Pages

24 November 2011

கொலைவெறி இலக்கியம்





ஓர் ஊரில் உயிரோடு இருந்தவர்களில் முக்கால்வாசிபேர் இலக்கியவாதிகளாக இருந்தனர். அதே ஊரில் இரண்டு சாதாரண மனித இளைஞர்களும் வசித்துவந்தனர். அந்த இரண்டு பேரும்தான் அத்தனை இலக்கியவாதிகளுக்கும் மிச்சமிருந்த மிச்ச சொச்ச இரண்டே இரண்டு வாசகர்கள்.

அந்த இருவரும் பரம ஏழைகள். மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாதவர்கள். எவ்வளவு உழைத்தாலும் பசி பஞ்சம் பட்டினி. இந்த அயராத உழைப்புக்கு மத்தியிலே, பிரியாணி தின்றுவிட்டு பல்லிடுக்கில் சிக்கிய கறித்துண்டை நோண்டியபடி டோல்ஸ்டாய் பற்றியும் லத்தீன் அமெரிக்க இசைபற்றியும் கொரியமொழியில் வெளிவரும் உலகசினிமா குறித்தும் பின்னவீனத்துவமாக முதுகு சொறிந்தபடி விதந்தோதுகிற இலக்கியவாசிப்புக்கு எங்கே நேரம். செக்குமாட்டுக்கு எதுக்கு சிங்காரம். அடிமாட்டுக்கு எதுக்கு அலங்காரம். சரியான ஞானசூனியங்கள். ஆனாலும் இந்த இருவருடைய இலக்கிய வெறியும் ஆர்வமும் அலாதியானது.

ஓசி டீயும் சமோசாவும் கிடைக்கிறதென்கின்ற ஒரே காரணத்திற்காக ஊரில் எந்த இலக்கிய,கவிதைவாசிப்பு,புத்தகவிமர்சன,வெளியீட்டு,முற்போக்கு பிற்போக்கு கூட்டங்களிலும் மேலும் இன்னபிற சமோசாடீ கூட்டங்களிலும் கலந்துகொள்வதை பார்க்கலாம்.

புரிகிறதோ புரியவில்லையோ கூட்டமிருக்கிறதோ இல்லையோ பேருரைகள் முடியும்வரை முழுமையாக காத்திருந்து கடைசியில் கொடுக்கப்படுகிற சூடான டீயை உறிஞ்சி குடித்துவிட்டு சமோசாவை தின்றுவிட்டு வயிறார நடையை கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அந்த இருவரும் அதிதீவிர இலக்கியபிரதிகளாக இலக்கிய வானின் சுடரொளிகளாக , இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் எஞ்சி இருக்கிற கடைசி இரண்டு வாசகர்களாக இலக்கியவாதிகள் மத்தியில் புகழ்பெற்றிருந்தனர்.

‘அடேங்கப்பா அந்த இரண்டுபேருக்கும் என்ன ஒரு இலக்கிய ஆர்வம்ன்றீங்க ஒரு கூட்டம் மிஸ்பண்ணமாட்டாங்க.. அதுவும் நான் கலந்துக்கற கூட்டம்னா முத ஆளா வந்து விசில்தான் கைத்தட்டல்தான். ஏன்னா பாருங்க என் மேல அவங்களுக்கு அவ்ளோ அபிமானம். நான் கிணத்துல குதிங்கனு எழுதி முடிக்கறதுக்குள்ள கிணத்துல விழுந்து செத்து மிதப்பாய்ங்கன்னா பாத்துக்கோங்களேன்’’ என்று எல்லா பிரபல எழுத்தாளர்களும் அந்த இருவரையும் தங்களுடைய வாசக அடிமைகளாக ஊருக்குள் சொல்லித்திரிந்தனர்.

