Pages

08 August 2012

தமிழகத்திற்கு தலைகுனிவு!






ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் 81 இந்திய வீரர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு வீரர் கூட கிடையாது.

தமிழக விளையாட்டுத்துறை தலைகுனிந்து முகத்தை மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருக்கிறது. நம்மிடம் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பயிற்சியாளர்களுக்கும் குறைவில்லை. இருந்தும் விளையாட்டில் எப்போதும் நமக்கு கடைசி ரேங்க்தான்! மிகச்சிறிய மாநிலமான மணிப்பூர் கூட தன் பங்குக்கு 6 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருக்கிறது. நம் அருகாமை மாநிலமான கர்நாடகவிலிருந்து 9பேர் ஆந்திராவிலிருந்து 8பேர் என அசத்துகின்றனர். ஆனால் நாமோ ஒரே ஒரு வீரரை கூட இந்தியா சார்பாக அனுப்பவில்லை.

ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டிலிருந்து ரெஞ்சித் மகேஸ்வரி,ருஷ்மி சக்ரவர்த்தி,ஸ்ரீஜேஸ் என மூன்று பேர் சென்று இருக்கிறார்களே என சிலர் கேட்கலாம்? அவர்களுக்கும் தமிழக விளையாட்டுத்துறைக்கும் தொடர்பே கிடையாது. ருஷ்மி சக்ரவர்த்தி ஆந்திராவை சேர்ந்தவர். ரெஞ்சித் மகேஸ்வரியும், ஹாக்கிவீரர் ஸ்ரீஜேஸும் கேரளாவை சேர்ந்தவர்கள். தற்போது ஐஓபி அணிக்காகவும் தென்னக ரயில்வேவுக்காகவும்தான் விளையாடுகிறார்கள். இதில் நாம் பெருமைப்பட்டு கொள்ளவும் காலரை உயர்த்திக்கொள்ளவும் என்ன இருக்கிறது.

தமிழ்நாடு எத்தனை சிறந்த ஹாக்கி வீரர்களை உருவாக்கியிருக்கிறது. மிகவும் பின்தங்கிய சூழலிலிருந்து வந்து நமக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று கொடுத்த பாஸ்கரனை யாரும் மறந்துவிட முடியுமா? ஆனால் இன்று நம்முடைய தமிழக ஹாக்கி சங்கம் பிளவு பட்டு அதிகார அரசியலில் பல இளம் வீரர்களின் திறமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சென்னையை ஐஎச்எஃப்பும் (IHF), மெஜாரிட்டி மாவட்டங்களை ஹாக்கி இந்தியாவும் கட்டுப்படுத்த, மாநில அளவில் போட்டிகள் குறைந்துவிட்டன. திறமையிருந்து விளையாடமுடியாமல் திண்டாடுகின்றனர் நம் இளம் வீரர்கள்.

சந்தோஷ்டிராபி கால்பந்து போட்டியில் தமிழக அணி இம்முறை பல வருடங்களுக்கு பிறகு ஃபைனல் வரை முன்னேறியுள்ளது. அந்த அணிக்கு பாராட்டுவிழா வேண்டாம்.. அட்லீஸ்ட் ஏதாவது பரிசுகள் கொடுக்கப்பட்டதா? ம்ஹூம்.. ஒன்றுமே கிடையாது. சென்னைக்கு ஒரு சங்கம், மாவட்டங்களுக்கு ஒரு சங்கம் என கால்பந்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.

வில்வித்தை சங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறதென்பதே யாருக்குமே தெரியாது. வில்வித்தைப்போட்டியில் காமன்வெல்த்தில் வெள்ளிவென்ற தமிழக வீரர் ஸ்ரீதர் போதிய ஆதரவு கிடைக்காமல் ராணுவ அணிக்காக விளையாடுகிறார். அவர் ஜெயித்தபின்தான் லட்சரூபாய் வழங்கியது வில்வித்தை சங்கம். துப்பாக்கி சுடுதலில் மற்ற மாநிலங்களெல்லாம் சிறந்த வீரர்களை உருவாக்கியும் அதற்கேற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியும் வருகிறது. ஆனால் நம்மிடமோ வளர்ச்சிக்கான சின்ன அசைவுகூட கிடையாது.

