Pages

30 June 2013

பாரதிராஜாவின் அர்ணாக்கொடி!




பாரதிராஜா இதுவரை வெவ்வேறு ஜானர்களில் படமெடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை அவர் ஒரு முழூநீள காமெடி படமெடுக்கவில்லையே என்கிற ஏக்கம் எல்லோருக்குமே உண்டு. அவருடைய மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மகால் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றென கருதலாம். அதில் காமெடி அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. படுதோல்வியடைந்த படம். ஆனால் சமீபத்தில் திரைகண்டிருக்கிற அன்னக்கொடி இதுவரை தமிழில் வந்த சகல காமெடி படங்களின் சாதனைகளையும் ஒரே பாய்ச்சலில் டுபக்காய் டுபுக்காய் என்று தாண்டிவிடுகிறது.

தியேட்டர்களில் முதல் காட்சியில் தொடங்கும் சிரிப்பலை ''அன்புடன் பாரதிராஜா'' என்கிற கட்டைகுரல்வந்து திரை இருளும் வரை நீளுகிறது. சமீபத்தில் வெளியான எந்த படமும் இந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்கவைத்திருக்காது. சூதுகவ்வும், பீட்சா, நகொபகாணோம் முதலான இளம் இயக்குனர்களின் காமெடிகளை ஒருசிலகாட்சிகளில் அடித்து தொம்சம் பண்ணுகிறார் இயக்குனர் இமயம். யெஸ் ஹீ ஈஸ் பேக்!

நகைச்சுவை மட்டுமல்லாது சமகால ரசிகர்களை குஷிப்படுத்த படம் முழுக்க கில்மா காட்சிகளை ஆங்காங்கே தூவி விட்டு அனைத்து தரப்பினருக்குமான படமாக படத்தை மாற்றுகிறார். மாமனாரின் இன்பவெறி என்கிற படத்திலிருந்து சில காட்சிகளையும் லாவகமாக படத்தில் கையாண்டிருப்பது சிறப்பு. அந்த படத்துக்கு ட்ரீபூட்டாக இருக்குமோ என்னவோ? படத்தில் ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக சோக காட்சியிலும்கூட ஹீரோயின் ஜாக்கெட்டை கழட்டி ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார். அவர் மட்டுமல்லாது அம்மாவின் கைப்பேசி புகழ் ஆன்ட்டியும் ஜாக்கெட்டில்லாமல் சைடு வாக்கில் சிலகாட்சிகளில் கவர்ச்சி விருந்து படைக்கிறார்.

படத்தின் முதல்பாதி முழுக்க ரொமான்டிக் கில்மா காமெடி நிறைந்திருக்கிறது. ஹீரோவும் ஹீரோயினும் போலீஸ்துரத்துகிறது என்று ஓடுகிறார்ள். ஓடும்போது ஹீரோ காலில் முள்ளுகுத்திவிடுகிறது. உடனே ஹீரோயின் தன் ஒருகால் செருப்பை கழட்டி கொடுக்கிறார். அன்றைய இரவு ஒரு கயிற்றில் அந்த செறுப்பை கட்டிவைத்துக்கொண்டு மோப்பம் புடிக்கிறார் ஹீரோ.. அதற்கு முத்தம் கொடுக்கிறார். அவ்வப்போது மோந்து மோந்து பார்க்கிறார். தமிழ்சினிமா இதுவரை கண்டிராத காட்சி அல்லவா இது!

தமிழ்சினிமா கண்டிராத இன்னொரு காட்சி ஹீரோயின் விரல்சப்பும் காட்சி. இந்த முறை ஹீரோயினுக்கு காலில் முள் குத்திவிடுகிறது. இம்முறை ஹீரோ அதற்கு ஒரு வைத்தியம் சொல்கிறார். சுனை தண்ணி கலந்த களிகஞ்சி தின்ன விரலை சூப்பினா விஷமுள் குத்தின காயம் ஆறிடுமாம். (சிவராஜ் சித்தவைத்தியர் ப்ளீஸ் நோட்!) அதனால் ஹீரோயினுக்கு நேராக வெள்ளை கஞ்சி வழிய நடுவிரலை நீட்டுகிறார் ஹீரோ... அதை ஹீரோயின் வாயில் வைத்து (க்ளோஸ் அப்பில்!) சூப்புகிறார். உடனே ஹீரோ தனது ஆட்காட்டி விரலை நீட்டுகிறார்.. மீண்டும் க்ளோஸ் அப். ஹீரோயின் வாய். சூப்புதல். அடுத்து மூன்றாவது விரல். இந்த முறையும் அதே. போர்னோ படங்களுக்கு சவால் விடுகிற காட்சி இது!

படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், வில்லனின் அப்பா என எல்லா முக்கிய கேரக்டர்களுமே ஏதாவது ஒரு காட்சியில் விரல் சூப்புவதாக காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர் இமயம். அவர் இந்த நாட்டுக்கு ஏதோ சொல்ல நினைத்திருக்கிறார். என்னைப்போன்ற ட்யூப்லைட்டுக்குதான் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்தாலும் புரியலாம். இதுபோக ஹீரோயினை தோளில் உட்காரவைத்து தொடைமுனையில் முத்தம் கொடுக்கிற எழுச்சிமிகு காட்சிகளும் நம் புரட்சி இயக்குனரின் படத்தில் உண்டு.

தீப்பெட்டி கூட இல்லாத கரிசல் காட்டு கிராமத்தில் ஹீரோயின் கார்த்திகா புருவத்துக்கு த்ரெடிங் பண்ணி இமைகளில் ஜிகினா போட்டு, உதட்டில் லிப்க்லாஸ் பளிரிட கண்களை உருட்டி உருட்டி க்ளோஸ் அப்பில் பார்க்கிறார். பாரதிராஜா இந்த பாவிப்பயபுள்ளய நடிக்கவைக்க படாதபாடு பட்டிருப்பாரு போல.. அந்த பிள்ளையும் 'சார் இப்ப நடிக்கறேன் பாருங்க..' இதோ இப்ப பாருங்க நல்லா நடிக்கறேனு படம் முழுக்க நடியா நடிக்குது. இதுக்குபதிலா ஜோடி நம்பர் ஒன் ஷூட்டிங்லருந்து ராதாவையே இட்டுகினு வந்து நடிக்க வச்சிருக்கலாம் இயக்குனர் இமயம்.

படத்தின் ஹீரோவான புதுமுகம் லக்ஸ்மன் கிரிக்கெட் வீரராம். விவிஎஸ் லக்ஸ்மன் இல்லை. இவர் யாரோ தேனீ லக்ஸ்மனாம். நன்றாக கிரிக்கெட் ஆடுவாராம். இமயத்துக்கு தெரிந்தவர் போல. படம் முழுக்க ஒரு பக்கமாக கம்மல் போட்டுக்கொண்டு, மீசை தாடியெல்லாம் ட்ரிம் பண்ணிக்கொண்டு அல்ட்ரா மாடர்னா வருகிறார்.

இப்படி படத்தின் ஹீரோவும் ஹீரோயினும் நடிப்பதற்காக போராடிக்கொண்டிருக்க.. இயக்குனர் மனோஜ் என்ட்ரி! என்னைக்கு மனோஜ் வயதுக்கு வந்தாரோ அன்றிலிருதுதான் பாரதிராஜாவின் ஜாதகத்தில் சனிபகவான் சம்மனமிட்டு அமர்ந்தார் என்பது வரலாறு. இப்படம் ஆல்ரெடி பப்படமாகிவிட்டிருந்ததால்... மனோஜ் வந்துதான் அதை காலிபண்ணினார் என்கிற அவப்பெயரை அவருக்கு மட்டுமே தரக்கூடாது.

வெடக்கோழி கொழம்புதான் விளைஞ்ச நெல்லு சோறுதான் டன்டனக்கா டனக்குதான் சடயன் போட்ட கணக்குதான் என்று மனோஜ் கீச்சு குரலில் கீய்ங் கீய்ங் என்று பாட்டு பாட.. அவர்குரலில் குயில்களும் கிளிகளும் தோற்கின்றன. அவர்தான் வில்லனாம். அதனால் ஒட்டு மீசை வைத்துக்கொண்டு பட்டாப்பட்டி தெரிய வேட்டி கட்டிக்கொண்டு ஏய் ஓய் என்று முறைத்தபடி மாட்டுவண்டியில் சுற்றுகிறார்.

மேமேமேமே என்று எந்திரன் ரஜினிபோல படம்முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார். இவருக்கு பதிலாக ஒரு நல்ல ஆட்டை நடிக்க வைத்திருக்கலாம். அது இவரைவிட சிறப்பாக மேமேமே என்று கத்துவதோடு ஒரிஜினல் தாடியோடு நடித்திருக்கும் இல்லையா? அமீரும் பார்த்திபனும் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார்கள்.

