27 October 2010

கரைந்த நிழல்கள்
இலக்கே இல்லாமல் எப்போதாவது கடுமையாக வேலை பார்த்ததுண்டா? தொழில் கற்றுக்கொள்கிறேன் பேர்வழிகள் கூட ஓரளவாவது வேலைக்குண்டான கூலியை பெற்றுக்கொண்டு கற்றுக்கொள்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு இலக்குமில்லாமல் நேரத்தை யாரோ ஒரு சிலருடையா அதிவளர்ச்சிக்காக உழைக்கிறவர்களை சினிமா உலகில் மட்டுமே காணலாம். இப்படி உழைப்பவர்களினுடைய எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்ல.. நிச்சயம் பல ஆயிரங்கள் இருக்கும்.


வடபழனியிலும் சாலிகிராமத்திலும் அசோக்நகரிலும் இன்னும் கோடாம்பாக்கத்தினை சுற்றிக் கிடக்கிற எண்ணிலடங்காதவர்களினுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதுதாகாத்தான் இருக்கிறது. காரணமேயில்லாமல் எந்த லாபநோக்குமின்றி தன்னைத்தானோ சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுகிற கிரகங்களைப்போல இந்த மக்கள் எப்போதும் ஆர்காட் ரோடு சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பதை காணலாம்.


சிறுவயதில் சென்னை என்பதே எனக்கெல்லாம் கனவு. கோடம்பாக்கம் டீ ஸ்டாலில் ரஜினியும் கமலும் டீ சாப்பிடுவார்கள். ஏவிஎம் சரவணன் தன் வெள்ளை சட்டையை ரோட்டோர டிரைகீளினிங்கில் ஐயர்ன் செய்து வாங்குவார். கோடம்பாக்கம் சாலைகளில் உசிலமணியும் பாண்டியராஜனும் ஜனகராஜும் கைகோர்த்து செல்வதாக கனவு கண்டிருக்கிறேன். அமலாவும் ரேவதியும் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்க நிற்பாகக்கூட கற்பனை செய்திருக்கிறேன். உண்மையில் சினிமா என்பதே இவர்கள் என்கிற எண்ணம் நான் வளர வேறாக மாறியது. கோடாம்பாக்கத்தில் வலம் வருகிற போது நிறைய சினிமா காரர்களை சந்திக்க முடிந்தது.. ஆனால் அவர்களை யாருக்குமே தெரியாது. அவர்கள் சினிமா கலைஞர்கள்.


சில ஆண்டுகளுக்குப் பின் சாலிகிராமத்தில் சில ஆண்டுகள் வசிக்க நேர்ந்தது. அப்போது நிறைய சினிமாக்காரர்களோடு டீக்கடைகளிலும் பக்கத்து அறைகளிலும் பார்க்க நேரும். அவர்களெல்லாம் சினிமாவில் வேலை பார்க்கிறவர்கள். தினமும் அலுவலகத்திற்கு செல்வதை போல செல்கிறவர்கள். அவர்களுடைய பெயர் டைட்டிலில் எங்கோ ஒரு மூலையில் போட்டால் போடலாம். ஆனால் அதிகம் உழைக்கிறவர்கள்.


உதவி இயக்குனர்கள்,ஸ்டன்ட் மேன்கள், துணை நடிகர்கள்,புரொடக்சன் மேனேஜர்கள்,டப்பிங் கலைஞர்கள், லைட்மேன்கள்,வாகன ஓட்டுனர்கள்,கோரஸ் பாடகர்கள்,வாத்திய கலைஞர்கள் ம்ம் மூச்சு முட்டுகிறது. இனி இன்னும் என்னென்னவோ ஆட்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தது. பெரும்பாலான கதைகள் எல்லாமே அந்தக்காலத்து சிவாஜி படங்களைப்போல ஒரே சோகம் பிழியும். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எங்கு சென்றாலும் விரித்தபடிதான் செல்லவேண்டும் பாயை என்று கேலியாய் சிரிப்பதை கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர். அவர்களை சினிமா தொடர்புள்ளவர்கள் யாருமே மதிப்பதில்லை. சினிமா அல்லாதவர்களுங்கூட. இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ சென்னையை நோக்கி ஓடிவந்து சினிமாவில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்து முடியாமல் அதிலேயே கிடந்து சாகிறவர்கள்.