சிலர் அந்த இருவரையும் போனில் அழைத்தும் நேரில் சந்தித்தும் டீ வாங்கிக்கொடுத்து உரையாற்றுவதை எங்கும் காணலாம். அரிதாக சிலர் சாப்பாடு வாங்கிக்கொடுத்து அவர்களிடம் உரையாற்றுவார்கள். இலக்கியவாதிகளுக்கு எப்போதெல்லாம் ஆர்வவெறிதீர உரையாற்ற வேண்டும் என ஆசையாக இருக்கிறதோ கையில் பத்து இருபது ரூபாயோடுவந்தால் இருவரும் ஐட்டம் போல தயாராகிவிடுவார்கள். இந்த இலக்கியவாதிகளும் அரைமணிநேரமோ ஒருமணிநேரமோ கதறகதற இலக்கியம் பேசிவிட்டுப்போகலாம். டீ ரொம்பவே முக்கியம்.

இப்படியாக பல நாட்கள் ஊருக்குள்ள நாங்களும் இலக்கியவாதிகள்தான் என ஏமாற்றிக்கொண்டு ஓசி டீயும் சமோசாவும் அவ்வப்போது பிரமாண்ட பொருட்செலவில் சரவணபவன் சாப்பாடும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் நல்ல பாடம் கற்பிக்க நினைத்தது விதி.

அன்றைக்கும் அந்த இலக்கிய கூட்டத்தில் எப்போதும் போலவே மேடையில் பத்து பேரும் பார்வையாளர்கள் நான்குபேரும் அமர்ந்து பின்னவீனத்துவத்தை பிச்சு பிச்சு போட்டுக்கொண்டிருந்தனர். சொந்தகாசில் புத்தகம் போட்ட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த கோமான்களும் சீமாட்டிகளும் வீட்டிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு பேசி தீர்த்தனர்.
பெரிய பார்ட்டி என்பதால் வழக்கத்திற்கு மாறாக சமோசாவுடன் சுவீட்டும் மிக்சரும் கூட சேர்த்துகொடுப்பார்கள் என்கிற ஆர்வத்தோடு எப்போதும் போல வயிற்றை வெற்றிடமாக்கிப் போயிருந்த இருவருக்கும் பச்சை தண்ணீர் கூட கொடுக்காமல் ஏமாற்றினர். பசிமயக்கத்தில் கண்களில் தூக்கம் சொக்கியது இருவருக்கும்.

கைத்தட்டிக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தது விதி. அவர்கள் இருவரையும் பார்த்து முதலில் புன்னகைத்தது. அவர்களும் மறுபுன்னகையை மெலிதாக அளித்தனர். விதி தன் பத்து சொச்சம் கவிதைகளை ஒன்று திரட்டி ஒரே ஒரு புத்தகத்தை தன் சொந்தகாசில் அச்சேற்றி அதை அதுவே கூடையில் வைத்து கூவி கூவி ஊரெங்கும் ஓசியில் கொடுத்து புகழடையும் வெறியிலிருந்தது! ஏற்கனவே இருவருக்கும் தலா ஒரு கவிதை தொகுப்பை இலவசமாக அளித்திருந்தது. கட்டாயம் படிச்சிட்டு சொல்லுங்க கருத்து சொல்லியே ஆகணும்.. உங்க கருத்து ரொம்ப முக்கியம் பாஸு என்று கண்டிப்பாக சொல்லியிருந்தது.

கவிதையென்றாலே கரப்பான்பூச்சி போல இருவருக்கும். வாசித்தால் வாந்தி வரும். அதனால் எப்போதும் செய்வதைப்போலவே அந்த அருமையான கவிதைத் தொகுப்பையும் எடைக்குப்போட்டு டீ வாங்கி குடித்திருந்தனர். ஆனால் இப்போது விதி அருகில் வந்து அமர்ந்து அந்த கவிதைத்தொகுப்பை பற்றிகேட்குதே என அஞ்சிநடுங்கினர். நிலைகுலைந்து போயினர்.

