Pages

12 August 2011

சறுக்குமரம்




அவனுடைய குட்டிப்பாப்பா தன் புன்னகையை தொலைத்து மூன்றுநாட்களாகிவிட்டது. சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை. யாருடைய கேள்விக்கும் பதிலும் கிடையாது. எப்போதும் சோகமான முகத்துடன் சிந்தனை மட்டும்தான். அதற்கான காரணம் மாலை ஆறுமணிக்கு திறந்து ஏழரை மணிக்கே அவசரமாக விசிலடித்து மூடப்படுகிற அந்த சிறிய பூங்காவின் ஒற்றை சறுக்குமரம்.

அவனுடைய சிறிய வீடு, நகரத்தின் கடைக்கோடியிலிருந்த புதிய குடியிருப்பு பகுதியில் இருந்தது. மிருக காட்சி சாலையில் குரங்குங்களின் கூண்டுகள் போல அடுக்கடுக்காக இருக்கிற குடியிருப்பு பகுதியது. அப்பகுதி குழந்தைகள் விளையாட இருக்கிற ஒரே இடம் அந்த சிறிய பூங்கா மட்டும்தான்.

பாப்பா தவழ்ந்து கொண்டிருந்தவரை அவளுக்கு சிறகுகள் இல்லை. கால்களில் சிறகுகள் முளைத்தபோது பறக்க இடமில்லை. கொஞ்சம் வேகமாக பறந்தாலும் சுவர்கள் முட்டும். வெளியே எங்கும் ஓடிவிளையாட முடியாது வாகனங்கள் தொல்லை. இரவுகளில் அவளுக்கு நிறைய தேவதைகதைகள் சொல்வான். அவளுக்கு அதில் திருப்தியில்லை.!

புதிய சிறகுகள் முளைத்த எந்தப் பறவைக்கும் இருக்கிற அதே உணர்வு அவளுக்கும் இருந்தது. சுதந்திரமாக பறக்க வேண்டும். என்ன செய்வதென்று அதிகம் யோசிக்காமல் அவளை அப்படியே வாரி அணைத்து தூக்கிக்கொண்டு போய் பூங்காவில் விட்டு விடுவான். அவள் அங்கே பறந்து பறந்து சோர்வடையும் வரை திரிவாள். தினமும் ஆறரை மணிக்கு அலுவலகம் முடிந்து வீடு வந்ததும். காஃபி கூட குடிக்காமல் பாப்பாவோடு பூங்காவிற்கு ஓடுவான்.

அவர்கள் செல்லும் நேரத்தில் எப்படியும் அவர்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெற்றொர்களும் குவிந்திருப்பார்கள். ஆய்ய்ய்ய்.. ஓய்ய்ய்ய்... டேய்ய்... என பலவிதமான ஸ்வரங்கள் அப்பகுதி முழுக்க சங்கீதமாய் ஒலிக்கும். இருவரும் அந்த இசையில் இரண்டற கலந்துவிடுவார்கள். என்றாலும் பாப்பாவுக்கு அங்கிருக்கும் சீசாவிலோ ஏணியிலோ ஊஞ்சலிலோ விளையாடுவதில்லை. பூங்காவின் மத்தியிலே வீற்றிருக்கும் சறுக்கு மரம் மட்டும்தான் அவளது இலக்கு. அங்கு மட்டும்தான் ஒரு மணிநேரமும் விளையாடுவாள்.

ஆனால், அது அவ்வளவு சுலபமாக அவளுக்கு கிடைத்துவிடாது. சறுக்குமரத்திற்கு பின்னால் நீளும் நீ...ண்ட வரிசையில் நிற்க வேண்டும். அனைவருமே அவளைப்போல அழகழகான குழந்தைகள்தான். எல்லோர் முகத்திலும் ‘’எப்போ நம்ம முறை வரும்’’ என்கிற ஆர்வம் நிறைந்திருக்கும்

இந்த காத்திருத்தலுக்கு பாப்பா நன்றாக பழகியிருந்தாள். முன்னாலும் பின்னாலும் குழந்தைகள் முட்டித்தள்ளிய போதும் தடுமாறி விழ நேரும் போதும் வேர்த்துக்கொட்டினாலும் முட்டி சிராய்த்தாலும் க்யூவில் நிற்பாள். எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றாள்.