என்னோடு தங்கியிருந்த உதவி இயக்குனர் அவன். பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்தான். இயக்குனரின் படம் தொடங்கிவிட்டால் கையில் செல்போனும் பைக்கும் இரவெல்லாம் குடியென மாறிவிடுவான். படம் முடிந்து அடுத்த படம் தொடங்குவதற்கு எல்லாவற்றையும் விற்று அழித்துவிட்டு.. மச்சி ஒரு பீடி கட்டு வாங்கி குடேன் என்கிற அளவுக்கு வறுமையில் வாடுவான். ஒரு கட்டத்தில் தனியாக படமெடுக்க முடிவெடுத்தான். எப்போது சந்தித்தாலும் மச்சி இதோ நாமக்கல் புரொடியூசர் மாட்டிகிட்டாரு.. அடுத்த மாசம் பூஜை கட்டாயம் வரணும் என்பான். போகும் போது சில நூறுகளை கடனாக வாங்கிக்கொள்வான். எப்போதும் பித்துபிடித்தவன் போல மணிக்கணக்கில் அவனுடைய திரைக்கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். மச்சி விஜய பார்த்து கதை சொல்லிட்டேன்.. ஓகே பண்ணிட்டா உடனே பூஜை.. இளையராஜா கால்ஷீட் எப்போ கேட்டாலும் தரேன்னுட்டாரு.. விஜய்ஆன்டனிகிட்டயும் பேசி வச்சிருக்கேன்.. என்று பலதும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.


வறுமையில் அலைந்து கஞ்சா அடித்து பைத்தியமாகி ஊருக்கே அழைத்து சென்றாலும் , அங்கேயிருக்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இப்போதும் தனியாக படமெடுக்கிறேன் என்று புரொடியூசர் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். ஒரு பைசா கூட வருமானமில்லை. ஆனால் மாதம் முழுக்க சுற்றிக்கொண்டேயிருக்கிறான். யாராவது பெரிய இயக்குனருக்கு எல்லா வேலையுமே ஐந்து பைசா கூட வாங்காமல் செய்து கொடுப்பதை பார்த்திருக்கிறேன். உனக்கு நல்ல புரொடியுசர் அமைய மாட்டேங்கிறாங்கடா.. நீ அந்த கமலாவோ விமலாவோ அவள என்னை வந்து பாக்க சொல்றீயா.. என்று பல வேலைகளையும் இலவசமாக செய்ய வேண்டியதாயிருப்பதாக சொல்லுவான்.


இங்கே லைட்பாய் தொடங்கி தயாரிப்பாளர் வரைக்கும் எல்லோருக்குமே நிலை இதுதான். எத்தனையோ வெற்றிபடங்களில் நடித்த நடிகர்களும் நடிகைகளுமே சில ஆண்டுகளில் வறுமையில் வாடி செத்த கதைகளை தமிழ்நாடு அறியும். இங்கே, இந்த சினிமாவில் வெற்றி பெறுகிறவனும் தோல்வியடைகிறவனும் சேர்ந்தே மரணிக்கின்றனர். அவர்களுடைய மரணம் ஏதேச்சையானதல்ல முன்தீர்மானிக்கப்பட்டது. இங்கே பத்தாண்டுகளுக்கு இரண்டு நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதும், நான்கு பேர் விவாகரத்து செய்து கொள்வதும், வறுமையில் வாடி செத்து போகிற தினத்தந்தியின் ஆறாவது பக்க துணை நடிகைகளின் கதையும் நாம் அறிந்ததே. அது தடுக்க முடியாத அளவுக்கு விஷம் சினிமாவின நாடிநரம்பெல்லாம் ஊறியிருக்கிறது. இங்கே ஒழுக்கம் என்பதே கெட்டவார்த்தை.


