Pages

15 March 2011

மரம்,செடி,மலை




எனக்கு ரயில்னா ரொம்ப புடிக்கும். அதோட சத்தம் ரொம்ப பிடிக்கும். பெட்டி பெட்டியா போறது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்பாவையும் ரொம்ப புடிக்கும். அப்பாதான் எனக்கு எல்லாமே. அப்பா மட்டும்தான்.

‘நாளைக்கு நாம ரயில்ல போப்போறோம்டா அம்மு’னு அப்பா சொன்னப்பா நான் தூங்கிட்டிருந்தேன். ஆஃப்யேர்லி லீவு, வீட்டுல தனியாதான் இருந்தேன். அப்பா என்னை எழுப்பி சொன்னாரு. நான் மறுபடியும் தூங்கிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சி முழிச்சிப்பார்த்து ‘நெசமாலுமே டிரெயின்ல போறமாப்பா’ன்னு கேட்டேன். அப்பா என் தலைய தடவிவிட்டு ஆமா குட்டிமானு சொன்னாரு. அப்பா என் தலைய தடவிக்குடுக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்பன்னா ரொம்ப ரொம்ப.. அப்பறம் என்னை எங்க கூட்டிட்டு போனாலும் கை விரலோட நுனில அழுத்தாம புடிச்சிட்டுதான் நடப்பாரு அது இன்னும் புடிக்கும்.

நான் இதுவரைக்கும் ரயில்லயே போனதில்ல... ஆனா தூரத்துல பார்த்திருக்கேன். அப்பறம் ரயில் விளையாட்டு விளையாடிருக்கேன். ஒரு நாள் ஸ்கூல்ல சைன்ஸ் மிஸ் பாடம் நடத்திகிட்டு இருந்தாங்க. அப்ப எர்த்துதான் சன்னை சுத்துதுனு சொல்லிகுடுத்தாங்க, திடீர்னு யாரெல்லாம் டிரெயின்ல போயிருக்கீங்கனு கேட்டாங்க, க்ளாஸ்ல எல்லாரும் கைய தூக்கினாங்க , நான் கைய தூக்கல.. ஏன்னா நான் டிரெயின்ல போனதில்லை , சுத்தி சுத்தி பார்த்தேன், ரம்யா மட்டும்தான் க்ளாஸ்லயே கைய தூக்காம இருந்தா, எனக்கு அழுகையே வந்திருச்சு.

மிஸ் சொன்னாங்க, டிரெயின்ல போம்போது ஜன்னல்வழியா பார்த்தா மரம் மலை செடிலாம் ஆப்போசிட்டா போகும்னு, நான் எழுந்து மிஸ் ஸ்கூல் பஸ்ல போம்போதும் அப்படிதான் போகுது நான் பார்த்திருக்கேனு சொன்னேன் , அதுக்கு நீதான் டிரெயின்ல போனதில்லைல ச்சும்மா உக்காருனுட்டாங்க கொங்கானி மிஸ், எல்லா பாய்ஸும் என்னைப்பார்த்து சிரிச்சிட்டாங்க ,அப்பருந்து எனக்கு டிரெயின்ல போணும்னு ரொம்ப ஆசை. யாராவது என்னை பெரியவளாகி என்ன ஆகப்போறேனு கேட்டா டிரெயின் ஓட்டுவேனு சொல்லுவேன். அவங்க சிரிப்பாங்க. நானும் சிரிப்பேன். அதுவும் டிரெயின்ல ஜன்னல் வழியா மரம் செடி மலைலாம் நகருதானு பார்க்கணும்னு ரொம்ப ஆசை.

அப்பா டிரெயின்ல போறோம்னு சொன்னதும் என்னால நம்பவே முடியல, போர்வையை போர்த்திகிட்டு சிரிச்சிகிட்டேன். எனக்கு போர்வைக்குள்ள சிரிக்க ரொம்ப பிடிக்கும்.

