ஒரு ஊர்ல ஒரு பூனை! (சிறுகதை)
>> 28 September 2012
மூன்று நாட்களாக குட்டி மியாவைக் காணவில்லை. குட்டி மியாவ் என்பது அம்மா வளர்க்கிற பூனைக்குட்டியின் பெயர். அது தொலைந்து போனதிலிருந்து அம்மா எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். சிந்தித்துக்கொண்டிருக்கிறாள். புலம்பலோ புலம்பல். வீட்டுக்குள் நுழைந்தாலே மியாவ் மியாவ் என பூனை போல பினாத்துகிறாள்.
டேய் அந்த நாலாவது தெரு அண்ணாச்சி கடைகிட்ட போய் பார்த்துட்டு வந்திடேன் , அந்த மீன்கடைகாரன் வீட்டாண்டயாச்சும் இருக்கானு பாரேன் , டேய் நாலு வீடு தள்ளிப்போனா ஒரு முருங்க மரம் இருக்கும் பாரு அது மேல நிக்குதா பாரேன்.. அங்கதான் நின்னுட்டு காக்காவோட சண்ட போட்டுகிட்டிருக்கும்... கருவாடு டப்பாவ எடுத்துட்டுபோடா.. என விடாமல் விரட்டிக்கொண்டேயிருக்கிறாள். அம்மாவுக்கு அந்த மியாவ் எங்கெல்லாம் போகும் என்பது நன்றாக தெரிந்திருக்கிறது.
கருவாடு டப்பாவை காட்டினால் எங்கிருந்தாலும் வரும் என்பதையும் அறிந்துவைத்திருக்கிறாள். இருந்தும் மியாவ் தற்போது போன இடம் தெரியவில்லை. மியாவை தேடித்தேடி அம்மாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி சுகர் ஓவராகி கால் வீங்கினதுதான் மிச்சம். நானும் தேடாத இடமில்லை. கேட்காத ஆளில்லை.
கொஞ்சமாய் வளர்ந்த குட்டி, புசுபுசுவென ரோமங்களுடன் சாம்பல் நிறம், முதுகில் ராமர் போட்ட மூன்று கோடு!, முன் நெற்றியில் நாமம் போல அடர்கருப்பில் மூன்று கோடு, நல்ல செழிப்பான உடல் வாகு, அடிக்கடி மியாவ் என கத்தும் என்கிற அடையாளங்களைத்தவிர பூனையைப்பற்றி வேறென்னதான் சொல்ல முடியும். பூனையின் உதட்டுக்கு கீழே சிறிய வெட்டுத் தழும்பு சிவப்பு நிறத்தில் ஒரு சென்டி மீட்டரில் இருக்கும் என அம்மா சோகமாக சொல்லும்போதுதான் அப்படி ஒன்று இருப்பதே எனக்கு தெரியும். இதற்காக கிடைக்கிற பூனைகளின் வாயையெல்லாம் தூக்கியா பார்க்க முடியும்.
அம்மாவின் பூனாபிமானம் கடந்த சில வருடங்களாக அளவுக்கதிகமாகிவிட்டது. இத்தனைக்கும் எங்கள் வீட்டில் எலித்தொல்லை என்பது நிச்சயமாக கிடையாது. மூட்டை பூச்சியும் கொசுக்களும்தான் அதிகம். அதையெல்லாம் வேட்டையாடுகிற வளர்ப்பு பிராணிகள் இருந்தால் எவ்வளவு சௌகர்யமாக இருக்கும். பூனைகள் வெறும் எலிகளை பிடிப்பவையாகவே இருக்கின்றன. அதோடு நாய்களைப்போல நம்மிடம் அடிமைபோல நடந்துகொள்வதில்லை. நாம்தான் அதனிடம் அடிமையைப்போல வாலாட்ட வேண்டியதாயிருக்க வேண்டும். எப்போதும் தன் எஜமானரிடம் ஒருவித மிதப்பிலேயேதான் வாழுகின்றன இந்த பூனைகள்.
