Pages

09 August 2013

திராவிடர் இயக்கம் FOR DUMMIES!




ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் கலைஞர் கருணாநிதிதான். அதை உணரவேண்டுமென்றால் அப்படியே ஜாலியாக இணையத்தில் சுற்றுப்பயணம் செய்தால் போதும். நேற்று முளைத்த நெல்லிவிட்டைகள் கூட கலைஞரை ஏகவசனத்தில் விமர்சித்துக்கொண்டிருப்பதை காணலாம். பெருமாள் கோயில் பொங்கலில் உப்பு இல்லையென்றாலும் கூட கருணாநிதியின் சதி என்று கூச்சலிடுவதை கண்டுசிரிக்கலாம்.

கலைஞர் மட்டுமல்லாது கடந்த சிலவருடங்களாக இணையத்திலும் வெவ்வேறு தளங்களிலும் இயங்குகிற இளைஞர்களும் தொடர்ந்து திராவிட இயக்கங்களையும் தாறுமாறாக விமர்சித்தே வருகின்றனர். ஆனால் இந்த இளைஞர் தலைமுறைக்கு திராவிட இயக்கங்கள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும், நூறாண்டுகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தொடர்ந்து சமூகநீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவருகிற அதன் வேர்களை பற்றியும் கொஞ்சமாவது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சொல்லப்போனால் இந்த இளைஞர்களுக்கு சமூகநீதி என்கிற வார்த்தைக்கே பொருள் தெரியாது. இடஒதுக்கீடு என்பதன் அர்த்தமும் அதற்கு பின்னால் இருக்கிற பலருடைய தியாகங்களும் தெரியாது. இன்று மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றமும் வந்தடைந்திருக்கிற மாற்றங்களுக்கும் அதற்கு காரணமான திராவிடர் இயக்கங்களின் போராட்டங்களும் புரியாது.

சாதிக்கெதிராக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அதிகாரத்தின் சகல இடங்களையும் ஆக்கிரமித்திருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களின் போராட்டங்களை பற்றி ஒன்றுமே தெரியாது.

எவ்வளவு பலமான அஸ்திவாரமிருந்தால் இத்தனை ஊழல்களுக்கு மத்தியிலும், அவப்பெயர்களுக்கு மத்தியிலும், குடும்ப ஆதிக்கங்களுக்கு மத்தியிலும். திராவிட இயக்கங்கள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்க முடியும். அந்த வலுவான வேர்களை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்துகிறது கோவி லெனின் எழுதிய திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் என்கிற நூல்.

திராவிட இயக்கத்தின் நூறாண்டுகால வரலாற்றை ஒரு சுவாரஸ்யமான ஆக்சன் பட கதையைப்போல விறுவிறுப்பாக சொல்கிறது இந்நூல். டாக்டர் நடேசன் துவங்கிய பிராமணரல்லாதோர் சங்கத்திலிருந்து துவங்கி இதோ இப்போது எந்தக்கொள்கையுமேயில்லாமல் கட்சி தொடங்கி பத்து சதவீத ஓட்டுவங்கி வைத்திருக்கிற விஜயகாந்த் வரைக்குமான அரசியல் வரலாற்றினை 300 பக்கத்தில் எளிய நடையில் அறிமுகம் செய்கிறது இந்நூல். எத்தனை போராட்டங்கள், சறுக்கல்கள், தியாகங்கள், எழுச்சி, வீழ்ச்சி என திராவிடர் இயக்கத்தின் சகல விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது இந்நூல். திராவிடர் இயக்க அரசியலென்பது இம்மண்ணின் அரசியல், அது இந்த மக்களின் அரசியல், அவர்களுடைய விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட அரசியல் என்பதை படிக்கும்போது உணரமுடியும்.

