Pages

02 November 2011

பத்து-பத்து




மூக்கு ஈரமாய் இருக்கிறது. காதிற்குள் ‘ங்..ங்ங்ங்ங்ங்’ என விடாமல் ஓர் ஒலி. காதோரம் யாரோ நடந்து வருகிற சப்தம். குப்புற விழுந்து கிடந்தவன் தூரத்தில் வருகிற கறுத்த பெருத்த காலடிகளை மெதுவாக கண்களை திறந்து பார்த்தான். மங்கலாக அது தன்னை கடந்து செல்வது போல் தெரிந்தது. மூச்சு விடமுடியவில்லை. முதுகில் உதைத்ததால் விண்விண் விண்விண் என இதயம் துடிப்பதைப் போல விட்டுவிட்டு வலித்துக்கொண்டுருந்தது. விலகிச்செல்லும் கால்களை நிமிர்ந்து பார்க்கலாமா? அல்லது கண்களை இறுக்க மூடிக்கொள்ளலாமா?. வேண்டாம்! கண்திறந்தால் மீண்டும் அடிபட வேண்டியிருக்கும் , முட்டியில் வலித்தது. அதே அலைவரிசைதான். விண்விண் விண்விண்.. கண்களை இறுக்க மூடிக்கொண்டான். இடது கண்ணில் கண்ணீர் கசிந்துகொண்டே இருந்தது. முன்னர் கசிந்தவை காய்ந்து ஈரமாகி வடவடவெனவிருந்தது. தூரத்தில் இவனை அழைக்கும் சத்தம். டேய் லூசு...!


லேசாக கண்ணைத்திறந்து கையை தரையில் ஊன்றி எழுந்து நின்றான். மூக்கை புறங்கையால் துடைத்தான். சளி போல இல்லை. கெட்டியாக காய்ந்திருந்தது. கன்னத்திலும் வழிந்திருந்தது. ரத்தம்!. கீழே விழுந்துகிடந்த போது முகத்தில் எட்டி உதைத்ததில் சிறுமூக்கு உடைந்திருந்தது. வலி இல்லை. ரத்தம் வெளியேறிக்கொண்டேயிருந்தது. விடாமல். சொட்டு சொட்டாக...


‘’டேய்...லூசு.. என்னடா பண்ற எவ்ளோ நேரமா கூப்படறேன்’’ படுக்கையறையிலிருந்து ராஜன் சாரின் தடித்த குரல்.

ஒன்பதரை வயது பாஸ்கர் கடைசியாக இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து திரும்பிய ஒரு நல்ல நாளில் அவனது அப்பா இங்கே அழைத்துவந்து விட்டுச்சென்றார். ஆந்திராவிற்கு பக்கத்தில் ஒரு ஏதோ தமிழ் கிராமம் அவனுடையது. சென்னை.. பீச்சு, ரஜினி,விஜய்,மூன்று வேளை சோறு, இங்கிலீஸ்படிப்பு,கூலிங்கிளாஸு என ஏதோ ஏதோ எதிர்பார்த்துதான் வந்துசேர்ந்தான். எடுபிடி வேலைக்கு என்றுதான் சேர்த்துவிட்டிருந்தார். ஆனால் கழிவறையை சுத்தம் செய்வதில் துவங்கி சகலமும் இவன் மட்டுமே செய்ய வேண்டியதாயிருந்தது.

ராஜன் சாருக்கு லேசான கிறுக்கு இருக்கலாம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான். அடிதாங்க முடியாமல் தூங்கும் போது தலையில் கல்லைப்போட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று யோசிப்பான். பெரிய கல்லை தூக்க முடியாது. சின்னக்கல்லைப் போட்டால் ராஜன் சார் சாக மாட்டான். ஓருவேளை கல்லை போட்டும் சாகாமல் உயிர் பிழைத்து அவன் கையில் சிக்கினால் சாவுதான் என்பதை அறிந்தேயிருந்தான்.