போர்வை விலக்கிட்டு நேரா வாசலுக்கு வந்து ரம்யா,ரதிபிரியா,ஹரிணிய தேடினேன். இருட்டிருச்சுனு அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க போல.. வாசல்ல என் செல்லகுட்டி சுப்ரமணி மட்டும்தான் இருந்துச்சு. சுப்ரமணி என்னைய பார்த்ததும் எம்பி எம்பி குதிச்சு வால ஆட்டிச்சி. நான் அதுபக்கத்துல போயி முட்டில கையவச்சி குனிஞ்சு சுப்ரமணி நாளைக்கு நான் டிரெயின்ல போப்போறேன்.. நீயும் வரீயானு கேட்டேன். அது கீக் கீக்னு கத்திகிட்டு இரண்டு கால்ல குதிச்சிச்சி.. அப்பாகிட்ட போய்கேட்டேன், அப்பா சுப்ரமணியையும் கூட்டிட்டு போலாம்ப்பானு, அப்பா வேணானு சொல்லிட்டார். சுப்ரமணிகிட்ட நான் சொல்லல, சொன்னா அது அழும். அப்புறம் நான் போர்வையை போர்த்திட்டு சிரிச்சிட்டே தூங்கிட்டேன்.

விடிஞ்சதும் அப்பாதான் என்னை எழுப்பினாரு. இருட்டாதான் இருந்திச்சு. அப்பா என்னப்பா இன்னும் கொஞ்சநேரம்னு சொல்லிட்டு நான் போர்வை இழுத்துவிட்டுக்கிட்டு தூங்கினேன்.. அப்பா முதுகுல தட்டி டிரெயின்ல போணுமா வேண்டாமான்னாரு.. டபால்னு எழுந்திட்டேன். எனக்கு முகம் கழுவி விட்டாரு.. நான் குளிக்கணும்னு அடம்பிடிச்சேன். ம்ஹும் முகங்கழுவினாலே போதும்னாரு. அவரும் குளிக்கல..

எனக்கு ரெட்டை ஜூன்டியே பிடிக்காது.. ஆனா அதையே போட்டுவிட்டாரு. நான் அப்பா சடைபோட்டுவிடுப்பான்னேன். உனக்கு இதுதாண்டா அழகாருக்கும்னாரு. நான் சுடிதார் போட்டுக்கறேன்னேன். இல்லை கவுன் போட்டுக்கோண்ணாரு. அதையே போட்டுவிட்டாரு. அது யூகேஜில எடுத்த கவுன். இப்போ நான்வளர்ந்துட்டேன்ப்பான்னேன். நீ சரியாவே சாப்டமாட்டேன்ற அப்புறம் எப்படி வளருவனு சொல்லி , நீ குட்டை பாப்பான்னு கிண்டல் பண்ணாரு, இல்லப்பா நான் பாரு இவ்ளோச்சோடு இருக்கேனு அப்பாவோட கை அளவு எம்பி எம்பி காட்டினேன். அப்பயும் நீ குட்டைப்பாப்பாதான்னு சிரிச்சாரு.. எனக்கு கோபமா வந்திச்சி , டிரெயினுக்காக பொறுத்துக்கிட்டேன். கூட்டிட்டு போகாட்டி என்ன பண்றது.
ரெண்டுபேரும் கிளம்பினோம். அப்பா ஒரு பாட்டில்ல தண்ணியும், காலைல இட்லி சுட்டு அதை ஒரு டிபன்பாக்ஸ்லயும் போட்டு எடுத்துக்கிட்டாரு. நான் என் வாட்டர்கேன்ல தண்ணி பிடிச்சிகிட்டேன். அப்பா எங்கப்பா போறோம்னு கேட்டேன்.

நம்ம ஊருக்குப்பா..