அவளது முறை வரும்போது வெகு ஜாக்கிரதையாக, அதேநேரம் வேகமாக ஏணியில் ஏறுவாள். கீழிருந்து பார்க்கும் அவனுக்குத்தான் கால்கள் நடுங்கும். உச்சியை அடைந்ததும் சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பாள். அப்போது அவளது கண்களில் வழியும் சந்தோஷத்தை அப்படியே சிந்தாமல் வாங்கிக்கொள்வான். அந்த மகிழ்ச்சி ஒன்று போதும் அவனுக்கு. ஒரு நொடிதான். அதன் பின், சொய்ய்ய்ங்ங்க் என சறுக்கி கீழே விழுவாள்.'அடி பட்டிருக்குமோ' என பதற்றத்துடன் அவளை நெருங்குவான். ஆனால், அதற்குள் தன் மீது படிந்த மண்ணை தடதடவென தட்டிவிட்டு குடுகுடுவென ஓடிப்போய் மீண்டும் வரிசையில் நிற்பாள்.
மீண்டும் காத்திருப்பு. மீண்டும் ஏணி. மீண்டும் உச்சி. மீண்டும் சுற்றிலும் ஒரு பார்வை. மீண்டும் சொய்ய்ய்ங்ங்ங்க். மீண்டும்...

தொடர்கதையானது சறுக்குமர விளையாட்டு. எல்லா நாளுமே திருவிழாவானது.
ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வீடு வந்து சேர, பூங்காவிற்கு போக முடியாமல் போனது. பாப்பா ஒரே அழுகை, அவனோடு முகம் சிவக்க மூக்கு வெடைக்க கடுமையான சண்டை. காய்ச்சலே வந்துவிட்டது. இரண்டு மாத்திரை ஒரு ஊசிக்கு பிறகுதான் சகஜமானாள். ஆனால், அவள் கண்களில் தெறித்த ஏக்கம், அவனை பொசுக்கி விட்டது. அதன் பிறகு எந்த வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு மாலையே வீடு திரும்ப ஆரம்பித்தான்.

தினமும் தொடர்கிற இந்த சறுக்குமர விளையாட்டு, ஒரு நல்ல நாளில் முடிவுக்கு வருமென அவனோ பாப்பாவோ நினைக்கவேயில்லை. எப்போதும் போல அன்றைக்கும் பாப்பா ஏணியில் நான்காவது முறை ஏறினாள். விழுந்து எழுந்து க்யூவில் நிற்க ஓடினாள். எப்போதும் ஒழுங்காக க்யூவில் நிற்பவள் அன்றைக்கு ஏனோ வரிசைக்கு நடுவில் போய் நின்றாள்.

அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு குண்டுபையன் பின்னால போ என பயங்கரமாக சப்தமிட... பயந்து போய் வரிசையிலிருந்து வெளியே வந்தாள். இதைப் பார்த்த ஒரு அம்மா, ‘’ஒழுக்கமில்ல.. க்யூல நிக்கமாட்டே.. டிசிப்ளின் இல்லே... உங்க அம்மா எங்கே.. ‘’ என ஏதேதோ சொல்லி அதட்ட.. குட்டிப் பாப்பா ஓஓவென அழுதபடி ஓடி வந்து கண்களை கசக்கியபடி அவனுடைய கால்களை கட்டிக்கொண்டது

‘’’ஏன்ங்க சின்னக்குழந்தைக்கு என்ன தெரியும், பாவம், ஏதோ தெரியாம..’’ என அந்த அம்மாவிடம் கோபமாய் பேசினான். ‘’கொழந்தய ஒழுக்கமா வளக்க தெரியல, டிசிப்ளின் இல்ல.. க்யூல நிக்கறதுகூடவா சொல்லித்தரமாட்டீங்க, நீங்க ஒழுக்கமா இருந்தா உங்க குழந்தை ஏன் சார் இப்படி இருக்க போவுது..’’ என அவனையும் பயங்கர சப்தத்தோடு அதட்ட.. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவமானமாக உணர்ந்தவன் குனிந்த தலையோடு அருகிலிருந்த பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டான். பாப்பா க்யூவில் நிற்காமல் அவன் அருகில் வந்து உட்கார்ந்தது. ‘’பாப்பா போய் விளையாடு’’ என்றான். பாப்பாவோ அவன் அருகில் அமர்ந்து கொண்டு அப்பாவின் கைகளை இறுக பற்றிக்கொண்டது. அவன் தோளில் சாய்ந்து கொண்டது. சட்டை ஈரமாவதாக உணர்ந்தான்.