எங்கள் பரம்பரையிலேயே யாரும் செல்லப்பிராணிகள் வளர்த்ததில்லை. பாட்டி சொல்வாள் அவளுடைய தாத்தா ஒரு கோம்பை நாய் வைத்திருந்தாராம். எருமைமாட்டை விடவும் கொஞ்சம்தான் சின்னதாம். பசுமாட்டை விற்று வாங்கினாராம். ஒரு நாளைக்கு நாலுகிலோ ஆட்டுக்கறி தின்னுமாம். ஒரேகடியில் ஆளையே காலி பண்ணிவிடுமாம். பாட்டியின் தாத்தா அதை அழைத்துக்கொண்டு ஜம்பமாக முயல் வேட்டைக்கெல்லாம் செல்வாராம்.
எங்களுடைய பரம்பரையின் பல லட்ச ரூபாய் சொத்தே அந்த கோம்பை நாய்க்கு சோறுபோட்டுதான் அழிந்தது என்று சொல்லிவிட்டு சிரிப்பாள் பாட்டி. வேறு வழியின்றி நானும் சிரித்துவைப்பேன். அந்த வரலாறு தெரிந்தததால்தான் அம்மா பூனை வளர்க்கிறாளோ என்கிற சந்தேகமும் எழும். கோம்பை நாயே வளர்த்தாலும் எங்களிடம் அழிப்பதற்கு ஒருவேளை சோறுமட்டும்தான் எஞ்சி இருக்கிறது.
முதன்முதலாக ஒரு கர்ப்பிணி பூனை எங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தது. அதுவும் வீட்டில் மீனோ கருவாடோ சமைக்கிற நாளில் மட்டும்தான் வாசலில் நின்று க்கியாங்வ், க்கியாங்வ் என கத்தும். நான் சாப்பிட்டு மிச்சம் வைத்த மீனின் முற்களோடு சாப்பாடையும் பிணைந்து வைத்துவிட்டு வருவார். ஒரு பருக்கை விடாமல் தின்றுவிடும் அந்த கர்ப்பிணி பூனை. மீன் குழம்பு மற்றும் கருவாடால் உண்டான பந்தம் கர்ப்பிணி பூனையை நடுவீடு வரைக்கும் கொண்டுவந்து சேர்த்தது. என்னம்மா இது.. என அலுத்துக்கொள்வேன். டே பாவம்டா.. வாயும் வயிறுமா இருக்கு இருந்துட்டு போகட்டும் என்பாள் அம்மா!
மீன்குழம்பு வைக்கிற நாட்களில் எங்கிருந்தாலும் வீட்டுக்குள்ளேயே வந்து அடுப்பாங்கரை மேலே ஏறுகிற அளவுக்கு அம்மா அந்த கர்ப்பிணி பூனைக்கு சுதந்திரம் கொடுத்திருதாள். சில நேரங்களில் பூனைக்கு சோறுவைத்துவிட்டுத்தான் எனக்கு சோறுவைத்தாள். அந்த நேரத்தில்தான் பாட்டி ஒரு உண்மையை சொன்னாள். ‘’நம்ம வூட்ல பூனை குட்டிப்போட்டுச்சின்னா குடும்பத்துல நல்லது நடக்குமாம் பெரியவனே, அதான் உங்கம்மா அதை அப்படி பாத்துக்கறா’’
அம்மாவின் பூனாபிமானம் இவ்வளவுதானா என சலித்துக்கொண்டேன். அப்படி என்னதான் நல்லது நடக்கவேண்டும் என்பது புரியவில்லை. எனக்கு வேலை கிடைத்ததும் குடிசைவீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டுக்கு மாறியாகிவிட்டது. அம்மா இப்போதெல்லாம் முன்புபோல கட்டிட வேலைக்கும் போவதில்லை. தங்கைக்கு கல்யாணம் செய்துகொடுத்து கடனெல்லாம் அடைத்தாகிவிட்டது. எனக்கும் திருமணமாகி மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்கிறேன். இன்னும் என்னதான் நல்லது நடக்கவேண்டும்.