நம்ம ஊருன்னா எதுப்பா

பன்னிமடை , அங்கதான் உன் தாத்தா பாட்டிலாம் இருக்காங்கன்னாரு
பன்னிமடையா உவ்வே பேரே ஷேம்.. பேரே நல்லா இல்ல. அங்க பன்னிலாம் இருக்குமாப்பான்னேன் மூக்க பொத்திக்கிட்டு. அப்பா என் தலைய தடவி சிரிச்சாரு. அப்பா என் தலைய தடவி சிரிக்கும்போது அழகா இருப்பாரு. எனக்கு ரொம்ப பிடிக்கும். பன்னிமடைல பன்னி இருந்தா என்ன, மூக்க பொத்திக்கலாம் , வாமிட் வந்தா என்ன பண்றது.. அதுக்காக டிரெயின்ல போகாம இருக்க முடியுமா?

பஸ்ல போனோம். ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருந்துச்சு. அப்பா என் விரல மெதுவா பிடிச்சிகிட்டு நடந்தாரு. எனக்கு ரொம்ப சர்ப்ரைஸிங்கா இருந்துச்சு. அப்பா க்யூல போய் நின்னாரு. அது பெரிய க்யூ , நிறையபேர் பேப்பர் படிச்சிட்டு க்யூல நின்னாங்க , எல்லாருமே பேக் பெட்டிலாம் வச்சிருந்தாங்க! என்னோட வாட்டர்கேன பார்த்துக்கிட்டேன். அடுத்தவாட்டி பெட்டி எடுத்துவரணும்னு நினைச்சிகிட்டேன். பெட்டினா நல்ல பெரிய பெட்டி கறுப்பு பெட்டி.

அப்பா க்யூல நின்னுட்டு போன்ல ஏதோ மெசேஜ் அனுப்பிட்டுருந்தாரு. நான் அங்கே ஸ்டேஷன்ல எழுதிருந்ததையெல்லாம் எழுத்துக்கூட்டி படிச்சிட்டே வந்தேன்.. அங்கே போட்டிருந்துச்சு ஆறு வயசுக்கு மேல் டிக்கட் எடுக்க வேண்டும். அப்பாகிட்ட டிக்கட் எடுக்காட்டி என்ன பண்ணுவாங்கனு கேட்டேன். ஜெயில்ல போட்டுருவாங்க, இருட்டு ரூம்ல போட்டுருவாங்கன்னு கை ரெண்டையும் பூச்சாண்டி மாதிரி வச்சுகிட்டு என்னை பயமுறுத்தினாரு எனக்கு பயமே வரல. பேட் அப்பா!

டிக்கட் எடுக்காம யாராச்சும் போவாங்களாப்பான்னு கேட்டேன். அப்பா பதிலே சொல்லல. அப்பா டிக்கட் வாங்கிட்டுருந்தாரு. ஒரு கோயம்புத்தூர்ன்னு வாங்கினாரு. அப்பா எனக்கு டிக்கட்னு கத்தினேன். அப்பா விரல வாய்கிட்ட வச்சு ச்சூ ன்னார். அப்பா எனக்கு டிக்கட் எடுக்கலையா?

‘நீ குட்டிப்பாப்பா உனக்கு டிக்கட் எடுக்க வேண்டாம்மா’’

‘’அப்பா எனக்கு ஏழு வயசாச்சு டிக்கட் எடுங்கப்பா’’

‘’பேசாம வாடா குட்டி, அதுலாம் ஒன்னும் வேண்டாம், அப்பாவ பார்த்தா போலீஸ்காரங்களே பயப்படுவாங்க’’

நான் பேசாம நடந்தேன். ரயில் நின்னுட்டுருந்துச்சு. ஒரே கூட்டம். அழகா ப்ளூ கலர்ல நீளமா இருந்துச்சு. அப்பாப்பா நாம இதுல போலாம்ப்பானு ஒரு பெட்டிய காட்டினேன். அது ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்ம்மா ன்னாரு. அப்படினா என்னானு கேக்கலாம்னு தோணிச்சி கேக்கல.

