Pages

03 July 2013

குட்டி இளவரசன்






 ‘’அந்துவான்ந்த செய்ன்த் எக்சூபெரி’’ என்கிற பெயரை படிக்கும் போதே கோமாளியை கண்ட குழந்தையின் குதூகலத்தை அடைய முடிந்தது. அவர்தான் குட்டி இளவரன் என்கிற பிரெஞ்சு நாவலை எழுதிய எழுத்தாளர். 

சிறுவர் இலக்கியம் என்று நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி குட்டி இளவரசன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அதோடு தலைப்பு வேறு குட்டி இளவரசன் என்பதும் அட்டைப்படத்தில் கார்ட்டூன் போட்டு வைத்திருக்கிறார்கள்... இதற்கு மேல் எப்படி அது குழந்தைகளுக்கான புத்தகம்தான் என்பதை நம்பாமலிருக்க முடியும்.

ஆனால் நாலைந்து பக்கம் படித்து முடிக்கும்போதுதான் உணர்ந்தேன். இது நிச்சயமாக குழந்தைகள் இலக்கிய வெங்காயமெல்லாம் இல்லை, இது பெரியவர்களுக்கான குழந்தைகள் இலக்கியம் என்று. அதையேதான் நூலாசியர் எக்சூபெரியும் குறிப்பிடுகிறார். அவர் இப்புத்தகத்தை பெரியவர்களுக்குள் இருக்கிற அல்லது இல்லாமல் போன குழந்தைகளுக்கே சமர்ப்பிக்கிறார்.

''எல்லா பெரியவர்களும் ஒருகாலத்தில் குழந்தைகளாகத்தான் இருந்தனர். ஆனால் சிலருக்குத்தான் அது நினைவிருக்கிறது'' என்கிற வரிகள் புத்தகத்தில் வருகின்றன. அப்படி தங்களை சிறார்கள் என்று மறந்துபோன பெரிசுகளுக்காவே இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் எக்சூபெரி!

ஒரு சுயசரிதையை போல தொடங்குகிறது குட்டி இளவரசன் நாவல். ஒவியனாகவேண்டும் என்பது நாயகனுக்கு ஆசை. ஆனால் ஆறுவயதில் அதற்கு தடைபோடப்பட்டு அவன் வளர்ந்து பைலட் ஆகிறான். ஆனாலும் அவன் ஆறுவயதில் வரைந்த ஒரு ஓவியத்தை கொண்டு மனிதர்களை எடைபோடுகிறார். ஒரு மலைப்பாம்பு யானை விழுங்கிவிட்ட ஓவியம் அது. ஆனால் அதை பார்க்கிற எல்லோருக்குமே அது தொப்பியாகத்தான் தெரிகிறது. எரிச்சலுற்று அந்த பெரியமனுங்களோடு அவன் உலகின் சகல வியாக்கியானங்களையும் பேசத்தொடங்குகிறான்.

ஒருமுறை தனியாக விமானத்தில் பயணிக்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாலைவனமொன்றில் தனித்து கிடக்கிறான். அங்கே யாருமேயில்லை. திடீரென அங்கே வருகிறான் ஒரு குட்டிப்பையன் அல்லது குட்டி இளவரசன். அவன் வேறொரு கிரகத்திலிருந்து வருவதாக சொல்கிறான். குட்டி இளவரசனின் கிரகத்தில் ஒரு ரோஜா செடி, மூன்று எரிமலைகள் அதில் ஒன்று அணைந்த எரிமலை மற்றும் சில பாப்லோப் மரங்கள் மட்டும்தான் உள்ளன. இவனைத்தவிர யாருமே அங்கு இல்லை.

இவன் அங்கிருக்கிற அந்த ரோஜாவை நேசிக்க ஆரம்பிக்கிறான். அதுவும் இவனை நேசிக்கிறது. ஆனால் அது எப்போதும் முறைத்துக்கொண்டு திரிகிறது. ஒருநாள் தனக்கொரு வேலையை தேடிக்கொண்டு அவன் பக்கத்து கிரங்களுக்கு பயணிக்கிறான் அங்கே ஒரு அரசன், குடிகாரன், பிஸினெஸ்மேன், தெருவிளக்கை ஏற்றுபவன், புவியியலாளன் என பலரையும் சந்திக்கிறான். அவனுக்கு வினோதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவர்களை கடந்து இறுதியில் பூமியை அடைகிறான். இங்கே அவனுக்கு ஒரு நரி நண்பனாக கிடைக்கிறது. அந்த நரி இளவரசனக்கு ஒரு ரகசியம் சொல்கிறது. நரியை விட்டு பிரிந்து மேலும் பூமியில் பயணிக்கிறான். வழியில் ஒரு மஞ்சள் பாம்பு அவனோடு நட்பாகிறது. அவனுயை கிரகத்துக்கு திரும்பி செல்ல உதவுவதாக வாக்களிக்கிறது.

