Pages

18 January 2012

ஆணியே புடுங்க வேணாம்!




எப்படியாவது இலக்கிய புஸ்தகங்களை படித்து பெரிய இலக்கிய அப்பாடக்கர் ஆகிவிடவேண்டும் என்கிற ஆர்வ வெறியோடு புத்தக கண்காட்சிக்கு கிளம்பினான் முட்டாள் முருகன்.. உள்ளே நுழையும்போதே ஆப்புகள் காத்திருந்தன. பைக் பார்க்கிங்கில் தொடங்கியது முதல் ஆப்பு. வண்டி நிறுத்த பத்துரூபாயாம்! அடப்பாவிகளா என வாயிலும் வயித்திலும் அடித்துக்கொண்டான்.

‘’யோவ் காசு குடுத்து நான் புக்கு வாங்க வந்திருக்கேன்.. நான் எதுக்கு பார்க்கிங்குக்கு பத்துரூவா கொடுக்கோணும்’’ என சிங்கத்தைப்போல பூமிஅதிர தட்டிக்கேட்டான்.

‘’ஏன்டா! தியேட்டர்ல என்னைக்காச்சும் போயி அப்படி கேட்டுருக்கியா..’’ என்று சொன்ன அந்த முரட்டு உருவம் நடுமண்டையில் நங் என ஒரு கொட்டு வைத்தது. சிங்கம் அசிங்கப்பட்டு வாசூவை பொத்திக்கொண்டு பத்துரூபாயை கொடுத்து பார்க்கிங் டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது.

வழியெல்லாம் பேனர்கள். ஒவ்வொரு பேனரிலும் ''நாங்கதான் நம்பர் ஒன்'', ''பாகித்ய மொக்காதமி விருது எப்போதும் எங்களுக்கே'' , ''இந்தியாலயே ஏன் இந்த உலகத்துலயே காரு வைச்சிருக்கற பதிப்பகம் நம்ம பதிப்பகம்'' என ஆளாளுக்கு அளந்துகொட்டியிருந்தனர். அனைத்தையும் பரமசிரத்தையோடு நோட்பண்ணிக்கொண்டான்.

புத்தக கண்காட்சி என்றுதான் பெயர்... ஆனால் நுழைந்ததுமே அவன் கண்ணில் பட்டது கடலைமிட்டாய்,சோன்பப்படி,டெல்லி அப்பளம், குச்சி ஐஸ் என அவனுக்கு மிகவும் பிடித்த தின்பண்ட சமச்சாராங்கள். "அறிவுப்பசியாற்ற வந்த இடத்துல இதையெல்லாம் ஏன் வச்சிருக்காங்க" என்கிற தத்துவார்த்த கேள்வி நங்கென்று நட்டுக்கொண்டு எழுந்துவிட்டது. அப்போதே அவனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. நாமளும் இலக்கியவாதியாகிடுவோம்!

எங்கு பார்த்தாலும் எழுத்தாளர்கள் நிறைந்திருந்தனர். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கு நடுவில் நூற்றுசொச்சம் வாசகர்கள் பாவமாய் கையில் அஞ்சுபத்து வைத்துக்கொண்டு எதை வாங்குவது என பெரும் குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். எந்த கடைக்குள் நுழைந்தாலும் அங்கே நிற்கிற நாலைந்து பேரில் இருவர் எழுத்தாளர்களாக இருந்தனர்.

அப்படி ஒரு எழுத்தாளர் நம்ம முருகனை கையைபிடித்து இழுத்தார். ‘’சார் யாரு சார் நீங்க.. உங்களை பார்த்ததே இல்லையே, என்னை ஏன் கையபுடிச்சி இழுக்கறீங்க’’ என மிரண்டுபோய் கேட்டான் முருகன்.

‘’பாஸ் என்ன தெரியலையா.. மறந்துபோச்சா.. டபிள்யூ டபிள்யூ குனிஞ்சாகுத்து டாட்காம்ல பின்னூட்டம்லாம் போட்டீங்களே.. ஐயாம் பிரபலபதிவர் சாம் மார்த்தாண்டன்.. உங்களை எனக்கு நல்லாத்தெரியுமே உங்க பிளாக்கை தினமும் படிப்பேனே... அதை விடுங்க... நான் ஆளப்பிறந்தவன்னு நாவல் ஒன்னு வெளியிட்டிருக்கேன்... பிரமாதமான நாவல்.. நேத்துதான் பில்கிளின்டன் போன்ல கூப்பிட்டு என் லைஃப்ல இப்படி தமிழ்நாவல படிச்சதேயில்லனு பாராட்டினாரு... ஒபாமா நாலு சாப்டர் படிச்சிட்டு அப்படியே ஷாக் ஆகிட்டாராம்..

''எனக்காக ஒன்னு வாங்குங்க... உங்க கிட்ட என்ன கேட்டுகிட்டு , ஏய் அண்ணனுக்கு ஒரு ஆளப்பிறந்தவன் பார்சேல்’’ என்று கட்டாயப்படுத்தி வலிந்து திணித்தார். என்ன கொடுமைடா இது என தலையிலடித்துக்கொண்டு அந்த கொடுமையையும் வாங்கி வைத்துக்கொண்டான்.