‘’டாடி நான் மட்டும் தனியா சறுக்கு மரத்துல விளையாடணும், அவங்களாம் வேண்டாம்.. நான் மட்டும்.. அப்புறம் நீ.. ‘’ என வார்த்தைகளை கோர்த்து கோர்த்து பத்து வயது குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதபடி பேசினாள். அவன் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் பாப்பா.. ‘’ஒரே ஒருவாட்டி டாடி.. ப்ளீஸ் டாடி’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தது. எரிச்சலும் கோபமும் கலந்திருந்த அவனுடைய மனநிலையில் ‘’கொஞ்ச நேரம் சும்மா இருக்கமாட்டியா... பேசாம உக்காரு’’ என உரக்க அதட்டினான். ஓய்ந்த மழை மீண்டும் தொடங்கியதுபோல அமைதியாகத்தொடங்கிய பாப்பா மீண்டும் அழத்தொடங்கியது. அவனுடைய கைகளை கட்டிக்கொண்டிருந்தவள் கையை விடுவித்துக்கொண்டு பெஞ்சின் மறுமுனையில் தள்ளிப்போய் அமர்ந்துகொண்டாள். அழுதபடியே இருந்தாள்.

அதற்கு பிறகு மூன்று நாட்களாகிவிட்டது. யாருமேயில்லாத சறுக்குமரத்தை தேடாத இடமில்லை. அந்த நகரத்தின் எல்லா பூங்காக்களிலும் எப்போதும் நிறைய குழந்தைகள் நிரம்பியேயிருந்தனர். இதைப்பற்றியே இரவெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்தான். பாப்பா இப்படி இருப்பதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அலுவலகத்தில் சிலரோடு பேசினான். ம்ஹூம் இது யாருக்கும் பெரிய பிரச்சனையாக இல்லை. அடம்பிடிச்சா முதுகுல நாலு வச்சி உஷ்னு சொல்லுங்க பாப்பா அதுக்கப்பறம் சரியாகிடும் என சொன்னார் வாட்ச்மேன் அண்ணா!

நீங்க நல்லதா பெரிசா ஒரு டெடிபேர் பொம்மை , பவர் ரேஞ்சர் டுப்பாக்கி இல்லாட்டி ஸ்பைடர்மேன் மாஸ்க் இதுமாதிரி ஏதும் வாங்கி குடுங்களேன் என்றார் டீ தருகிற பையன்.
காத்து கருப்பு அடிச்சிருக்குங்க எதுக்கும் தர்காவுக்கு போய் ஒருவாட்டி மந்திரிச்சுட்டு வந்துடுங்க.. என்றார் இன்னொருவர்.

கூல் பாஸ்! இது குழந்தைங்க மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை நல்ல மருத்துவரை பாருங்களேன்.. எனக்குத்தெரிஞ்ச டாக்டர் இருக்காரு.. பிரண்டுதான் அப்பாயின்மென்ட் வேணா வாங்கிதரேன் என்றார் மேனேஜர். அவனுக்கு எந்த யோசனையும் பிடிக்கவில்லை. இனி இதைப்பற்றி யாரிடமும் பேசவும் தயங்கினான். இருந்தும் மனைவியிடம் பேசினான்.

‘’பேசாம ஒரு பெரிய சறுக்குமரம் வாங்கிட்டா என்ன?’’

‘’வாங்கி முதுகுல வச்சுப்பீங்களா.. உக்காரவே இடமில்ல.. இதுல நடக்கற காரியமா பேசுங்க’’

‘’எங்கயாச்சும் கூட்டிட்டு போயிட்டு வந்தா’’

‘’எங்க கூட்டிட்டு போய்ட்டு வருவீங்க.. போக்கத்த பொழப்புக்கு போக இடம்வேற இருக்காக்கும்’’

‘’வாட்டர் தீம் பார்க் அந்தமாதிரி’’

‘’இந்த மாசம் இன்னும் வாடகை கொடுக்கல, வண்டி வேற பிராப்ளம்னு சொன்னீங்களே நினைவிருக்கா’’

‘’என்ன செய்யலாம்’’

‘’எனக்கு காலைல நாலு மணிக்கு எழுந்து உங்களுக்கு சமைச்சு கொட்டணும் இப்போதைக்கு தூங்கலாம்’’ என லைட்டை அணைத்துவிட்டு அவனருகில் படுத்துக்கொண்டாள். இரவெல்லாம் அவனுக்கு உறக்கமேயில்லை. சறுக்குமரத்துக்கு என்ன செய்றது? அலுவலகத்திற்கு போகும் போதும் வரும் போதும் சறுக்குமரம் தனியாக நின்றுகொண்டு அவனை பார்த்து சிரிப்பதைப்போலவே உணர்ந்தான்.