படத்தில் ஒரு கொடூரமான போலீஸ் கதாபாத்திரம் வருகிறது. விழிகளை மிரட்டி உருட்டி.. ஏய் அவனை பிடிச்சு கட்டு இவனை போட்டு உதை என்றெல்லாம் கத்தி ஆர்பாட்டம் பண்ணுகிறார். படத்தின் ஃபைனான்சியர் போல கடன்பாக்கிக்காக ஒரு கேரக்டரை கொடுத்திருப்பாராயிருக்கும் இயக்குனர் இமயம்.

படத்திற்கு குளோஸ் அப் டூத் பேஸ்ட் கம்பெனி ஏதாவது ஸ்பான்சர் பண்ணியிருப்பார்கள் போல. படத்தில்வருகிற எல்லா பாத்திரங்களுக்கும் தலா பத்து குளோஸ் அப் என்கிற அடிப்படையில் படம் முழுக்க ஆயிரக்கணக்கான குளோஸ் அப்கள். எல்லாமே கதற அடிப்பவை ரகம். பேய்ப்படம் மாதிரி எவ்வளவு முறைதான் பயந்துபோய் கண்ணை பொத்திக்கொள்வது இமயம்சார்.

படத்தின் இசை ஜி.வி.பிரகாஷாம். சமீபத்தில் இவ்வளவு கேவலமான பின்னணி இசை கொண்ட படத்தை பார்த்திருக்க முடியாது.காட்சிக்கும் இசைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல்... இசை என்கிற பெயரில் அவரும் காமெடிதான் பண்ணிருக்கிறார் போல...

தமிழ்சினிமா கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு நிலைகளில் பரிணாம வளர்ச்சியடைந்து இன்று சூதுகவ்வி பீட்சா தின்றபடி மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாரதிராஜா மட்டும் இன்னமும் முதல்மரியாதை காலத்திலேயே பழைய நினைப்பிலேயே ஆலமரத்தடியில் தூங்கிக்கொண்டு தேங்கிவிட்டிருக்கிறார். அவர் கடைசியா பார்த்தா இங்கிலீஸ் படம் ஷோலேவாய் இருக்குமோ என்னமோ? இன்னமும் பதினாறு வயதினிலே காலத்து ஓட்டு வண்டியையே ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

கார்த்திகா விரல் சூப்பும் காட்சி பற்றி பார்த்தோம் இல்லையா.. அந்த காட்சியின் முடிவு என்ன தெரியுமா? ஹீரோவோடு கோபித்துக்கொண்டு தன் தோழிகளோடு நடந்துபோகிறார் ஹீரோயின். திடீரென வயிற்றைப்பிடித்துக்கொண்டு நடுரோட்டில் உட்கார்ந்து கொள்கிறார். கட் பண்ணினால் குலவை சத்தம்... கார்த்திகா வயசுக்கு வந்துவிட்டாராம்!

கிளைமாக்ஸில் வில்லன் ஓடி வந்து ஹீரோவை வெட்ட பாய ஹீரோ குனிந்துவிட அரிவாள் அவனுடைய கழுத்தையே வெட்டிவிடுகிறது. ஆனாலும் வில்லன் சாவதற்கு முன்பு அவனுடைய டிரேட் மார்க் பாடலான வெடக்கோழி குழம்புதான் பாடலை.. சோகமாக... வெட....க்கோழி... குழம்புதான்.. என்று முழுசாக பாடிவிட்டுத்தான் மண்டையை போடுகிறார்.

ஒரு தலித்தை நாயகனாக ஆக்கி முழுப்படம் எடுக்க முனைந்ததும், உயர்சாதிக்காரனை ஆண்மையற்றவனாக சித்தரித்ததும் முற்போக்கு சிந்தனையாளர்களால் நிச்சயம் பாராட்டப்படும். ஆனால் அதற்காக மிகமிக சுமாரான பலமுறை ஏற்கனவே அரைத்த காட்சிகளையும் கொஞ்சமும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையையும் சகித்துக்கொள்ள முடியவில்லையே. திரைக்கதை முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.

பாரதிராஜாவின் வெற்றிக்கு பின்னால் இளையராஜா,செல்வராஜ்,மணிவண்ணன்,பாக்யராஜ்,வைரமுத்து என பலரும் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது அன்னக்கொடி. இன்று அத்தனை பேரையும் புறக்கணித்துவிட்டு ஒற்றை ஆளாக தன்னை நிரூபிக்க போராடுகிறார் பாரதிராஜா. ஆனால் அவரால் ஒரு அடிகூட முன்னால் நகரமுடியவில்லை.

அவரிடம் நல்ல கதையில்லை.. அவரே யோசித்த மொக்கைகதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை.. உருக்காமான காட்சிகளுக்கேற்ற இசை இல்லை.. பாடல்களில் உயிரில்லை.. இப்படி வேரான விஷயங்கள் ஏதுமின்றி அர்ணாகொடியில்லாத கோவணம்போல வந்திருக்கிறது இந்த அன்னக்கொடி!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பாரதிராஜாவின் தெக்கத்தி பொண்ணு சீரியல் ரொம்ப சுமார்தான் என்று ஒரு விமர்சனம் உண்டு! ஆனால் அன்னக்கொடி படத்தை பார்த்து முடிக்கும்போது தெக்கத்திப்பொண்ணு எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது.








26 June 2013

புரூஸ்லீயை கொன்றது யாரு?




புரூஸ்லீயின் மரணம் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஆனால் எல்லாமே அமானுஷ்யமும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். அதில் மிகசிறந்ததும் எனக்கு பிடித்ததும் வைரத்தூள் கதைதான். புரூஸ்லீயைக் கொல்ல அவருடைய மனைவியே மோதிரத்திலிருந்த வைரத்தை பொடிபண்ணி பாலில் கலந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால்தான் புரூஸ்லீ இறந்துபோனதாகவும் மிகபிரபலமான ஒரு கதை உண்டு.

புரூஸ்லீயை கொல்வது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் ஷூட்டிங்கில் நிஜமாகவே அடித்துவிடுவார். அவருடைய மர்ம அடி தாங்காமல் நிறையபேர் ஷூட்டிங்கில் இறந்து போயிருக்கிறார்கள், அவர் ஒரு மாபெரும் பலசாலி, உக்கிரமானவர், துப்பாக்கி குண்டால் கூட அவர் உடலை துளைக்கமுடியாது என்றெல்லாம் பல கதைகள்! அதனால்தான் அவரை கொல்வதற்காக வைரத்தை பொடி பண்ணி உணவில் கலந்துகொடுத்து, அந்த வைரத்தூள் கூட அவருடைய இதயத்தில் சிக்கியதால் உண்டான மூச்சடைப்பால்தான் புரூஸ்லீ இறந்துபோனார் என்பதாக அந்தக் கதை விரியும்.

எல்லாமே பொய்தான் என்றாலும், சுவாரஸ்யமான காஸ்ட்லியாக கேட்கும் போது துள்ளலாக உணரவைக்கிற கதைகள் அவை. புரூஸ்லீ பற்றிய எல்லா தகவல்களுமே இதுபோன்ற ஃபேன்டஸி தன்மை நிறைந்ததாகவே கேள்விப்பட்டிருக்கிறேன்.

முழுதாக நடித்தது, நான்கே நான்கு படங்கள்தான். அவை எல்லாமே மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சாதாரண படங்கள். ஆனால் நான்கே படங்களில் பல கோடி ரசிகர் சாம்ராஜ்யத்தை தனக்கென உருவாக்கியவர் புரூஸ்லீ. அவர் இறந்தபின்பும்கூட, இன்றுவரை அவருக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் தினம் தினம் உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

புரூஸ்லீக்கு பிறகு ஏகப்பட்ட தற்காப்புக்கலை பயின்ற, சப்பைமூக்கு நடிகர்கள் ஹாங்காங்கிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் உருவாகிவந்தாலும், புரூஸ்லீ அடைந்த புகழில் ஒரு சதவீதத்தை கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. (ஜாக்கிசான் நீங்கலாக)

புருஸ்லீயின் பாதிப்பு நம்மூர் ரஜினி தொடங்கி, இதோ இப்போது வந்த தனுஷ் வரைக்கும் கூட தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ’பொல்லாதவன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த யாரும், தனுஷின் உடலில் புரூஸ்லீயை கண்டிருக்க முடியும். கோலிவுட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் இது தொடர்கிறது. ’குங்பூ ஹஸில், ஷாவலின் சாக்கர்’ படங்களை எடுத்த ஸ்டீபன் சாவ் கூட தன் படங்களில் இன்றுவரை தொடர்ந்து புரூஸ்லீக்கு மரியாதை பண்ணுகிறார். தாய்லாந்து நடிகரான டோனிஜா தன் படங்களின் திரைக்கதையில் புரூஸ்லீ பட பாணியை தொடர்ந்து புகுத்துவதை உணர்ந்திருக்கலாம்!

