Pages

06 June 2013

ஜேசி டேனியலும் தொலைந்துபோன சிறுவனும்!




நம்முடைய சமூகத்தில் சாதி எப்படி ஆழமாக வேரூன்றி கிடந்தது என்பதை வெகு சில காட்சிகளில் குறுக்குவெட்டாக உணர்த்திவிடுகிறுது ‘’செல்லுலாய்ட்’’. மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிற ஜே.சி.டேனியலின் சினிமா முயற்சிகளைப்பற்றிய படம் இது. சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பல்வேறு விருதுகளை வென்ற திரைப்படம் செல்லுலாய்ட். ஜேசி.டேனியலின் பாத்திரத்தில் நடித்த ப்ருதிவிராஜ் மற்றும் படத்தின் இயக்குனர் கமலும் இப்படத்துக்காக பல்வேறு விருதுகளையும் வென்றனர்.

1920களின் இறுதியில் தாதாசாகேப் பால்கேவை சந்திக்க டேனியல் செல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. 'நான் கேரளாவில் ஒரு சினிமா படம் எடுக்க விரும்புகிறேன், அதை கற்றுக்கொள்ள வேண்டும்.. எனக்கு சினிமாவை கற்றுத்தருவீர்களா' என்று பால்கேவிடம் கேட்கிறான் டேனியல்.

பால்கேவோ ‘அது ரொம்ப கஷ்டம் தம்பி இப்போ நான் ரொம்ப பிஸி.. பின்னால பார்க்கலாம்’ என்று திருப்பி அனுப்புகிறார். சார் அட்லீஸ்ட் சூட்டிங்கையாச்சும் பார்க்க முடியுமா என்று கேட்க பால்கே அவனை அதற்கு மட்டும் அனுமதிக்கிறார். சூட்டிங்கில் படம் பிடித்ததை புராசஸ் பண்ணி திரையிலும் போட்டுக்காட்டுக்கிறார்.

காதலில் விழுந்துவிட்ட காதலனைப்போல டேனியல் சினிமாவை காதலிக்க துவங்குகிறான். கேரளாவின் முதல் சினிமாவை எடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். அந்த நேரத்தில் இந்தியா முழுக்க புராணப்படங்களாக எடுத்துக்கொண்டிருக்க... டேனியலோ சமூகப்படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். சார்லிசாப்ளினின் 'தி கிட்' படத்தை பார்த்து அதுபோலவே ஒரு படமெடுக்க நினைத்து விகதகுமாரன் (தொலைந்த சிறுவன்) என்கிற படத்தை தயாரிக்கிறான்.அது அவனுடைய வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. சாதி பாகுபாட்டினால் மலையாள சினிமாவின் முதல் திரைப்படமான ‘’விகதகுமாரன்’’ செத்துப்போகிறான்.

தான் நேசித்த கலையாலேயே உறவுகளை இழந்து பணத்தையெல்லாம் இழந்து சின்ன கிராமத்தில் தனிமையில் தன் அந்திம காலத்தை வறுமையில் கழிக்கிறான். அவனைப்பற்றி கேரளாவில் யாருக்குமே தெரியாமலேயே போகிறது. அவன் எடுத்த திரைப்படத்தின் மிச்சங்கள் கூட இல்லை.

டேனியலை பற்றி கேள்விப்பட்டு தேடிக் கண்டுபிடிக்கிற ஒரு சினிமா பத்திரிகையாளன், டேனியலை வறுமையிலிருந்து மீட்க அரசாங்கத்தின் உதவியை நாடுகிறான். ஆனால் அரசாங்கமோ அவர்தான் மலையாளசினிமாவின் முதல் படமெடுத்தவர் என்பதற்கு ஆதாரங்கள் கேட்கிறது. திரைப்படத்தின் ஃபுட்டேஜ் வேண்டும் என்கிறது. பத்திரிகையாளனின் முயற்சிகள் வீணாகின்றன.