எழுபதுகளின் கடைசியில் சுஜாதா எழுதிய கனவுதொழிற்சாலையும், அறுபதுகளில் அசோகமித்திரனால் எழுதப்பட்ட கரைந்த நிழல்களும் சினிமாவின் அகோர பக்கங்களை நமக்கு காட்டுகின்றன. சுஜாதா சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவனை பிரதானமாக்கி அவன் சந்திக்கிற உளவியல் சிக்கல்களையும், அடிமட்டத்திலிருந்து முன்னேறுகிற ஒருவன் சந்திக்கிற சவால்களையும் காட்சிப்படுத்தியிருப்பார். நிறைய மசாலாவும் கலந்து கட்டியிருப்பார். ஆனால் கரைந்த நிழல்கள் நாம் திரையில் காணும் சினிமாவிற்கு பின்னால் இருட்டில் இயங்குகிறவர்களினுடைய வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார். பத்து அத்தியாங்களிலும் பத்து வித்தியாசமான கதைகள், அவை ஒன்றோடொன்று சினிமாவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவற்றினை மிக லாவகமாக கோர்த்து கதை பண்ணியிருக்கிறார் அசோகமித்திரன்.


வறுமையில் வாழும் ஒரு புரொடக்ஷன் மேனேஜர், தோல்யிடைந்து மீண்டெழ படமெடுக்கும் தயாரிப்பாளர்,புரொடக்ஷன் அசிஸ்டென்ட்,ஒரு நடிகை, வெற்றி பெற போராடும் ஒரு உதவி இயக்குனர் , வெற்றிகளை குவிக்கும் தயாரிப்பாளர், அவருடைய மகன் என கதை முழுக்க சினிமாவோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல்கள், வெற்றிக்காக செய்கிற தில்லுமுல்லுகள், அது தோல்வியடைகையில் உண்டாகிற கோபம். சினிமா என்னும் கருவியின் உதவியோடு மனிதமனங்களின் சிக்கல்களையும் பேசியிருக்கிறார் அசோகமித்திரன். இங்கே ஒவ்வொருவனும் வெற்றிக்காக போராடுவதும் அனைத்தையும் இழந்து அதை அடைந்தபின் வீழ்ந்துமடிவதுமாக கதை பின்னப்பட்டுள்ளது. இதற்கிடையே வெற்றியோ தோல்வியோ மொத்தத்தில் சினிமாக்காரனின் குடும்பம்.. சினிமாவால் எதை இழந்து எதை பெறுகிறது என்பதான தேடலாக கதை நகர்கிறது.


இன்றும் கமலாதியேட்டரின் வலது பக்கம் அழிந்து போன விக்ரம் ஸ்டூடியோவின் மிச்சங்களை காணமுடியும். ஸ்டூடியோக்கள் கோலோச்சிய அறுபதுகளின் சினிமாவும் அக்காலகட்டத்தில் நிலவிய சினிமாக்களின் தொடர்தோல்விகளும் அதானல் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் தொடங்கி உதவி இயக்குனர் வரையிலுமான போராட்டமே கரைந்த நிழல்கள்.


வெளியே பார்க்க நீர்த்தாவரங்கள் வளர்ந்த அடர்ந்த அழகான பச்சை பசேல் ஏரியினை போல் இருந்தாலும், உள்ளே குதித்தால் ஒவ்வொரு அணுவும் சாக்கடைதான் என்பதை மிக அழகாக விவரித்திருப்பார். இங்கே எவனோ ஒருவனுடைய வளர்ச்சிக்கு பலிகடா ஆக்கப்படும் பல ஆயிரம் கனவுகளின் கதையாக இதை கருதலாம்.


சினிமாத்துறையிலேயே சில காலம் அசோகமித்திரன் பணியாற்றியதால் அந்தக்கால சினிமா உலக இயக்கம் குறித்து ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சில உண்மை சம்பவங்களும் கோர்க்கப்பட்டதாக நண்பர்கள் சொல்லக்கேட்டேன். எனக்கு அப்படி ஏதும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அறுபதுகளின் சென்னை சில இடங்களில் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கோடம்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை செல்பவர்கள் கூட மெட்ராஸ்க்கு போறேன் என்று பேசுவது..


திரையில் நாம் காணும் சில விநாடி காட்சிகளுக்காக எத்தனை இழப்புகள் என்று நாவல் முழுக்க வருகிற சூட்டிங் காட்சிகளும் அதற்கான ஆயத்த முயற்சிகளாகவும் விவரித்துள்ளார்.