முந்தைய நாள் ராஜன் சாரின் அலுவலகத்தில் சிறிய பார்ட்டி. போதையில் டேபிள் டிராயரில் வைத்துவிட்டுச் சென்ற சிகரட்டுகளில் மூன்றை காணவில்லை. இவன்தான் அதை புகைத்திருக்க அல்லது எடுத்திருக்க வேண்டும் என பாஸ்கரை அழைத்து திட்டினான். இவன் நான் எடுக்கலைங் சார், நான் பார்க்கவே இல்லைங்சார், தெரிலைங்சார், தேடிபாக்கறேன்ங்சார் என நிறைய சொல்லியும் இனிமே எடுப்பியா எடுப்பியா இந்த வயசுலயே தம்மு கேக்குதோ உதவாக்கரை ஒன்னும் லாய்க்கில்ல என உதைத்தான். பாஸ்கர் மயங்கி விழுந்து மூச்சு பேச்சில்லாமல் ஆகும் வரை அது தொடர்ந்தது.
இப்போது மீண்டும் அழைக்கிறான். போனால் அடிபட நேரிடலாம். போகவில்லையென்றாலும் உதைவிழும். ஹாலில் கிடந்தவன் அவசர அவசரமாக ரத்தம் வழியும் மூக்கை புறங்கையால் தேய்த்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அடிவயிற்றில் கர்ர்ர் என்றது. இதயம் அளவுக்கதிகமாக அடித்துக்கொண்டது. ஓங்கி ஓங்கி வயிற்றில் நெஞ்சில் எங்கெங்கோ உதைத்தது வேறு விண் விண் என வலித்தது.


படுக்கைக்கு அருகில் ராஜன் சார் சேரில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தான். கொஞ்சம் தள்ளி நின்று தலையை தரையை நோக்கி குனிந்தபடி ஒருகையை அக்குளுக்குள் கட்டி நின்றான்.

‘’மூஞ்சில என்ன ரத்தம்!’’.

‘’சாங்! நீங்க மூங்சீல மிதிச்சீங்கங்கல , சின்னமூக்கு உங்ஞ்சிபோச்சிபோலசார் அதாங்’’ மூக்கிலேயே புரியாதபடிக்குப் பேசினான். இன்னும் துளிதுளியாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அருகில் இருந்த ஏதோ ஒரு துணியை எடுத்து அவனை நோக்கி வீசினான். அழுக்குத்துணி. ஈரமாய் இருந்தது. கொஞ்சமாய் நாற்றமடித்தது. ‘’இத்தால மூஞ்ச துடச்சுட்டு , பாத்ரூம் போய் கழுவிட்டு வா...என்ன? வேல இருக்கு..’’ அதட்டினான். பாஸ்கருக்கு எரிச்சலாக இருந்தது , வயிறும் மூக்கும் மனமும் எல்லாமே.

கழிவறைக்கு சென்று சோப்புப்போட்டு முகத்தை கழுவினான். ஆனாலும் காய்ந்திருந்த ரத்தம் போகவில்லை. நன்றாக கரகரவென அழுத்தி தேய்த்து, சுரண்டி அதை அழித்துவிட முயற்சித்தான் ஒரளவு போயிருந்தது. அதற்குள் உள்ளேயிருந்து இன்னுமாடா என்னும் குரல் கேட்டது. நீண்ட அமைதியிலிருந்த நிசப்தமான சூழலை கிழித்துக்கொண்டு வந்த திடீர் குரலால் உதறல் எடுத்தது. உடல் சிலிர்த்து கை முழுக்க பொறிப்பொறியாய் இருந்தது. அதை தடவிப்பார்த்தான். குறுகுறுப்பாய் இருந்தது. சிரித்துக்கொண்டான்.