‘’பாஸ் புக்கு வாங்கினா மட்டும் போதுமா..’’ என்று அசட்டு சிரிப்பை உதிர்ப்பார்.

‘’அய்யய்யோ இவன் புக்க வாங்கினத்துக்கு டேன்ஸெல்லாம் ஆடச்சொல்லுவான் போலிருக்கே என பயந்தபடி ‘’வேற என்ன சார் பண்ணனும்’’ என்று முட்டாள் முருகன் ப்பம்மி பம்மி பயந்தபடி கேட்டான்.

‘’புக்குல ஆட்டோகிராப்லாம் வாங்கமாட்டீங்களா பாஸு’’ என அடுத்த குண்டைப்போட்டுவிட்டு அப்படியே முந்தாநாள் சமைஞ்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டார் நம்ம எழுத்தாளர். பேசிக்கொண்டிருக்கும்போதே முருகனிடமிருந்து புத்தகத்தை பிடுங்கி அதில் ஆட்டோகிராபையும் போட்டுவிட்டு.. கண்ணிமைக்கும் நேரத்தில் அதேகடையில் வேறு ஒருவரிடம் ‘’எச்சூஸ்மீ சார் உங்களை எங்கயே பார்த்திருக்கேனா.. நீங்கதானே அந்த பின்னூட்ட புயல் பிரேம்ஜி ராகு’’ என ஆரம்பித்திருந்தார். ‘’அடப்பாவிங்களா! இப்படித்தான் கதற கதற புக்கு விக்கறீங்களா’’ என மிகுந்த கடுப்புடன் கிளம்பினான்.

ஒவ்வொரு கடையில் ஒரு எழுத்தாளர் அவருடைய புத்தகம் கதறகதற ஆட்டோகிராப்பு என பல நூறு கண்டங்களை தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது. காசு கொண்டுவரலங் சார் என்று சொன்னாலும்.. சார் கிரெடிட் கார்ட் டெபிட் கார்டுனு எது இருந்தாலும் குடுங்க பார்த்துக்கலாம், நம்ம பேங்க்ல பர்சனல் லோன்கூட போட்டுக்கலாம் புக்கை மட்டும் வாங்கிடுங்க என பயமுறுத்துகின்றனர்.

எல்லா பதிப்பகங்களிலும் தலா ஒரு செட் பொன்னியின் செல்வன் விதவிதமான சைஸ்களில் வைத்திருந்தனர். ஒருவேளை பதிப்பகம் ஆரம்பிக்கணும்னா பொன்னியின் செல்வன் பதிப்பிச்சி காட்டினாதான் அனுமதி கிடைக்குமோ என நினைத்துக்கொண்டான். இல்லாட்டிப்போனா பொன்னியின் செல்வன் பதிப்பிச்சாதான் புக்ஃபேர்ல ஸ்டால் போட விடுவாய்ங்களோ என்னவோ? அவனுக்கு தெரிந்த ஒரே இலக்கிய புத்தகமான பொன்னியின் செல்வனை குறைந்தவிலைக்கு மலிவு பதிப்பினை வாங்கிக்கொண்டான்.

பொன்னியின் செல்வனுக்கு இணையாக சமகால எழுத்தாளர்களும் ஏகப்பட்ட குண்டு குண்டு புத்தகங்கள் போட்டிருந்தனர். ‘’தமிழனோட வரலாற்றை அப்படியே புழிஞ்சு.. படுக்க போட்டு நெஞ்சுல ஏறி மிதிச்சா மாரி சும்மா நறுக்குனு நாலாயிரம் பக்கத்துல சொல்லிருக்காப்ல நம்ம குண்டுபுக்கு குமரேசன்’’ என யாரோ இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தனர். விருதெல்லாம் குடுத்தாய்ங்களே என ஆர்வத்தோடு அந்த குண்டு புத்தகத்தை தூக்கிப்பார்த்தான். என்னா வெயிட்டு.. நாலுநாள் அதை தூக்கி தூக்கி படித்தாலே பைசெப்ஸ் தாறுமாறாக ஏறிவிடும்.. அப்புறம் ஓங்கி அடிச்சா ஒன்னரை ட்ன்னு வெயிட்டுடா என்று பஞ்ச் டயலாக் பேசலாம். விருது குடுக்கறவங்க பெரிய தராசோடதான் இப்பலாம் விருதுக்கு புக்கு தேர்ந்தெடுக்கறாங்களோ என்னவோ என நினைத்தான். விலையை பார்த்தான் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் வந்தது.

