Pages

27 August 2010

வெள்ளிங்கிரி - 4


வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சாப்பாட்டுக்கு பிரச்சனையே கிடையாது. கையில் அஞ்சுரூவா கூட இல்லாமல் ஒரு மாதம் வரைக்கும் கூட அடிவாரத்திலேயே வசதியாக வாழமுடியும். மாசி முதல் சித்திரை வரைக்கும்தான் இந்த வசதி.  அடிவாரத்தை ஒட்டி ஒன்றிரண்டு ஹோட்டல்கள் இருந்தாலும், யாராவது சற்றே அதிகமான மானம்,ரோசம் உள்ளவர்கள் மட்டுமே அங்கே சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.. எங்களுக்கு எப்போதும் அன்னதானம்தான் மூன்று வேளையும். அதனாலேயே மலையேறி இறங்கியபின்னும் விடாப்பிடியாக இரண்டு மூணு நாட்கள் இருந்து சாப்பிட்டு அடிவாரத்தைசுற்றியே புரண்ட பின்பு செல்வது வழக்கம். மூன்று நாளும் கோவிலை சுற்றியுள்ள எந்த இடத்திலும் படுத்து உறங்கலாம். அருகிலிருக்கும் சின்ன சின்ன சுனைகளில் குளித்து புண்ணியம் தேடலாம்.

அடிவாரத்தில் காலையிலிருந்து இரவு வரைக்கும் தொடர்ந்து அன்னதானங்கள் நடந்து கொண்டே இருக்கும். அடிவாரத்தில் பத்திரச் செட்டியார் மடம், தேவர் மடம், புரவிப்பாளையம் மடம், சுக்கிரப்ப கவுண்டர் மடம், பட்டிபோயன் மடம், ஓக்கலிகர் மடம் என்று வரிசையாக பல மடஜாதிகளும் பந்தி போடுவார்கள். சித்திரை மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அன்னதானக்குழுக்கள் இங்கே ஓசிசோறு போடுவது தனிச்சிறப்பு. ராஜஸ்தானிலிருந்து கோவையில் முன்னெப்போதோ இடம்பெயர்ந்த ஒரு குழு உண்டு. பிரத்யேகமான சாப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். மூன்று நாள் அவர்களுடைய குழுவிலிருந்து வேளைக்கு பத்து குடும்பமாக விமரிசையான ஸ்பெசல் அன்னதானம் போடுவார்கள். அவர்களுடைய அன்னதானத்திற்குதான் கடுமையான அடிதடியெல்லாம் நடக்கும். பிச்சைக்காரர்களுக்கும் எங்கள் குழுவுக்குமிடையே கடுமையான தள்ளுமுள்ளும் மோதலும் நிறைந்திருக்கும். முதல் இரண்டு பந்திகளில் உட்கார்ந்தால்தால்தான் எல்லா ஐட்டங்களும் கிடைக்கும். மூன்று நான்கென்றால் வெறும் இலையை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். நாங்கள்தான் எப்போதும் அவர்களை வென்றிருக்கிறோம். சிலமுறை அவர்களுடைய நீண்ட கம்பினால் அடிவாங்கியதும் உண்டு. எங்கள் அளவிற்கு அந்த நீண்ட வெள்ளைதாடி பிச்சைகார சித்தர் சாமிகளுக்கு  டேலன்ட் பத்தாது.

வெள்ளிங்கிரி மலை பிச்சைகாரர்களை, பிச்சை எடுப்பவர்கள் என்று சொன்னால் விபூதியை வீசி சாபமிட்டுவிடுவார்கள். ஒரு முறை என்னை அடுத்த ஜென்மத்தில் எலியாக பிறந்து பூனையின் வாய்க்கு உணவாவாய் என்று ஒரு சித்தர் சாமி சாபம் கொடுத்துவிட.. ரெண்டு நாள் கனவெல்லாம் பூனை! விதவிதமான சாபங்கள் கொடுத்தாலும் எங்கிருந்துதான் கஞ்சாவை கவர்ந்துவருவார்களோ தெரியாது.. ஒருவேளை மலையிலேயே எங்காவது பதியம் போட்டு வளர்த்து காயவைத்து புகைக்கிறார்களோ என்னவோ.. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கஞ்சா காசிக்குப் பிறகு வெள்ளிங்கிரியில்தான் கிடைக்கிறது என்பார் சித்தர் ஒருவர். அருகில் போய் சாமீஈஈஈஈ... ஒரு இழுப்பு... என்று மண்டையை சொரிந்தால் அள்ளித்தருவதில் வல்லவர்கள். கொழந்தப்பசங்களா.. இந்தாங்கடா என்று ஒரு முழுப்பொட்டலத்தையும் கூடவே ஒரு சிகரட்டையும் இனாமைத்தருவதில் பிச்சைக்கார வள்ளல்கள் இந்த சித்தர்கள்.