படுக்கையறைக்குள் நுழைந்தான். புகை மண்டலமாக இருந்தது. கையில் சிகரட்டோடு ராஜன் பெட்டுக்கு அருகில் அமர்ந்திருந்தான். ராஜனுடைய காதலியை காணவில்லை. பாத்ரூமில் இருந்திருக்க வேண்டும். படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளில் பாதி அருந்திய ஜூஸ் இருந்தது. இட்லியும் இருந்தது. இரவு சாப்பிடததால் வலியில் பசி தெரியாமல் இருந்திருந்தான். இப்போது அதை பார்த்ததும் வயிறு பசிப்பது போல் இருந்தது. ர்ர்ர்ர் என வயிற்றுக்குள் இழுத்துப்பிடித்தது குசுபோல ஒருசப்தம் வந்து அடங்கியது.

‘’டேய் என்னடா அங்க நின்னுட்டு பராக்கு பாத்துக்கிட்டு! அந்த சட்டைய எடு’’.

ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து வந்து அவனுக்கு முன்னே நீட்டினான். அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி , ‘’நம்ம குமார் கடைக்கு போய் ஒரு பாக்கட் கோஹினூர்னு கேளு தருவான் வாங்கிட்டு வா , மிச்சக்காசு இருபது ரூவா தருவான் சரியா பாத்து வாங்கிட்டு வா!’’.. ம் என்பதுபோல தலையை ஆட்டினான். பணத்தை வாங்கி தன் டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

‘’டேய் நில்லு என்ன வாங்கிட்டு வருவ’’

‘’கோங்கினார் ஒரு பாங்க்கட்’’ , மூக்கிலேயே இவன் சொல்ல ஹோஹோஹோ என ராஜன்சார் சிரித்தான். இவனுக்கு முகத்திலேயே குத்த வேண்டும் போல் இருந்தது. ‘’கரெக்டா வாங்கிட்டுவா!’’

போகும் வழியெல்லாம் கோகினார்.. கோகினார்.. கோகினார்.. கோசிமார்.. கோஜியார்.. என சொல்லிக்கொண்டே சென்றான். இன்னொரு பாக்கெட்டிலிருந்த அழுக்குத்துணியால் மூக்கைத்துடைத்துக்கொண்டான். குமாரின் மெடிக்கல் ஷாப் வந்தது.

‘’அண்ணேங் ங்கொரு பாங்க்கட் ஙோஜியார்.. குடுங்க.. சாங் வாங்கிகினு வரசொன்னாரு’’ , முக்கு அடைப்பு விலக லேசாக வாயிலும் பேச ஆரம்பித்திருந்தான்.

‘’அதென்னடா ஙோஜியாரு.. ஏன்டா காலைல வந்து ரப்ச்சர குடுக்கற.. போடா நல்லா கேட்டுட்டு வா..’’

‘’அண்ணே திரும்பி போனா , சார் அடிப்பாருண்ணே!..’’.

‘’என்னடா மூக்காண்ட கர.. இங்க வா’’ அருகில் வந்தவன் மூக்கை அழுத்தி தேய்த்து தூக்கிப் பார்த்தான். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
பையனை உள்ளே அழைத்து சென்று அவசர அவசரமாக மருந்து போட்டு விட்டான். முட்டியில் சிராய்த்திருந்தது. டெட்டாலால் அதை சுத்தம் செய்து பஞ்சு வைத்து தேய்த்துவிட்டான்.

‘’சம்பளமே சரியவரமாட்டேனுது.. என்னால என்ன பண்ணமுடியும்.. எங்கிட்டாவது ஓடிப்போய்யிர்ரா! இவங்கிட்ட கிடந்து ஏன்டா அடிவாங்கி சாவற’’ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

‘’அண்ணே எங்கனே போவன். எனக்கு யாரையுமே தெரியாதுண்ணே, ஓடிப்போனா எங்கப்பா கண்டுபுடிச்சி அடிச்சு கொன்னுருவாரு, மாசமாசம் வந்து காசு வாங்கிட்டு போகுதுல்ல.. கண்டுபுடிச்சிரும்ண்ணே’’ பேசபேச சிறுவனுக்கு அழவேண்டும் போல இருந்தது.கண்ணீர் வராவிட்டாலும் கண்களை துடைத்துக்கொண்டான்..

