Pages

21 May 2011

ரஜினி என்னும் அசுரன்



எந்த ஒரு மனிதனுடைய உயிரும் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு உயிருக்கும் இங்கே உகந்த மரியாதை அளிக்க வேண்டும்தான். ஆனால் ரஜினிக்கு ஏன் இவ்வளவு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர் உடல்நிலைசரியில்லாமல் போனது குறித்து ஏன் மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன? அவர் உயிரோடிருந்தால் என்ன செத்தால் என்ன? அவர் என்ன பெரிய மகானா புரட்சியாளரா புண்ணாக்கா? எனக் கேள்வியெழுப்புகிறவர்களை பார்க்கும் போது கோபமும் எரிச்சலும் உச்சத்தை எட்டுகின்றது.

என்னசார் ரஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும்தானே.. அவருக்கும் மரணம் வரும்தானே.. அவர் உடல்நிலை குன்றியிருந்தால் உங்களுக்கென்ன, அதனால் இங்கே என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என்று கேட்கிற இன்னொரு கும்பல் அதைவிடவும் அதிக எரிச்சலூட்டுகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் படவேண்டிய கவலையை ஏன் இவர்கள் படுகிறார்கள்?

நான் ரஜினி ரசிகன் கிடையாது. எனக்கு ரஜினியை பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் ரஜினி என்னும் ஆளுமை தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சக்தி என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நான் பத்திரிகையாளனாக இருப்பதால் கடந்த ஒருவாரமாக எனக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் ரஜினியின் ரசிகர்களும் எத்தனை போன்கால்கள், தம்பி ரஜினியபத்தி ஏதேதோ சொல்றாங்க என்னப்பா நிலைமை... ரஜினிக்கு இப்போ எப்படியிருக்கு.. ஒன்னும் ஆகாதில்ல.. என பதட்டமும் அழுகையுமாக நான் கேட்கிற குரல்களில் இருப்பது , வெறும் நடிகனுக்கும் ரசிகனுக்குமான சினிமா உறவல்ல.. அளவிடமுடியாத அன்பு மட்டுமே.

ரஜினி என்னும் தனிமனிதனுக்காக இங்கே தன் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க தயாராயிருக்கிற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை எனக்குத்தெரியும். ரஜினி என்னும் அந்த நடிகரை வெறும் நடிகராக மட்டுமே பார்க்காமல் தங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக மதிக்கிற குடும்பங்களும் உண்டு. அவருக்காக எதையும் செய்யத்தயங்காத ரசிகர்களையும் பார்த்திருக்கிறேன்.

போயும் போயும் ஒரு நடிகன் பின்னாலதான் போகணுமா? நடிகன்தான் ஆதர்ஷனமாக இருக்கணுமா? என்கிற கேள்விகள் எழலாம். யாருக்குத்தான் இங்கே ஆதர்ஷண நாயகர்கள் இல்லை. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு நாயகன் தேவைப்படுகிறான். நாயக வழிபாடு இல்லாத ஆளே இருக்க முடியாது. அது பெரியாராகவும் அண்ணாவாகவும் கருணாநிதியாகவும் பிராபகரனாகவும் ஜெயல்லிதாவாகவும் சோராமாசாமியாகவும் ஒசாமாவாகவும் ஒபாமாவாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது ரஜினியாக இருப்பதால் யாருக்கும் எந்த கேடும் ஏற்படப்போவதில்லை.

அவர் நடிக்கிறார் சம்பளம் வாங்குகிறார் என்பதெல்லாம் வெற்று கூச்சலே தவிர வேறொன்றுமில்லை. இப்படி கூப்பாடு போடுபவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அதுகூடவா தெரியாது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் ரஜிக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியுமா?

ரஜினியை பார்த்து வாழ்க்கையில் அவரைப்போல முன்னேற வேண்டுமென துடிக்கிற எத்தனையோ பேரே அறிவேன். இந்த இளைஞர்களிடம் எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இது தனக்கான ஆதர்ஷ நாயகனை தேர்ந்தெடுக்கிற உரிமை தொடர்பானது. ஒருவன் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் , யாரை பூஜிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டுதானே! ரஜினியை பின்பற்றுவதால் அவன் நன்றாயிருந்தாலும் நாசமாய் போனாலும் அது அவன் பாடு!

ஒருவரை நமக்கு பிடித்துப்போகவும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் அவரை நம் ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொள்ளவும் அவர் போராளியாகவும் புரட்சியாளராகவும்தான் இருக்க வேண்டும் என்றால் மனைவியிடம் கூட அன்பு பாராட்ட முடியாது.
சாகட்டுமே அதனால் யாருக்கு நஷ்டம் என கேட்பவர்களை பார்க்கும் போது பயம்தான் வருகிறது. ஒரு மனிதனின் உயிர் என்ன அவ்வளவு இளக்காராமா போயிடுச்சா? உலகில் யாருடைய உயிராக இருந்தாலும் அது போனால் என்ன என்கிற அலட்சியம் ஆபத்தானது என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோம்.

பத்திரிகைகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன.. பீதியை கிளப்புகின்றன என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒருபதில்தான். ரஜினியொன்றும் அதிஷாவோ யுவகிருஷ்ணாவோ கிடையாது. முப்பதாண்டுகாலமாக போராடி தென்னிந்திய திரைப்படங்களின் அடையாளமாக இருக்கிற ஒரு ஆளுமை என்பதை யாராவது இங்கே மறுக்க முடியுமா? இந்தியா முழுக்கவே தென்னிந்த சினிமாவின் முகமாக ரஜினிதானே இன்னமும் இருக்கிறார். இதென்ன ஓவர்நைட்டில் நடந்ததா? ரஜினியின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறவர்களும் அவருடைய புகழை , ரசிகர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையை மறுக்கவும் முடியுமா? பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லாத குப்பையோ மண்ணோ கிடையாது ரஜினி!

அதிலும் ரஜினிகுறித்து பரவலாக பரப்பப்படுகிற வதந்திகளை முறியடிக்க பத்திரிகைகளின் பங்கு மிக முக்கியமானது. ரஜினிமீதான அதீத அன்பின் வெளிப்பாட்டில் தற்கொலை செய்துகொள்ள நேரிடுகிற சம்பவங்களும் தமிழகத்தில் நடைபெறலாம். குறைந்தபட்சம் இச்செய்திகள் சிலருக்காவது ஆறுதல் அளிக்கலாம்.

அரசியில் ரீதியில் ரஜினி மீது எனக்கும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்குமான உறவில் விமர்சனங்களை வைக்கவே முடியாது. ரஜினியே உதைத்தாலும் மீண்டும் அவர்மீது பாய்ந்து விளையாடுகிற குழந்தைகளை போன்றவர்கள் அவருடைய ரசிகர்கள். ரஜினி நிச்சயமாக அசுரன்தான். தமிழகத்தில் இத்தனை கோடி பேரின் பிரார்த்தனைகளை , அன்பை பெற்ற ரஜினி நிச்சயமாக அசுரன்தான். அந்த அசுரன் மீண்டும் அசுர பலத்தோடு உடல்நலந்தேறி மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.