Pages

20 December 2011

செய்யாத தப்புக்கு தண்டனை!






எழுத வந்து இத்தனை ஆண்டுகளில் இதுதான் முதல் மேடை. முதல் கௌரவம். முதல் சால்வை, முதல் போர்வை. கிட்டத்தட்ட முதல் இரவுக்கு காத்திருக்கும் புதுமாப்பிள்ளையின் அநேக குழப்பங்களோடு ஈரோடு கிளம்பினேன். ஈரோடு சங்கமம் நிகழ்ச்சியில் உங்களை கௌரவிக்கப்போறோம் என்று கதிர் சொன்னபோது சும்மா கலாய்க்கிறாங்களோ என்றுதான் நினைத்தேன். நம்மலெவலுக்கு அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. என்னத்த எழுதி கிழித்துவிட்டோம் என்கிற மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

மேடையில் என் பெயர் சொல்லி அழைக்கும்வரை என்னால் அதை நம்பவே முடியவில்லை. காரணம் இதுவரை நான் எதையும் உருப்படியாக செய்ததாக நினைவில்லை. பண்ணிடாத குற்றத்துக்கு தண்டனைபெறுவதைப் போல செய்யாத சாதனைக்கு கௌரவிக்கப்படுவதும் பெரும் மன உளைச்சலை அனுபவிக்க நேருகிறது. அப்படியொரு மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.

அதைவிடுங்க.. விருந்தோம்பலில் சும்மாவே காட்டு காட்டென்று காட்டும் ஈரோடு பதிவர்கள் சங்கமம் என்று வந்துவிட்டால் என்ன காட்டுகாட்டுவார்கள் என்பதை கடந்த ஞாயிறு ஈரோடு போயிருந்தால் உணர்ந்திருக்கலாம். ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் ஆண்டுதோறும் நடத்துகிற சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிளம்பினேன்.
ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஈரோட்டுக்கு வந்துசேர்ந்துவிட்ட என்னையும் தோழர் யுவகிருஷ்ணாவையும் வரவேற்க ஆறுமணிக்கே காத்திருந்தார் நண்பர் ஜாஃபர். லாட்ஜில் ரூம் போட்டுக்கொடுத்து தேவையான உதவிகளை அரங்குக்கு செல்லும்வரை கூடவே இருந்து செய்து உதவினார். அரங்கில் பிரமாதமான காலை உணவு பரிமாறப்பட்டது. 200க்கும் மேல் பதிவர்களும் சமூகவலைதள நண்பர்களும் கூடியிருந்தனர். வாசலிலேயே தாமோதர் சந்துருவும் ஈரோடுகதிரும் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். பாலாசி ஓடியாடி துடிப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சங்கோவி,கார்த்திக்ஈரோ,லவ்டேல் மேடி என என்னுடைய வாசகநண்பர்கள் நிறையபேர் என்னிடம் ஆட்டோகிராப் பெற நினைத்துக்கொண்டேயிருந்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சேர்தளம் என்று ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். வெள்ளை டிஷர்ட்டில் சேர்தளம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திருப்பூரிலிருந்து பலரும் வந்திருந்தனர். பார்க்கவே தமாஷாக இருந்தது. வெயிலான்தான் தலைவர் என நினைக்கிறேன். அவரும் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். சென்னையிலிருந்து மணிஜியும் அகநாழிகையும் பிலாசபி பிராபகரனும் இன்னபிற நண்பர்களும் வந்திருந்தனர். கேஆர்பி செந்திலும் ஜாக்கிசேகரும் உண்மைதமிழனும் கூட வந்திருந்தனர். அவர்களும் என்னோடு கௌரவிக்கப்பட்டனர். மதுரையிலிருந்து சீனா,தருமி என மூத்தபதிவர்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த பதிவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சில குடிகாரர்களையும் அரங்கில் பார்க்க முடிந்தது. குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு என்பதை அழுந்த சொல்லி அவர்களையெல்லாம் திருத்த முயன்றேன்.

பிரமாண்டமான ஏற்பாடுகளை கண்டு பிரமிப்பாக இருந்தது. நமக்குத்தெரிந்த பதிவர் சந்திப்பெல்லாம் மெரீனாவின் கடற்கரையில் எளிமையாக அளவளாவி டீக்கடையில் அரசியல் பேசிக்கலைவது மட்டும்தான். அதன் சுகமே தனி! இது வேறு மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒழுங்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட போர்டு மீட்டிங்கை போல இருந்தது. நிறைய பெண் பதிவர்களும் , சிலபதிவர்கள் குடும்பத்துடனும் வந்திருந்தனர். தோழர் ஆரூரான் இனிமையாக பேசி விழாவை துவக்க.. சாதனையாளர்கள் அழைக்கப்பட்டனர். என்னையும்தான்! அப்போதும் கூட எனக்கு உள்ளுக்குள் ஒருவித லஜ்ஜையாகவே உணர்ந்தேன். ஒவ்வொருவரையும் அழைக்கும்போதும் நாதஸ்வரம் வாசித்தது புதுமையாக காமெடியாக இருந்தது.