அதற்காக ஒரேயடியாக பாராட்டித்தள்ளாமல் திராவிடர் இயக்கத்தின் மீதான காழ்ப்புணர்ச்சிகளின்றி பொறுப்புடனும் அக்கறையுடனும் அக்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறார் லெனின். திராவிடர் இயக்கம் தொடர்பாக நமக்கு இருக்கிற அனேக கேள்விகளுக்கும் இந்நூலில் பதில்கள் உள்ளன.

அது என்ன திராவிடர்? ஏன் தமிழர் என்று பெயரில்லை? நீதிக்கட்சி ஏன் தொடங்கப்பட்டது? அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏன் உதவுவதாக இருந்தது? அக்கட்சி ஏன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை? 17ஆண்டுகள் தொடர்ந்து சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி ஏன் தோல்வியை சந்தித்தது? அதற்கு பிறகு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றகழகமாக எப்படி ஆட்சியை பிடித்தது? பெரியாரும் அண்ணாவும் ஏன் பிரிந்தனர்? பெரியார் திமுகவை ஏன் எதிர்த்தார்? பெரியார் தமிழை காட்டிமிராண்டி மொழி என்று சொன்னாரா? பெரியாரின் கொள்கைகளை திராவிடகட்சிகள் எந்த அளவுக்கு செயல்படுத்தி காட்டியுள்ளன? பெண்கள் விடுதலைக்காக என்ன செய்துவிட்டது திராவிடர் இயக்கம்? திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா கைவிட்டார்? மதுவிலக்கு பிரச்சனையில் திமுக மட்டும்தான் குற்றவாளியா? எம்ஜிஆரும் கலைஞரும் ஏன் பிரிந்தனர்? சர்க்காரியா கமிஷனின் விஞ்ஞானபூர்வமான ஊழலுக்கு பின்னுள்ள அரசியல் என்ன? ஈழ விவகாரத்தில் கலைஞர்மட்டும்தான் ஒரே குற்றவாளியா? வைகோவால் கம்யூனிஸ்ட்டுகளால் ஏன் தமிழக அரசியில் பிரகாசிக்க முடியவில்லை? விஜயகாந்தால் எப்படி கொள்கையே இல்லாமல் கட்சி நடத்தமுடிகிறது? திராவிடர் கட்சிகள் தமிழகத்திற்கு என்ன செய்து கிழித்துவிட்டன? நாம் என்ன அப்படி முன்னேறிவிட்டோம்? இந்துத்துவா கட்சிகள் ஏன் ஜெவை ஆதரிக்கின்றன? ஏன் எல்லா பத்திரிகைகளும் திமுகவையே குறிவைத்து அளவுக்கதிகமாக விமர்சிக்கின்றன?
உஃப் மூச்சு வாங்குகிறது.

இப்படி திராவிட இயக்கத்தை விமர்சிக்கிற ஆதரிக்கிற ஒவ்வொருவருடைய கேள்விக்கும் இப்புத்தகத்தில் ஆதாரங்களுடன், ஆய்வு நூல்களின் மேற்கோள்களுடன் விடையளிக்கிறார் கோவி லெனின். இக்கேள்விகளை ஒரு பேராண்டி கேட்பதாகவும் அதற்கு ஒரு திராவிடர் தாத்தா பதில் சொல்வதுமாக எழுதியிருப்பது படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது. சில விடைகளே கூட கேள்விகளாக மாறி பின் அதற்கும் ஆய்வு நூல் ஆதாரங்களை அடுக்குகிறார் தாத்தா! திராவிடர் இயக்கம் தோத்துடுச்சா தாத்தா என்று பேரன் கேட்க பதறிப்போகும் தாத்தா அதற்கு சொல்கிற பதிலை படிக்கும்போது கலங்கிப்போன கலைஞரே பதில் சொல்வதாக உணர்ந்தேன். என்ன பதில் சொன்னார் என்பதை புத்தகத்தில் படித்துக்கொள்ளவும்.