ஒரு பெட்டில ஏறினாரு. ஓரே நாத்தம். மூக்கை பொத்திகிட்டேன். எல்லா சீட்டுலயும் ஆளுங்க உக்கார்ந்திருந்தாங்க. அப்பா கொஞ்சநேரம் நின்னாரு. ஒருத்தர்கிட்ட சார் குழந்தைய கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்காத்தி வச்சிக்கோங்கன்னார். அந்த அங்கிள் எனக்கு கொஞ்சம் இடங்கொடுத்தார். டிரெயின்ல ஃபேன் இருந்துச்சு, நாத்தம் அடிச்சிச்சு,கூட்டமா இருந்துச்சு, கம்பியை இழுனு எழுதிருந்துச்சு.. அவ்ளோதானா டிரெயின்னு இருந்துச்சி.

வண்டி கெளம்புச்சு. ஜன்னல் பக்கத்துல உக்காத்திருந்தா நல்லாருந்துருக்கும். எட்டிப்பார்த்துட்டே வந்தேன். மலை மரம் செடிலாம் ஒன்னையும் காணோம், நிறைய ஹவுஸஸ்தான் நகர்ந்துட்டே இருந்துச்சு.

அப்பா என் பக்கத்துலயே நின்னுட்டே வந்தாரு. அப்பா கோயம்புத்தூர் போக எவ்ளோ நேரம்ப்பா ஆகும்னு கேட்டேன். ரொம்ப நேரம் ஆகும்ன்னாரு. தலைய தடவிவிட்டாரு.பக்கத்து சீட்டு அங்கிள் பிஸ்கட் கொடுத்தாரு. நான் வேண்டானு சொல்லிட்டேன். அப்பா வாங்கிக்கோனு சொன்னாரு. அப்புறமாதான் வாங்கிக்கிட்டேன். ரொம்ப நல்லாருந்துச்சு. இன்னொன்னு கேக்கலாமானு நினைச்சேன். அப்பா திட்டுவாருனு விட்டுட்டேன். அப்பா என்னையே பார்த்துட்டுருந்தாரு. நான் ஜன்னலையே பார்த்துட்டுருந்தேன். எங்களுக்கு எதிர்லதான் அந்த பையன் உக்காந்திருந்தான். அவன் என்னை பார்த்து மொறைச்சிட்டே வந்தான். அவன் பக்கத்துல அவனோட டேடி உக்காந்திருந்தாரு. நான் என்னோட வாட்டர் பாட்டில் எடுத்து தண்ணி குடிச்சேன். அவன் பெப்சி எடுத்து குடிச்சான். நான் அவனை பார்க்காத மாதிரி திரும்பிகிட்டேன். அவனும் ம்க்கும் னு திரும்பிகிட்டான்.

தூரத்துல மரம்லாம் தெரிய ஆரம்பிச்சிது. அப்புறம் ஒரே மரம்.. ஒரே செடி.. மிஸ் சொன்னமாதிரி நிஜமாவே அது ஸ்பீடா ஆப்போசிட்டா போயிட்டிருந்துச்சு. கன்னத்துல கைவச்சுகிட்டேன். அப்பா நின்னுட்டேருந்தாரு. பக்கத்து சீட்டு அங்கிள் சார், குழந்தைய மடில வச்சிட்டு உக்காருங்கன்னாரு. அப்பாவும் என்னை மடில வச்சுகிட்டாரு. அப்பா மடில உக்காந்துக்கறது எவ்ளோ ஜாலியா இருக்கும் தெரியுமா! அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச டிரெயின்ல. என்னப்பார்த்து அந்த பையனும் அவங்கப்பாகிட்ட சொல்லி அவரு மடில உக்காந்துகிட்டான். நான் அவனை கண்டுக்காம ஜன்னலை பார்த்து சிரிச்சிட்டே வந்தேன்.