திறமையான குத்துச்சண்டை வீரர்கள் பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்திலிருந்து தேசிய அளவிலும், முருகன் மாதிரியான இளம் வீரர்கள் சர்வதேச அளவிலும் பதக்கங்களை குவித்தனர். நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த ஷிவ்தாபாவை காட்டிலும் தமிழகத்தின் முருகன் மிகச்சிறந்த வீரர். ஆனால் தமிழக பாக்ஸிங் சங்கத்தின் அரசியலில் அவருக்கு கிடைத்த பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சென்ற வருடம் திறமையான பாக்ஸிங் வீராங்கனையான துளசியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைதானார் அப்போதைய பாக்ஸிங் சங்கதலைவர் கருணாகரன். அதைத்தொடர்ந்து இன்றுவரை அந்த சங்கத்தின் தலைவர் யார் என்பதே யாருக்கும் தெரியாது. தேசிய அளவில் சாதிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள் நம் பாக்ஸிங் சாம்பியன்கள்.

தமிழக தடகள வீரர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. தமிழகத்தில் தடகள வீரனாக இருப்பதைகாட்டிலும் கொடுமையான விஷயம் எதுவுமே இருக்க முடியாது. என்ன சாதித்தாலும் உங்களுக்கு ஒரு இன்ச் அங்கீகாரம் கூட கிடைக்காது. 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் தற்போது செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். ஒரு ப்யூன் வேலையாவது கொடுங்க என்று கலெக்டர் அலுவலகத்தில் போய் மன்றாடியும் வேலை கிடைக்காமல் இறுதியில் இப்படி ஒரு முடிவு அவருக்கு நேர்ந்திருக்கிறது. மீடியா இதனை தேசிய அளவில் எடுத்துச்செல்ல இப்போதுதான் அவருக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது!

சில மாதங்களுக்கு முன் நீளம் தாண்டுதலில் ஆசிய இன்டோர் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்று திரும்பினார் தமிழகத்தின் இளம் வீரர் பிரேம்குமார். இவரும்கூட மிகவும் வறுமையான சூழலை வென்றே இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு சிறிய பாராட்டுவிழாவையோ பணமுடிப்போ கூட ஏற்பாடு செய்யவில்லை தமிழக தடகள சங்கம். அவருக்கு எந்தவொரு பரிசையும் தர முன்வரவில்லை தமிழக அரசு. சர்வதேச லெவலில் சாதிக்கிற தடகள வீரர்களை தட்டிக்கொடுத்து வளர்க்காமல் எங்கிருந்து நம்மால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளை உருவாக்க இயலும்.
இப்படி ஒவ்வொரு வீரரும் வீராங்கனையும் சங்கங்களின் அரசியல், வறுமையான சூழல், பயிற்சிக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள பணத்துக்கும் போராடிதான் தேசிய அளவிலேயே
சாதிக்கும் நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது.

நிலைமை இப்படி இருக்க நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு கழகமான எஸ்டிஏடியும் பல நேரங்களில் அக்கறையின்மையோடு செயல்படுவதையே பார்க்க முடிகிறது. இதுவரை எந்த வீரருக்கும் அரசு அறிவிக்கிற பரிசு சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்த சரித்திரமே இல்லை.

விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைக்களுக்காகவும் பயணபடிக்காகவும் கடுமையாக போராடியே பெறவேண்டியிருக்கிறது. பிரேம்குமார் மாதிரியான ஒரு இளம் வீரர் சர்வதேச அளவில் பதக்கம் வென்று திரும்பும்போது முதலமைச்சரிடம் இவ்விஷயத்தை எடுத்து சென்று அவ்வீரனுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுத்தரவேண்டியதும் அவனுடைய பயிற்சிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயார் செய்ய வேண்டிய கடமையும் சங்கத்திற்கு இருக்கிறதா இல்லையா?