மூன்று நாட்களுக்கு பிறகு பூங்காவிற்கு சென்று அங்கிருக்கிற செக்யூரிட்டியிடம் பேசினான். ‘’ எக்ஸ்யூஸ்மீ சார்! ஏழரை மணிக்கு மேல அந்த சறுக்குமரம் சும்மாதானே இருக்கும்.. அப்ப வந்து கொஞ்ச நேரம் எங்குழந்தைய கூட்டிட்டுவந்து விளையாடலாம்னு.. ரூவா ஏதும் வேணுமான கேளுங்க குடுத்துறேன், சரக்கு சாப்டூவீங்களா’’ என்றான்.

தன் மூக்கு கண்ணாடியை கழட்டி துடைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்து.. அலட்சியமாக ‘’அதெல்லாம் முடியாது சார், என் வேலையே போய்டும்.. அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டா அவ்ளோதான்’’ என காரணங்களை அடுக்கினார், கடமை தவறாத அந்த செக்யூரிட்டி. என்ன செய்வதென்றே புரியாமல் அங்கிருந்து கிளம்பினான். பூங்காவிற்கு பின்னாலிருந்த கடையில் சிகரட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு யோசித்தான். பூங்காவின் மதில் சுவர் பெரிய உயரமில்லை.

‘’பாப்பா இன்னைக்கு நைட்டு நாம சறுக்குமரத்துல ஜா.....லியா விளையாடப் போறோம்.. தனியா!’’ என்று பாப்பாவை தூக்கி ஒரு சுற்று சுற்றினான். பாப்பாவுக்கு மட்டுமல்ல அவன் மனைவிக்கும் ஆச்சர்யம். மூன்று நாட்களுக்கு பிறகு பாப்பா புன்னகைத்தது. அவனுக்கு கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்ததை போல உணர்ந்தான். கொஞ்சமாய்தான் புன்னகைத்தாள்.

‘’என்னங்க என்ன பண்ணப்போறீங்க’’ புருவம் உயர்த்தி கேட்டாள் மனைவி.
‘’நைட்டோட நைட்டா சுவர் ஏறி குதிச்சி.. உள்ளே போயி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வந்துட வேண்டியதுதான்’’ என்று சாகசம் செய்யப்போகிறவன் போல பேசினான்.

இருவரும் பேசுவதை பாப்பா பார்த்துக்கொண்டிருந்தது. ‘’டாடி நைட்ல போனா பூச்சாண்டி புடிச்சிராது, ஒனக்கு பயமாறுக்காது’’ என்று அதன் பங்குக்கு ஒரு கேள்வியை கேட்டது.
தலையில் முண்டாசும் மடித்து கட்டின லுங்கியுமாக பாப்பாவின் விரல்பிடித்தபடி டார்ச் லைட்டோடு கிளம்பினான். ஹாலஜன் விளக்கு ஒளியில் பூங்காவே கறுப்பும் மஞ்சளுமாக இருந்தது. அதிக இருட்டில்லை. தூரத்தில் கேட்டுக்கு வெளியே செக்யூரிட்டி சேர்போட்டு உட்கார்ந்தபடி கையிலிருந்த லத்தியில் முட்டுக்கொடுத்தபடி தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்தான். மதில் மேல் பாப்பாவை உட்கார வைத்தான். அவனும் ஏறினான். மதில்மேல் ஏறி அதிலிருந்து இறங்கி பாப்பாவையும் இறக்கினான்.

சின்ன புதர்களை கடந்து ஒன்றிரண்டு மரங்கள் கடந்து, சீசா கடந்து, ஏணிகள் கடந்து
உள்ளே நுழைந்தான். தன்னந்தனியாக இருட்டிலும் யாருமேயில்லாமல் புத்தர் போல நின்றுகொண்டிருந்தது அந்த துருப்பிடித்த பழைய சறுக்குமரம். பாப்பா அதை தூரத்தில் பார்த்ததுமே ஓடிப்போய் அதன் அருகில் நின்று சிரித்துக்கொண்டாள்.. மனசுக்குள்ளே ஐஸ்கட்டியை வைத்து இறுக்கக்கட்டிக்கொண்டது போல ஜில்லென உணர்ந்தான்.