விதியும் ‘இந்த பசங்க நம்ம கவிதைய படிச்சி பயங்கரமா புகழப்போறாங்க போல’ என்கிற எதிர்பார்ப்போடு கூட்டம் முடியும்வரை ஆர்வத்துடன் காத்திருந்தது. கூட்டம் முடிந்தது.

‘’என்ன மாரி கவிதைங்க பாஸு. சூப்பர் பாஸ்.. அடேங்கப்பா.. அந்த கடைசி கவிதை சான்ஸே இல்லை.. நீங்கதான் அடுத்த மனுஷ்யபுத்திரன்’’ என கோரஸாக புகழ்ந்தனர். புகழ்ந்து தீர்த்துவிட்டால் விதி வீட்டுக்கு போய்விடும் என நினைத்தனர்.

‘’பாஸ் நாம ஏன் ஒரு டீ ஷாப்ட்டுகினே பேசக்கூடாது’’ என்றது விதி. ஏற்கனவே காஞ்சிபோயிருந்த காலிவயிற்றுக்கு உறவினர்களாக இருந்த இருவரும் ஓசிடீக்கு ஆசைப்பட்டு பலியாட்டைப்போல தலையாட்டினர். ‘’பொதுவா நான் டீ ஷாப்பிடறதுனா தாஜ் ஓட்டலுக்குதான் போவேன்.. இங்கே பக்கத்துல தாஜ் ஓட்டலுக்குதா’’ என்றது விதி.
விதியோடு இருவரும் அருகிலிருந்து இரண்டரை நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்தனர். ‘’பாஸ் அதுல அந்த மூணாவது கவிதை எப்படி..? வார்த்தைகளுக்காக கிரியா அகராதியை பிச்சி பிராண்டி எழுதினது’’ என புஜபலபராக்கிரமங்களை சொல்லத்தொடங்கியது விதி.

‘’பாஸ் டீ ஆர்டர் பண்ணீங்கன்னா சாப்ட்டுகினே பேசலாம்.. இன்னான்றீங்க’’ என்றனர் இருவரும்.

‘’இன்னாபாஸ் நம்ம கவிதைய படிச்சி நல்லாருக்குனு வேற சொல்ட்டீங்க இன்னைக்கு உங்களுக்கு வெறும் டீயா.. டிரீட்டு..’’ என அதிர்ச்சியளித்தது விதி.

‘’சூடா இரண்டு மசால் தோசை, கேரட் அல்வா, உளுந்த வடை, சக்கரை பொங்கல்.. மூணுபிளேட்..’’ என்றதும் மகிழ்ச்சியில் பூரித்து போயினர்.. இருந்தாலும் ஆசுவாசமாகி பண்டங்கள் வந்ததும் பகிர்ந்துகொண்டனர்.

ஆரஞ்சுநிற கேரட் அல்வாவினைப் பார்க்கும்போதே எச்சில் ஊறியது. இருவரில் ஒருவன் ஆர்வத்துடன் அல்வாவில் கைவைக்க.. டக்கென்று ஆரம்பித்தது விதி

‘’பாஸ் அந்த மூனாவது கவிதைய எப்படி அதைப் பத்தி சொல்லுங்க.. கஷ்டப்பட்டு எழுதினது. ஓன் ஹோல் நைட் கண்ணுமுழிச்சி நிலாவ பாத்துகினே இருந்தேன். அதைபத்தி பேசாம.. அல்வா எங்க போயிடப்போகுது’’ என கையைபிடித்து தடுத்தது. அப்போதே உஷாராகி ஓடியிருக்கவேண்டும். விதி வலியது. இருவரும் அல்வாவைப் பார்த்துக்கொண்டு காத்திருந்தனர்.

‘’அதுவந்து அதுவந்து.. அதுவா சூப்பர் கவிதை பாஸ்.. அப்படியே வான்கா ஓவியத்தை பாக்கறாப்லயே படிக்க சொல்ல இருந்துது.. அய்யயோ அதை படிச்சி நாலுநாள் தூக்கம் வரலியே! நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே..’’ எனபேசிக்கொண்டே அல்வாவினை எடுக்க முனைந்தான். மறுபடியும் கையை பிடித்து தடுத்து.. ‘’என்ன பாஸ் சாப்டுகிட்டே பேசினா பேசறது எப்படி புரியும்.. முதல்ல சொல்லிடுங்க.. அப்புறம் சாப்பிடுங்க, எனக்கு ஆர்வம் தாங்கல’’ என்றது விதி.