அம்மா தொடர்ந்து அந்த கார்ப்பிணி பூனைக்கு ஏகப்பட்ட மரியாதைகளையும் கௌரவங்களையும் செய்து தந்தார். வேளாவேளைக்குப்பால், நேராநேரத்துக்கு மீன், அது உறங்குவதற்காக வாசலிலேயே சாக்கு. அது என் படுக்கையில் படுத்துக்கொண்டு தூங்குவதை பார்த்து கடுப்பாகியிருக்கிறேன். ராஜமரியாதைதான். கர்ப்பிணி பூனைக்கு பாலில் குங்குமப்பூ கலந்துகொடுக்காதது மட்டும்தான் பாக்கி.
இந்த பூனையின் போக்குவரத்து என் மனைவியை ரொம்பவே எரிச்சலூட்டக்கூடிய ஒன்றாக இருந்தது. அது வீட்டின் சில இடங்களில் மூத்திரம் போவதும், அதை அவளே துடைப்பதும் நடந்தது. அம்மாவோ இதுல என்ன இருக்கு பரவால்ல என்று சொன்னாலும், என் மனைவிக்கு இது கடுப்பேற்றும் மாமியார் கொடுமையாகவே இருந்தது.
இப்படியாகப்போய் கொண்டிருந்த கர்ப்பிணி பூனையின் ஏகபோக வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வந்தது. வாசலில் இருந்து சாக்குப்பை காணாமல் போய் துவைக்கப்பட்டு வீட்டுக்குள் வந்திருந்தது. வாசலில் நின்று எவ்வளவு கத்தினாலும் பூனைக்கு மீன் முள்ளுகூட கொடுப்பதில்லை. வீட்டுக்குள் சிலமுறை நுழைந்த போது குச்சியெடுத்து விளாசத்தொடங்கிவிட்டார் அம்மா. இனிமே வருவியா.. வருவியா என அடியோ அடி. பார்க்கவே பாவமாக இருக்கும்.
எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொண்டு அம்மாவையே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த முன்னாள் கர்ப்பிணிப்பூனை. முன் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டுபோய் வாசலில் விடுவாள் அம்மா. அது தொடர்ந்து நான்கைந்து நாட்கள் எங்களுடைய வீட்டு வாசலிலேயே தவமாய் கிடந்தது. ம்ஹும் அம்மா அதற்கு ஒரு பருக்கை சோறுகூட கொடுக்க மறுத்துவிட்டாள்.
பாட்டி சொல்லிதான் காரணம் தெரிந்தது. சென்ற வாரம் ஒரு நல்ல நாளில் அந்த கர்ப்பிணி பூனை லட்டுமாதிரி ஏழு குட்டிகளை ஈன்றெடுத்திருக்கிறது. ஆனால் பாருங்க.. அந்த முட்டாள் பூனை என்ன செய்திருக்கிறது.. ‘’நம்மூட்டு சோத்த தின்னுட்டு அந்த மயிரெழவி (கர்ப்பிணி பூனைதான்) பக்கத்தூட்ல போயி குட்டிப்போட்டிருக்கு’’ என பாட்டி சொன்னபோது எனக்கு பயங்கர அதிர்ச்சி. கோபமாக பேசினாள். பாட்டிக்கே இவ்வளவு கோபமென்றால் அம்மாவுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்!
அந்த பூனை போட்ட ஏழு குட்டிகளையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டராம் பக்கத்துவீட்டு பிராமண மாமா. ‘பாவம்ங்க கண்ணுகூட தொறக்கல.. அவ்ளோ அழகு ங்கீங்கீனு கத்திகிட்டு.. ச்சே’ மனைவி சோகமாக சொன்னாள். என்னமோ ரொம்ப ஃபீல் பண்றியே அதுக்கொசரம் ஏழுகுட்டியையும் கொண்டுவந்து உன் தலைல வச்சா வளர்ப்பே.. போடி இவளே.. நாமளே பூச்சிகூண்டுமாதிரி சின்னவீட்ல ஆறாயிரம் ஓவாவ கொடுத்துட்டு உக்காந்திருக்கோம்.. பூனையாம்ல பூனை என்று திட்டினேன். அவள் கோபித்துக்கொண்டாள். நான் மன்னிப்புக்கேட்டேன்.