பாப்பா ஏணியில் ஏறாமல் ஏனோ அந்த சறுக்குமரத்தையே சுற்றிசுற்றி ஓடி வந்தாள். கொஞ்ச நேரம் தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அருகிலிருந்த அந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டான். பாப்பா ஏணியில் தன் சின்ன காலில் அழகிய பொம்மைப்போட்ட செறுப்போடு முகமெல்லாம் சிரிப்போடு காலை வைத்து ஏறினாள். பொறுமையாக ஏறி முடித்து மேலிருந்து கீழே சொய்ங்ங்ங்க் என பாய்ந்து வரும்போது.. ஹேய்ய்ய்ய் என உற்சாகமாய் சப்தமிட.. அவனோ உஷ்உஷ் என செய்கை காட்ட..

‘’எவன்டா அது.. பார்க்குக்குள்ள.. என கேட்டிலிருந்து ஒரு சப்தம்.. செக்யூரிட்டியின் டார்ச் ஒளி ஒளிக்கற்றையாக மரங்களில் பட்டுத்தெறித்து அங்குமிங்கும் அலைந்தது.
அய்ய்யோ என பதறிப்போய், பாப்பாவை தூக்கி மார்பில் போட்டுக்கொண்டு ஓடத்துவங்கினான். ‘’டாடி.. சீக்கிரம் போங்க.. அந்தாளு ஓடி வரான்’’ என அப்பாவின் முதுகில் குத்தியது பாப்பா!. பின்னாலே செக்யூரிட்டி ஓடிவருதைப்போல இருந்ததால் தடதடவென வேக வேகமாய் ஓடினான். பாப்பாவை மதில் மேல் ஏற்றிவிட்டு அவனும் ஏறினான்.. தூரத்தில் ஏய் யார்ரா அவன்.. நில்லுடா ஓடாதே என கத்திக்கொண்டு கையில் லத்தியோடு விசுக்கி விசுக்கி ஓடிவந்தார் செக்யூரிட்டி. ‘’டாடி பயமாறுக்கு..!’’ என்றது பாப்பா. குரலில் பதட்டம்.

அவன் சுவரிலிருந்து குதிக்க.. கீழே எதற்கோ வெட்டிவைத்திருந்த ஏதோ ஒரு குழியில் தடுமாறி விழுந்தான். இருட்டு பகுதியென்பதால் ஆஆஆ என்கிற அலறல் சப்தம் மட்டுமே கேட்டது. பாப்பா மட்டும் மதிலில் தனியாக அமர்ந்திருந்தாள். மூச்சிரைக்க தலையில் மப்ளரும் கையில் டார்ச்சோடும் ஓடி வந்து நின்றார் செக்யூரிட்டி. அழுதபடி அமர்ந்திருந்த பாப்பா அவருக்கு கீழே விரலை காட்டியது பாப்பா!. ‘’டா....டி’’

அவன் விழித்துப்பார்த்தபோது மருத்துமனையின் ஒரு சிறிய அறையில் கைகளில் மிகப்பெரிய கட்டுடன் படுத்திருந்தான். அருகில் பாப்பாவும் அவனுடைய மனைவியும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்னால் மாமனார்.

‘’கொஞ்சம் மிஸ்ஸாகிருந்தா, குழில நீட்டிட்டு இருந்த கம்பி நெஞ்சுல பாய்ஞ்சிருக்கும், நல்ல வேளை கையோட போச்சு’’ மாமனார் சொன்னார். பாப்பா பேசாமல் அமர்ந்திருந்தாள். அழுதிருக்க வேண்டும். கண்கள் ஈரமாய் இருந்து அழுக்குப் படிந்து காய்ந்திருந்தது.

‘’நான் கும்பிடற அம்மன்தான் உங்களை காப்பாத்திருக்கணும்.. ஒருமாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லிட்டாருங்க..’’

‘’பணத்துக்கு?’’