கேன்டீன் பக்கம் ஒதுங்கினான். லட்சக்கணக்கான ரூபாய்களை கொட்டினால்தான் கேன்டீனில் ஒரு டீயும் பன்னும் சாப்பிட முடியும் என்கிற நிலையை கண்டான். சின்ன போண்டா அம்பதுரூவா.. அதைவிட சின்ன பஜ்ஜி எழுபதுரூபா... காஞ்சி சங்கராச்சாரியார் சிலையெல்லாம் வைத்துக்கொண்டு பட்டப்பகலில் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர்.
முருகனுக்கு நரம்பு புடைத்தது.. யாரோ தூரத்தில் ‘’ டேய் உங்களையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா’’ என சொல்லுவதைப்போல இருந்தது.. ஆனால் வரும்போது பார்க்கிங்கில் வாங்கிய் ‘நங்’ கொட்டு நினைவுக்கு வந்தது. இலவசமாக கொடுத்த தண்ணீரை இரண்டு மடக்கு குடித்துவிட்டு மீண்டும் புத்தக சந்தைக்குள் நுழைந்தான்.

தூரத்தில் இரண்டுபேர் கட்டிப்புரண்டு சண்டைப்போட்டுக் கொண்டிருந்தனர். அதை ஒரு மிகப்பெரிய கூட்டமே நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தது. அதோடு புத்தகம் வாங்க வந்திருந்தவர்களும் சண்டை நடந்த இடத்திற்கு அருகிலேயே கிடைத்த லிச்சு ஜூசை வாங்கி உறிஞ்சியபடி அதை மகிழ்ச்சியாக ரசித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் முருகனிடம் கேட்டார் ‘’சார் இதுமாதிரி சண்டை தெனமும் நடக்குமா.. இதுபத்தி தகவல்கள் எங்கே கிடைக்கும்’’ . முருகனுக்கும் அதே ஆர்வம்தான். சண்டை போட்டவர்கள் இரண்டுபேரும் பிரபலமான கவிஞர்களாம்.. அடுத்தமுறை பபாஸியே இலக்கியவாதிகள் சண்டை போட எழிலான ஸ்டால் ஒன்றை கொடுத்து உதவலாம். அங்கே ஒவ்வொருநாளும் யார் யாரோடு புரளப்போகிளார்கள் என்பதையும் பட்டியலிட்டுவிட்டால் ஜாலியான வாசகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என நினைத்தான்.

''ஏன்ப்பா சண்டைபோடும்போது அதை கேமரால படம்புடிச்சி டிவி ரியாலிட்டி ஷோக்களில் கொடுத்தீங்கன்னா.. அதை அவங்க தினமும் காட்டுவாங்க.. நம்ம கவிஞருங்க ஃபேமஸாகி அவர்களுடைய புத்தகங்களும் லட்சக்கணக்கில் விற்குமில்லையா! உங்களுக்குலாம் கொஞ்சம்கூட ஐடியாவே இல்லையா'' என ஒரு பழைய கவிஞர் ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

எல்லா சமையல் புத்தகங்களும் பார்க்க ஒரேமாதிரி தோன்றின. 500 கோலம், 400 கோலம் என மாமிகள் விதவிதமாக புத்தகங்கள் வாங்கினர். பகவத் கீதையும் குரானும் சல்லிசு விலையில் கிடைத்தது. எத்தனை விதமான சாமியார்கள்.. சாமியாராக ஆவதற்கு ஒரு வெண்தாடியின் மகத்துவம் எத்தனை முக்கியமானது என்பதை புத்தக கண்காட்சியில் ஸ்தாபித்திருந்த எண்ணற்ற சாமியார்களின் ஸ்டால்களுக்கு அலைந்து திரிந்து தெரிந்துகொண்டான்.

ஏழைகளுக்காக ஒடுக்கப்பட்டவர்களுக்காக தலித்துகளுக்காக பெண்களுக்காக குரல் கொடுக்கிறோம் பேர்வழி முற்போக்கு எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஏனோ ஏழைகளுக்கு கட்டுபடியாகத அநியாய விலையிலும், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன்கதைகள்,மரியாதை ராமன் கதைகள், ராமாயணம்,மகாபாரதம், கோலங்கள் ஆயிரம், விதவிதமான சைவ சமையல், கற்பனை கதைகள் மட்ட ரேட்டில் கிடைத்தன. கேட்டலாக்குகள் நிறைய இலவசமாக கிடைத்தன. வேண்டியவரை வாங்கி பையை ரொப்பிக்கொண்டான். அப்போதுதான் அந்த புத்தகம் கண்ணில் பட்டது..

‘’முதலீடேயில்லாமல் பணம் சம்பாத்திக்க எளிய வழி’’

முதல்ல பணம் சம்பாதிப்போம்.. நிறைய சம்பாதிச்சாதான் இலக்கிய பொஸ்தகம் வாங்கமுடியும். அப்புறமா அதையெல்லாம் படிச்சி அப்பாடக்கர் ஆவோம் என முடிவெடுத்தான். புத்தகத்தை வாங்க நினைத்து பாக்கெட்டில் கைவைத்தால் ஆச்சர்யமாக அதிர்ச்சியாக இருந்தது. சும்மா சுற்றியதற்கே கொண்டுவந்த முன்னூறில் முக்கால்வாசி காலியாகியிருந்தது. அந்த புத்தகத்தின் விலை நூற்றம்பது! ‘’நான் இலக்கியவாதியா ஆகவே முடியாதா’’ என கதறி அழவேண்டும் போல இருந்தது.