நம் தமிழக பள்ளிகளில் விளையாட்டு என்பதே ஏதோ சிகரட் பிடித்தல், குடிப்பழக்கம் போல ஆகிவருகிறது. மதிப்பெண் பெறுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். இதையும் மீறி விளையாட்டில் சாதிக்க விரும்புகிற மாணவர்களுக்கு கூட கல்லூரியில் சீட்டு, ரயில்வேயில் வேலை, காவல்துறையில் வேலை என்கிற லட்சியத்தை மட்டுமே போதிக்கின்றனர். தேசிய அளவில் ஒரு பதக்கம் வாங்கினால் போதுமென விளையாடவும் பழக்கப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு விளையாட்டு குறித்த ஆர்வத்தை உண்டாக்க வேண்டும், இதில் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். ஆனால் தமிழகத்தில் பல பள்ளிகளிலும் விளையாட்டுக்கென உரிய ஆசிரியர்கள் கிடையாது. பல பணியிடங்கள் காலியாய் கிடக்கின்றன.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதிருக்கட்டும், முதலில் தகுதி பெறுவதென்பதே லேசுபட்ட காரியமா? ஒரு வீரரின் திறமையும் அர்பணிப்பும் உழைப்பும் விடாமுயற்சியும் மட்டும் இதற்கு போதாது. அரசின் கவனமும் உதவியும் மிக மிக அவசியம். அதுதான் தமிழகத்தில் குதிரை கொம்பாக இருக்கிறது. நல்ல வேளை தீபிகா குமாரியும் சாய்னா நெக்வாலும் தமிழகத்தில் பிறக்கவில்லை..பிறந்திருந்தால் நிச்சயம் ஒலிம்பிக் வரைக்கும் சென்றிருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்!

சென்னையில் ஒரளவு நல்ல மைதானங்கள், பயிற்சியாளர்கள் என பல வசதிகளும் இருந்தாலும் மற்ற மாவட்டங்களில் விளையாட்டென்பது இன்னமும் எட்டாக்கனிதான். மாவட்டம் தோறும் மைதானங்கள் தேவை. குறைந்தபட்சம் இன்டோர் மைதானங்களாவது உரிய வசதிகளோடு போதிய உபகரணங்களோடு உடற்பயிற்சி கூடங்களுடன் ஏழைகளுக்கும் எட்டும்படி இருந்தால்தான், டேபிள் டென்னிஸ்,பேட்மின்டன்,வாலிபால்,ஹேன்ட்பால் மாதிரியான விளையாட்டுகளிலாவது சிறந்த வீர்ர்களை கண்டறியவும் ஊக்கம் கொடுத்து வளர்க்கவும் உதவும்.

உடனடியாக ஒவ்வொரு விளையாட்டுக்கும் இருக்கிற நம் சங்கங்களின் சங்கடங்களை சரிசெய்ய அரசு முன்வரவேண்டும். சில சங்கங்களோ ஆர்வமிருந்தும் போதிய நிதி உதவியின்றி கவலைக்கிடமாக கிடக்கின்றன. அவற்றை கண்டறிந்து உடனடியாக உதவ வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளை தொடர்ந்து நடத்தி ஜூனியர் லெவலிலேயே சிறந்த வீரர்களை கண்டறிந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கென இப்போதே பயிற்சியை தொடங்க வேண்டும்.

பயிற்சி சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும். அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கவும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தவும் இப்போதே திட்டமிட வேண்டும். வெளிநாட்டு பயிற்சியாளர்களை பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் உடனடியாக செய்யவேண்டும். இல்லையென்றால் அடுத்த ஒலிம்பிக்கிற்கு மட்டுமல்ல அதற்கடுத்த ஒலிம்பிக்கிற்கும் தமிழகத்திலிருந்து ஒரு வீரர் கூட தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம்!


(நன்றி - புதியதலைமுறை)