Pages

05 May 2012

ஒரு விருதும் கோடி நன்றிகளும்!





18.05.2008 எனக்கு மிகமிக முக்கியமான நாள். அன்றைய தினம் அண்ணன் பாலபாரதி என்னோடு பேசியிருக்காவிட்டால்... நீங்கள் நிம்மதியாக இருந்திருக்கலாம். ஆமாம் நான் எழுதாமல் இருந்திருப்பேன். இந்த பாவத்திற்கெல்லாம் மூலகாரணம் பாலபாரதி அண்ணன்தான்!

இனிமேல் இந்த வலைப்பூவெல்லாம் வேண்டாம் நமக்கு எழுதவும் வரலை , நாம எழுதறதையும் படிக்க ஆளே இல்லை என 2008 மார்ச் மாதம் தொடங்கிய இந்த வலைப்பூவை ஏப்ரலில் இழுத்து மூடிவிட்டு மேமாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தேன். பாலா அண்ணன் போனில் அழைத்து எழுப்பி இன்னைக்கு பதிவர் சந்திப்பு இருக்கு வரலையாடா தம்பீ என்றார்.

அண்ணே நான் எழுதினதே இரண்டு பதிவு அதுல ஒன்னு காப்பி பேஸ்ட்டு நான் பதிவரே இல்லை, அங்கே வந்து நான் என்ன பண்ண.. ஆளை விடுங்க இனிமே நான் இந்த வலைப்பதிவெல்லாம் எழுதற ஐடியா இல்லை.. என்றேன்.

‘’டேய் அறிவுகெட்டவனே என்மேல அன்பிருந்தா நேர்ல வாடா’’ என்று அன்புக்கட்டளையிட்டுவிட்டு போனை கட் செய்துவிட.. நான் மெரீனாவில் நடந்த பதிவர் சந்திப்புக்கு போக... சோகத்தில் இருந்த என்னை ''தம்பீ இங்க யாருக்குமே எழுதவராது.. அதனால தைரியமா நீயும் எழுதுடா'' என என்னை தேற்றி அனுப்பிவிட்டார். ஒரு புதிய உத்வேகத்தோடு யாருக்குமே எழுத தெரியாது நமக்கும் எழுத தெரியாது அதனால் எதை வேண்டுமானாலும் கிறுக்கலாம் என்கிற நம்பிக்கையோடு புயலாக கிளம்பினேன்! இதோ சரியாக ஐந்து வருடம் முடிந்துவிட்டது! அன்னைக்கு மட்டும் அண்ணன் போன் வராமல் போயிருந்தால் இன்று நான் ஒரு ஒரு பத்திரிகையில் நிருபராக இருந்திருக்க மாட்டேன். என்னுடைய வலைப்பூவுக்கு சுஜாதா விருதும் கிடைத்திருக்காது! அதனால் அவருக்கு முதல் நன்றி!

எழுத ஆரம்பித்த காலத்தில் தொடங்கி இன்றுவரை கண்டதையும் எழுதி குவித்தாலும் எதை எழுதினாலும் இரண்டு பேருக்கு முதலில் மின்னஞ்சல் செய்துவிடுவேன். ஒருவர் ஜ்யோவ்ராம்சுந்தர் இன்னொருவர் மணிகண்டன் விஸ்வநாதன். இருவரும்தான் என்னுடைய கடுமையான டார்ச்சர்கள் அனைத்தையும் முதல் ஆளாக படித்து சூப்பரா இருக்கு கேவலமா இருக்கு இன்னும் நல்லா எழுது என எப்போதும் தட்டிக்கொடுத்து பாராட்டி மேலும் மேலும் எழுத தூண்டி வருபவர்கள். அந்த இருவருக்கும் கோடானு கோடி நன்றிகள். (டார்ச்சர்கள் ஓய்தில்லை). என்னுடைய எழுத்தினை பத்திரிகைகளில் பார்த்து என்னை விடவும் அதிக மகிழ்ச்சியடைகிற குணம் கொண்டவர் சிவராமன். நான் எதை எழுதினாலும் முதல் ஆளாக படித்துவிட்டு பாராட்டும் அண்ணன் பைத்தியகாரன் என்னும் சிவராமனுக்கு நன்றிகள்.

