Pages

07 February 2011

யுத்தம் செய்



‘குனிய குனிய குட்டிகிட்டேதான் இருப்பாங்க! என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ! அந்த இரட்டை வரி வசனத்தை அடிப்படையாக கொண்ட மிடில்கிளாஸ் கோயிஞ்சாமிகள் பொங்கி எழுந்து பழிவாங்கும் படங்களின் எண்ணிக்கை தமிழில் ஆயிரங்களைத்தொடும். யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான் என்றாலும்.. இதனை ஆயிரத்தில் ஒன்றென நகர்ந்து போய்விட முடியாது.

தொடர்கொலைகள் அதை தொடர்ந்து சென்று புலனாயும் அதிகாரி, எதிர்பாராத திருப்பங்கள், இறுதியில் அவிழும் முடிச்சுகள். ஒரு முழுமையான மர்ம நாவலுக்கான சர்வலக்சணங்களும் ஒருங்கே பொருந்திய ஒரு கதையை எடுத்துக்கொண்டு மிகத்திறமையாக வித்தியாசமான திரைக்கதை புனைந்திருக்கிறார் மிஷ்கின். முதலில் அவருக்கு ஒரு சபாஷ். ஒவ்வொரு காட்சியையும் உளி சுத்தியலோடு செதுக்கியிருப்பார் போல, அவ்வளவு பர்ஃபெக்ஷன். ஆனால் பல காட்சிகளில் ஏன் இவ்ளோ மெனக்கெடறார் என்று எண்ணினேன்.

எழுத்தாளர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது எந்த ஒரு படைப்பாக இருந்தாலும், ‘இது இலக்கியத்தரம், இது உலகத்தரம், இது ஆஸ்காரு..நோபல்’ என நினைத்துக்கொண்டு மெனக்கெட்டு செய்தால் அதில் உயிரின்றி போய்விடுகிற வாய்ப்பிருக்கிறது, படைப்பென்பது அதன் இயல்போடு காட்டாறு போல பாய்ந்து போய்க்கொண்டேயிருக்கணும் அதை குச்சிபோட்டு நோண்டிகிட்டே இருக்க கூடாது என குறிப்பிட்டார். மிஷ்கின் படம் முழுக்க அளவுக்கதிகமாக மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் கண்கூடாகத்தெரிகிறது. இன்னும் மெனக்கெட்டிருந்தால் மொத்தப்படமும் டாக்குமென்ட்ரி ஆகிவிடுகிற அபாயமும்!

கொஞ்சகூட அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார் சேரன். அவருடைய முந்தைய படங்களைப்போல் இல்லாமல் இதில் முகம் பொத்தி அழுவதில்லை, தேம்பி தேம்பி உணர்ச்சி பொங்கும் வசனங்கள் பேசவில்லை, அமைதி அமைதியென ஒரு புத்த குருவைப்போல சிமிட்டாத கண்களோடு படம் முழுக்க மனதிற்குள் கவ்வும் சோகத்தோடு நடித்திருப்பது அழகு. படத்தில் நிறைய சின்ன சின்ன பாத்திரங்கள் நிறைவாக நடத்திருந்தாலும், எனக்கு பிடித்தது பிணவறை மருத்துவராக வருகிற ஜெயபிரகாஷின் எளிமையான நடிப்புதான். படத்தில் ஹீரோயின் இல்லை, டூயட் இல்லை. ( யாரோ பெண்ணின் இடுப்பு ஆடும் குத்துப்பாட்டு உண்டு, அப்பெண்ணின் இடுப்போடு அமீரும் ஆடுகிறார் )

படத்தின் இசை உலகத்தரம். அதிலும் ஒரு அன்டர்கிரவுன்ட் பார்க்கிங் காட்சியில் ஹாலிவுட் தரத்தில் காட்சியமைப்பும் அதற்கேற்ற இசையும் பிரமிக்க வைக்கிறது. இடைவேளையில் வருகிற சண்டைக்காட்சியும் தமிழுக்கு புதுசு. (இதெல்லாம் எந்த படத்திலிருந்து சுட்டதோ என நிறையபேர் இடைவேளையின் போது சிலர் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது, நிச்சயம் இது சுடப்பட்டதாக தெரியவில்லை). படத்தின் காட்சிகளும் திரைக்கதையும் கிட்டத்தட்ட ஈசன் படத்தினை நினைவூட்டினாலும் (சமுத்திரக்கனி நேர்மை போலீஸ், பழிவாங்கும் குடும்பம்.. பணக்கார வில்லன் , புலனாய்வு etc…) இது அந்த படத்தை விட பல ஆயிரம் கிலோ நன்றாகவே இருக்கிறது. டெக்னிக்கலாக இது தமிழ்சினிமாவில் பல உச்சங்களை தொட்டிருப்பதற்காக பாராட்டியாக வேண்டும்.

ஆனால் படத்தின் கதை முதல்பாதியில் புரியும்படியில்லை என்பதும், நத்தை மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சிகளும் பெரிய குறை. காட்சிகள் ஸ்கிப்பாகி.. அதற்கு அடுத்த சம்பவத்தின் மூலம் முந்தைய காட்சியை விளக்கும் பாணி நன்றாக இருந்தாலும்.. தமிழுக்கு புதுசு என்கிற காரணத்திற்க்காக மட்டும் வரவேற்கலாம்.

படம் முழுக்கவே காட்சிகள் பலதும் பொறுமையை சோதிக்கும்படி அமைத்திருக்கிறார். ஒரு வெற்றிடம் அதை பாத்திரங்கள் நிரப்புகின்றன.. காட்சி முடிய பாத்திரங்கள் நகர மீண்டும் வெற்றிடம்.. இதுமாதிரியான டெக்னிக் கொரிய ஜப்பான் சீன மூக்குசப்பையானவர்களின் படங்களுக்கு ஓகே.. இது வெடைப்பான மூக்கு கொண்டோர் பார்க்கிற தமிழ்ப்படம். மிஷ்கின் தன் வாழ்நாளில் ஒரு தமிழ்படமாவது எடுப்பார் என நம்புகிறேன். மற்றபடி நந்தலாலா
மிஷ்கினுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

இது நல்லபடம்தான் ஆனால் ஓடாது!