‘’சொன்னா கேளுடா.. இங்க இருந்த அடிச்சே கொன்னுருவானுங்க’’ பேசியபடியே ஒரு சாக்லேட்டை அவனிடம் நீட்டினான்.

‘’அண்ணே அதெல்லாம் இருக்கட்டும், கோஜியூர் ஒரு பாக்கட் குடுங்கண்ணே.. லேட்டா போனா சார் அடிப்பாரு, அக்காவேற வந்திருக்கு’’

‘’ஓஹ் கோஹினூரா!..’’ புரிந்துகொண்டவனாக ஒரு பாக்கட்டை எடுத்து நீட்டினான்..

சிறுவன் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு மீதி காசிற்காக காத்திருந்தான். ‘’ என்னடா கிளம்பு’’
, ’’இல்லண்ணே மீதி இருபது ரூவா தருவீங்க அத வாங்கிட்டு வரச்சொன்னாரு சாரு’’ ,
’’உங்க சார்கிட்ட சொல்லு சின்ன பாக்கட் இல்ல பெரிய பாக்கட்தான் இருக்காம்னு , பெரிசு அம்பது ரூவாயாம்னு சொல்லு’’

‘’அண்ணேத்தேடிப் பாருங்கண்ணே சின்னபாக்கட்டே குடுங்க.. இல்லாட்டி நான் மறந்து போய் வாங்கிட்டு வந்துட்டேனு அதுக்கும் அடிப்பாரு’’

‘’டேய் இல்லடா, இரு’’ என ஒரு பேப்பரில் ‘சிறிய பாக்கட் இல்லை, பையனிடம் பெரிய பாக்கட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக்கொள்ளவும்’ என்றெழுதி குமார் என கையொப்பமிட்டு கொடுத்தனுப்பினான். சிறிது தூரம் சென்றவனை.

வீட்டை அடைந்ததும் நேராக படுக்கையறை வாசலுக்கு சென்று தன் அரைடிரவுசர் பாக்கட்டில் கையை விட்டு கோஹினூர் பாக்கட்டை தேடினான். காணவில்லை. படுக்கை அறையின் உள்ளேயிருந்து சிரிப்புகளோடு வினோதமான ஒலிகளும் வந்து கொண்டிருந்தது. ஐய்யயோ பாக்கெட்ட காணோம் , சார்கிட்ட என்ன சொல்றது , தொலைஞ்சு போச்சுனு சொன்னா கரண்டிய சூடு பண்ணி கால்ல போட்டுருவாரே! என மனதிற்குள் பதறியபடி வந்த வழியில் மீண்டும் ஓடத்துவங்கினான். வேர்த்து வேர்த்து கொட்டியது. காலை வெயில் மெதுவாக உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு படபடபடபடபடவென எக்ஸ்பிரஸ் ரயில் போல அடித்துக்கொண்டிருந்தது. எங்கும் காணவில்லை. கடை வரைக்கும் வந்துவிட்டிருந்தான். கடையில் குமார் இல்லை , கடை முதலாளி அமர்ந்திருந்தான். என்ன செய்வதென்றே தெரியாமல் மீண்டும் கடையிலிருந்து வீடு வரைக்கும் வழியெல்லாம் தேடியபடியே வந்தான். கறுப்பு பாக்கட்டு , பொம்பளைங்க படம்.. கறுப்பு பாக்கட்... பொம்பளங... என நினைத்தபடியே வந்தான். இல்லை. காணவில்லை. எங்குமில்லை. கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவன் கண்ணில் அந்த பாதிகிழிந்த காகிதம் தென்பட்டது. அது மின்கம்பத்திற்கு கீழே கிடந்தது.