நாலைந்து நாட்கள்தானிருக்கும்.. அம்மா மிகச்சிறிய பூனைக்குட்டி ஒன்றை எங்கிருந்தோ எடுத்து வந்தாள். இதுபாரேன்டா எவ்ளோ அழகா இருக்குன்னு... கர்ப்பிணி பூனை போட்ட ஏழு குட்டிகளில் ஒன்று என்பதை அதன் நிறம் முதுகு கோடுகள் பார்த்தே கண்டுபிடிக்க முடிந்தது. குப்பைத்தொட்டியிலிருந்து தப்பித்ததாக இருக்கலாம். சரி இதுக்கென்ன.. இதை நம்ம வீட்ல வளக்கலாம்டா.. என்றாள் அம்மா.
ஏன்ம்மா நாம இருக்குற இந்த சின்ன வீட்ல பூனையெல்லாம் எங்கம்மா வச்சிப்பே.. என்று எரிந்துவிழுந்தேன். ஆமா பொழுதன்னைக்கும் உன்னையும் உன்பொண்டாட்டி மூஞ்சியையுமே பார்த்துட்டு இருந்துக்கறேன்.. எனக்குனு இந்த வீட்ல என்ன இருக்கு.. இப்படியே அகராதிபுடிச்ச மாதிரி பேசு.. அதனால் எதுவுமே நடக்க மாட்டேங்குது.. என்று ஆரம்பித்து ஏதேதோ பேசிபேசி அழத்தொடங்கிவிட்டாள். காரணமே புரியவில்லை.
இப்படியாக வீட்டுக்குள் ஒரு பூனைக்குட்டியும் வந்தாகிவிட்டது. அதை எப்போதும் தோளில் போட்டுக்கொண்டு குழந்தையை போலவே கொஞ்சிக்கொண்டிருப்பாள் அம்மா. ஜூஜ்ஜூ குட்டி, செல்லக்குட்டி, பொம்முகுட்டி.. அம்முக்குட்டி.. இப்படியாக அதற்கு ஏகப்பட்ட அடைமொழி கொஞ்சல்கள் இருந்தாலும் அதற்கு பெயர் மட்டும் மியாவ்குட்டிதான். இங்க் ஃபில்லரில் பால் ஊட்டுவது, பிஸ்கட்டை பாலில் கரைத்து ஐஸ்கிரீம் ஸ்பூனில் ஊட்டிவிடுவது என அமர்க்களம் தாங்கமுடியாது. பூனைக்காக தினமும் பால் வாங்குவது, அதற்காகவே கிலோகணக்கில் கருவாடு, அது படுத்து உறங்க சின்ன துப்பட்டி என ராஜவாழ்க்கை.
ஒரு குழந்தையைப்போலவே தோளில் போட்டு தாலாட்டு பாடி தூங்கவைப்பது, தூங்கும்போது அருகிலேயே படுக்க வைத்துக்கொண்டு தட்டிக்கொடுப்பது.. அதனோடு விளையாடு, உரையாடுவது என எந்நேரமும் பூனையோடுதான் அம்மாவை பார்க்க முடிந்தது. பூனையும் அம்மாவும் பிரிக்க முடியாதவர்களாக ஆகிப்போயிருந்தனர். என்னைக்கூட சிறுவயதில் இப்படியெல்லாம் சீராட்டி பாராட்டி வளர்த்த நினைவில்லை. அம்மா அது பூனைம்மா ஏதோ குழந்தைமாதிரி ஓவரா பண்றயே.. என கடிந்து கொள்வேன். அம்மா அதற்கெல்லாம் பதில் சொல்லமாட்டாள். ‘’அவன்கெடக்கறான்.. நீ பால்குடிடா’’ என இங்க்ஃபில்லரில் பால் ஊட்டுவாள். அந்த குட்டிப்பூனையும் குழந்தைபோல மம் என பால்குடிக்கும்.