‘’அதுபாஸ்.. இதுமாதிரி கவிதைய வாழ்க்கைல படிச்சதே இல்ல.. இன்னைக்கு இந்தியாலயே ஏன் ஒலகத்திலயே நீங்கதான் பெஸ்ட் கவிஞர், உங்களுக்குதான்... ஏன் தோழர் அது இன்னா விருது.. நோபால் பரிசு.. அத்த குடுக்கணும். அந்த மூனாவது கவிதைதான் பெஸ்ட்டு கவிதை.. நான் அல்வாவ கொஞ்சம் சாப்பிட்டுக்கட்டுமா’’ என பரிதாபமாக கேட்டான்.

‘’அட அல்வாவ விடுங்க.. அப்ப நாலாவது கவிதை மோசம்ன்றீங்களா!’’ என விதி தன் திருவிளையாடலை தொடங்கியது.

‘’அப்படி இல்ல பாஸ்.. மூணாவது கவிதை மாஸ்டர் பீஸ்னா நாலாவது கவிதை... ம்ம்ம்.. லிட்டில் மாஸ்டர் பீஸ்’’ என மீண்டும் அல்வாவில் கைவைக்க முயன்றான். விதியோடு ஒருவன் போராடுவதை பார்த்து மற்றொருவன் அல்வாவை தொடவேயில்லை. அதற்கு பதிலாக தோசையை பிய்த்து தின்ன கரம் நீட்டினான்.

‘’பாஸ் அவர் லிட்டில் மாஸ்டர் பீஸு காமெடி பீஸ்னு ஏதோ சொல்றாரு இப்ப போயி தோசை பிச்சிகிட்டிருக்கீங்க.. நீங்க சொல்லுங்க எது பெஸ்ட்டு’’ என விதி இருவர் கழுத்திலும் சுறுக்கை மாட்டியது. இனிமேல் கயிறு வயிறு இரண்டுமே விதியின் கைகளில்தான்.

இருவரும் முகத்தை ஙே என வைத்துக்கொண்டு ஒருவர் முகத்தை மற்றவர் மாறிமாறி பார்த்துக்கொண்டனர். மாட்னோம்டா என்பதே அதன் சாரம். பசியில் வயிறுவேறு எரிந்தது. கண்முன்னால அற்புதமான விருந்து இருக்கு.. மயிராண்டி திங்கவுடமாட்டேன்றானே என எரிச்சலோடு பல்லைக்காட்டிக்கொண்டு....

‘’அது வந்து பாஸ்.. நீங்க எழுதின எல்லா கவிதையுமே மாஸ்டர் பீஸ்தான்.. நீங்க ஒரு மகாகவி.. இனிமே எழுதப்போற கவிதையும் கிளாசிக்காதான் இருக்கும். அப்படியே அந்த அல்வாவ சாப்ட்டுகிட்டே பேசினா நல்லாருக்கும்.. இல்லாட்டி ஆறிடும்.. டேஸ்ட்டுருக்காது’’ என கோரஸாக சொல்லிவிட்டு பார்வையை அல்வாவின் பக்கம் திருப்பினர்.

‘’பாஸ் அப்படிலாம் சும்மா சொல்லாதீங்க எனக்கு தெரியாதா என்கவிதைய பத்தி.. அந்த தொகுப்புல மூணுதான் உருப்படியான கவிதை.. சும்மா அல்வாவுக்கு ஆசைப்பட்டு பாராட்டுனுமேனு பாராட்டாதீங்க.. குறைகள சொல்லுங்க அதுதான் என்னை உயர்த்தும்’’ என விதி கொத்துகுண்டு தாக்குதலை தொடங்கியது. விடமாட்டான் போலருக்கே...என நினைத்த இருவரும் அழும் குரலில் பேசத்தொடங்கினர்.

