Pages

02 October 2010

எந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..



விஞ்ஞானி ஒருவர் உருவாக்கும் ரோபோவிற்கு அறிவு முத்திப்போய் , அது அந்த விஞ்ஞானிக்கே உலைவைத்தால் என்னாகும் என்பதே எந்திரன். அது என்ன எப்படி யாரு எங்கே இத்யாதிகளை வெள்ளிதிரையிலோ 20 ரூபாய் டிவிடியிலோ காணலாம்..

தமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு கதை மிகமிக புதியது. கதையின் துவக்கம் உலகம் சுற்றும் வாலிபனை நினைவூட்டினாலும் எடுத்துக்கொண்ட கருவும் அதை அழகாக செதுக்கித்தந்திருக்கும் திரைக்கதையும் ரொம்ப ரொம்ப புதுசு. அதற்காகவே ஷங்கருக்கு ஷல்யூட் அடிக்கலாம். இந்தியாவின் அவதார் என்று அவர்களாகவே படம் வெளிவரும் முன்பு சொல்லிக்கொண்டனர். படம் பார்க்கும் போது அது உண்மைதான் என தோன்றாமல் இல்லை. தமிழ்சினிமா அடுத்தகட்டமல்ல புலிப்பாய்ச்சலில் பல கட்டங்கள் தாண்டியிருக்கிறது. எந்திரன் அதை இந்திய சினிமாவிற்கு சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட கதைகள் தோற்றுப்போகும் என்கிற அரதப்பழைய சென்டிமென்டை ஓங்கி அடித்து உடைத்தெறிந்துள்ளது எந்திரன் தி ரோபோட் திரைப்படம்.

படம் முழுக்க எங்கும் ரஜினி எதிலும் ரஜினிதான். அதிலும் ஆயிரக்கணக்கான ரஜினிகள்.. ரஜினிக்கு 60 வயதா! அடப்போங்கைய்யா! ச்சும்மா ச்சிக்குனு சிட்டுமாதிரி பறந்து பறந்து சண்டை போடுவதும் , காதல் அணுக்கள் பாடலில் பத்துவிநாடி ஸ்டைல் நடை போடுவதுமாய் இன்னும் கூட இளம் நாயகர்களுக்கு இணையாக ஆடிப்பாடுகிறார். அவருடைய சுருக்கங்களை மறைக்கும் மேக்கப் மற்றும் உடையலங்காரம் செய்தவர்களுக்கு ரஜினி சம்பளத்தில் பாதி கொடுத்தாலும் பத்தாது , கடின உழைப்பென்றால் என்னவென்று அவர்களிடம் டியூசன் எடுக்கலாம். முதல் பாதி ரஜினி - ஐஸ்க்ரீம் என்றால் இரண்டாம்பாதியில் மிளகாய் சட்னி!

மூன்றுமுகம் ரஜினியையும் உத்தம்புத்திரன் சிவாஜியையும் மிக்ஸியில் விட்டு அடித்தால் எப்படி இருக்கும் வில்லத்தனம்.. வாயை சுழித்த படி ரோபோவ் என்று ரஜினி சொல்ல தியேட்டரே அலறுகிறது. இந்த பாத்திரத்தில் ரஜினியைத்தவிர வேறு யாரையுமே நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கமலால் இப்படி ஒரு வில்லத்தனத்தை உடலிலும் நடைஉடைபாவனையிலும் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான். முதல்பாதியில் மென்மையோ மென்மையாய் பார்ப்பதும் பேசுவதும், இரண்டாம் பாதி முழுக்க... ரஜினி ராஜ்யம்தான்.

ஷங்கரின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. தற்போதைய தமிழ்சினிமாவில் ஸ்டோரிபோர்டெல்லாம் உபயோகித்து படமெடுக்கும் இயக்குனர் இவர்மட்டுமே என்பது என் அனுமானம். அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். திரைக்கதையையும் வசனத்தையும் வரிவரியாய் ரூம்போட்டு யோசித்து செதுக்கியிருப்பார் போல ஏதோ ஒரு கதாபாத்திரம் ‘ம்’ என சொல்வதாக இருந்தாலும் ஏதாவது புதுமை படைக்கலாமா என்று அஸிஸ்டென்ட்களை கூப்பிட்டு வைத்து யோசிப்பாராயிருக்கும். படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியமென்றால் பிண்ணனியில் ஷங்கரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

அதிலும் அந்த வில்லன் ரோபோட்டின் குணங்களை நிஜமாகவே உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டும். முதல்பாதியில் நல்லவனாக இருக்கும் ஒருவன் ஓவர் நைட்டில் கெட்டவனாக மாறுவதாக காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக காரணங்களோடு வில்லனாய் மாறுவதாக காட்சிகளை ஒன்றுகூட்டி காட்டியிருப்பது அருமை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் (புல் மெட்டல் ஜாக்கட்,ஷைனிங்) இது போன்ற மாற்றத்தை சம்பவங்களின் ஊடாக அழகாக சொல்லியிருப்பார்.