ஆனால் அடுத்த வேளை அன்னதானத்தில் அவர்களுக்கு நல்ல சௌகரியமான இடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். மூன்று ஆள் உணவை ஒரே ஆள் சாப்பிடுவதைப்பார்த்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதியை அள்ளிப்பூசிக்கொண்டு கபாலத்தோடு கட்டாந்தரையில் கவிழ்ந்துவிடுவார். கிங்ஸ் மட்டுமே புகைக்கும் சித்தர்கள் கூட உண்டு. வில்ஸ் அடித்தால் பனிபெய்றதாலே தொண்டை கமறும் என்பார். அப்போ பீடிலாம் என்றால்? அதெல்லாம் சாதாரண மானிடர்கள் அடிக்கறதப்பா என்று சீன்போடும் சித்தர்கள் ஏராளம்.

வெள்ளிங்கிரியில் நடைபெறுகிற தொடர் அன்னதானங்களுக்கு பின்னால் ஒரு கதை உண்டு! வெள்ளிங்கிரி மலையில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் 1000 பேருக்கு அன்னதானம் செய்தமைக்கான ஸ்பெசல் அதிரடி ஆஃப்ரை ஆண்டவன் வழங்குவதாக கோவைக்கு அருகிலிருக்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் புராணம் ஒன்று சொல்லுகிறது. அதனால்தான் ஆண்டுதோறும் இந்த அன்னதான மேளா என்கின்றனர் என்னுடைய நண்பரான நீண்ட வெள்ளைதாடி செல்போன் வைத்திருக்கும் சித்தர்.



இந்த பேரூர் புராணம் இதை மட்டும் சொல்லவில்லை.. வெள்ளிங்கிரி மலையின் நான்காவது மலைக்காட்டில் கிடைக்கும் அரிய வகை மூலிகளைகளான மாங்கிசபேதி,அங்கிசபேதி,அயபேதி,அன்னபேதி முதலான மூலிகைகளின் மூலம் எப்பேர்ப்பட்ட வியாதியையும் குணப்படுத்தமுடியும் என்றும் சொல்லுகிறதாம். இதுபோக ஆறாவது மலையின் முக்கிய இடமான ஆண்டிசுனையில் நீராடி அதில் ரெண்டு மடக்கு நீர் குடித்தால் சகலரோகங்களும் நிவர்த்தியாகும் என்கிறது அப்புராணம்.. ஆய் போனால் கழுவவும்.. குளித்துவிட்டு ஜட்டியை துவைக்கவும், சிறுநீர் கழிக்கவுமாக , சுனையை சுற்றியுள்ள பகுதிகளை நாறடித்து வைத்திருந்தாலும்.. அந்த இயற்கையான ஊற்றின் குளிர்ச்சி அதையெல்லாம் மறக்கச்செய்யும். உள்ளே இறங்கினால் உடல் விரைத்துப்போகும். அதில் குளித்து முடித்து வெளியேறினால்.. லிரில் சோப்புப் போட்டு குளித்தால் கிடைக்குமே அதே புத்துணர்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

இத்தனைக்கும் அந்த நீரை அருகிலிருக்கும் லேபில் கொண்டு போய் கொடுத்தால் ஒரு கோடி வைரஸாவது இருக்கும். ஆனால் இதுவரை அதில் குளித்து யாருக்கும் எந்த தீங்கும் நேர்ந்ததாய் தெரியவில்லை.

************
முந்தைய மூன்று பாகங்கள் இங்கே

 பாகம் - 1
 பாகம் - 2
 பாகம் - 3


படம் உதவி நன்றி - http://imsaiilavarasan.blogspot.com , மற்றும் கூகிள்.