தொடக்க அத்தியாயங்கள் படிக்க சிரமமாக இருந்தாலும் மூன்றுக்கு மேல் எளிமை. பல இடங்களில் காட்சியை ஓரளவு மட்டுமே ஆசிரியர் விவரிக்கிறார்.. மீதியை நாமாக யூகித்துக்கொள்ள விட்டிருப்பது நன்றாக இருந்தாலும்.. அந்தக்கால வாழ்க்கையை யூகிப்பதென்பது என்னை போன்ற சிறார்களுக்கு சிரமம்.

நாவலை படித்த பிறகு பழைய படங்கள் சிலதை பார்க்க நேர்ந்தது. ஏனோ டைட்டில் போடும்போது உதவி இயக்குனர்கள் , எடிட்டிங் உதவி, கேமரா உதவி , நடனம் உதவி, இயக்கம் உதவி என உதவிகளின் பட்டியலில் உள்ளவர்களில் ஏதாவது இன்றைய பிரபலங்கள் இருக்கிறார்களா என்று தேடுகிற வினோதமான பழக்கம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேல் படங்கள் பார்த்துவிட்டேன்.. ஒரு உதவி கூட பின்னாளில் சொல்லிக்கொள்கிற வெற்றியாளர்கள் யாருமே இல்லை.. அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவர்களுடைய குடும்பம்...? அவர்களுடைய உருவங்கள் நிழல்களாக மனக்கண்ணில் வந்து அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே திகிலானதுதான் சினிமா!

 


19 comments:

VISA said...

//இதுவரை பத்துக்கும் மேல் படங்கள் பார்த்துவிட்டேன்.. ஒரு உதவி கூட பின்னாளில் சொல்லிக்கொள்கிற வெற்றியாளர்கள் யாருமே இல்லை.. அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவர்களுடைய குடும்பம்...? அவர்களுடைய உருவங்கள் நிழல்களாக மனக்கண்ணில் வந்து அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே திகிலானதுதான் சினிமா!


//


எனக்கும் இந்த பழக்கம் உண்டு. நானும் அந்த உதவிகள் பிறகு என்ன ஆகியிருப்பார்கள் என்று கிறுக்குத்தனமாய் யோசித்துக்கொண்டிருப்பேன்.

ராம்ஜி_யாஹூ said...

அரபு நாடுகளுக்கு வேலைக்கு போவது போலதான் சினிமா தொழிலுக்கு செல்வதும். இருக்கு௦ பலரும் அங்கு உள்ள உணமி நிலை என்ன, துன்பங்கள் என்ன, பாதகங்கள் என்ன என்பது பற்றி சொல்லவே மாட்டார்கள்.
இருக்கும் நன்மைகளே மட்டும் சொல்லலி , உண்மை பிரச்னை தீராமல் அப்படியே இருக்க செய்கிறார்கள்.

எஸ் ராவும், ஜெயமோஹனும் ஆவது உண்மை நிலை, தேவை இல்லாமல் காத்து கிடப்பது, பணத்தை வைத்து ஒரு மனிதரை மதித்தல் போன்ற சினிமா துறையில் நிலவும் தீய பழக்கங்கள் பற்றி விவரமாக எழுதுவார்கள் என நம்புகிறேன். அல்லது எழுதினால் வசனம் எழுத வாய்ப்பு பொய் விடும் என்ற அச்சம் இருக்குமா என்று தெரியவில்லை.

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க அதிஷா.

கரைந்த நிழல்கள் எப்போது படித்தாலும் படிப்போரை கலங்கடிக்கும் ஒரு நாவல்.

அசோகமித்திரனின் தண்ணீர் நாவலையும் படித்துப் பாருங்கள்.

நன்றி.

A free worker of great Tamil Film Industry said...

Thanks for a nice post

Oh my Tamilnadu please understand about our Industry and don't try to come over here, because free creative worker sufficiently available here. Try to save your life with your family

Arun said...

Though im a frequest visitor to your blog, this is my first comment. Arumayana padhivu Adhisha...

Unknown said...

than nilai theriyaamal thadumaarum kalaignerkal idaiye kettikkaara sathyaraj,ekar,sivakumar,vijayakumarkalum irukkiraarkal.

அன்பரசன் said...

அருமையா எழுதி இருக்கீங்க..

Anonymous said...

திரைப்படங்களுக்கு பின்னான சோகங்கள் நெஜை நெகிழ வைக்கின்றன.