வெறும் பிளாகாக இருந்த என்னுடைய தளத்தினை டாட் காமாக மாற்றியமைக்க முதன் முதலில் பண உதவி செய்தவர் என் உயிரினும் மேலான அன்பு சகோதரர் என்னுடைய வலைப்பூவின் முதல் முதலாளி பரிசல்காரன்! (பின்னணியில் விக்ரமன் பட ஆர்ஆர் போட்டுக்கொள்ளவும்).அவருக்கு நன்றிகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் வலைப்பூவிற்கு முதலாளியாக இருப்பவர் மணிகண்டன் விஸ்வநாதன்.

எதை எழுதினாலும் சூப்பர் பதிவு என பின்னூட்டம் போட்டு வாழ்த்தி வாழ்த்தியே என்னை சுமாராக எழுதவைத்த மலேசியா விக்னேஸ்வரன், நர்சிம்,முரளிக்கண்ணன்,கார்க்கி,தாமிரா,வெண்பூ,அப்துல்லா அண்ணன், வால்பையன்,உண்மைத்தமிழன்,ரவிஷங்கர்,மணிஜி,அகநாழிகை,சென்ஷி,குசும்பன்,கேபிள்,ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல்,வெயிலான்ரமேஷ்,வடகரையார்,ஓசைசெல்லா,பினாத்தலார்,மருத்துவர் புருனோ,ராஜு என ஏகப்பட்ட நண்பர்களுக்கும் நன்றி. என்னை இணையவாசிகள் மத்தியில் கொண்டு செல்ல உதவிய தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் திரட்டிகளுக்கு ஸ்பெஷல் நன்றிகள். இதுபோக டுவிட்டர்,ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் நன்றிகள். நான் சோர்ந்து போகும்போதெல்லாம் என் கூடவே இருந்து எனக்கு தோள்கொடுக்கும் தோழர்கள் கிங்விஸ்வா மற்றும் உருப்படாத்து நாராயணனுக்கும் நன்றிகள்.

என்னை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்த இரா.முருகன்,அம்ஷன் குமார் மற்றும் ஷாஜிக்கும் கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மைக்கு சுஜாதா அறக்கட்டளைக்கும் நன்றிகள்.

என்னை வழிநடத்தி வளர்ப்பதில் இரண்டுபேருக்கு முக்கியபங்கிருக்கிறது. ஒருவர் எழுத்தாளர் பா ராகவன். மற்றொருவர் ஆசிரியர் மாலன். எழுத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் எது சரி எது தவறு என்பதையெல்லாம் எப்போதும் சுட்டிக்காட்டி வழிநடத்தி செல்லுகிற, அடியேன் தந்தையாக மதிக்கிற பாராவுக்கு நன்றிகள். விளையாட்டுத்தனமாகவே வாழும் என்னை ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியரின் கடுமையான கண்டிப்போடு கையில் பிரம்பில்லாமல் எழுத்துப்பாடம் கற்பிக்கும் குரு மாலன் அவர்களுக்கும் நன்றிகள்.

ஒரு முக்கியமான ஆள் இருக்காரு! அவரை பார்த்துதான் நான் பிளாக் எழுதவே ஆரம்பிச்சேன்! அவருதான் என் நிழல்! அவருதான் என் உடன்பிறப்பு! அவர்தான் யுவகிருஷ்ணா. (சென்ற ஆண்டு இதே விருதை பெற்றவர்). நான் விருதுபெற்றதில் என்னைவிடவும் அதிகமாக மகிழ்கிற நண்பேன்டா!

இவர்கள் தவிர என்னுடைய வலைப்பூவை தொடர்ந்து வாசித்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றிகள். இப்படியே நன்றிகள் சொல்லிக்கொண்டே போனால் நன்றி சொல்லியே நாக்கு தேஞ்சிடும் போலருக்கு. அதனால் மொத்தமாக அனைவருக்கும் நன்றிகள்.

உயிர்மை மாதிரியான இலக்கிய பதிப்பகம் விருது கொடுத்தாலும் தற்போதைக்கு இலக்கியவாதியாகும் எண்ணமில்லை. அப்படியே நான் இலக்கியத்தில் குதிக்க நினைத்த்தாலும் சமகால இலக்கியவாதிகள் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு.

நான் வாசிக்க கற்றது சுஜாதாவிடமிருந்துதான்! எழுதவும் அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவருடைய பெயரிலேயே எனக்கு முதல்விருது கிடைத்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இனியாச்சும் உருப்படியா ஏதாச்சும் எழுதணும் பாஸ்!