நான் யாருக்கெல்லாம் ரசிகனோ அத்தனைபேரும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக நான் யாரைப்பார்த்து எழுதவந்தேனோ அந்த நபர் தோழர் லக்கிலுக், என்னை எழுதவைத்த பாலபாரதி, சிறுவயதில் நான் வியந்து பார்த்த கட்அவுட்களை வரைந்தவரும் தேசிய விருது பெற்ற எழுத்தாளருமான ஜீவநாதன், நாளைய இயக்குனரில் பல முறை என்னை கலங்கவைத்த குறும்பட இயக்குனர் ரவிக்குமார், எனது புகைப்படகலை ஆசான் ஜீவ்ஸ் என அத்தனை பேருக்கும் நடுவில் என்னையும் கௌரவித்தது சிலிர்ப்பூட்டியது.

அந்த மேடையில் அமரும் தகுதியற்றவனாக நெளிந்தபடி மேடையில் அமர்ந்திருந்தேன்.
ஒவ்வொருவரை குறித்தும் ஒரு அறிமுகத்தினை வாசித்தனர். என்னைப்பற்றிய அறிமுகத்தையும் வாசித்தனர். அதை கேட்டபோது என் குற்றவுணர்வு அதிகரித்து மவனே மரியாதையா மேடைலருந்து இறங்கி ஓடிடு என பயமுறுத்தியது. கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுக்கு உபயோகமான போர்வை பரிசாக அளிக்கப்பட்டது. வீட்டில் காட்டியபோது அம்மா அகமகிழ்ந்து போர்வை நல்லா காஸ்ட்லியா இருக்கும்போலருக்கு, நீ எழுதி எழுதி உருப்படியா வாங்கினது இதுதான் என்று வியந்து பாராட்டினார்.

முதல்மேடை என்பதால் உட்காருவதற்கே ரொம்பவே சங்கோஜமாக உணர்ந்தேன்.
பார்வையாளர்கள் அனைவருமே நம்மையே பார்ப்பது போன்றதொரு பிரமை. படபடப்பாகவும் கிலியாகவும் இருந்தது. இதில் ஒவ்வொருவரும் ஒருநிமிடம் பேசியே ஆகவேண்டும் என்று சொல்ல.. கையில் மைக் பிடித்தது மட்டும்தான் நினைவிருக்கிறது என்ன பேசினேன் என்றே தெரியவில்லை. இருந்தும் செய்யாத சாதனைக்கு விருது என்கிற என்னுடைய குற்றவுணர்ச்சிவேறு வந்துவந்து அச்சுறுத்தியது. ஓடக்காத்திருக்கும் ஓட்டப்பந்தய வீரனைப்போலவே சீட்டு நுனியில் அமர்ந்துகொண்டு விட்டாப்போதும் என்றே அமர்ந்திருந்தேன்.

எந்த விழாவாக இருந்தாலும் நம்முடைய கவனமெல்லாம் சாப்பாடுதான். ஈரோடு பதிவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் எப்போதுமே கில்லிதான். ஒரு வருடத்திற்கு முன் ஈரோடு சென்றிருந்தபோது கதிரும் நண்பர்களும் பிரமாதமான ஒரு ரோட்டுக்கடையில் அருமையான முட்டை தோசை வாங்கிக்கொடுத்து அசத்தினர். அதனால் மதிய உணவிலும் அதுமாதிரி புதுமைகள் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் முட்டை அப்பம், தலைக்கறி, சிக்கன் ஃபிரை, மட்டம் ஃபிரை, சிக்கன் சூப் என நான்வெஜ்ஜிலும்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத தாவரங்களை சமைத்து வெஜ்ஜிலும் அசத்தியிருந்தனர். வயிறார சாப்பிட்டேன்.

மற்றபடி ஈரோடு பதிவர் சங்கமம் மிகச்சிறந்த நெகிழ்ச்சியான மகிழ்ச்சியான அனுபவத்தை தந்தது. விருந்தினர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுத்தந்தது. ஒரு சிறிய விழாவாக இருந்தாலும் அதை எப்படி குறைந்த செலவில் பிரமாண்டமாக நடத்தமுடியும் என்பதை போதித்தது. இன்னும் நிறைய சொல்லலாம். ஈரோடு பதிவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். என்னை வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

அடுத்த முறை கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய விழாக்களில் சங்கமமும் ஒன்றென உணர்ந்தேன். இத்தனைக்கும் நடுவில் உள்ளுணர்வு இன்னமும் உனக்கேன் இதெல்லாம் குடுத்தாங்க சொல்லு என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறது! இனியாச்சும் ஒழுங்கா நல்லதா நாலு கட்டுரை எழுதோணும். இல்லாட்டி என் மனசாட்சியே என்னை கொன்னுபோடும்!