புரூஸ்லீ சிறப்பாக நடிக்க கூடிய நடிகரெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவருடைய படங்களில் அவர் நடித்ததை விட அடித்ததுதான் அதிகம். அப்படியிருக்க இத்தனை ரசிகர்களை கவரும்படி புரூஸ்லீ என்னதான் செய்துவிட்டார்? இவருடைய வெற்றி எதிர்பாராததா? காக்காய் உட்கார விழுந்த பனம்பழமா புரூஸ்லீயின் வெற்றி? புரூஸ்லீயின் மரணத்திற்கு பின்னாலிருந்த புதிர் என்ன? புரூஸ்லீயின் பாணி இன்றுவரை தொடர்கிற சூட்சமம் என்ன? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது அபிலாஷ் எழுதியுள்ள ‘’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ என்கிற புத்தகம்.

தமிழில் வெளியாகிற பயோகிராஃபி புத்தகங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை. பக்திப் படங்களில் ஒரு பாணி உண்டு. எந்த கடவுள் ஹீரோவோ அவருக்கு சகல சக்திகளும் கிடைத்துவிடும். அது விநாயகராக இருக்கலாம் அல்லது முருகனாக இருக்கலாம், சிவனாக இருக்கலாம்... படத்தில் யார் கடவுளோ அவரைத்தான் மற்ற கடவுளர்கள் விழுந்து வணங்கி வழிபடுவார்கள். அவர் மட்டும்தான் உலகை காப்பாற்றுவார். நம்முடைய தமிழ் பயோகிராஃபி புத்தகங்களை வாசிக்கும்போதும் இதை உணரலாம். யாரைப் பற்றின புத்தகமோ, அவரால்தான் அவரால் மட்டும்தான் உலகைக் காப்பாற்ற முடியும் என்கிற உணர்வு! புத்தகம் முழுக்க தனிமனித வழிபாடு மிதமிஞ்சியிருக்கும்.

யாருடைய வரலாறோ, அவருடைய பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே தொடர்ந்து முன்வைக்கிற புத்தகங்களே நமக்கு படிக்க கிடைத்திருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கை வரலாறு என்பதே நமது சுயமுன்னேற்றத்திற்காக படிக்க கூடியதாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு ஆளுமையின் எல்லா பக்கங்களையும் கோட்பாட்டு ரீதியிலும், தத்துவரீதியிலும் ஆராய்கிற புத்தகங்கள் நம்மிடம் ரொம்பவே குறைவு.

புரூஸ்லீயின் வாழ்க்கையை பற்றிய அபிலாஷின் இந்த புத்தகம் இவைகளுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. புரூஸ்லீயின் பாசிட்டிவ் பக்கங்களைச் சொன்னாலும், நமக்குத் தெரியாத புரூஸ்லீயின் பலவீனங்களையும் சமரசமின்றி விமர்சிக்கிறது.

புரூஸ்லீயின் மரணத்துக்கு காரணமான கஞ்சாப்பழக்கம், அவருக்கிருந்த பெண்கள் தொடர்பு, புகழால் உண்டான காமவேட்கை, சிறுவயதிலிருந்து இருந்த மற்றவர்களை பொதுவில் வைத்து அசிங்கப்படுத்தி பார்க்கிற கிறுக்குத்தனம், தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்குகிற உள்ளுணர்வு, மீடியாவை சமாளிக்க முடியாமல் திணறியது, தன்னுடைய வெற்றிக்காக நண்பர்களை பயன்படுத்திக்கொண்டு, தூக்கி எறிகிற குணம் என பல விஷயங்களையும் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறது.

"கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம்" என்கிற ஒன்லைன்தான் புரூஸ்லீயின் கதையும். சிறுவயதிலிருந்து சண்டைக்காரனாக வளர்ந்து, குங்பூவால் மனதை ஒருநிலைப்பட்டுத்திக்கொண்டவர் புரூஸ்லீ. அவர் முழு சீனர் கிடையாது. ஜெர்மனிய வம்சாவழி தாய்க்கும், சீனருக்கும் பிறந்தவர். அதனாலேயே அவர் தன் வாழ்க்கை முழுக்க எந்த அடையாளமும் இன்றி வாழ வேண்டியிருந்தது. அமெரிக்காவில் மிகுந்த சிரமங்களுக்கு நடுவே, ஒரு ஆசியனாக பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு நடுவே வாழ்ந்து, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, முதல் வாய்ப்புக்காக போராடிதான் வெற்றிபெற்றுள்ளார் புரூஸ்லீ! ஆனால் எந்த வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்தாரோ, அதே வெற்றியைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதிலிருந்து விடுபட போதைப் பழக்கத்துக்கு ஆளாகி மாண்டுபோனதுதான் புரூஸ்லீயின் கதை.


புரூஸ்லீ வெறும் குங்பூ கலைஞன் கிடையாது. குங்பூவும் வெறும் தற்காப்புக் கலை கிடையாது. குங்பூ எப்படி சீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்போ, ஒரு தத்துவத்தேடலோ அதைப்போலவேதான் புரூஸ்லீயும்! தன் வாழ்க்கை முழுக்க வாழ்தலின் களிப்பையும், உன்னத்ததிற்கான தேடலையும் கொண்டிருந்த ஒரு அற்புத கலைஞனாக வாழ்ந்திருக்கிறான். திரைப்படங்களில் நாம் பார்த்தா! அசகாய சூரனான புரூஸ்லீக்கு அப்பால் குங்பூவை உயிராக நேசித்த ஒரு சாதாரண இளைஞனான புரூஸ்லீயை இப்புத்தகத்தில் தரிசிக்க முடிகிறது.

குங்பூவை கற்றுக்கொண்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகின் மற்ற தற்காப்புக்கலைகளையும் படிக்கிற வெறியோடு திரிந்திருக்கிறார் புரூஸ்லீ. தன்னுடைய குங்பூவில் குத்துசண்டை தொடங்கி ஜூடோ வரைக்கும் பல்வேறு அடவுகளை புகுத்தியிருக்கிறார். (அது என்னென்ன? எப்படி என்பதையெல்லாம் புத்தக்கத்தில் விரிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறார் அபிலாஷ்). அதோடு சீனர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த குங்பூவை இன்று வடபழனி வரைக்கும் பரப்பியதும் புரூஸ்லீதான்!

ஒரு நல்ல தற்காப்பு கலைஞன் ஏதோ ஒரு கலையை அதன் தன்மையோடு கற்றுக்கொண்டு முடங்கிவிடக்கூடாது. அவன் மற்ற தற்காப்புகலைகளையும் தனக்கு உள்வாங்கிக்கொண்டு அனிச்சையான உணர்வோடு சண்டையிட வேண்டும் என்கிற கொள்கையைக் கொண்டிருந்தார் புரூஸ்லீ. தன்னுடைய ’கேம் ஆஃப் டெத்’ படத்தின் திரைக்கதையை அந்த நோக்கத்திலேயே அமைந்திருந்தார் லீ.

சினிமா இயக்கப் போகிறோம் என்று முடிவானதும், முதலில் புரூஸ்லீ செய்தது சினிமா குறித்து வெறித்தனமாக வாசிக்க ஆரம்பித்ததுதான்! அதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடியதுதான். தனக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்புடன் இருந்திருக்கிறார். முதுகுவலியால் அவதியுற்றபோது, ஓரு ஆண்டுக்கு குங்பூ பயிற்சியை தொடர முடியாமல் போகிறது. அந்த நேரத்தில் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் வாசித்து தனக்காக ‘’ஆழ்மன அமைதியை’’ அடையும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒருநாளும் தன்னுடைய மனதின் சமநிலை குலையாத வண்ணம் வாழ்ந்தவர் புரூஸ்லீ. அதுதான் அவருடைய ஆற்றலை அதிகமாக்கவும், அதைக் கட்டுப்படுத்தி சரியான நேரத்தில் வெளிப்படுத்தவும் வைக்கிற ஒன்றாக மாற்றியது.