மருத்துவசெலவிற்கும் கூட பணமின்றி கடும் வறுமையில் பார்வையிழந்து இறந்துபோகிறார் டேனியல். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு 2000ம் ஆண்டு கேரள அரசு டேனியல்தான் மலையாள சினிமாவின் தந்தை என்று அறிவிக்கிறது. அதற்கான விழாவில் டேனியலின் இளைய மகன் தன் ஆறுவயதில் விளையாட்டுத்தனமாக மலையாள சினிமாவின் முதல் படத்தின் ஃபிலிம்ரோல்களை எரித்துவிட்டதை சொல்லி கண்ணீரோடு கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் படம் முடிகிறது.

படத்தில் ஜேசி டேனியலின் கதைதான் பிரதானமானதென்றாலும், மலையாள சினிமாவின் முதல் நாயகியான ரோசம்மாவின் கதைதான் நம்மை கலங்கடித்து விடக்கூடியது. படத்தின் ஜீவனாகவும் அக்கதைதான் இயங்குகிறது.

டேனியல் தன் படத்துக்காக கதாநாயகியை தேடத்தொடங்குகிறான். ஆனால் சினிமாவில் நடிக்க பெண்கள் கிடைப்பது மிகமிக அரிதான காலத்தில், கஷ்டப்பட்டு ஒரு மேனாமினுக்கி மும்பை நாயகியை அழைத்துவருகிறான். அந்தப்பெண்ணோ ரயிலில் முதல்வகுப்பு டிக்கட் வேண்டும், தினக்கூலி 50ரூபா வேண்டும், மகாராஜாவின் பேலஸில் ரூம்போட்டுக்கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க அவளை திருப்பி அனுப்புகிறான்.

அவளுக்கு பதிலாக நடிக்க ரோசம்மா என்கிற ஒரு தலித் பெண்ணை தேர்வு செய்கிறான். அவள் ஒரு தெருக்கூத்து நடிகை. சினிமாவென்பதை கற்பனையில் மட்டுமே பார்த்தவள். சினிமாவில் நடிக்கப்போகிறோம் என்பதை அறிந்து தன் தோழியிடம் இதுபற்றிப்பேசுகிறாள். நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் என்று கேட்க தோழி ஒரு உடைந்த கண்ணாடியை எடுத்து நீட்டுகிறாள். அதில் ரோசம்மாவின் கறுத்த முகம் தெரிய.. பின்னணியில் சித்தாராவின் குரலில் வருகிற ஏலேலோவும் அதைத்தொடர்ந்து வருகிற ‘’இதுவரை நான் அறிந்ததேயில்லை..’’ என்கிற பாடல் வரிகளும் கவிதை.

ரோசம்மாவை நாயர் பெண்ணாக நடிக்க வைக்கிறார் டேனியல். முதன்முதலாக அவளை எல்லோரும் மதிக்கிறார்கள் என்பதையே நம்ப முடியாமல் ஸ்டுடீயோவுக்குள் திரிகிறாள். எல்லோரும் வீட்டுக்கு உள்ளே சாப்பிட இவள்மட்டும் புழக்கடையில் மூலையில் அமர்ந்தபடி சாப்பிடுவதும், டேனியல் சொல்கிற எதற்கும் மறுபேச்சு பேசாமல் கண்களை அகலவிரித்தபடி அவனுடைய அடுத்த சொல்லுக்காக காத்திருப்பதும், தான் நடித்ததை தன் தோழியிடம் ஆர்வத்தோடும் சின்ன குறும்போடும் பகிர்ந்துகொள்வதும்.. சூட்டிங் முடிந்த நாளில் தன்னுடைய மகாராணி வேஷம் கலைந்து மீண்டும் பழைய தலித்தாக வாழ வேண்டிய கட்டாயத்தை நினைத்து கலங்கும்போதும்... தன் படத்தை பார்க்க ஊர்மக்கள் அனுமதிக்காமல் தியேட்டருக்கு வெளியே கண்கள் கலங்க உள்ளேயிருந்து ‘’இதோ வந்துவிட்டாள் நம்முடைய நாயகி ரோசி’’ என்கிற குரலை கேட்டு உடைந்து அழுவதும்... ரோசம்மாவின் காட்சிகள் அத்தனையும் ஹைக்கூ தொகுப்பு.