அதோடு அண்ணா,பெரியார் மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் கலைஞர் காலத்தில் திராவிடர் இயக்க கட்சிகள் தன்னுடைய கொள்கை அரசியலை கைவிட்டு சுயவிருப்பு வெறுப்பு சார்ந்த அரசியலை கையிலெடுத்துகொண்டதையும், அதனால் இங்கே உருவான அரசியல் மாற்றங்களையும் விரிவாக விமர்சனம் பண்ணியிருக்கிறார் லெனின். அதோடு வெறும் கலைஞர் எதிர்ப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பண்ணுகிற ஜெவின் அரசியலையும் அதை தாக்குமுடியாமல் தடுமாறி திமுக தன் கொள்கைகளை கைவிட நேர்ந்ததையும் கூட விமர்சிக்கிறார்.

சாதிவிஷயத்தில் திமுகவும் அதிமுகவும் கொஞ்சம் முன்னபின்ன அட்ஜெஸ்மென்ட் பண்ணிக்கொண்டதால் உண்டான சறுக்கல்கள். குறிப்பாக தலித் மக்களுக்கு இன்றுவரை இழைக்கப்படும் அநீதிகளை திராவிடகட்சிகள் கண்டும் காணாமல் எதிர்கொள்ளும் நிலை. இக்கட்சிகளின் சில மோசமான நடவடிக்கைகளால் திராவிடர் இயக்கத்தின் அடிப்படையான சமூகநீதி என்கிற விஷயமே இப்போது கேள்விக்குள்ளாகியிருப்பது. ஒட்டரசியலுக்காக திருமங்கல் ஃபார்முலா வரை தரம் தாழ்ந்துபோனது, கலைஞரின் குடும்ப அரசியலால் உண்டான சலசலப்பு, ஜெவின் இந்துத்துவா நிலைப்பாட்டால் திராவிடர் கொள்கைகள் காற்றில் பறந்தது என பல விஷயங்களை தொட்டுச்செல்கிறது நூல்.

கடந்த நூறாண்டுகளில் சமூக தளத்திலும் பண்பாட்டு தளத்திலும் தமிழர்கள் வந்தடைந்திருக்கிற மாற்றத்தை நூலை படித்து முடிக்கும்போது உணர முடிகிறது. வருங்காலத்தில் திராவிட இயக்கம் தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ளவும் புதிய இளைஞர்களிடம் தன் சமூகநீதி சார்ந்த கொள்கைகளை கொண்டு செல்லவும் என்னவெல்லாம் செய்யலாம் என்கிற பரிந்துரைகளையும் வழங்குகிறார்.

நூலின் மிகப்பெரிய குறையாக நான் கருதுவது கடந்த பதினைந்தாண்டுகால அரசியல் வரலாற்றை விரைவாக தாண்டியதுதான். அதை இன்னும்கூட விரிவாக அணுகியிருக்கலாம். திராவிடர் இயக்கம் வீழத்தொடங்கியது இந்த காலத்தில்தானே! அது இன்னும்கூட வீழ்ச்சிக்கான காரணங்களை விரிவாக அலசியிருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்.

கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவதைப்போல தமிழக அரசியலை அதன் பின்னணியை கற்றுத்தருகிறார் கோவிலெனின். தமிழக அரசியல் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், திராவிட இயக்கங்களை பற்றி தெரிந்துகொள்ளவிரும்புபவர்கள், திராவிடர் இயக்கங்களை விமர்சிக்கவோ பாராட்டவோ திட்டவோ விரும்புகிறவர்கள் என அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய நூலாக இது இருக்கிறது. (திட்ட நினைப்பவர்களுக்கு நிறைய பாயின்டுகள் கிடைக்கும்) அதோடு தமிழக அரசியல் குறித்த சிறந்த அறிமுகத்தையும் தேடலையும் நமக்குள் உண்டாக்கிவிடுகிறது இந்நூல்.



***

திராவிடர் இயக்கம் - நோக்கம்,தாக்கம்,தேக்கம்
கோவி.லெனின்
நக்கீரன் பதிப்பகம்
விலை.175

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க - http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D