ஆனால் தன்னுடைய முதல் மூன்று படங்களில் கிடைத்த திடீர் புகழும் எக்கச்சக்கமான பணமும், அவருடைய வாழ்க்கை முறையை சிந்தனைகளை புரட்டிப்போட்டிருக்கிறது. அவருடைய சமநிலை குலைந்ததும் அங்குதான். அதுவரை இருந்த புரூஸ்லீக்கு முற்றிலும் எதிர்மறையான ஒருவனாக அவரை வெற்றி மாற்றிவிடுகிறது. அவர் சில்லறைத்தனமான சண்டைகள் போடுபவராக, பொறாமையும், வஞ்சகமும் நிறைந்தவராகவும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கண்டு அஞ்சி, நல்லவர், கெட்டவர் என்று இனம் பிரிக்க முடியாமல், அனைவரையும் வெறுத்து தனிமையில் சிக்கிகொள்கிறார்.

அவர் வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார். அது அவரை கொன்றுவிடும் என்பதை உணர்கிறார். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தொடர்ந்து கஞ்சா பிஸ்கட்டுகளை தின்கிறார். ’என்டர் தி டிராகன்’ படம் எடுக்கப்படும்போது, அது தன் உச்ச நிலையை அடைகிறது. அப்படத்தின் டப்பிங் வேலைகளின் போதே, மூளையில் நீர்கோர்த்து மரணத்தின் வாயிலை நெருங்கிவிட்டு திரும்புகிறார்.

ஆனால் குணமான பின்னும், கஞ்சா பழக்கத்தை விடமுடியாமல் தொடர்கிறார். அதுதான் அவருக்கு எமனாகியிருக்கிறது. புரூஸ்லீ இறந்த தினத்தில் நடந்த சம்பவங்கள் கூட ஒரு திரைப்படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸின் திரைக்கதையை ஒத்திருக்கிறது.

தன் காதலியின் வீட்டுக்குச் செல்லும் புரூஸ்லீ தலைவலிக்காக சாப்பிடும் ’EQUAGESIC’ என்கிற மருந்துதான் எமனாகிறது. அவர் அரை உயிராக கிடக்கும்போதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால் வளர்ந்து வரும் நடிகையான புரூஸ்லீயின் கள்ளக்காதலியோ, அந்த நேரத்தில் புரூஸ்லீயை தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பத்திரிக்கைகள் ஏடாகூடமாக எதையாவது எழுதநேரிடும். அது தன் வளர்ச்சியை பாதிக்கும் என அரைமணிநேரம் தாமதப்படுத்துகிறார். கடைசியில் புரூஸ்லீயின் நண்பர் ரேமன்ட் சாவ் என்பவரை போனில் அழைத்து வரச்சொல்கிறார்.

ஆனால் ரேமன்ட் சாவ் அன்றைய தினம் ஹாங்காங்கின் டிராபிக்கில் மாட்டிக்கொள்கிறார். அன்று அந்நகரை ஒரு புயல் கடக்கிறது. அனைத்தையும் தாண்டி ஒருவழியாக புரூஸ்லீயை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. புரூஸ்லீ இறந்துபோகிறார். புரூஸ்லீ இறந்தபின்பும் அவருடைய மரணம் குறித்து, பல்வேறு புனைவுகளை தொடர்ந்து ஊடகங்கள் உருவாக்கின.

வாழ்க்கையே குங்பூதான் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை அக்கலை குறித்து கொஞ்சம் கூட தெரியாமல் அணுகவே முடியாது. இந்தப் புத்தகத்தில் புரூஸ்லீ கற்றுக்கொண்ட ’வின்சூன்’ என்கிற குங்பூ பாணிகுறித்த விளக்கமான அறிமுகத்தைத் தருகிறார் நூலின் ஆசிரியர். அதோடு புரூஸ்லீயின் குருவான யிப்மேன் பற்றியும், அவர் புரூஸ்லீயின் வாழ்க்கையை எப்படி பாதித்தார் என்கிற தகவல்களும் புத்தகம் முழுக்க கிடைக்கிறது. புரூஸ்லீயே உருவாக்கிய ’ஜீத்கூனேடூ’ என்கிற முறை குறித்தும் நிறைய விளக்கங்கள் புத்தகம் முழுக்க வருகிறது.

புத்தகத்தின் பெரிய குறை அபிலாஷின் அடர்த்தியான மொழி. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற முனைப்பு. சில விஷயங்களை இன்னும் சுறுக்கமாக சொல்லியிருக்கலாமோ என்கிற எண்ணம் எழுகிறது. நிறைய எழுத்துப்பிழைகளும், சில இடங்களில் தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தை உருவாக்க கடுமையாக உழைத்தவர், இந்த சின்னச் சின்ன பிரச்சனைகளையும் சரிசெய்து அவற்றை தவிர்த்திருக்கலாம். மற்றபடி இது ஒரு மிகமுக்கியமான முயற்சி.

புத்தகத்தை படித்து முடிக்கும் போது ‘’வெற்றி’’ என்கிற ஒன்றைப்பற்றிய நம்முடைய சகல நம்பிக்கைகளும் தகர்கிறது. நீங்கள் சினிமா ரசிகராகவோ, அல்லது தத்துவங்களில் ஆர்வமுள்ளவராகவோ, ஆக்சன் பட பிரியராகவோ, இன்னொருவர் கதையில் தனக்கான ஒளியை தேடுகிற மனிதராகவோ இருந்தால் இப்புத்தக்கம் உங்களுக்கானது...

புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்
ஆர்.அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
விலை 250




ஒரு சிறிய பின்குறிப்பு - புத்தகத்தை படித்து முடித்த பின் என்னதான் புரூஸ்லீயின் வாழ்க்கை குறித்து ஓரளவு தெரியவந்தாலும் ஏனோ அவரைப்பற்றிய கட்டுக்கதைகள்தான் இன்னமும் பிடித்திருக்கிறது.




(நன்றி சினிமொபிட்டா)

25 June 2013

ஆபத்தை அறிவித்த பூனைகுட்டிகள்!




வீட்டில் நான்கு குட்டிபூனைகளும் ஒரு தாய்ப்பூனையும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சரியான சுட்டிகள். எப்போதும் துறுதுறுவென விளையாடிக்கொண்டே இருக்கும். ஆனால் சில நாட்களாக திடீர் திடீர் என உடலை சிலிர்த்துக்கொண்டு முதுகை தூக்கிக்கொண்டு சீறத்தொடங்கிவிடுகின்றன. அப்படி செய்த சிலநிமிடங்களிலேயே எங்காவது ஓடிப்போய் ஒளிந்துகொள்ளவும் செய்கின்றன.

முதலில் காரணமே புரியவில்லை. ''அதுங்களுக்கு என்னாச்சுனே தெரியல வினோ எதையோ பாத்து பயப்படுதுக ஆனா என்னானுதான் புரியல'' என்று வருத்தமாக சொன்னார் அம்மா!.

ஞாயிறு விடுமுறையென்பதால் கவனித்துப்பார்த்தேன். டிவி ஓடும்போதுதான் இதுபோல ஆகிறது. அதிலும் சன்டிவியில் வருகிற சிங்கம் 2 டிரைலர் பார்த்துதான் இவை இப்படி மிரளுகின்றன என்பதை உணர முடிந்தது.

அதிலும் குறிப்பாக 'ஓடுமீன் ஓட ஊறுமீன் வரும்வரையில் வாடிஇருக்கும்டே கொக்கு' என சூர்யா மைக்கில்லாமல் கத்த.. அல்லது கர்ஜிக்கையில்தான், பூனைகள் இய்ய்ய்யீங் என முதுகைத்தூக்கிக்கொண்டு சிலிர்க்கின்றன..

சூர்யா மீண்டும் 'ஒருத்தரும் தப்பிக்க முடியாது' என்று கர்ஜிக்க பூனைகள் அலறிஅடித்துகொண்டு போய் பீரோவுக்கு அடியில் ஓளிந்துகொள்கின்றன. உண்மையை சொல்லவேண்டுமென்றால் அந்த டிரைலரை பார்த்தால் என்க்கே பீரோவுக்கு அடியில் போய் ஒளிந்து கொள்ளவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

வரப்போகிற இயற்கைபேரழிவுகளை முன்கூட்டிய வீட்டுப்பிராணிகள் சொல்லிவிடும் என புத்தகங்களின் படித்திருக்கிறேன். ஆனால் அதில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அதை இப்போது கண்கூடாகவே பார்த்துவிட்டேன்.

ஓங்கி கடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா.. ம்யாவ்...

(இது டிரைலருக்கான விமர்சனம் அல்ல.. ஓர் அனுபவ பகிர்வு... அஷ்டே!)