‘’அக்கவுண்ட்ல இருந்த முப்பதாயிரத்தை எடுத்துகிட்டேன், இவளுக்காக சேத்து வச்சதுதானே.. விடுங்க சேர்த்துக்கலாம்.. ’’

‘’ஏன் குழந்தை அழுதிருக்கா திட்டினீயா’’

‘’திட்னேனா..இவ செஞ்ச காரியத்துக்கு அடிச்சே கொன்னுருப்பேன்.. சனியன், எப்படி உட்கார்ந்திருக்கு பாருங்க.. அடங்காபிடாரி, அப்படியென்ன இந்த வயசுலயே சொல்பேச்சு கேக்காததனம், இவளாலதான இவ்வளவும்.’’ என்று முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு கண்கள் விரிய பாப்பாவின் தலையில் சப் என அடித்தாள். அடித்துவிட்டு தன் புடவை தலைப்பை கண்களுக்குள் அருகில் வைத்துக்கொண்டு அழுதாள். பாப்பா அழத்தொடங்கியது. ‘’ஏன்மா..கொழந்தயப்போயி, பாவம்.. இங்கவாடா குட்டி, அவ என்ன செய்வா’’ என பாப்பாவை அருகில் அழைத்து கைகளை தன் உடையாத கைகளில் பிடித்துக்கொண்டான்.

‘’இல்லைங்க.. இந்த மாசமே அடிச்சிபிடிச்சிதான் செலவு பண்ணிட்டிருந்தேன்.. நாற்பதாயிரம் ஆகிருக்கு.. அப்பா சேவிங்ஸ் இருக்கபோயி ஆச்சு... இந்த மாசம் உங்க சம்பளமும் இருக்காது, நான் என்னதான் பண்ணுவேன்’’ கண்கள் கலங்க பேசினாள் அவள். பாப்பா அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அழவில்லை.

நான்கு நாட்களாக மதியமும் இரவும் உறங்கினான். பல நாட்களுக்கு பிறகு நல்ல ஓய்வு. பள்ளி முடிந்து மதியவேளைகளில் பாப்பா வந்துவிடுவாள். அவளுக்கு கதைகள் சொல்வான். அவளிடம் நிறைய பேசுவான். அமைதியாகவே கேட்பாள். ஆம் இல்லை என்பது மாதிரியான பதில் மட்டுமே சொல்வாள். ஏனோ பாப்பாவின் முகத்தில் சிரிப்பேயில்லை என வருந்தினான். பாப்பாவின் சிரிப்புக்காக ஏங்கினான்.

பாப்பா இல்லாத நேரங்களில் ஜன்னல் வழியாக பரந்துவிரிந்து கிடந்த மிகப்பெரிய நகரத்தினை பார்த்துக்கொண்டிருப்பான். எங்கும் வீடுகள், வீடுகள்,வீடுகள்,கட்டிடங்கள். மரங்கள் கூட இல்லை. எங்கேதான் போய் விளையாடும் இந்நகரத்தின் குழந்தைகள்?. இது நிச்சயமாக குழந்தைகளுக்கான நகரமேயில்லை என நினைத்தான்.

மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு சிறிய பூங்காவொன்றிருந்தது. அதில் ஒரு சிறிய சறுக்குமரமும் இருந்தது. அது பெரும்பணக்காரர்களின் பகுதியென்பதால் அந்த பூங்காவில் நடைபயிற்சிக்காக சிலர் வருவதையே பார்த்திருக்கிறான். பணக்கார குழந்தைகளுக்கு சறுக்குமரம் தேவைப்படுவதில்லை போல என நினைத்தான். இது எப்போதும் அநாதையாக விளையாட யாருமின்றி குழந்தைகளுக்காக காத்திருப்பதைப்போல மிக மிக அமைதியாடும் ஏக்கத்தோடும் சோகமாக தனியாக இருந்தது. துருப்பிடிக்காமல் புத்தம் புதிதாக!

தலைகுனிந்து சாத்துக்குடியை கைகளில் வைத்து உருட்டிக்கொண்டிருந்த பாப்பாவை அழைத்தான். ‘’பாப்பா இங்கவாயேன்..’’ ஜன்னலுக்கு அருகே அழைத்துச்சென்றான். ‘’அங்க பாரு அங்க ஒரு பூங்கா இருக்கில்ல.. அதுல சறுக்குமரம் தெரியுதா.. யாருமேயில்ல.. தனியா.. சாயங்காலம் போய் விளையாடலாமா?’’ என பாப்பாவின் தோள்பிடித்து ஆறுதலாக கேட்டான். பாப்பா கண்களில் அத்தனை பயம். உடல்நடுங்க ‘’வேண்டாம் டாடி, எனக்கு சறுக்குமரம் தனியா வேண்டாம், ப்ளீஸ் டாடி’’ என்று அப்பாவின் கைகளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.