Pages

28 July 2011

தெய்வத்திருமகள்




ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!

பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!

அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!

ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!

மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!

இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!