19 June 2013

ப்யூஸ் மனுஷ் மற்றும் சில ஏரிகள்




சில மாதங்களுக்கு முன் ப்யூஸ் மனுஷ் என்பவரை பேட்டிகாண சேலம் சென்றிருந்தேன். சமூக ஆர்வலரான ப்யூஸ் மனுஷ் சத்தமில்லாமல் சேலத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஒரு பெரிய மக்கள்புரட்சியை மேற்கொண்டிருக்கிறார். ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்பது, மெகா குப்பைத்தொட்டிகளாக மாறிவிட்ட நீர்நிலைகளை காப்பது, தூர்வாருவது எனத்தொடங்கி பல்வேறு சுற்றுசூழல் களப்பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். அதை ஒற்றை ஆளாக செய்யாமல் தன்னை சுற்றியுள்ள சாதாரண மக்களை கொண்டே செய்கிறார்.

அவருடைய சேலம் சிட்டிஸன்ஸ் பாரம் ஃபேஸ்புக்கிலும் கூட இயங்கி வருகிறது. அவருடைய முயற்சியால் வரண்டுபோய் குப்பைகள் குவிந்து கிடந்த ஒரு ஏரி இன்று குட்டி வேடந்தாங்கலாக பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக சுத்தமான ஏரியாக மாறியிருக்கிறது.

மூக்கணேரி என்கிற ஏரியை மக்களை பயன்படுத்தி சுத்தம் செய்ததோடு, அதன் நடுவே சிறிய தீவுபோன்ற மேடுகளை உருவாக்கி அதில் பல்வேறு விதமான மரங்களை நட்டும் வளர்த்தும் பரமாரித்தும் வருகிறார். இதன்மூலமாக நிறைய பறவைகள் இங்கே வருகின்றன. அதோடு அந்த ரம்மியமான சூழலை மாசுபடுத்த யாருக்குமே மனசு வராது. 58 ஏக்கர்கள் கொண்ட அந்த ஏரியில் இன்று 12ஆயிரம் மரங்கள் இருக்கிறது என்று சொன்னால் யாராலும் நம்பவே முடியாது! சேலம் பக்கமாக சென்றால் ஒரு விசிட் அடித்து ஏரியை சுற்றிப்பாருங்கள்... பியூஷ் மனுஷ் என்கிற ஒற்றைமனிதனின் மாபெரும் முயற்சியின் பலனை அறியலாம்.

இந்த ஏரியின் பலனால் கணிசமாக நிலத்தடி நீரின் அளவும் அதிகரித்திருப்பதாக சமீபத்திய பேட்டியொன்றில் ப்யூஸ் கூறியுள்ளார். சேலம் மக்கள் விடாமல் ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய ஞாயிற்றுக்கிழமைகளை தியாகம் பண்ணி உழைத்ததால் கிடைத்த வெற்றி இது. ஒரிருவர் அல்ல ஆயிரக்கணக்கான இளைஞர்கள். ஆச்சர்யமாக இருக்கிறதில்லையா?

மூக்கனேரியோடு இந்த சேலம் இளைஞர்கள் திருபதியடைந்துவிடவில்லை. அடுத்ததாக மேலும் சேலத்தில் இருக்கிற நான்கு ஏரிகளை புணரமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். குண்டக்கல் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி, அம்மாபேட்டை ஏரி என பெரிய பட்டியலும் மனதுமுழுக்க ஆர்வமுமாக சேலம் மக்கள் துடிப்போடு இருக்கிறார்.

ப்யூஸோடு இதைப்பற்றி நிறையவே பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு பொறாமையாக இருந்தது. இன்று கோவையில் உக்கடம் பேருந்துநிலையம் இருந்த இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஏரி இருந்தது. அந்த ஏரியின் மீதுதான் அந்த பேருந்துநிலையம் நிற்கிறது. அதோடு அருகேயிருக்கிற பஸ்டிப்போ, அதற்கடுத்த மின்சார வாரிய கட்டிடம் என அரசு ஆக்கிரமிப்பால் கண்முன்னே காணாமல் போன ஒரு ஏரி!

உக்கடம் பேருந்துநிலையத்தின் இரண்டுபக்கமும் வேறு இரண்டு ஏரிகள் இப்போதும் உள்ளன. ஒன்று சின்னக்குளம் இன்னொன்று பெரியகுளம். இரண்டுமே எப்போதும் வற்றாமல் மிகப்பெரிய கடலைப்போல பரந்தும் விரிந்தும் கிடப்பதை கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் சில ஆண்டுகளாக அந்த ஏரிகள் போதிய பராமரிப்பின்றி குப்பைகள் கொட்டுகிற (குறிப்பாக காய்கறி குப்பைகளும், இறைச்சி கழிவுகளும், மருத்துவகழிவுகளும் கொட்டுகிற ஆபத்தான இடமாக மாறிவிட்டன). சீக்கிரமே இதுவும் கூட அபார்ட்மென்டுகளாகவோ வேறு கட்டிடங்களாகவோ ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்துபோகிற சகல வாய்ப்புகளோடுதான் இருந்தன.

கோவையின் நிலத்தடிநீரை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றிவந்த இந்த இரண்டு ஏரிகளும் எந்த நேரத்திலும் மாயமாய் மறைந்துபோகலாம் என்று பேசப்பட்டது. கூடவே உக்கடத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் பாதாளத்துக்கு செல்ல ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் அப்பகுதியை கடந்து செல்லும்போதும் அதன் நிலைமையை கண்டு மனது பதைபதைக்கும்.

என்னுடைய பள்ளிகாலத்தில் கோடை விடுமுறையில் அந்த ஏரிதான் எங்களுக்கு ஷார்ஜா. பாதி ஏரிதான் நிரம்பியிருக்கும் மீதியில் காய்ந்துபோய் மைதானமாக கிடக்கும். அங்குதான் கிரிக்கெட் ஆடுவோம். ஏரிக்குள் பல்வேறு கருவேலமரங்களில் நிறையவே பறவைகள் கூடுகட்டியிருக்கும். பல்வேறு மரங்களும் நிறைந்திருக்கும் அது மிகவும் ரம்மியமான இடம். அப்போது ஆய்போவதைத்தவிர வேறு அசுத்தங்கள் அங்கே இருந்ததில்லை. நாங்கள் அடிக்கடி ஆய்போகிற இடம்தான் அது. அதுகூட மண்ணுக்கு உரமாவதாகவே நினைப்போம்.

உக்கடத்திலிருந்து சைக்கிளில் செல்வபுரம் செல்ல எங்களுடைய குறுக்குவழியும் இந்த பெரியகுளத்தை ஒட்டியுள்ள சாலைதான். ஒருபக்கம் ஏரி நீண்டுகொண்டே செல்ல ஒருபக்கம் ஊர் நீள.. கோட்டைமேட்டு பையன்களின் ஈசிஆர் ரோடு கூட அதுதான்.

அப்படிப்பட்ட பிரமாண்ட ஏரிகள் இரண்டும் குப்பைமேடாகி, ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டு, வீச்சமடிக்கிற இடமாக மாறிப்போனதை யாராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. ப்யூஸ் மனுஷின் மூக்கணேரியை பார்க்கையில் எனக்கு இயல்பாகவே பொறாமையும் நம்ம ஏரிக்கும் ஒரு ப்யூஸ் கிடச்சாதான் ஒளிகிடைக்கும் என்றெல்லாம் தோன்றியது. மூக்கணேரி போல உக்கடம் பெரியகுளத்தை கற்பனை பண்ணிப்பார்க்கவே உற்சாகமாக இருந்தது.

சிலவாரங்களுக்கு முன்பு கோவை சென்றிருந்தபோது அப்படியொரு முயற்சியை சிறுதுளி அமைப்பும் மேலும் சில அமைப்புகளும் அமைப்புகள் சாராத கோவை மக்களும் இணைந்து செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டபோது உற்சாகத்துக்கு அளவேயில்லை. மூக்கணேரியை மாதிரியாக கொண்டுதான் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெரியகுளத்தை தூர்வாரி குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் வெறித்தனமாக ஈடுபட்டிருந்தனர். உள்ளூர் வெளியூர் சாதிமதம் வயது வர்க்கம் என எந்த பேதமுமில்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு இப்பணியில் இறங்கியுள்ளதையும் காண மகிழ்ச்சியாக இருந்தது.

