Pages

11 May 2011

அழகர்சாமியின் குதிரை




மிருதுவான ஐஸ்கிரீமை முரட்டுத்தனமாக சாப்பிட்டதுண்டா? ஊர் பக்கம் திருவிழா தொடங்கிவிட்டால் இதுமாதிரி ஐஸ்கீரிம்கள் கிடைக்கும். உண்மையில் இதுவெறும் ஐஸ்தான் கிரீமெல்லாம் இருக்காது. இந்த வகை ஐஸை நாங்களெல்லாம் பஞ்சவர்ண ஐஸ்கீரிம் என அழைப்பதுண்டு. மரம் இழைக்கும் கருவியில் ஐஸ்கட்டியை மழுங்க தேய்த்து தேய்த்து அதை பொடிப்பொடியாக உதிரியாக்கி , டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸில் போட்டு அடைத்தால் , எப்படியோ தானாகவே ஓன்றோடொன்று ஒட்டிக்கொண்டு குச்சி ஐஸ் போல மாறிவிடும், அதில் ஒரு குச்சி சொறுகி , அதன்மீது ஐந்துவண்ண கலர் தண்ணியை ஊற்றி ஆவிபறக்க கொடுப்பார் ஐஸ்வண்டிக்காரர்.

அதை அப்படியே தின்ன முடியாது... முதலில் அதை மெதுவாக உறிஞ்சி நாக்கை சுழற்றி தின்ன வேண்டும். அந்த ஐஸோடு சேர்ந்த கலர் தண்ணி மட்டும் முதலில் கரையும். அது வெவ்வேறு ஃபிளேவர்கள் கலந்து இருமல் மருந்து போல சுவையாக இருக்கும். ஒரு கட்டத்தில் வெறும் வெள்ளை ஐஸ்கட்டி மட்டும் எஞ்சி இருக்கும். காசு குடுத்து வாங்கிட்டோமே கீழே போடமுடியுமா வெறும் வெள்ளை ஐஸ்கட்டியை நக்கிக்கொண்டே திருவிழா முழுக்க சட்டையெல்லாம் புறங்கையெல்லாம் கலர்கலராய் வடவடவென ஐஸ்வழிய காந்துபோய் சுற்றித்திரிந்திருக்கிறோம்.

அப்படி ஒரு ஐஸை தின்றபடி முரட்டுத்தனமான கிராமத்து திருவிழா காலத்தில் ஊருக்குள் வலம் வந்த உணர்வை கொடுக்கிறது ‘அழகர்சாமியின் குதிரை’. கிராமத்துப்பெரிசுகளின் அலப்பறை, இளந்தாரிகளின் லந்து, சிறுசுகளின் சேட்டை, பெண்களின் முரட்டுத்தனம், மைனர்களின் வாழ்க்கை என கிராமத்து மனிதர்களின் இயல்பான உணர்வுகளை எந்தவித சினிமாபூச்சுமில்லாமல் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அண்மைக்கால கிராமத்துப்படங்கள் எல்லாமே வெட்டுக்குத்து வீச்சரிவாள் வேல்கம்பு என ரத்தமும் சதையுமாக சுற்றித்திரியும்போது இந்தபடத்தின் கதையோ அதிலிருந்து விலகி கிராமங்களின் மென்மையான பக்கங்களை அதன் பகடிகளை கிண்டல்கேலிகளை நகைச்சுவையை முன்வைப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

பாஸ்கர் சக்தியின் கொஞ்சமே பெரிய சிறுகதையை அல்லது குட்டிநாவலை படமாக்க முடிவு செய்த இயக்குனர் சுசீந்தரனுக்கு வாழ்த்துகள். மூலகதையை கொஞ்சமும் சிதைக்காமல் திரைக்கதை அமைத்து படமாக்கியமைக்கு பாராட்டுகள். பீச்சில் பொறுமையாக ஆற அமற நடைபோடும் குதிரையை போல கொட்டாவி விட்டபடி தொடங்கும் கதை இடைவேளைக்கு கொஞ்சம் முன்னால் தேசிங்குராஜா குதிரைபோல மின்னல் வேகத்தில் பாய்கிறது. இதற்கு நடுவே அழகான இரண்டு காதல், கிராமத்து கிண்டல்கள், கொஞ்சம் சென்டிமென்ட் என ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான மசாலாக்களையும் ஆங்காங்கே தூவியிருப்பது அழகு!

படத்தின் ஹீரோ அப்புகுட்டி அசத்துகிறார். அவர் வந்தபிறகுதான் படம் ஜெட்வேகத்தில் பாய்கிறது. அவருடைய போர்ஷன் மிக குறைவாக இருப்பது ஒரு குறை. குதிரை இழந்து துக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிற விதம், சில இடங்களில் அழவைத்து, சிரிக்க வைத்து இன்னும் என்னவெல்லாமோ செய்யவைக்கிறது. இன்னொரு ஹீரோவாக வருகிற அந்த நாத்திக இளைஞன் பாத்திரமும் மிக அருமையாக நடித்திருக்கிறார். பெயர் தெரியவில்லை. படத்தில் என்னை கவர்ந்தது கிராமத்து சிறுவனாக வருகிற அந்த எகத்தாளமான குட்டிப்பையனின் பாத்திரம்தான். அதுவே தனி சிறுகதையாக தெரிகிறது.