‘’குழந்தைகளே துன்புறுத்தப்படுகிறீர்களா? உதவி தேவையா? அழையுங்கள் பத்து பத்து!’’ என்று எழுதப்பட்ட காகிதமொன்று கிடந்தது. அதை ஒருமாதிரி எழுத்துக்கூட்டி படித்துவிட்டான். எடுத்து பாக்கெட்டில் மடித்து வைத்துக்கொண்டான். அந்த விளம்பரங்களை டீக்கடை ரேடியோவில் நிறைய முறை கேட்டிருக்கிறான். பல முறை அந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும் என நினைப்பான். ஏனோ விட்டுவிடுவான்.

ஙோஜியார் இல்லாமல் போனால் இன்றைக்கு காலில் சூடு நிச்சயம். அதற்கு பதில் அந்த எண்ணுக்கு அழைத்தால் என்ன? போன்? வீட்டில் இருக்கிறதே! ராஜன் சார் பார்த்துவிட்டால்.. அடிதான் எப்போதும் வாங்குகிறோமே.. என ஏதேதோ நினைத்த படி வீட்டிற்கு அருகில் வந்துவிட்டான். படுக்கையறையில் இருந்து இன்னமும் அந்த ஒலிகள் வந்துகொண்டிருந்தன. இவனுக்கு அந்த சப்தம் பழக்கமானதுதான்.. இது போல சத்தம் ஓய்ந்து ஐந்து நிமிடத்தில் ராஜன்சார் வெளியே வருவான் அப்போது அவனுக்கு சிகரட்டும் தீப்பெட்டியும் தரவேண்டும். யோசித்தான்.

அதற்குள் அந்த நம்பருக்கு போன் போட்டு சொல்லிவிட்டால் என்ன?. போலீஸ் வரும் ராஜன் சாரை கைது செய்யும்.. என்னை காப்பாற்றும். ஜாலிதான். சென்னைக்கு போலீஸ் விஜயகாந்த் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான். கற்பனையிலும் விஜயகாந்த்தான் வந்திருந்தார்.

அலுவலக அறைக்குள் நுழைந்தான். அங்குதான் போன் இருந்தது.

சிறுவன் நேராக டெலிபோன் அருகில் வந்தான். இதுவரை அவன் போனை உபயோகித்ததே இல்லை. துடைப்பதோடு சரி. ராஜன் சார் அதில் பேசுவதைப் பார்த்திருக்கிறான். அருகில் சென்றவன் என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டான் ,

‘’சார் என்னை இங்கே அடிஅடினு அடிக்கிறாங்க, உடனே வாங்க சார், இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க.. ‘’ அழ முயற்சித்து பேசிப்பார்த்தான். சரியாக வரவில்லை. மீண்டும் ஆரம்பித்தான்..

‘’சார் என் பேரு கோபி.. ஊரு அம்சாபேட்டை, இங்க அப்பா என்னை வேலைக்கு சேர்த்து விட்டாங்க , இங்க என்னை அடிக்கறாங்க.. தயவு பண்ணி வந்து காப்பாத்துங்க, ம்ம்ம்ம்..’’ அழுது பார்த்துக்கொண்டான். சரியாக வருகிறது. புலி பதுங்குவது போல பதுங்கி போனுக்கு அருகில் போய் நின்றான். அவன் பலமுறை போனை பார்த்திருக்கிறான் அதில் பத்தாம் எண் எப்போதுமே இருந்ததாக நினைவில்லை.

நம்பர்களை எண்ணத்துவங்கினான் ஒன்னு,ரெண்டு...எட்டு... ஒன்பது..ஜீரோ.. ஆமா பத்து இல்லை!. பதறிப்போனான். பத்துபத்து நம்பருக்குள்ள போன்போட சொல்லி எழுதிருந்துச்சு இங்க பத்தாம் நம்பரையே காணமே!

பக்கத்து அறையில் ராஜன் சாரின் சப்தம் மெதுவாக குறைவதைப்போல் இருந்தது. இவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. நேற்று வாங்கின உதையே இன்னும் வலி தீரவில்லை. இரவில் புரண்டு படுத்து உறங்க முடியாது. சப்தம் வேறு குறைகிறது. பத்துபத்து.. என்ன செய்வது.