‘’அது வந்து.. அந்த ஆறாவது கவிதை இருக்கே.. அது சுமார்தான்.. வெறும் வார்த்தை விளையாட்டு. மத்தபடி உயிரே இல்ல’’ என ஒருவனும். , ‘’ஆமா பாஸ் பதினோறாவது கவிதை ரொம்ப சுமார்.. ரொம்ப சின்னது’’ என சொல்லிவைத்துவிட்டு.. அல்வாவுக்கு காத்திருந்தனர்.

‘’பாஸ் என் தொகுப்புல பத்து கவிதைதானே! பதினொன்னா..’’ என முதல்முறையாக விதி விழித்தது.

‘’அடடா பின் அட்டைல நீங்க எழுதிருந்ததையும் கவிதைனு நினைச்சி படிச்சிட்டேன் போல.. சாரி பாஸ்’’ என்றான். இதயம் வேறு படபடவென அடித்துக்கொண்டது இருவருக்கும்.

‘’ஹாஹாஹா’’ என ஓட்டல் அதிர சிரித்தது விதி. ‘’ ஐலைக் யூவர் சென்ஸ் ஆப் க்யூமர்’’ என்றது. நல்லவேளை அடிவிழவில்லை என ஆசுவாசமாகினர். விதிக்கு இரண்டு கைகளும் நல்ல கர்லா கட்டைபோல உருண்டுதிரண்டு இருக்கும் என்பது இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று. மீண்டும் அல்வா வேட்டையை தொடர்ந்தனர்.

‘’கவிதை நல்லா இல்லாட்டி நல்லா இல்லைனு சொன்னீங்க பாருங்க உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. அல்வாவை சாப்பிடுங்க’’ என்றது விதி. இந்த இலக்கிய விதிக்குகூட மனசாட்சியுண்டு இந்த கல்லுக்குள்ளும் ஒரு ஈரம் உண்டு என நினைத்துக்கொண்டு இருவரும் அல்வாவை சாப்பிடத்தொடங்கினர். ஆனாலும் விதி விடவில்லை.

‘’நீங்க வண்ணநிலவனோட கடல்புரத்தில் படிச்சிருக்கீங்களா....அதுல ஒரு வரி வரும்பாருங்க..அதுக்கு இணையான ஒரு உள்ளுணர்வெழுச்சிய நம்ம கவிதைல ஒன்னு’’ என மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி உரையை தொடங்கியது விதி.
‘’தோழர் அல்வா ரொம்ப சூடா இருக்குல்ல.. உஃப்ப்ப்’ என ஊதிக்கொண்டே இன்னொருவனிடம் ஸ்பூனை தூக்கி காட்டினான். ‘’ஆமா தோழர் ரொம்ப சூடு.. உஃப்ப்’’ என்றான் மற்றொருவன்.

‘’ஹலோ வண்ணதாசன்..’’ என இருவரையும் இடைமறித்து சத்தமாக பேசியும்.. அந்த இருவரும்

‘’பாஸ்.. அல்வா செம டேஸ்ட்டு.. இன்னொரு பிளேட் வாங்கிக்குடுங்களேன்’’ என விதியைப்பார்த்து கூறினர்.

‘’அதுக்கென்னபாஸ் வாங்கிதரேன்.. வண்ணதாசனை விடுங்க.. ஆல்ப்ரட் காம்யூவோட அந்நியன்னு ஒரு நாவல்.. படிச்சிருப்பீங்களே.. அதே மாதிரி நானும்..’’ என விடாப்பிடியாக விதி விளையாடியது.