அவன் வேணும்னே சாக்லேட் எடுத்து காட்டி காட்டி சாப்ட்டான். நான் அப்பாகிட்ட அப்பா எனக்கு சாக்லேட்னு சொன்னேன். ஊருக்கு போய் வாங்கித்தரேன்னாரு. அவன் என்னை பார்த்து கேவலமா சிரிச்சான். போடா லூசுனு திட்டனும் போல இருந்துச்சு. வேணும்னே அவன் அம்மாவ போய் கட்டிபுடிச்சு முத்தா குடுத்தான். என்னோட அம்மாவ நான் பார்த்ததே இல்ல. அதனால அப்பாவோட கைய இறுக பிடிச்சிகிட்டேன். ஏதோ ஸ்டேஷன்ல வண்டி நின்னப்ப அப்பா எனக்கு சாக்லேட் வாங்கித்தந்தாரு.. அதை அவன்கிட்ட காட்டிட்டே சாப்டேன். அவன் முறைச்சான். நான் சிரிச்சேன்.

பிளாக் கோட் போட்டவர் ஒருத்தர் ஒவ்வொருத்தர்ட்டயா டிக்கட் கேட்டுட்டே வந்தாரு. டிக்கட் டிக்கட் னு கேட்டாரு. அந்த பையனோட அப்பா டிக்கட் குடுத்தாங்க அதுல பேனாவால ஏதோ பண்ணிட்டு குடுத்துட்டாரு. அந்த பையனுக்கு கோட் பாக்கெட்லருந்து ஒரு சாக்லேட் எடுத்து குடுத்தாரு. அப்பாகிட்டயும் டிக்கட் கேட்டாரு. அப்பா பாக்கெட்லருந்து டிக்கட் எடுத்து குடுத்தாரு. அந்த பிளாக் கோட் அங்கிள் என் தலைய தடவி, அப்பாகிட்ட பாப்பா யாரு நம்ம பாப்பாங்களான்னாரு, ஆமாங்கன்னார் அப்பா.
பாப்பாவுக்கு டிக்கட் எடுக்கலையா

சின்ன குழந்தைங்க அஞ்சு வயசுதான் ஆச்சு, அதான் டிக்கட் எடுக்கலை

ஹாய் பாப்பா வாட் இஸ் யுவர் நேம்

மை நேம் இஸ் அம்மு

குட் அம்மு, என்ன ஸ்டான்டர் படிக்கறீங்க னு கேட்டார் பிளாக் கோட் அங்கிள். அப்பா என் கைய அழுத்தி பிடிச்சார். நான் அப்பா வலிக்குதுப்பான்னேன். ஏதோ மாதிரி பிளாக் கோட் அங்கிள பார்த்து அப்பா சிரிச்சாரு. எனக்கு புரியல.

செக்ன்ட் ஸ்டான்டர்ட் பி செக்சன் பார்தி மெட்ரிக்லேசன் ஸ்கூல்,மடிப்பாக்கம் னு சொன்னேன். வெரிகுட் , நல்ல உயரமா இருக்கியேன்னார் பிளாக்கோட அங்கிள். எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, அப்பாவை பெருமையா பார்த்துகிட்டேன். அப்பா ஏன்னே தெரியல ஒருமாதிரி இருந்தாரு.

பிளாக் கோட் அங்கிள் அப்பாவை பார்த்து முறைத்தார். என்ன சார் இப்படி இருக்கீங்க, குழந்தைக்கு பொய் சொல்லத்தெரியாது, அவங்களை கெடுக்கறதே நீங்கதான்.. என்ன ஆளுங்க சார், நூறுரூபாய் டிக்கட் எடுத்துட்டா குடுமுழுகியா போய்டும், சட்டையெல்லாம் அயன் பண்ணி போட்டிருக்கீங்க.. படிச்சவங்கதான் சார் எல்லா தப்பும் பண்றது... இன்னும் ஏதேதோ சொல்லி திட்டிட்டேயிருந்தார். அப்பா கண்ணெல்லாம் கலங்கிருந்துச்சு. நான் அப்பாவையே பார்த்துட்டுருந்தேன். அப்பா கறுப்பு கோட் அங்கிளுக்கு காசு குடுத்தார். அந்த அங்கிள் போகும்போது பாக்கெட்லருந்து ஒரு டைரிமில்க் குடுத்துட்டு போனார். எனக்கு டைரிமில்க் ரொம்ப பிடிக்கும். எதிர்ல உக்காந்திருந்த பையன் என்னை பார்த்து சிரிச்சிட்டே இருந்தான். அவங்க அம்மாகிட்ட காதுல ஏதோ சொல்லி சிரிச்சான்.