ரோசம்மாவாக நடித்திருக்கும் சாந்தினியின் அகலமான கண்களும், அசரடிக்கிற புன்னகையும், குழந்தைகளின் முகத்தில் காணும் வெகுளித்தனமும், தனக்கொரு நல்வாழ்வு பிறந்துவிட்டதாக நினைத்து பூரிக்கிற நம்பிக்கையும் எல்லாமே அற்புதம்தான். படத்தின் ஹீரோ நிச்சயமாக ரோசம்மாதான்.

கண்களில் எப்போதும் நம்பிக்கை தெறிப்புடன் இளைஞனாக, பால்கேவின் ஸ்டுடீயோவில் முதன்முதலாக கேமராவை கண்டு உற்சாகமடையும்போதும், சென்னைக்கு வந்து சினிமாவை கற்றுக்கொடுங்க என்று தமிழ் தயாரிப்பாளரிடம் கேட்கும்போதும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாதாரண பல்மருத்துவராக இருக்கும்போது பியூசின்னப்பா மீண்டும் டேனியலின் மனதில் சினிமா ஆசையை விதைக்க தன்னுடைய கனவுக்கும் வாழ்க்கைக்குமாக தள்ளாடுகையிலும், அனைத்தையும் இழந்து தன் வாழ்வின் கடைசி நொடிகளில் கிடக்கையிலும் ப்ருதிவிராஜ் எவ்வளவு அற்புதமான கலைஞன் என்பதை உணரலாம்.

படம் முழுக்க டேனியலையும் ரோசம்மாவையும் பத்திரிகையாளனையும் வருடங்கள் கடந்தாலும் விடாமல் துரத்துகிறது சாதி. டேனியல் தன்னுடைய படத்தில் தலித் பெண்ணை நாயர் இனப்பெண்ணாக காட்டிவிட்டார் என்று படத்தை திரையிட விடாமல் தடுத்துவிடுகிறது உயர்சாதி வெறி. தலித் பெண் என்பதாலேயே நாயகியாகவே இருந்தும் தியேட்டருக்குள் அவளை அனுமதிக்க மறுத்து அவளை விரட்டுகிற சாதிவெறி. திரையிலும் கூட தலித்பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியாமல் சண்டையிடுகிற சாதிவெறி. ஷூட்டிங்கிலும் கூட தலித்பெண்ணோடு நடிக்கத்தயங்குகிற சாதிவெறி. ‘’மதம் மாறிவிட்டா மட்டும் நீ உயர்ந்துடுவியா கோலப்பா, சினிமாவில் நடிச்சிட்டா.. புல்லுவெட்ட இங்கதான் வந்தாகணும்’’ என்பதில் தெறிக்கிற சாதிவெறி.

2000வது ஆண்டுவரை பிராமணர் ஒருவர் எடுத்த ‘’பாலன்’’ என்கிற படம்தான் மலையாள சினிமாவின் முதல்படம். நாடார் சமூகத்தை சேர்ந்த டேனியலை அங்கீகரிப்பதில் இருந்த தயக்கத்துக்கு இதுவும் ஒருகாரணம் என்பதை ஒரு காட்சியில் போகிறபோக்கில் பொட்டில் அடித்தது போல உணர்த்திவிடுகிறார் இயக்குனர் கமல்.

நம் ஊரில் இது சாத்தியமா தெரியவில்லை படம் முழுக்க நாயர்,பிள்ளை,ஐயர் என தீண்டாமையை வலியுறுத்துகிற கதாபாத்திரங்களின் சாதியை நேரடியாகவே குறிப்பிடுகிறார்கள். மலையாள சினிமாவுக்கேயுண்டான சுதந்திரம். இங்கே அப்படிபடமெடுத்தால் தியேட்டர்கள் கொளுத்தப்படலாம்.

மலையாள சினிமாவின் தந்தைக்கு கேரள சினிமா செய்திருக்கிற ஆகச்சிறந்த மரியாதை இது. அதை எந்த வித சமரசங்களும் இல்லாமல் செய்திருப்பது நிச்சயம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் பாராட்டப்படவேண்டியதுமாயிருக்கிறது. இப்படம் விரைவில் ஜேசி டேனியல் என்கிற பெயரில் தமிழிலும் டப்செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.