குளத்தின் நடுநடுவே சின்ன சின்ன மேடுகளை பார்க்க முடிந்தது. விசாரித்தபோது மூக்கணேரியைப்போலவே இங்கேயும் அதே பாணியில் மரங்கள் வளர்க்க திட்டமிட்டுள்ளதாக நண்பர் தெரிவித்தார். மக்களின் பங்களிப்போடு நடக்கிற எந்த முயற்சியும் தோற்றதில்லை. நிச்சயமாக பெரியகுளம் மீண்டும் தன் பழைய பொலிவை அடையும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. சீக்கிரமே எங்க ஈசிஆர் பழையபடி பச்சைபசேலென பறவைகளின் சொர்க்கமாக மாறிவிடும். தாங்க்யூ கோவை சிட்டிசன்ஸ்.



(படம் - தி ஹிந்து)






11 June 2013

தட்டு கட





கோவை சென்றிருந்தபோது ஏகப்பட்ட சாலையோர தள்ளுவண்டி உணவங்களை பார்க்க முடிந்தது. இவை சென்னையில் மிக மிக சகஜம். எங்கும் வியாபித்திருக்கும். மீன்,போட்டிகறி எல்லாம் கிடைக்கும். எர்ணாகுளத்தில் தட்டுகடைகள்தான் சாப்பிட சிறந்த இடங்கள். அங்கே கிடைக்கிற பீஃப் ஃப்ரைக்கு இணையான ஒன்றை ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் ருசிக்க முடியாது. ஆனால் கோவையில் இதுபோன்ற கடைகளை அதிகமாக பார்த்ததில்லை. இந்த முறை சென்றிருந்தபோது எங்கு பார்த்தாலும் காளான்களைப்போல ஏகப்பட்ட கடைகள் முளைத்திருந்தன.

சாலையோர கடைகள் எல்லாமே வீட்டுசமையல் என்கிற பெயரிலும் மகளிர் சுய உதவிக்குழு பெயர்களிலும் இயங்கி வருகின்றன. சாம்பார் சாதம், தயிர்சாதம் என வெரைட்டி ரைஸ்கள் தொடங்கி உக்கடம் பக்கத்திலும் மரக்கடை ஏரியாவில் பீஃப் பிரியாணி கடைகள் சிலவற்றை பார்க்க முடிந்தது.

எல்லாமே தெருவோர வண்டிகடைகள்தான். இதில் மகளிர் சுய உதவிக்குழு கடைகள் ஆட்டோ டெம்போவில் இயங்குகின்றன. இவற்றில் எவ்வளவு கடைகள் நிஜமாகவே சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படுகின்றன என்பது தெரியவிலை. ஆனால் எல்லா கடைகளுமே நன்றாக கல்லா கட்டுகின்றன என்பதை மட்டும் அவர்களுடனான ஒரு எலுமிச்சை சாத உரையாடலில் தெரிந்து கொள்ள முடிந்தது.

பொள்ளாச்சி சாலையில் இதுபோன்ற கடைகள் ஒரு இருபதையாவது கடந்து செல்லவேண்டியதாயிருந்தது. எல்லா கடைகளிலும் நல்ல கூட்டம். மரக்கடை ஏரியாவிலும் நிறையவே பிரியாணிக்கடைகள் பூத்திருந்தன.

பத்தாண்டுகளுக்கு முன்பு கோவையில் இப்படிப்பட்ட உணவகங்கள் பத்துகூட இருக்காது. பானிபூரி கடைகள்தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும். காளான் மஞ்சூரி என்கிற ஒரு வஸ்து இங்கே பிரபலம். சவசவ வென்று அதில் சன்னாவை ஊற்றி ஊற்றி சாப்பிடுபவர்களை பார்க்கலாம். சாலையோர உணவென்பது இதுபோன்ற சிற்றுண்டிகளுக்கு மட்டும்தான் என்பதே கோவையின் கலாச்சாராம்.

மதிய உணவென்பது வீட்டிலிருந்து கொண்டு செல்கிற தூக்குபோசியில்தான்!கிட்டத்தட்ட எல்லோருக்குமே! காலை டிபன் வெளியே சாப்பிடுவதாக இருந்தாலும் கூட நடுத்தரவர்க்க மக்கள் ஏரியாவில் தெருவோரம் வீட்டுவாசலில் அடுப்பு வைத்து ஆப்பம் சுடுகிற ஆயா கடையிலோதான் போஜனம் நடக்கும்.

கொஞ்சம் பணக்காரராக இருந்தால் அன்னபூர்ணாவே கதி. நான்வெஜ் என்றால் அங்கண்ணன். சாலையோர கடைகளில் சாப்பிடுவதை கௌரவக்குறைவாக நினைக்கிற மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ''என்னது சென்னைல ரோட்டுகடைல சாப்பிடறீயா.. என்னய்யா அங்க போய் நீ ஏதோ நல்லாருக்கேனு நினைச்சா'' என்று புலம்பியவர்கள் உண்டு. சொந்தக்காரர்கள் கண்களில் சிக்கிக்கொண்டால் அவமானமா போய்டும்ப்பா என நினைத்து தயங்கியவர்களும் உண்டு. அதோடு சாலையோர கடைகளில் சாப்பிடுவது வயிற்றுக்கோளாறுகளையும் நோய்களையும் உண்டாக்கும் என அஞ்சியே கோவையில் இக்கடைகளுக்கான சந்தை திறக்கப்படாமலேயே கிடந்தது.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக... எங்குபார்த்தாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் சாலையோர கடைகளில் மதிய உணவு சாப்பிடுவதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. ஊர் முழுக்க ஹோட்டல்கள் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கிறது. அதற்கு இணையாக இந்த தட்டுகடைகளும் வளர்ந்துள்ளன.

இதற்கு முக்கியகாரணமாக கருதுவது பிழைப்பு தேடி வந்திறங்கியிருக்கிற கணிசமான வெளியூர்காரர்களின் வரவு. சென்னையில் சாலையோர கடைகளில் சாப்பிடுபவர்களில் 90 சதவீதம் பேர் பிழைப்புக்காக ஊரிலிருந்து வந்திருக்கிற வெளியூர்காரர்கள்தான். ரோட்டோர கடைகளில் சாப்பிடுகிற உள்ளூர் காரரை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. சென்னை மட்டுமல்லாது மும்பை,பெங்களூரு போன்ற வளர்ந்த நகரங்களிலும் இந்த கலாச்சாரம் பெருமளவில் பார்க்க முடியும். அதுஇப்போதுதான் கோவை வரைக்கும் பரவியிருக்கிறது. வெளியூரிலிருந்து வந்து வேலை பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

கோவையில் வட இந்தியாவிலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் சாதாரண வேலைகள் பார்க்க மக்கள் தினந்தோறும் கணிசமாக வந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் எதையும் சாப்பிட்டு வேலை பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். சாலையோர கடைகள் இந்த எளிய மனிதர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. கோவையில் புற்றீசல் போல பரவியிருக்கும் இந்த தட்டுகடைகளுக்கு அவர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் சிலமணிநேர கவனிப்பில் புரிந்தது.

கொஞ்ச கொஞ்சமாக சென்னையைப்போல வெளியூர்க்காரர்களின் நகரமாக அவர்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது கோவை. அதன் ஒரு பருக்கைதான் இந்த தட்டுக்கடைகள் என்று அவதானிக்கிறேன்.

06 June 2013

ஜேசி டேனியலும் தொலைந்துபோன சிறுவனும்!




நம்முடைய சமூகத்தில் சாதி எப்படி ஆழமாக வேரூன்றி கிடந்தது என்பதை வெகு சில காட்சிகளில் குறுக்குவெட்டாக உணர்த்திவிடுகிறுது ‘’செல்லுலாய்ட்’’. மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிற ஜே.சி.டேனியலின் சினிமா முயற்சிகளைப்பற்றிய படம் இது. சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பல்வேறு விருதுகளை வென்ற திரைப்படம் செல்லுலாய்ட். ஜேசி.டேனியலின் பாத்திரத்தில் நடித்த ப்ருதிவிராஜ் மற்றும் படத்தின் இயக்குனர் கமலும் இப்படத்துக்காக பல்வேறு விருதுகளையும் வென்றனர்.

1920களின் இறுதியில் தாதாசாகேப் பால்கேவை சந்திக்க டேனியல் செல்வதிலிருந்து படம் தொடங்குகிறது. 'நான் கேரளாவில் ஒரு சினிமா படம் எடுக்க விரும்புகிறேன், அதை கற்றுக்கொள்ள வேண்டும்.. எனக்கு சினிமாவை கற்றுத்தருவீர்களா' என்று பால்கேவிடம் கேட்கிறான் டேனியல்.