அப்பா பாவம், கண்ணுகலங்கிப்போய் உக்காந்திருந்தாரு. எனக்கு பாவமா இருந்துச்சு. அப்பா அப்பா..ன்னு கூப்டேன். அப்பா ம்ம் ன்னார். ‘’ஏன்ப்பா இப்படி இருக்க, போலீஸ்லாம் உன்னபார்த்து பயப்படும்னு சொன்ன’’ னு கேட்டேன். அப்பா அமைதியா உக்காத்திருந்தார். கொஞ்ச நேரத்துல ‘வாயமூடிட்டு வரப்போறியா இல்லையா’’னு பயங்கர சத்தமா கத்தினாரு. எனக்கு அழுகை வந்து அழுதுட்டேன். பக்கத்து சீட்டு அங்கிள் , ‘’என்னசார் சின்ன குழந்தைய போயினு’’ என்னை அவர் மடில உக்காத்தி வச்சுகிட்டார். எதிர்ல அந்த பையன் என்ன பார்த்து சிரிச்சிட்டே இருந்தான். எனக்கு அழுகை அழுகையா வந்திச்சி!

ஏதேதோ சொல்லி சமாதானம் பண்ணினாரு. என்னை ஜன்னலோரமா உக்காத்தி வச்சாரு. ஜன்னல்ல மரம் செடி மலைகூட எதிர்பக்கமா நகர்த்து போய்ட்டே இருந்துச்சு. எனக்கு அத பார்க்கவே பிடிக்கல.. எதிர்ல அந்த பையன் ரொம்ப ரொம்ப சிரிச்சிட்டே இருந்தான்!
அப்பா அப்படியே கோவமாவே உக்கார்ந்திருந்தாரு. எனக்கு ஜன்னலை பார்க்க பிடிக்கல. ஜன்னலே பிடிக்கல.. கருப்பு கோட் அங்கிள் குடுத்த சாக்லேட் கூட பிடிக்கல. அப்பாவோட அந்த முகமும் பிடிக்கல. அப்பா அமைதியா உட்கார்ந்திருந்தாரு.

நான் ஜன்னல்ட்டருந்து எறங்கி அப்பாகிட்ட போனேன். அப்பா ஏன்ப்பா இப்படி இருக்கனு கேட்டேன். அப்பா என்னை மடில உக்காத்தி வச்சுகிட்டு , தலைய தடவிக்குடுத்தாரு. அப்பா இனிமே நாம டிரெயின்ல போவேணாப்பா..ன்னு சொன்னேன் , அப்பா அப்படியே இருக்கமா கட்டிப்பிடிச்சுகிட்டாரு. அவர் என் தலைல முத்தம் குடுத்தாரு.. ஏன்னே தெரியல எனக்கு அழணும் போல இருந்துச்சு. ஜன்னல் பக்கமா மரம் செடி மலைலாம் எதிர்பக்கமா போய்ட்டே இருந்துச்சு... நிறைய நிறைய... எனக்கு அதை பார்க்கவே பிடிக்கல.. எனக்கு இந்த ரயில் நாத்தமும் பிடிக்கல.. இந்த பையன பிடிக்கல... இந்த ரயில கொஞ்சங்கூட பிடிக்கல...