Pages

31 March 2012

ஐஸ்வர்யா தனுஷின் கொலைவெறி!




தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்கிற வாசகங்களோடு படம் முடிகிறது. ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும். ரஜினியின் மகள் அல்லவா? அவருடைய அன்பில் கருணையுள்ளத்தில் பாதியாவது இருக்காதா பின்னே!

தனுஷ் இதுவரை நடித்து ஓரளவு பேரும் துட்டும் சம்பாதித்த எல்லா படங்களிலிருந்து தலா நான்கு காட்சிகளை உபயோகித்து இந்த படத்தினை எடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கான TRIBUTE ஆக மூன்று படத்தினை கருதலாம். துள்ளுவதோ இளமையிலிருந்து நாலு சீன், புதுப்பேட்டையிலிருந்து இரண்டு சீன், மயக்கம் என்ன, காதல்கொண்டேனிலிருந்து சில காட்சிகள்! பொல்லாதவன் படிக்காதவனிலிருந்து மேலும்.. அதுபோக தனுஷின் பெரும்பாலான படங்களில் வருவதைப்போலவே இந்தபடத்திலும் அவருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது! தண்ணீர் தெளித்த கோழியை போல வெடுக் வெடுக் என இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி பயமுறுத்துகிறார்! நமக்கு சிரிப்பு வருகிறது. கோழி சண்டையும் கேபி கருப்பையும் சேர்த்திருந்தால் TRIBUTE முழுமையடைந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

தம்த்தூண்டு ஸ்கூல் பசங்க அதவிட டாமாங்கோலி ஸ்கூல் புள்ளைங்கள காதலிப்பதைப்போல படம் எடுக்கிற புண்ணியவான்களுக்கு இபிகோவில் ஏதாவது செக்சனில் ஏதாவது கொடூரமான கட்டிங் வெட்டிங் தண்டனை வழங்கித்தொலையலாம். அதிலும் இந்தப்படம் சொல்லுகிற செய்தி இன்னும் மோசமானது. ‘’ஸ்கூல் படிக்க சொல்லவே நல்ல பணக்கார பக்கி பையனா பார்த்து லவ் பண்ணிட்டு செட்டிலாகிடுங்க கேர்ள்ஸ்’’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா!.

அதோடு குடிவெறி பாரில் தாலிக்கட்டி திருமணம், நண்பனை பக்கத்தில் வைத்துக்கொண்டே சரச சல்லாப விளையாட்டு, குடும்பத்தோடு குடிக்கும் குதூகலம்.. அடேங்கப்பா படம் முழுக்க கலாச்சார அதிர்ச்சிகள் ரொம்பி வழிந்து வழித்து வழித்து ஊற்றியிருக்கிறார்கள்! ஆனால்
எதற்குமே காரணமே இல்லை. அட மண்ணாங்கட்டி லாஜிக்கும் இல்லை. ஹவுஸிங் யூனிட்டில் வளரும் ஸ்ருதிஹாசன் திடீரென பப்பில் தனுஷோடு சரக்கடிக்கிறார்! வாவ் வாட் ஏ லாஜிக் ஐசே!

சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் சூப்பர் டான்ஸர் ப்ரோகிராம்களுக்கு நடுவில் புரோடியூசர் கிட்ட உச்சா போயிட்டு வரேனு சொல்லிட்டுவந்து நடிச்சிருப்பார் போல! திடீரென வந்து காணாமல் பூடுகிறார். பிரபு,பானுசந்தர்,பானுப்ரியா என பலரும் நட்புக்காக நடிச்சி கொடுத்திருக்க வேண்டும். ரோஹினியை கதறி கதறி கத்த விட்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனும் அதைவிட அதிக டெசிபலில் ஆவ்வ்வ் என கத்திக்கொண்டேயிருக்கிறார்.. காதுக்கு புடிச்ச கேடு! (ரசூல்பூக்குட்டிலாம் வேலை பார்த்துருக்காரு போல)

முதல்பாதியின் முதல் முக்கால் மணிநேரம் மட்டும் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிவிடுவது உத்தமம். மீதி படத்தையும் நான் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடித்தால் முக்கால் படத்தில் வெறியேறி பக்கத்து சீட்டில் இருப்பவர்களையெல்லாம் கடித்துவைத்துவிடுவீர்கள் ஜாக்கிரதை!

நன்றாக நினைவிருக்கிறது. சக்கரகட்டி என்று ஒரு படம். டாக்ஸி டாக்ஸி என்கிற பாடலுக்காகவே போய் முதல் நாளே பார்த்து நொந்துபோன நினைவுகள் மனதில் அப்படியே இருக்கிறது. கதறகதற சுரணையே இல்லாமல் படமெடுத்திருப்பார் படத்தின் இயக்குனர். அதற்கு இணையான படமென்று மூன்று படத்தினை சொல்லலாம். படத்தின் இசையமைப்பாளரும், கேமராமேனும் நிறைவாக செய்திருப்பதுதான் இரண்டே பிளஸ்!

ஐஸ்வர்யாவுக்கு செல்வராகவன் ஆகிவிடவேண்டும் என்றும் ஆசை வந்திருக்கலாம். அதற்காக செல்வராகவன் படங்களையே காக்டெயிலாக கலக்கி ரீமிக்ஸ் செய்திருப்பது அடடே!! பைபோலார் டிசார்டர் என்று சொல்லிவிட்டு அருந்ததி,காஞ்சனா ரேஞ்சில் பூச்சாண்டி காட்டி சிரிப்பூட்டியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் சில இடங்களில் பிரமாதமாகவும் பல இடங்களில் கொடூரமாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டாலும் ஒரேமாதிரி நடிப்பு கொஞ்சமாக போர் அடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பலன் எமோசனலான கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் முழுக்க டேய் சீக்கிரம் சாவுடா படம் முடியட்டும் என்கிற சத்தம் காதை ரொப்புகிறது.

படம் பார்க்கும்போதுதான் தோணிச்சி.. படத்துல வர தனுஷ் பைத்தியமா? இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா? ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு! சும்மா தோணிச்சி.