பிறகுதான் அவன் நம் நாயகனை சந்திக்கிறான். இருவரும் தண்ணீர் தேடி பாலைவனத்தில் அலைய இறுதியில் ஒரு கிணற்றை கண்டுபிடிக்கின்றனர். தண்ணீர் குடிக்கின்றனர். அடுத்த சிலநாட்களில் குட்டி இளவரசன் நாயகனை விட்டு விலகி காணாமல் போகிறான். அவன் பழைய கிரகத்துக்கே சென்றிருக்க கூடும் என நாயகன் நம்புகிறான். அவன் போகும்போது இனி நீ வானத்து நட்சத்திரங்களை பார்க்கும்போது அங்கிருந்து நான் புன்னகைப்பேன் அது உனக்கு மட்டுமே தெரியும் என்பதாக கூறிவிட்டுப்போகிறான். நாயகன் தன்னுடைய விமான என்ஜினை சரிசெய்து ஊருக்கே திரும்புகிறான்.

மேலோட்டமாக படிக்கும்போது மிக எளிமையான குழந்தைகள் கதையைப்போலவே இருந்தாலும் அது திரும்ப திரும்ப ஒரே ஒருவிஷயத்தை வலியுறுத்துகிறது. நம் எல்லோருக்குள்ளேயும் இருந்த குட்டி இளவரசனை பற்றியது. குட்டி இளவரசன் கதை முழுக்க எதையுமே வணிக ரீதியிலோ, அறிவார்ந்தோ, கணக்கிட்டோ , விஞ்ஞானப்பூர்வமாக அலசுவதில்லை. அவனுக்கு எல்லாமே அழகுதான். அவன் தன்னுடைய ஒற்றை ரோஜாவை காதலிக்கிறான். அதை பற்றியே கவலைப்படுகிறான். ஆட்டின் படத்தை நிஜ ஆடாக நம்புகிறான். அவன் மட்டும்தான் நாயகனின் மலைபாம்பு தின்ற யானையின் படத்தின் சூட்சமத்தை சரியாக கூறுகிறான். அணைந்து போன எரிமலை கூட என்றாவது உபயோகப்படும் என்று திரும்ப திரும்ப நம்புகிறான்.

கதையில் மீண்டும் மீண்டும்சொல்லப்படுகிற ஒரு வசனம் எல்லாவற்றையும் மொத்தமாக சொல்லிவிடும்.

‘’தன்னுடைய இதயத்தினால் பார்க்கிறவனால் மட்டுமே ஒன்றை முழுமையாக பார்க்க முடியும்!’’

இது குழந்தைகளுக்கே சாத்தியமான ஒன்று. வரண்டுபோன தொண்டையோடு சுற்றிக்கொண்டிருந்தாலும் குழந்தை உள்ளம் தேடுவது அழகினை மட்டும்தான் என்பது இன்னொரு இடத்தில் அழகாக வெளிப்பட்டிருக்கும். ''இந்த பாலைவனத்துக்கு அழகு தருவது கிணற்றை எங்கேயோ ஒளித்துவைத்திருப்பதுதான்'' என்பான் குட்டி இளவரசன்.

நாம் எங்கோ வழியில் தொலைத்துவிட்ட பால்யம் எனும் குட்டி இளவரசனுக்கான தேடலை இந்நூல் நிச்சயமாக தொடங்கி வைக்கும். மிகச்சிறிய புத்தகமென்பதால் சீக்கிரமே படித்துவிடலாம். ஒருமுறை படித்துவிட்டால் திரும்ப திரும்ப படிக்க வைக்கிற ஒருவித போதையேற்றுகிற தன்மை இப்புத்தகத்திற்கு இருப்பதாக நினைக்கிறேன். இதுவரை மூன்றுமுறை வாசித்துவிட்டேன். மீண்டும் வாசிப்பேன் என்றே நம்புகிறேன்.

(இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழுக்கு மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்துள்ளனர். )

புத்தகம் குறித்த விபரங்களுக்கு - http://www.crea.in/kutti.html