங்குகிறேன். ஒருவழியாக ஆக்டோபஸின் ஆருடம் பைனலிலும் பலித்துவிட்டது. ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்று சொல்லியிருந்தால் ஜெர்மானியர்கள் ஆக்டோபஸுக்கு கோயில் கட்டியிருப்பார்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை ஸ்பெயினில் எட்டு தூண்களோடு பிரமாண்ட கோவில் கட்டலாம். ஸ்பெயின் அரசு மனது வைக்குமா என்பதே நம்மிடம் இருக்கும் முதல் கேள்வி?

இந்த உலகக் கோப்பை தொடங்கியது முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதல் அதிர்ச்சி நானும் உலக கோப்பைப் போட்டிகள் பார்க்கத் தொடங்கிவிட்டேன் என்பது. முழு பந்தில் ஆடினாலும் ஏன் கால்பந்து என்று அழைக்கின்றனர்? என்று கேள்வி கேட்கிற மறத்தமிழன் வம்சத்தில் வந்தவன் நான். நானும் எஸ்சிவி கேபிள்டிவியினரின் சீரிய முயற்சியால் இஎஸ்பிஎன்னில் மேட்ச்களை ரசிக்க முடிந்தது. எங்களூர் கேபிள் தொலைக்காட்சியில் முதல்முறையாக கிரிக்கெட்டுக்கு பதிலாக புட்பாலை ஒளிபரப்பிய கேபிள் அக்கா புவனேஸ்வரிக்கு நன்றி.

அடுத்த அதிர்ச்சி நான் மிகவும் எதிர்பார்த்த இத்தாலி மண்ணைக் கவ்வியது. இத்தாலியோடு பிரான்சும் சேர்ந்து மண்ணு கல்லு சில்லெல்லாம் கவ்வியது . இதைவிட சில அணிகள் லீக் போட்டிகளில் நன்றாக ஆடினாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் போனது. மெஸ்ஸியைப்பற்றி பலரும் மெச்சினாலும் அவர் சுமாராகதான் ஆடினார். டிவில்லா நிறைய கோலடித்தார். ஸ்னைடரும் இன்னும் சிலரும் நன்றாகவே ஆடினர்.

எந்த விளையாட்டாக இருந்தாலும் நாம் ஆடாத போட்டிகளில் வலிமைகுன்றிய அணிக்கு ஆதரவளிப்பதே பொதுவான சுபாவம். அது ஏனென்று தெரியவில்லை. ஜிம்பாப்வேயும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் ஆடினால் மனது ஜிம்பாப்வே ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்து , தானியங்கியாக நம் ஆதரவை ஜிம்பாப்வேய்க்கு வழங்கி விடுகிறது. அதைப்போல இந்த உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டியின் போதும் கானா,உருகுவே,பாராகுவே,ஜப்பான்,ஐவரி கோஸ்ட் என மற்ற வலிமையான ஐரோப்பிய நாடுகளை காரணமில்லாமல் வெறுக்கவும் சிறிய நாடுகளை ஆதரிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. என் நல்ல நேரம் அந்த நாடுகளும் லீக் போட்டிகளிலும் இரண்டாவது சுற்றிலும் வெற்றிகளை குவித்தது மகிழ்ச்சியளித்தது.

இங்கிலாந்துக்கு உலக கோப்பை கிரிக்கெட்டில்தான் கண்டம் என்றால் கால்பந்திலும் அதே கதைதான் போல! பெவிலியனில்(?) அமர்ந்து கொண்டு ஓய் ஓய் என்று கத்திக்கொண்டிருந்த பெக்காமைப் பார்க்க பாவமாக இருந்தது. அழகான ஹேர் ஸ்டைல் அவருக்கு! இங்கிலாந்து வீரர்கள் எல்லோருமே நட்சத்திரங்களாம் , அய்யோ பாவம் இந்திய கிரிக்கெட் அணியே பரவால்ல! சின்னப்பயலுங்கல்லாம் தூக்கிப்போட்டு தூர்வாரினாங்க இங்கிலாந்த! மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

ஜெர்மனி அணியில் விளையாடுபவர்களைப் பார்க்க குழந்தைப்பசங்க மாதிரி இருக்கானுங்க! மைதானத்தில் இறங்கிவிட்டால் எல்லார் தலையிலும் கொம்பு முளைத்து விடுகிறது. அதிலும் அர்ஜென்டினாவுடனான மேட்ச்சில் ரத்த களறி.. புலியிடம் மாட்டிக்கொண்ட புள்ளிமானாய் அர்ஜென்டினாவை துவைத்து காய்ப்போட்டது என்னைப்போன்ற மரடோனா ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கும். மற்றபடி சின்னப்பயலுக அரையிறுதியில் தோற்றது ஆக்டோபஸ் மகிமை! தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட்டில்தான் கில்லி போல , கால்பந்தில் ரொம்ப ரொம்ப மோசமாக ஆடியது ஆறுதல் அளித்தது.

அர்ஜென்டினா ஜெயித்தால் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று மரடோனா கூறியிருந்தார். உருகுவே ஜெயித்தால் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று ஒரு அழகி கூறியிருந்தார். நல்ல வேளையாக இரண்டு அணிகளும் தோற்றுப்போனது.

ஜப்பான் அணியின் ஹோன்டா, மிட்சுபிசி, கியோட்டா என நிறைய பிளேயர்கள் நன்றாக ஆடினர். ஜப்பான் தயாரிப்புகளை போலவே சின்னதாக இருந்தாலும் சிறுத்த குட்டிகள். கானாவோ கருப்பாக இருந்தாலும் விஜயகாந்தைபோல! இந்த உலக கோப்பையில் என்னை மிகவும் கவர்ந்த அணி கானாதான்!

அடப்போங்கடா என்றபடி பிரசிலை ஆதரித்தால் அந்த அணிக்கும் ஆப்பு காத்திருந்தது. அட பிரேசில் போனா என்ன அகிலம் போற்றும் அண்ணன் மரடோனாவின் அர்ஜென்டினாவை ஆதரித்தேன், அதுவும் அவுட்டு! உருகி உருகி உருகுவேயை ஆதரித்தேன்.. ம்ம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை. இறுதியாக வேறு வழியின்றி ஆக்டோபஸ் சொல்லும் அணியை ஆதரிக்க முடிவெடுத்து ஸ்பெயினை ஆதரித்தேன். ஸ்பெயின் நெதர்லாந்துடன் மோதி மோதி காலை வாரி , சண்டை போட்டு இனியஸ்டாவின்ட இனிமையான கோலால் வென்றது.. ஆஸ்தல விஸ்டா , விவ லா ஸ்பானல் என்று குத்தாட்டம் போட்டாச்சு..
 

டிவில்லா,குளோஸ்,ஹோன்டா,ஸ்னைடர்,காகா,மெஸ்ஸி என நிறைய பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப்பற்றி பேசுவதுதான் கொஞ்சம் கடினமானதாக இருந்தது. மற்றபடி கிரிக்கெட்டை விடவும் கால்பந்து மிகமிக சுவாரஸ்யமானது.  போலவே ஷகிராவின் வாக்கா வாக்கா மாதிரியான மேற்கத்திய கொலம்பிய இசையும் குத்தாட்டமும் மிகவும் கவர்ந்தது.