எதற்கும் மசியாமல் இருவரும் அல்வாவினை ருசித்து ருசித்து தின்று தீர்த்து அடுத்து பொங்கலில் விரலை விட்டு நோட்டிக்கொண்டிருக்க.. எரிச்சலானது விதி. கொஞ்சம் நேரம் அவர்களாக ஏதாவது பேசட்டும் என காத்திருந்தது. ஆனால் இருவரும் விதியை கொஞ்சமும் சட்டை செய்யாமல் வந்த வேலையில் மும்முரமாகியிருந்தனர். சாப்பிடத்தொடங்கிவிட்டால் இடியே விழுந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தொழில் ரகசியம். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்க முடியாமல்..

‘’டேய் நிறுத்துங்கடா.. ஞான சூனியங்களா.. உயர் இலக்கிய ரசனை பத்தி பேசிட்டிருக்கேன்.. பத்துகாசு பொறாத அல்வாவ தின்னுகிட்டிருக்கீங்களே.. உங்களுக்கெல்லாம் இலக்கியம்னா என்ன தெரியுமா.. ’’ என சத்தம் போட்டது. ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் தோழர் சாம்பார் சூப்பரா இருக்கு.. பொங்கல்ல குழிபண்ணி ஊத்தி பிசைஞ்சி தின்னு பாருங்க அட்டகாசம் என பேசிக்கொண்டிருந்தனர். விதி தன்னையே நொந்தபடி..

‘’சாரி பாஸ்! நான் கோவத்துல பேசிட்டேன்.. நான் புதுசா ஒரு கவிதை எழுதிருக்கேன்.. கேக்கறீங்களா?’’ என்றது.

‘’இன்னொரு பிளேட் அல்வா வாங்கிக்குடுங்க கேக்கறோம்’’ என சொல்லிவிட்டு மீண்டும் வாய்க்கு வேலை கொடுக்கத்தொடங்கினர். இதற்கு மேலும் விதியால் எப்படி பொறுத்திருக்க முடியும். இரண்டு பேரின் சட்டை காலரை பிடித்து அப்படியே நிற்கவைத்து ‘’டேய் என்னை பார்த்தா எப்படிடா இருக்கு உங்களுக்கு.. மரியாதையா ஓடிப்போயிருங்க..’’ என்று உலுக்கியது.

ஒருவன் தன் உளுந்தவடையை கீழே வைத்துவிட இருவரும்.. சோகமாக அந்த ஹோட்டலை விட்டு கிளம்ப தயாராயினர். முதன்முதலாக விதிக்கே விளையாட்டு காட்டிவிட்டு சென்ற இருவரையும் நினைத்து விதி தன்னைத்தானே நொந்துகொண்டது.
‘தோழர் நல்ல வேளை பில்லு கட்ட வச்சிருவானோனு நினைச்சேன்.. தப்பிச்சோம்.. நம்மகிட்டயேவா!’’ என்றான் ஒருவன்.

‘’தோழர் ஒருநிமிஷம் இருங்க! இதோ வந்திடறேன் என மீண்டும் அந்த டேபிளுக்கே திரும்பிப்போனான் மற்றொருவன்.

விதியின் அருகில் போய் நின்றான். தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த விதி அவனை நிமிர்ந்து பார்த்து ‘’என்ன’’ என கத்தியது.

‘’இல்ல.. பாஸ் நாங்க ஏதாச்சும் தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க’’ என்றான்

‘’இருக்கட்டும்.. இனிமே என் கண்லயே படாதீங்க’’ என்றது

‘’அதுக்கில்ல.. என்னோட கேரட் அல்வால பாதிய மிச்சம் வச்சிட்டு போயிட்டேன்.. அதை மட்டும் எடுத்துக்கட்டுமா’’ என்றான்.

அதற்கு பிறகு விதி கவிதை எழுதுவதை விட்டுவிட்டு எங்கோ கண்காணாத தேசத்துக்கு போய்விட்டது. அந்த இருவரும் தங்களுடைய இலக்கிய சேவையை தொடர்ந்தனர்.


(இந்த கதையில் வருகிற பாத்திரங்கள் யாவும் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியவை)