இரண்டாம்ப்பு படிக்கும் போது எனக்கு தேன் மிட்டாய் திங்கறது மட்டும்தான் லட்சியமா இருந்துச்சு. அப்புறம் பெரியவனாகி தேன்மிட்டாய் கடை வைக்கணும்னும் இன்னொரு லட்சியமுமிருந்துச்சு.
முழுப்பரீட்ச்ச லீவு முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்ச அன்னைக்கு புது டீச்சர் ஒவ்வொருத்தரையா கேட்டாங்க , உங்க லட்சியம் என்னனு, நான் தேன்முட்டாய் கடை வைக்கோனுங் டீச்சர்னு சொல்லி அடிஸ்கேல்ல நாயடி பேயடி வாங்கினேன். கைய திருப்பி விரல காட்டினா முட்டிகிட்டருக்கற எலும்புருக்கற எடமா பாத்து பாத்து அடிக்கறதுல எங்க டீச்சர் பெரிய ஆளு. புக்கு பூரா தேன்மிட்டாயி தேன்மிட்டாயினு தப்பு தப்பா எழுதிட்டேருப்பேன். டீச்சர் கூப்ட்டு அதுக்கும் அடிஸ்கேல்ல அடிபோடுவாங்க! மஞ்சகலர் அடிஸ்கேல பத்தி நிறை சொல்லலாம். அத மோந்து பாத்தம்னா நல்ல வாசனையடிக்கும். ஊதுபத்தி மாதிரியாவும் இருக்கும், தேன்மிட்டாய் மாதிரியாவும் இருக்கும். நக்கி பார்த்தாலும் நல்ல டேஸ்டா இருக்கும். அப்படியொருக்கா நக்கி பார்த்தும் அடிவாங்கிருக்கேன். பிரச்சனை அடிஸ்கேல்லில்ல தேன்முட்டாயி.
தேன் மிட்டாய்னா ஏனோ தானோனு எங்கயாச்சும் கெடைக்கிற லோக்கல் கெரகமில்ல. தேன்முட்டாய்னாக்க எங்கூர் ஸ்கூல் வாசல்ல உக்காந்திருக்குமே ஒரு அழுக்கு பாட்டி, அங்க கெடைக்கிற ஸ்பெசல் சிகப்பு கலர் பத்துகாஸ் தேன்முட்டாய் மட்டும்தான். பாட்டி கடைல எலந்த வடை, கமர்க்கட்டு,கொடலு,பொறி உருண்டை,கோமாங்கா, மரநெல்லிக்கா,சிகப்பு மாங்கா,புளிப்பு மிட்டாயினு நிறைய இருந்தாலும் ஏன் காப்பி கலர் மஞ்சகலர் தேன்முட்டாயி இருந்தாலும் எனக்கு அந்த சிகப்பு தேன் மிட்டாய்தான் வேணும். அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியாது. ஆனா அந்த செகப்பு தேன் மிட்டாய்தான் வேணும்.
ஒருக்கா என் ப்ரண்டு டி.வடிவேலன் இரண்டாம்வகுப்பு ஆ பிரிவுல படிச்சவன் , சிகப்பு கலரு தேன்முட்டாய வாங்கி அதை இரண்டா பிச்சு காட்னான். உள்ளாற அப்படியே தேனு ஈரமா செவ செவனு வழிஞ்சிது. ருசியா இருந்திருக்கும். அதை எடுத்து அவன் வாய். போடறப்ப நான் எச்சிய முழுங்கிக்குவேன்.
நான் மொதவாட்டி தேன்மிட்டாய் தின்னது பேரூர்ல. இல்ல இல்ல தேன்மிட்டாய பாத்தது பேரூர்ல. எங்க தாத்தனும் நானும் பொழுதாச்சுனா காலார நடப்போம். இல்ல இல்ல.. அவரு என்னைய தூக்கிக்கிட்டு நடப்பாரு. பேரூர் கோயிலுக்கு இந்தப்பக்கம் ஒரு கடையிருக்கும் , சின்ன கடைதான், அங்கயும் ஒரு தாத்தன்தான். எங்க தாத்தனோட ப்ரண்டு. அவரு எனக்கு ஒரு காப்பி கலரு தேன் முட்டாய எடுத்து நீட்ட.. நான் அது வேணா, எனக்கு கலர் முட்டாய்தான் வேணும்ங் தாத்தான்னேன். என்ர தாத்தன் சரியான கஞ்சப்பிசனாரி. தாத்தன் கைல எட்டணாதான் இருந்திருக்கும் போல அதுக்கு பொகைலையும் எனக்கு ஒரு தேன்மிட்டாயும்தானு கணக்கு போட்டு காசெடுத்து வந்துருக்கும் போல, நான் கலர்முட்டாய்தான் வேணும்னு அழுதுட்டே இருந்தேன்
கலர்முட்டாய் ஒர்ரூவா, தேன்மிட்டாய் பத்துகாசு. அதனால எந்தாத்தன் தேன்முட்டாய்தான் வாங்கிக்கொடுக்கும்னு கணக்கு போட்டு சொல்ற அளவுக்கு நான் அப்பயே கால்குலேட்டர் ஆகல.. ‘கண்ணு இன்னொருநா பாப்பின்ஸ் வாங்கித்தரேன்.. இன்னைக்கு நீ தேன்முட்டாயே வாங்கிக்க’ ன்னாரு தாத்தா. அத வாங்கி என்னோட சின்ன டவுசரோட டைட்டான கீழ்பாக்கெட்ல போட்டு அமுக்கி வச்சிக்கிட்டேன்.
நைட்டு தூங்கும்போது ஏதோ கடிக்கறமாதிரி இருக்கேனு கத்தி.. அந்த எடத்துல எறும்பு கடிச்சி... என் பாக்கெட்டெல்லாம் எறும்பு ஏறி... தேன் மிட்டாய் நசுங்கிப்போயி, வடவடனு தொடையெல்லாம் ஆகிப்போயி... அம்மா..னு அழ வீல் வீல்னு கீச்சு கொரல்ல அழ ஆரம்பிக்கோ எங்கம்மாவுக்கு கடுப்பாயி முதுகுல நாலு போட்டாங்க.. பாட்டிதான் காப்பாத்திச்சு. பொழுதன்னைக்கு என்னைய அடிக்கறது மட்டும்தான் எங்கம்மாவுக்கு தெரியும்.
மறுக்காவும் அம்மா என்னை பொறக்காலிக்கு கூட்டிட்டு போய் குளிப்பாட்டி, முதுகுல நாலு போடு போட்டு படுக்கவச்சாங்க அம்மா. நான் அழுதுட்டே இருந்தேன். இரு உன்ன காலைல வச்சிக்கிறேன்.. டவுசர்லாம் இப்படியே பாழாப்போவுதுனு.. டவுசர் போட்டுடாம படுக்க வச்சிட்டாங்க. எனக்கு வெக்கமாருந்தனால இருட்டுலயே எந்திரிச்சு அட்டாலி மேல போய் உக்காந்துகிட்டேன். ஏனுக்கு உக்காந்தேன் என்னத்துக்கு உக்காத்தேன்லாம் கேக்க கூடாது. ஏன்னு எனக்கே தெரியாது.
நைட்டு பூரா கெட்ட கனவு. ஒரே தேன் முட்டாயா வந்துச்சு. நான் தேன் முட்டாய் வாங்கறேன் நாலு எறும்பு என் சைஸ்ல வந்து புடுங்கிட்டு போகுது. மறுக்காவும் வாங்கறேன் மறுக்காவும் புடுங்குது. எனக்கு டென்சனாயி கல்லெடுத்து ஒரொரு எறும்ப அடிக்க.. அதொன்னொன்னும் வளருது.. வீட்டுக்கு போய் என்ர தாத்தனோட தடியெடுத்துட்டு வந்து சுத்தி சுத்தி அடிச்சாலும் எறும்பு வளர்ந்துட்டே போவுது. அப்புறம் மனிதன் படத்துல வர ரஜினி மாரி கையில்லாத சட்ட போட்டுட்டு அதுல உருண்டை உருண்டைய தேன்முட்டாய தொங்குட்டுட்டு ஒவ்வொன்னா எடுத்து வீஸறேன் , அப்பதான் அந்த எறும்பு சாகுது.. அப்புறம் தேன்முட்டாய கடிக்க போறேன்.. பாட்டி எழுப்பியுட்டுருச்சு!
அதுக்கப்பறம்தான் எனக்கு தேன்மிட்டாய் மேல லவ்வாகிருக்கணும். விடிஞ்சொன்னயுமே தாத்தன்கிட்ட போய் எனக்கு தேன்முட்டாய் வேணுமின்னேன். பள்ளிகொடத்துக்கு போய்ட்டு வா கண்ணு வாங்கித்தரேனுச்சு... நான் அன்னைக்கு பூரா பள்ளிக்கொடத்து பாடத்த பாக்காம தேன்முட்டாயவே நெனச்சுகிட்டிருந்தேன். வீட்டுக்கு வந்து பாத்தா தாத்தன் கைல காசில்லன்னருச்சு. தெனமும் கேப்பேன் காசில்லங்கும். ஒரு நா குடுத்த காச எங்கம்மா எங்கயோ எங்கப்பன பாக்கோனும்னு வாங்கிட்டு போய்ருச்சு.
ஒருநா தாத்தன் செத்து போச்சு. தாத்தன் மட்டும்தான் எனக்கு காசு குடுக்கற ஒரே ஆளு.. அதுவும் போய்ருச்சுன்னா இனிமே கைல காசு கெடைக்காது. தாத்தன் செத்த சோகத்த விட இந்த சோகம் பெருஞ்சோகமா போச்சு.
எங்கூட படிக்கற பையன் ஒருத்தன் சொன்னான் நல்ல தேன்முட்டாயி நம்ம ஸ்கூல் வாசல்ல மட்டும்தான் கெடைக்குதுன்னு.. காசு வேணுமே. அம்மாகிட்ட திருடலாம்னா சிக்கினேன் மூணு நாளைக்கு சோறு கெடைக்காது. இப்பயே இரண்டு வேளைதான் சோறு , அதுலயும் ஒருவேள பள்ளிகொடத்துல. இந்த லட்சணத்துல தேன்முட்டாய்க்கு காசு கேட்டா குடுப்பாங்களா. அந்த மாதிரி சோகமான நேரத்துலதான் ரோட்டுல அலையும் போது கீழருந்து பத்து காசு கெடச்சுது. கைல எடுத்து கண்ணுல ஒத்திக்கிட்டு..
பத்து காச பத்தரமா ஒட்டையில்லாத பாக்கெட்ல போட்டுவச்சுகிட்டு நாளைக்கு பள்ளிக்கொடத்துக்கு போறப்ப ஒரு தேன்முட்டாயி வாங்கி திம்போம்னு நினைச்சுகிட்டேன். வீட்டு பாடமெல்லாம் எழுதிட்டு, நைட்டு கஞ்சிய குடிச்சிட்டு அப்படியே படுத்துட்டேன். காலைல எந்திரிச்சு கைகால் மூஞ்சக்கழுவிட்டு டவுசரெடுத்து பாத்தா காசக்காணோம். அம்மோவ் காசெங்கமான்னேன். நைட்டு டவுசர்லதான் வச்சிருந்தேன்.. காசக்குடுமா.. என்று அழ ஆரம்பிக்க. அம்மா எப்பயும் அடிக்கற மாறியே அன்னைக்கும் செம அடி.. காசு தொலஞ்சதுமில்லாம அடிவாங்கினதுதான் மிச்சம்.
தினமும் தேன்முட்டாய் பாட்டிய சோகமாக பார்த்துட்டு பள்ளிகொடத்துக்கு போவேன். அப்பறம் திரும்பி வரப்பயும் சோகமா பாப்பேன். பாட்டி எப்பயும் என்னை சோகமாத்தான் பாக்கும். ஒரு நா என்னைய கூப்ட்டு ஏன் கண்ணு ஏன் நீ ஒன்னும் வாங்கமாட்டேங்கற.. எலந்தவடை வேணுமானு கேட்டு ஒன்னெடுத்து கைல குடுத்துச்சு.. தேன் முட்டாய் குடுத்துருக்கலாம்னு நினைச்சேன். தேன்முட்டாய் மாதிரியே எனக்கு எலந்த வடையையும் கொஞ்சம் ரொம்ப புடிக்கும். அதனால வாங்கிக்கிட்டேன். இது வேணாம் தேன்முட்டாய் குடுங்கன்னு கேட்டுருந்தா பாட்டி இதையும் புடுங்கிக்குமோனு பயம்.. அதனால எலந்தவடையோட அன்னைக்கு நாளு முடிஞ்சி போச்சு..
அப்புறம் நான் மூனாம்ப்பு போறவரைக்கும் தேன்முட்டாய் திங்கற பாக்கியமே கெடைக்கல. அம்மாகிட்ட கேட்கறப்பல்லாம் அடிதான் கிடைக்கும். அப்பா இருந்திருந்தா வாங்கிகுடுத்துருப்பாரு. அந்த வருஷமே பாட்டி கடையும் காணாம போச்சு. பாட்டி செத்துபோச்சுனு வடிவேலு சொன்னான். மத்த கடைல தேன்மிட்டாய் தின்னாலும் சிகப்பு கலர் குண்டு தேன்மிட்டாய் எங்கயும் கெடைக்கல.. இப்ப ஒருநா சிகரட்டு கடைல சில்லரை இல்லனு சிகப்பு கலர் தேன்மிட்டாய் குடுத்தான். வெலையேறி போச்சு ரெண்ட்ரூவா... அத உடச்சி பார்த்தேன் உள்ளே காய்ஞ்சு போயி ஈரமே இல்லாம நமத்துப்போயி கெடந்துச்சு..என்னைய மாதிரி.
Read more...