பால்கேவோ ‘அது ரொம்ப கஷ்டம் தம்பி இப்போ நான் ரொம்ப பிஸி.. பின்னால பார்க்கலாம்’ என்று திருப்பி அனுப்புகிறார். சார் அட்லீஸ்ட் சூட்டிங்கையாச்சும் பார்க்க முடியுமா என்று கேட்க பால்கே அவனை அதற்கு மட்டும் அனுமதிக்கிறார். சூட்டிங்கில் படம் பிடித்ததை புராசஸ் பண்ணி திரையிலும் போட்டுக்காட்டுக்கிறார்.

காதலில் விழுந்துவிட்ட காதலனைப்போல டேனியல் சினிமாவை காதலிக்க துவங்குகிறான். கேரளாவின் முதல் சினிமாவை எடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். அந்த நேரத்தில் இந்தியா முழுக்க புராணப்படங்களாக எடுத்துக்கொண்டிருக்க... டேனியலோ சமூகப்படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். சார்லிசாப்ளினின் 'தி கிட்' படத்தை பார்த்து அதுபோலவே ஒரு படமெடுக்க நினைத்து விகதகுமாரன் (தொலைந்த சிறுவன்) என்கிற படத்தை தயாரிக்கிறான்.அது அவனுடைய வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. சாதி பாகுபாட்டினால் மலையாள சினிமாவின் முதல் திரைப்படமான ‘’விகதகுமாரன்’’ செத்துப்போகிறான்.

தான் நேசித்த கலையாலேயே உறவுகளை இழந்து பணத்தையெல்லாம் இழந்து சின்ன கிராமத்தில் தனிமையில் தன் அந்திம காலத்தை வறுமையில் கழிக்கிறான். அவனைப்பற்றி கேரளாவில் யாருக்குமே தெரியாமலேயே போகிறது. அவன் எடுத்த திரைப்படத்தின் மிச்சங்கள் கூட இல்லை.

டேனியலை பற்றி கேள்விப்பட்டு தேடிக் கண்டுபிடிக்கிற ஒரு சினிமா பத்திரிகையாளன், டேனியலை வறுமையிலிருந்து மீட்க அரசாங்கத்தின் உதவியை நாடுகிறான். ஆனால் அரசாங்கமோ அவர்தான் மலையாளசினிமாவின் முதல் படமெடுத்தவர் என்பதற்கு ஆதாரங்கள் கேட்கிறது. திரைப்படத்தின் ஃபுட்டேஜ் வேண்டும் என்கிறது. பத்திரிகையாளனின் முயற்சிகள் வீணாகின்றன.

மருத்துவசெலவிற்கும் கூட பணமின்றி கடும் வறுமையில் பார்வையிழந்து இறந்துபோகிறார் டேனியல். முப்பது ஆண்டுகளுக்கு பிறகு 2000ம் ஆண்டு கேரள அரசு டேனியல்தான் மலையாள சினிமாவின் தந்தை என்று அறிவிக்கிறது. அதற்கான விழாவில் டேனியலின் இளைய மகன் தன் ஆறுவயதில் விளையாட்டுத்தனமாக மலையாள சினிமாவின் முதல் படத்தின் ஃபிலிம்ரோல்களை எரித்துவிட்டதை சொல்லி கண்ணீரோடு கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் படம் முடிகிறது.

படத்தில் ஜேசி டேனியலின் கதைதான் பிரதானமானதென்றாலும், மலையாள சினிமாவின் முதல் நாயகியான ரோசம்மாவின் கதைதான் நம்மை கலங்கடித்து விடக்கூடியது. படத்தின் ஜீவனாகவும் அக்கதைதான் இயங்குகிறது.

டேனியல் தன் படத்துக்காக கதாநாயகியை தேடத்தொடங்குகிறான். ஆனால் சினிமாவில் நடிக்க பெண்கள் கிடைப்பது மிகமிக அரிதான காலத்தில், கஷ்டப்பட்டு ஒரு மேனாமினுக்கி மும்பை நாயகியை அழைத்துவருகிறான். அந்தப்பெண்ணோ ரயிலில் முதல்வகுப்பு டிக்கட் வேண்டும், தினக்கூலி 50ரூபா வேண்டும், மகாராஜாவின் பேலஸில் ரூம்போட்டுக்கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க அவளை திருப்பி அனுப்புகிறான்.

அவளுக்கு பதிலாக நடிக்க ரோசம்மா என்கிற ஒரு தலித் பெண்ணை தேர்வு செய்கிறான். அவள் ஒரு தெருக்கூத்து நடிகை. சினிமாவென்பதை கற்பனையில் மட்டுமே பார்த்தவள். சினிமாவில் நடிக்கப்போகிறோம் என்பதை அறிந்து தன் தோழியிடம் இதுபற்றிப்பேசுகிறாள். நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன் என்று கேட்க தோழி ஒரு உடைந்த கண்ணாடியை எடுத்து நீட்டுகிறாள். அதில் ரோசம்மாவின் கறுத்த முகம் தெரிய.. பின்னணியில் சித்தாராவின் குரலில் வருகிற ஏலேலோவும் அதைத்தொடர்ந்து வருகிற ‘’இதுவரை நான் அறிந்ததேயில்லை..’’ என்கிற பாடல் வரிகளும் கவிதை.

ரோசம்மாவை நாயர் பெண்ணாக நடிக்க வைக்கிறார் டேனியல். முதன்முதலாக அவளை எல்லோரும் மதிக்கிறார்கள் என்பதையே நம்ப முடியாமல் ஸ்டுடீயோவுக்குள் திரிகிறாள். எல்லோரும் வீட்டுக்கு உள்ளே சாப்பிட இவள்மட்டும் புழக்கடையில் மூலையில் அமர்ந்தபடி சாப்பிடுவதும், டேனியல் சொல்கிற எதற்கும் மறுபேச்சு பேசாமல் கண்களை அகலவிரித்தபடி அவனுடைய அடுத்த சொல்லுக்காக காத்திருப்பதும், தான் நடித்ததை தன் தோழியிடம் ஆர்வத்தோடும் சின்ன குறும்போடும் பகிர்ந்துகொள்வதும்.. சூட்டிங் முடிந்த நாளில் தன்னுடைய மகாராணி வேஷம் கலைந்து மீண்டும் பழைய தலித்தாக வாழ வேண்டிய கட்டாயத்தை நினைத்து கலங்கும்போதும்... தன் படத்தை பார்க்க ஊர்மக்கள் அனுமதிக்காமல் தியேட்டருக்கு வெளியே கண்கள் கலங்க உள்ளேயிருந்து ‘’இதோ வந்துவிட்டாள் நம்முடைய நாயகி ரோசி’’ என்கிற குரலை கேட்டு உடைந்து அழுவதும்... ரோசம்மாவின் காட்சிகள் அத்தனையும் ஹைக்கூ தொகுப்பு.

ரோசம்மாவாக நடித்திருக்கும் சாந்தினியின் அகலமான கண்களும், அசரடிக்கிற புன்னகையும், குழந்தைகளின் முகத்தில் காணும் வெகுளித்தனமும், தனக்கொரு நல்வாழ்வு பிறந்துவிட்டதாக நினைத்து பூரிக்கிற நம்பிக்கையும் எல்லாமே அற்புதம்தான். படத்தின் ஹீரோ நிச்சயமாக ரோசம்மாதான்.

கண்களில் எப்போதும் நம்பிக்கை தெறிப்புடன் இளைஞனாக, பால்கேவின் ஸ்டுடீயோவில் முதன்முதலாக கேமராவை கண்டு உற்சாகமடையும்போதும், சென்னைக்கு வந்து சினிமாவை கற்றுக்கொடுங்க என்று தமிழ் தயாரிப்பாளரிடம் கேட்கும்போதும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாதாரண பல்மருத்துவராக இருக்கும்போது பியூசின்னப்பா மீண்டும் டேனியலின் மனதில் சினிமா ஆசையை விதைக்க தன்னுடைய கனவுக்கும் வாழ்க்கைக்குமாக தள்ளாடுகையிலும், அனைத்தையும் இழந்து தன் வாழ்வின் கடைசி நொடிகளில் கிடக்கையிலும் ப்ருதிவிராஜ் எவ்வளவு அற்புதமான கலைஞன் என்பதை உணரலாம்.

படம் முழுக்க டேனியலையும் ரோசம்மாவையும் பத்திரிகையாளனையும் வருடங்கள் கடந்தாலும் விடாமல் துரத்துகிறது சாதி. டேனியல் தன்னுடைய படத்தில் தலித் பெண்ணை நாயர் இனப்பெண்ணாக காட்டிவிட்டார் என்று படத்தை திரையிட விடாமல் தடுத்துவிடுகிறது உயர்சாதி வெறி. தலித் பெண் என்பதாலேயே நாயகியாகவே இருந்தும் தியேட்டருக்குள் அவளை அனுமதிக்க மறுத்து அவளை விரட்டுகிற சாதிவெறி. திரையிலும் கூட தலித்பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியாமல் சண்டையிடுகிற சாதிவெறி. ஷூட்டிங்கிலும் கூட தலித்பெண்ணோடு நடிக்கத்தயங்குகிற சாதிவெறி. ‘’மதம் மாறிவிட்டா மட்டும் நீ உயர்ந்துடுவியா கோலப்பா, சினிமாவில் நடிச்சிட்டா.. புல்லுவெட்ட இங்கதான் வந்தாகணும்’’ என்பதில் தெறிக்கிற சாதிவெறி.