R. Gopi said...

கரைந்த நிழல்கள் எனக்குப் பிடித்த புத்தகங்களுள் ஒன்று. அதைப் பற்றிப் படிப்பது மகிழ்ச்சி.

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

ஒவ்வாக்காசு said...

அருமையான நாவலை பற்றிய சிறப்பான பதிவு.....

உதவியாளர்கள் முக்கியமான இடத்திற்கு வராமல் போவது சினிமா துறையில் மட்டுமல்ல. எல்லா துறையிலயும்/இடங்களிலையும் இருப்பது தான். ஒரு மளிகை கடையிலையோ அல்லது சாப்ட்வேர் இண்டஸ்டிரிலையோ எல்லாரும் முதலாளி ஆகவோ அல்லது ப்ராஜெக்ட் மேனேஜர்-ஆகவோ ஆவமுடிவதில்லை. அதே போல தான் பத்திரிக்கை துறையிலயும்... எல்லா உதவி ஆசிரியர்களும், சீப் எடிட்டர் ஆக முடிவதில்லை...

எல்லா விசயங்களை போலவே, சினிமா என்பதினால் மட்டும் இதுவும் பெரிதாக்கபடுகிறது... சராசரிகள் எப்போதுமே தலைவனாக முடியாது... ஆனால் சராசரிகள் இல்லாமல் உலகம் இல்லை... நானும் எல்லோரையும் போல சராசரி தான்...

நட்புடன்,
ஒவ்வாக்காசு.

Unknown said...

நல்ல பதிவு.,
அழுத்தமான நிகழ்வுகளை அழகாக பதிந்துள்ளிர்கள்...வாழ்த்துக்கள்.

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

Raashid Ahamed said...

ஒரு பாயிண்டையும் விடாமல் அலசி இருக்கிறீர்கள்.இனிய பாடல்கள், நல்ல இசை அழகான கதைகளையும் நல்ல படிப்பினைகளையும் தேசபக்தியையும் சொன்னதும் தமிழ் சினிமாதான். (பழைய படங்கள்). கலாசார சீரழிவு, விபரீத சமூகவிரோத யோசனைகள், கொலை கடத்தல் ஐடியாக்கள்,ஆபாசம், விபச்சாரம் இவற்றை ஏற்படுத்துவதும் சினிமா தான் (புது படங்கள்)

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்..நான் கனவுத் தொழிற்சாலை மட்டுமே வாசித்திருக்கிறேன்..கரைந்த நிழல்கள் வாசிக்கணும்...நன்றி உங்கள் அறிமுகப்படுத்தலுக்கு!

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்..நான் கனவுத் தொழிற்சாலை மட்டுமே வாசித்திருக்கிறேன்..கரைந்த நிழல்கள் வாசிக்கணும்...நன்றி உங்கள் அறிமுகப்படுத்தலுக்கு!

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்..நான் கனவுத் தொழிற்சாலை மட்டுமே வாசித்திருக்கிறேன்..கரைந்த நிழல்கள் வாசிக்கணும்...நன்றி உங்கள் அறிமுகப்படுத்தலுக்கு!

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் ஐம்பதுகளில் சோரி சோரி என்னும் ஹிந்தி படம் வந்தது. அதில் எடிட்டிங் அசிஸ்டண்டுகளாக டைட்டில்சில் காட்டப்பட்ட ஒரு பெயர் எஸ்.பி. முத்துராமன்.

தில்லானா மோகனாம்பாள் (1968), தெய்வ பிறவி (1960) ஆகிய படங்களில் எக்ஸ்ட்ரா நடிகையாக சி.ஐ.டி. சகுந்தலா டைட்டில்சில் கூட பெயரில்லாது வந்திருக்கிறார்.

முதலில் தட்டு தூக்கும் எக்ஸ்ட்ராவாக பார்த்திபன் கனவு படத்தில் புக் செய்யப்பட்ட சரோஜாதேவி, படம் வெளி வருவதற்குள் கதாநாயகியாக உயர்ந்ததால் அவரை கௌரவ நடிகையாக டைட்டில்சில் போட்டார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆர். அபிலாஷ் said...

நல்ல அசலான கட்டுரை அதிஷா

Anonymous said...

Good one bro