Pages

25 July 2012

கொஞ்சநேரம் குழந்தையாகலாம்





தம்பி தம்பி
என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்ன பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மர விறகு
என்ன மரம்
மா மரம்
என்ன மா?
அம்மா
என்ன அம்மா
டீச்சரம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆமை வட
என்ன ஆமை
கொளத்து ஆமை
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்குத் திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து

இப்படியே போகும் பாட்டு கடைசியில் என்னா குத்து , கும்மாங்குத்து என்று முடியும். அல்லது மத்தியிலேயே வேறு ட்ராக் பிடித்து புதுப்பாடல் உருவாகும். இந்த சிறுவர் விளையாட்டு பாடல் நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம். இதை யார் நமக்கு கற்றுக்கொடுத்திருப்பார்கள்? எப்படி இந்த விளையாட்டு நமக்கு பரிச்சயமானது? என்பதெல்லாம் நினைவில் நிச்சயமாக இருக்காது.. ஆனால் நம்மில் பலரும் இந்த விளையாட்டினை கடந்துதான் வந்திருப்போம். இந்தப்பாடலை படிக்கும் போது சிறுவயதில் பாட்டுப்பாடி விளையாடிய குழந்தைப்பருவ நாட்களின் மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.

ஒவ்வொரு முறை விளையாடும்போதும் எங்கேயோ தொடங்கி எதிலோ முடியும் இந்த விளையாட்டு. நான்கைந்து பேர் வட்டமாக அமர்ந்து ஒவ்வொருவரும் மாறி மாறி பாடிக்கொண்டே வர.. வார்த்தையில்லாதவர் அவுட் ஆகி வெளியேற்றப்படுவார்! அவுட் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இன்னைக்கு இதுல என்ன புது புது வார்த்தைகளை போட்டு பாடலாம் என்று பள்ளியில் அமர்ந்துகொண்டு நிறையவே யோசித்திருக்கிறேன். என்ன உருண்டை கோலா உருண்டை என்ன கோலா கோக்க கோலா என்றெல்லாம் பாடியது நினைவில் இருக்கிறது.

அண்மையில் இந்தப்பாடலை தோழர் பொட்டீகடை சத்யா ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என இங்கேயும் பகிர்ந்துவிட்டேன்.

நம் குழந்தைகளுக்கு இதுமாதிரி பாட்டெல்லாம் பரிச்சயமா என்பது சந்தேகம்தான். தெரிந்திருந்தாலும் ட்யூசனுக்கும் டிவிக்கும் நடுவே மற்ற குழந்தைகளோடு இதெல்லாம் விளையாட நேரமிருக்குமா தெரியாது. உங்கள் குழந்தைக்கு இந்தப்பாடலை சொல்லிக்கொடுத்து நீங்களும் அவர்களோடு விளையாடுங்க.. குழந்தைகள் நிறைய தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளவும் புதிய பாடல்களை உருவாக்கவும் வாய்ப்பாக அமையும். அதோடு நாமும் கொஞ்ச நேரம் முழுமையாக குழந்தையாகலாம்.