என்னால் எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் வீட்டில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் உச்சா போவதும் கக்கா போவதும் பொறுத்துக்கொள்ளவே முடியாது. வீட்டுக்குள் நுழைந்தாலே பூனை நாற்றம் குடலை பிடுங்கும். நாற்றம் தாங்காமல் என் மனைவியே பலமுறை வாந்தி எடுத்திருக்கிறாள். அதை என்னுடைய அம்மா தவறாக புரிந்துகொண்டு டாகடரிடம் அழைத்துசென்று செக் அப் செய்த கொடுமையெல்லாம் நடந்தது.
‘’ஏன்ம்மா வீட்டுக்குள்ளயே நுழைய முடியல.. பூனை நாத்தம், யாராச்சும் என்னை பாக்க வந்தா என்ன நினைப்பாங்க’’ என்று கத்துவேன்.
‘’ஏன்டா உனக்கு ஒரு குழந்தை இருந்தா இப்படிதானே பண்ணும்.. அப்பயும் இதேமாதிரிதான் கத்துவியாக்கும்’’ என என் வாயை அடைத்துவிடுவாள். குட்டிப்பூனையின் அராஜகம் தாங்க முடியாது. சாப்பிடும் போது தட்டில் வந்து வாயை வைத்துவிடும். திட்டமுடியாது. அம்மா உடனே குழந்தையிருந்தால் இப்படி செய்வாயா என தொடங்கிவிடுவாள்! அதன் அராஜகங்களுக்கு முடிவுகட்ட ஒரு நாளுக்காக காத்திருந்தேன்.
பூனை வளரவளர அது வீடுதங்காமல் ஊர்சுற்றத்தொடங்கிவிட்டது. கதவை அடைத்துவைத்தாலும் அம்மாவிடம் போய் கதவை காட்டி ங்கியாவ்.. என உரத்த குரலில் அராஜகமாக கத்தும். பணிவு என்றால் என்ன விலை என்று கேட்பதுதான் பூனைகளில் இயல்போ என்னவோ? ஜன்னலை அடைத்தாலும் கதவினை அடைத்தாலும் அது தனக்கென்று ஒரு வழியை கண்டறிந்து வெளியே ஓடிவிடும்.
அது சில நேரங்களில் அருகாமை வீடுகளிலிருந்த முருங்கை மரங்களில் ஏறி அமர்ந்துவிடும். காக்கைகள் அதனை கொத்திவிட துடித்துக்கொண்டு வட்டமிடும். அம்மா குட்டிப்பூனையை கீழே இறக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார். அப்படி கண்டுபிடித்ததுதான் கருவாட்டு சப்தம். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கருவாடுகளை போட்டு ரொப்பிவைத்துவிடுவாள். அதை உலுக்கு உலுக்கி விட்டு கருவாடுகளை பூனைக்கு தருவார். இதனால் கருவாட்டு டப்பா சப்தம் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவார் பூனையார்.
அம்மா இல்லாத நேரம் பார்த்து பூனையை கொண்டுபோய் எங்காவது விட்டுவிட நினைத்திருந்தேன். அதற்கு தோதாக ஒரு சந்தர்ப்பமும் வாய்த்தது. ஊரில் ஏதோ பெரிசு மண்டையை போட்டுவிட அம்மாவும் பாட்டியும் ஊருக்கு கிளம்பினர். மனைவியின் பொறுப்பில் பூனை ஒப்படைக்கப்பட்டது. இதைவிடவும் நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது என நினைத்திருந்தேன். ஆனால் கதையில் புதிய திருப்பமாக என் மனைவி அதற்கு சம்மதிக்க முடியாது என மறுத்துவிட்டாள்.