ஐஸ்வர்யாராய்.. புஷ்வர்யாராய். ஒன்றும் பெரிதாய் சொல்வதற்கு எப்போதுமே இருந்ததில்லை. இந்தப்படத்திலும் அதுவே! கிளிமஞ்சாரோ பாடலில் மட்டும் பளிச்வர்யாராய். இந்த பாத்திரத்திற்கு ஏன் ஐஸ்வர்யாராய் என்பது குறித்து அண்ணாப்பல்கலைக்கழகத்தில் யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்!

சந்தானம்,கருணாஸ்,கலாபவன்மணி,ஹனீபா என நல்ல நடிகர்கள் கொடுத்த காசுக்கு மேலேயே நடித்திருகின்றனர். அந்த ஹிந்தி வில்லன் அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி பேசியவருக்கு நல்ல குரல், மாடுலேஷன்.

படத்தின் கிராபிக்ஸ் கிளைமாக்ஸ் தவிர்த்து எங்குமே பெரிதாய் உருத்தவில்லை. கிளைமாக்ஸ் காட்சி படு சொதப்பலாக இருந்தது. அதிலும் ரோபோக்கள் இணைந்து ராட்சசனாக நடந்து வருகிற காட்சியை ராமநாராயணன் குட்டிபிசாசு படத்தில் ஒருமுறையும், ஜகன்மோகினி படத்தில் தண்ணீராய் நமீதா நடந்துவருவதாகவும் காட்டிவிட்டார்கள். அது போக தினமும் போகோவில் ஒளிபரப்பாகும் பவர்ரேஞ்சர்ஸ் தொடரின் எல்லா எபிசோட் கிளைமாக்ஸும் அதுதானே!

படத்தின் முதல் பாக பிரமிப்பை , இடைவேளைக்கு பிறகு வரும் முதல் ஒருமணிநேர காட்சிகள் மொத்தமாய் அடித்து உடைக்கின்றன. அவ்வளவு மொக்கை. அதிலும் கொசுவைத்தேடி ரஜினி அலைவதாக காட்டப்படும் காமெடி.. கொட்டாவி அன் கம்பெனி. அதற்கு பின் வரும் கிண்டி கத்திப்பாரா சேஸிங்கும் அதே அதே! ஆனால் கடைசி 45நிமிடம் பரபரவென பறக்கிறது. ஆனாலும் படம் கொஞ்சம் நீளம்தான்.. மூன்று மணிநேரம் ஓஓஓஓஓஓடுகிறது. படத்தின் வசனங்கள் பலவும் கம்ப்யூட்டரோடு தொடர்பு படுத்தியே..ஜிகா ஹெர்ட்ஸ் டெராபைட்ஸெல்லாம் தெரியாத என்னைப்போன்ற கணினி அறியா அறிவிழிகளுக்கு.. ஙே!

படத்தின் கலை இயக்குனர் சாபுசிரிலின் மட்டையை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல! படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா? ரஹ்மானா? யாராக இருந்தாலும் சவ்ண்ட் அபாரம். அவருக்கு ஒரு சபாஷு. ரஹ்மானின் பாடல்களில் கிளிமஞ்சாரோ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. அவ்வளவு இனிமை.. காதல் அணுக்கள் அதற்கு அடுத்த ரேங்க். மற்றபடி கிளைமாக்ஸில் பிண்ணனியாக வரும் அரிமா அரிமா தீம்.. பச்சக் என ஒட்டிக்கொள்கிறது.

பைசென்டெனியல் மேன் திரைப்படத்தின் சாயல் இருப்பதாக சொன்னாலும்.. அப்படி ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. (ரோபோ மனிதனை காதலிப்பது , அந்த தோலில்லாத ரோபோவின் உருவம் தவிர). குடும்பம் குட்டிகளோடு குதூகலமாய் பார்க்கவும்.. குழுவாய் போய் குஜாலாக பார்க்கவும் சிறந்தபடம். மற்றபடி உங்களுக்கு இதுவரை ரஜினியை பிடிக்கவில்லையென்றாலும் கூட இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் ரசிகராகிவிடும் வாய்ப்பு மிகமிக அதிகம்!

ரன்னோ ரன்னென்று ரன்னுவான் இந்த எந்திரன்! DOT