‘’பத்து . ஒன்னு ஜீரோ ஒன்னா போட்டா பத்து! ‘’ . ச்சே இதை எப்படி யோசிக்காம விட்டோம். என தன்ன்னை தானே கொட்டிக்கொண்டான். டக்கென ரிசீவரை எடுத்தான். 1...0...1...0 பட்டனைகளை வேகவேகமாக அழுத்தினான்.

ஒரு பெண்ணின் இனிமையான குரல்.. எதற்காகவும் காத்திருக்காமல்

‘’சார்..இல்ல இல்ல அம்மா.. இல்ல இல்ல அக்கா.. அக்கா.. என் பேரு கோபி..’’

‘’வணக்கம் குழந்தைகள் நலத்திற்கான பறவைகள் அமைப்பு உங்களை வரவேற்கிறது.. ஃப்ரீடம் பேர்ட்ஸ் வெல்கம்ஸ் யூ..’’

‘’அக்கா! அதெல்லாம் தெரியாதுக்கா! எங்க ஊரு.. இல்ல.. என்ன ரொம்ப அடிக்கிறாங்க, கொஞ்சம் வந்து காப்பாத்துங்க்கா, இல்லாட்டி என்ன அடிச்சே கொன்னுருவாங்க, இந்த ராஜன் சார் ரொம்ப மோசம்..யாரையாச்சும் உடனே அனுப்புங்கக்கா’’

‘’தமிழில் தொடர எண் ஒன்றை அழுத்தவும், ஃபார் இங்கிலீஷ் ப்ரஷ் டூ.. ஹிந்தி மே..’’

‘’அக்கா ப்ளீஸ்க்கா.. எனக்கு அதுலாம் தெரியாதுக்கா.. இங்க இங்க.. எனக்கு கால்ல சூடு போடப்போறாங்கக்கா காப்பாத்துங்க , நேத்துகூட ராஜன் சார் என்னை போட்டு மிதிமிதினு மிதிச்சிட்டாரு.. நைட்லருந்து ஒன்னுமே சாப்பட்லை.. எனக்கு கால்லாம் வலிக்குதுக்கா.. எங்க அப்பாட்ட சொன்னா அவரும் அடிக்கறாருக்கா..’’ என போனை கெட்டியாக காதோடு அணைத்துக்கொண்டு தேம்பிதேம்பி அழுதபடியே பேசினான்.

‘’ தமிழில் தொடர எண் ஒன்றை... ..’’ விடாமல் சொன்னதையே திரும்ப சொல்லிக்கொண்டிருந்தது எந்திரக்குரல்.. ‘’அக்கா அக்கா.. உடனே வாங்கக்கா.. ப்ளீஸ்க்கா’’ என போனை அணைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவன் அருகில் கால்தட சப்தம் கேட்டு தானாகவே அவன் கையிலிருந்து ஃபோன் கைநழுவி விழுந்தது.

‘’அக்கா’’

ராஜன்சாரின் காதலி அவனுக்கு பின்னால் கையைக்கட்டி நின்றபடி.. அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அவனிடமிருந்து ரிசீவரை பிடிங்கி தன் காதில் வைத்து கேட்டாள் எதிர்முனையில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவளையே கண்களில் நீரை தேக்கிவைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் பாஸ்கர். இருவரும் மௌனமாய் நின்று கொண்டிருக்க ராஜன் தன் லுங்கியை இறுக்கிக் கட்டியபடியே உள்ளே நுழைந்தான்.

வாசலில் காலிங் பெல் சப்தம் கேட்டது. டிங் டாங்... கோபி தன்னை காப்பற்ற யாரோ வந்துவிட்டனர் என்று ராஜன் சாரைப்பார்த்துப் புன்னகைத்தான்.

_____

*- கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனமும் எண்ணும் நிகழ்வுகளும் கற்பனையே!

(சென்ற ஆண்டு பிப்ரவரியில் எழுதியது)