‘’ஏன்ங்க அதை பாருங்க.. அழகா குழந்தை மாதிரி எப்படி இருக்கு.. அதை போயி எங்கயாச்சும் விடசொல்றீங்களே.. பக்கத்துவீட்ல இப்படிதான் ஒரு குட்டி பூனைய வெளிய விட்டு தெருநாய்ங்க சேந்து அதோட கொறவளல கடிச்சி கொன்னுருச்சுனு சொன்னாங்க.. நான்கூட குப்பை கொட்ட போகும்போது தொட்டில பாத்தேன்.. பாவம்.. வெள்ளை குட்டிவேற ஒரே ரத்தம்.. நம்ம மியாவ்குட்டிவேற யாராச்சும் மிரட்டினா அப்படியே பதுங்கி அங்கேயே உக்காந்துக்கும்.. அதுக்கு தப்பிச்சி ஓடணும்னு கூட தெரியாது.. உங்களுக்கு என்ன தெரியும்.. வேலைய மட்டும் பாருங்க.. பூனைய நான் கவனிச்சிகிறேன்.. அதுமில்லாத பூனை காணாம போனா அத்தை என்னதான் திட்டுவாங்க.. உனக்கெல்லாம் என்ன குழந்தையோட அருமைதெரியும்னு’’ மிகப்பெரிய விளக்கம் கொடுத்தாள் மனைவி.
இருந்தாலும் என்னால் இந்த பூனையின் அட்டூழியங்களை சகிக்க முடியவில்லை. என்னுடைய பைக்கின் முன் சக்கர ரிம்மில் உச்சா போய்விடுவதால் சீக்கிரமே அந்த இடம் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. என்னைக்கு செலவு வைக்குமோ தெரியவில்லை. என்னுடைய பேகை கடித்து பிராண்டி கிழித்துவிட்டது. இன்னும் நிறைய காரணங்கள் இருக்கிறது.
இருந்தும் அந்த பூனைக்கு என்மேல் அலாதி ப்ரியம். நான் துரத்திவிட்டாலும் என்னையே சுற்றி சுற்றி வரும். நான் சாப்பிடும்போது அருகில் வந்து அமர்ந்துகொள்ளும். ஒருவித சகோதர மனப்பான்மையோடு அந்த பூனை என்னை அணுகினாலும் என்னால் இந்த பூனையை ஒருநாளும் சகிக்கவே முடியவில்லை.
அலுவலகத்தில் அவசரமாக பொட்டித்தட்டிக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டிலிருந்து மனைவி அழைத்தாள். ‘’என்னங்க பூனைய காணோங்க’’ . ஒருநிமிடம் மனது மகிழ்ந்தாலும் வெளிகாட்டாமல் விசாரித்தேன். ‘’காலைல 9 மணிக்கு வெளியே போச்சு இன்னும் வரலைங்க.. மணி நாலாச்சு.. எங்க போச்சுனே தெரியல.. எல்லா இடத்துலயும் தேடிட்டேன். பயந்துபோய் குப்பைதொட்டில கூட போய் பார்த்தேன். அந்த பழைய பூனைதான் காஞ்சுபோயி கிடக்கு.. நம்ம பூனை என்னாச்சுனே தெரியலங்க’’ என்றாள்.
‘’சரி சாயங்காலம் வந்ததும் ரெண்டுபேருமா தேடுவோம்’’
பூனையை மொபைல் டார்ச் உதவியோடு வீட்டுக்கு அருகில் இருக்கிற புதர்கள், மரங்கள், சாலைகள் எங்கும் தேடினோம். தேடி தேடி கிடைக்காமல். அவ்ளோதான்.. இனிமேல் கிடைக்காது என வீடுதிரும்பினால் எங்கள் வீட்டு பரணில் தனிமையில் படுத்திருந்தது பூனைக்குட்டி. காரணமே புரியவில்லை. அதன் குரலும் விநோதமாக இருந்தது. குழந்தையைப்போலவே க்குவாங் என கத்துகிறது. என் மனைவியிடம் கூட வரமறுத்தது.
பால் வைத்தாலும் குடிக்கவில்லை. ‘’ஒருவேளை அத்தை இல்லைனு ஏக்கம் வந்துருச்சோ..’’ என்றாள் மனைவி. எனக்கும் அப்படிதான் தோன்றியது. அம்மாவுக்கு போன் போட்டு சொன்னேன். அடுத்த நாள் காலையே ஊர்திரும்பிவிட்டாள். அம்மாவிடம் விஷயத்தை சொன்னதும் பூனையை எடுத்து மடியில் போட்டு என்னடா குட்டிம்மா ஆச்சு உனக்கு.. உடம்பு சரில்லையா என கொஞ்சத்தொடங்கிவிட்டாள்.