பிரசிடென்ட் சண்டையில் திருவிழாவை நிறுத்த முயலும் எக்ஸ்பிரசிடென்ட், விவசாயம் செத்துபோய் பிள்ளைகளை திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பு விதவைத்தாய், வேவு பார்க்க வந்த இடத்தில் சாமியாராக டெவலப் ஆகும் போலீஸ்காரர், ஊர் கோடாங்கியின் வயித்தெரிச்சல் என ஆங்காங்கே சின்னச்சின்னதாய் அழகான கதைகள். குதிரையை தொலைத்தவனுக்கும் குதிரைய பறிகொடுத்த கிராமத்திற்குமான மெயின் கதையில் மற்ற கதைகள் கைகால் மூக்கு வாய் போல ஆங்காங்கே சரியான இடத்தில் பொறுத்தமாக அமர்ந்து கொள்ளுகின்றன.

இளையராஜாவுக்கு கிராமத்து படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி! இதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர். நாயகனின் அறிமுக காட்சியில் வருகிற ஒரே ஒரு பிஜிஎம்மே போதும், அற்புதம்! (வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை). அது மட்டுமே தனியாக கிடைத்தால் மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும். கொடுமை, படத்தில் அந்த குறிப்பிட்ட அற்புதமான பிஜிஎம் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. அது போக குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி பாடலில் , மனுஷன் அப்புகுட்டியின் பாத்திரமாகவே மாறிவிட்டார் போல.. குரலில் காதலை காட்டுகிறார்!

படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் தேனீ ஈஸ்வருக்கு முதல்படமாம்.. யாருகாதுல பூ சுத்தறீங்க.. என்னமா படம் பிடிச்சிருக்காரு! அதிலும் அந்த மலைப்பகுதிகளுக்குள் புகுந்து வெளியே வருகிற கேமரா.. ஏலேய் கேமராவ எங்கிட்டு வச்சுய்யா படமெடுத்தீங்க! படத்தின் வசனங்கள் பலதும் கதையில் வருகிற அதே வசனங்கள்தான் திரையில் பார்க்கும் போது அதன் வீர்யம் இன்னும் அதிகமாகவே உணர்ந்தேன்.

படத்தில் எல்லாமே நன்றாக இருந்தாலும், இரண்டு இடத்தில் குதிரை பின்னாங்காலில் உதைத்தது போல இருந்தது. ஒன்று இரண்டாம் நாயகனுக்கான மொக்கை டூயட் பாடல். அது இல்லாமலேயே அவனுடைய காதலின் வீர்யத்தை பல காட்சிகளில் இயக்குனர் உணர்த்தியிருந்தார். இன்னொன்று குதிரை கெட்டவர்களை விரட்டி விரட்டி அடிப்பது.. ராமநாராயணனுக்கு அந்த காட்சியை சமர்ப்பிக்கலாம். படத்திற்கு திருஷ்டிபோல இருக்கும் இந்த காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், மற்ற எல்லாமே அற்புதம்தான். பாஸ்கர்சக்தியின் எழுத்துக்கு மாலை மரியாதை செய்து குதிரையிலேற்றி ஊரோடு ஊர்வலம் வந்து திருவிழா எடுத்திருக்கிறார் சுசீந்திரன்.

படத்தின் இயக்குனர் திருவிழா ஐஸ்வண்டிக்காரரைப் போல கிராமத்து மனிதர்களை ஒன்றுதிரட்டி யதார்த்த ஐஸ்கிரீமில் ஆயிரம் வர்ணங்களை ஊற்றி கொஞ்சமும் சுவை குறையாமல் கொடுத்திருக்கிறார். இந்த வகை முரட்டு ஐஸ் எப்போதும் திகட்டியதே இல்லை. இந்தப்படமும்! சுசீந்திரன் மற்றும் அவருடைய டீமினுடைய இந்த முயற்சி நிச்சயம் வெற்றியடையவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே படம் முடிந்தபின் மனது முழுக்க நிரம்பியிருந்தது. இந்தபடத்தின் வெற்றி இதைப்போல இன்னும் பல படங்களுக்கான துவக்கமாக நம்பிக்கையாக இருக்கும். உலக சினிமா என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. 'ஏலேய் இது நம்மூர் படம்யா' என மார்த்தட்டிக்கொள்ளலாம்.

பாஸ்கர் சக்தியின் இந்தக் குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டிக்கு குறையொன்றுமில்லை.. கொஞ்சம் தட்டினாலும் குதித்தோடும் ஜெயிக்கிற குதிரை இது!