எனக்கு ஒன்றும் புரியாமல் அலுவலகம் கிளம்பினேன். அன்றைக்கே நல்ல பெட் டாக்டரை சந்தித்து பூனையை காண்பித்திருக்கிறாள் அம்மா. அதற்கு செலவு 500 ரூபாய்! மனைவி சொன்னாள். ‘’ஏன்ம்மா பூனைக்கெல்லாம் இவ்ளோ செலவு பண்ற.. அதுவும் தெருவுல சுத்தற பூனைக்கு போயி..’’ அம்மா பதில் சொல்லவில்லை.
அதற்குபின்புதான் அந்த விபரீதம் நடந்தது. பெரிய மியாவ் ஆகிவிட்ட குட்டிமியாவ் இப்போது இரவெல்லாம் குழந்தைபோல அழத்தொடங்கிவிடுகிறது. இது சுகர் பேஷன்டான அம்மாவை கடுமையாக எரிச்சலடைய செய்தது. ஒருநாள் இரவு இப்படி கத்தக்கூடாது என சொல்லி சொல்லி குச்சி எடுத்து விளாசிவிட்டாள். பூனை அப்போதும் குழந்தைபோலவே கத்திக்கொண்டு என்னிடம் வந்தது. எனக்கே பாவமாக இருந்தது. மனைவிதான் அதை மடியில் வைத்து ஸ்பூனில் பிஸ்கட் கலக்கிய பாலை ஊட்டி.. சமாதானப்படுத்தினாள். அன்றைக்கு இரவெல்லாம் என் மனைவி எவ்வளவோ முயன்றும் அது குழந்தையைப்போலவே கத்திக்கொண்டேயிருந்தது.
விடிந்தது. பூனையை காணவில்லை. அம்மா தெருத்தெருவாக சுற்றினாள். என் மனைவியும் துணைக்கு சுற்றினாள். பாட்டி இதைப்பற்றிய அக்கறையே இல்லாமல் என்னைப்போலவே தினத்தந்தி பேப்பரை மூக்கு கண்ணாடி வழியே படித்துக்கொண்டிருந்தாள். ‘’நம்ம வீட்டுலயே ஒரு பொட்டை பூனையை வளத்தா அது நம்ம வூட்லதான் குட்டிபோடும்னு நினைச்சா.. அவளுக்கு அவசரமா நம்ம வீட்ல நல்லது நடக்கணும்.. அதெல்லாம் நடக்கும்போதுதான் நடக்கும்னு எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன்.. நீ பகல்ல வீட்ல இருக்கறதில்ல.. இருந்தா புரியும்..’’ என்றாள் பாட்டி. எனக்குதான் புரியவில்லை. இருந்தாலும் பாட்டி சிரிப்பதால் நானும் சிரித்தேன்.
ஆனால் அம்மா அந்த பூனையை எதற்காக வளர்த்தாளோ தெரியாது. ஆனால் இப்போதைக்கு அம்மாவுக்கு அந்த பூனையை கண்டுபிடித்துகொடுக்க வேண்டும். நல்லது நடக்குமோ இல்லையோ.. அம்மாவுக்காக பூனையை கண்டுபிடித்துக்கொடுத்தாக வேண்டும். பூனை போன நாளிலிருந்து என் மனைவிக்கும் என்னமோ ஆகிவிட்டது. சிடுசிடுவென்றே இருக்கிறாள். எனக்கு பூனையை விட அம்மாதான் முக்கியம். நிச்சயம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையிருக்கிறது.
உங்கள் கண்களில் தென்பட்டால் தகவல் சொல்லவும். கொஞ்சமாய் வளர்ந்த குட்டி, புசுபுசுவென ரோமங்களுடன் சாம்பல் நிறம், முதுகில் ராமர் போட்டதுபோல காப்பிகலரில் மூன்று கோடு!, முன் நெற்றியில் நாமம் போல அடர்கருப்பில் மூன்று கோடு, நல்ல செழிப்பான உடல் வாகு, அடிக்கடி மியாவ் என கத்தும்... பெயர் மியாவ்குட்டி!
Read more...