2000வது ஆண்டுவரை பிராமணர் ஒருவர் எடுத்த ‘’பாலன்’’ என்கிற படம்தான் மலையாள சினிமாவின் முதல்படம். நாடார் சமூகத்தை சேர்ந்த டேனியலை அங்கீகரிப்பதில் இருந்த தயக்கத்துக்கு இதுவும் ஒருகாரணம் என்பதை ஒரு காட்சியில் போகிறபோக்கில் பொட்டில் அடித்தது போல உணர்த்திவிடுகிறார் இயக்குனர் கமல்.

நம் ஊரில் இது சாத்தியமா தெரியவில்லை படம் முழுக்க நாயர்,பிள்ளை,ஐயர் என தீண்டாமையை வலியுறுத்துகிற கதாபாத்திரங்களின் சாதியை நேரடியாகவே குறிப்பிடுகிறார்கள். மலையாள சினிமாவுக்கேயுண்டான சுதந்திரம். இங்கே அப்படிபடமெடுத்தால் தியேட்டர்கள் கொளுத்தப்படலாம்.

மலையாள சினிமாவின் தந்தைக்கு கேரள சினிமா செய்திருக்கிற ஆகச்சிறந்த மரியாதை இது. அதை எந்த வித சமரசங்களும் இல்லாமல் செய்திருப்பது நிச்சயம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் பாராட்டப்படவேண்டியதுமாயிருக்கிறது. இப்படம் விரைவில் ஜேசி டேனியல் என்கிற பெயரில் தமிழிலும் டப்செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

03 June 2013

குட்டிப்புலி





தமிழகம் முழுக்கவே சாதிவெறி வெவ்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிற காலத்தில் , சாதிக்காக சாதி சனத்துக்காக கௌரவக் கொலை செய்கிறவர்களை கடவுளாக்குவோம் குலசாமியாக்குவோம் என்று களமிறங்கியிருக்கிறது சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள குட்டிப்புலி.

சிலமாதங்களுக்கு முன்பு வெளியான படம் ராம்கோபால்வர்மாவின் ''தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11'' . படத்தில் ஒரு காட்சிவரும். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்ஐ பிடித்து உயர் அதிகாரி நானாபடேகர் விசாரிப்பார். அவரிடம் அஜ்மல் கசாப் கோபத்தோடு பேசுவான். அவனுடைய பேச்சு இப்படிப்போகும்...

''நாங்க பண்ற இந்த புனிதமான சேவைக்கு எங்களுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? எங்க குரு சொல்லிருக்கார்.. நாங்க இந்த புனிதப்போர்ல செத்துப்போனா நேரா சொர்க்கத்துக்கு போவோம்.. அங்கே எங்களுக்கு எந்த விசாரணையும் கிடையாது.. இங்கே எங்க செத்துப்போன உடல்லருந்து நறுமணம் வீசும்.. எங்களோட உடலை மக்கள் வணங்குவாங்க... நாங்க புனிதர்களாக கருதப்படுவோம். நாங்க பண்ற ஒவ்வொரு கொலைக்கும் எங்களுக்கு அல்லாவிடம் மன்னிப்பு கிடைக்கும்.. அல்லாவுக்காகத்தான் இதையெல்லாம் நாங்க செய்றோம்.. நிச்சயமா எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்னு எங்க குரு சொல்லிருக்கார்... '' என்பான்.

அவனுடைய பேச்சின் சாரம்தான் இது. அவனுடைய பேச்சைக்கேட்டு அவனுக்காக அந்த அதிகாரி கவலைப்படுவார். அவனுக்காக பரிதாபப்படுவார். ஒரு சின்ன பையனின் மனதில் இப்படி விஷத்தை விதைத்திருக்கிறார்களே என்று வருந்துவார். குர்ஆனின் மேன்மைகளை அவனிடம் பொறுமையாக விளக்குவார். செத்துப்போன அவனுடைய சகாக்களின் பிணங்களை காட்டி.. ‘’பாரு உன் நண்பர்களோட உடல் மணக்குதானு பாரு’’ என்று கதறுவார். அந்த சிறுவனின் முடிவை அறிந்து அவனுக்காக வேதனைப்படுவார் அதிகாரி. தூக்கில் தொங்கப்போகிற அஜ்மல்கசாப் மீது படம் பார்க்கிற நம்மிடம் அளவிலா கருணையையும் அன்பையும் கடத்துகிற காட்சி அது. (ராம்கோபால்வர்மாவால் மட்டுமே செய்யமுடிகிற மாயாஜாலாம் அது!)

அதைவிடுங்கள். விஷயத்துக்கு வருவோம். அல்காய்தா தன்னுடைய குழந்தைகளுக்கு இஸ்லாத்தின் பெயரால் புகட்டிய அதே நஞ்சைத்தான் குட்டிப்புலியும் நமக்கு சாதியின் பெயரால் புகட்டுகிறது. கொலை செய்தால் உடல்மணக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கும் சங்கறுத்தால் குலதெய்வமாகிவிடலாம் என்பதற்கும் ஆறுவித்தியாசங்கள் கூட கிடையாது. இதே மாதிரியான வேதங்களை சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற ஒரு சாதிக்கட்சி கூட்டத்தில் கேட்டிருக்கலாம். அதைத்தொடர்ந்து நடந்த கலவரங்களையும் நாடறியும்.

குட்டிப்புலி படத்தின் கதை துவங்குவதே ஒரு சாதி சார்ந்த கௌரவக் கொலையில்தான். முதல் காட்சியிலேயே சங்கை அறுக்கிறார்கள். தன் சாதி பெண்ணை கிண்டல் செய்தவனின் கழுத்தை அறுத்து கொல்கிறார் நாயகனின் அப்பா. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடும்போது வில்லன்களிடம் மாட்டிக்கொள்ளுகிற சந்தர்ப்பம் உருவாகிறது. அவர்களிடம் சிக்கி மானம்போய் சாவதைவிட இப்போதே சாகிறேன் என தன் உயிரையும் விடத்துணிகிறார். அவருடைய வீரத்தை(?) பாராட்டி சாதிக்காரர்கள் அவரை குலதெய்வமாக்கிவிடுகிறார்கள்.
தன்னுடைய கணவனைப்போல மகன் இருக்க கூடாது என்று பொத்தி பொத்தி வளர்க்கிறார் நாயகனின் அம்மா. ஆனாலும் நாயகன் வெட்டியாகத்தான் திரிகிறான். தன் சாதிக்கார பிள்ளையை சைட் அடித்தால் அது போலீஸாகவே இருந்தாலும் போட்டு பொரட்டி எடுக்கிறார்! (மரு.ராமதாஸ் கவனிக்க!). நிஜமாகவே போலீஸை போட்டு அடிக்கிறார்.

ஆனால் அதே தெரு பையன்கள் சைட் அடிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய காதலுக்கு தூதுபோகிறார். அவரும் காதலிக்கிறார். (சுயசாதிப் பெண்கள்தான் காதலித்துவிடக்கூடாதுபோல நல்ல கொள்கை)

டாஸ்மாக்கில் உட்கார்ந்து சரக்கடித்து விட்டு இடத்தகராறில் ஒருவருடைய மண்டையை பீர்பாட்டிலால் அடித்து உடைக்கிற நாயகன், அடுத்த சில காட்சிகளில் தன்னுடைய சொந்தக்காரர் ஒருவருக்கு ''குடிச்சி குடிச்சி குடும்பத்த அழிக்காதடா.. குடிப்பழக்கம் நாட்டுக்குவீட்டுக்கு உயிருக்கு'' என உபதேசம் பண்ணுகிறார்..

எல்லா படத்திலும் வருவதைப்போலவே இந்தப்படத்திலும் வேலை வெட்டி பார்க்காமல் ஊதாரியாய் சுத்தும் படிப்பறிவோ பட்டறிவோ இன்னபிற நாகரீக அறிவுகளே அற்ற ஹீரோவைதான் விழுந்துபுரண்டு காதலிக்கிறார் நாயகி. பெண்களுக்கு படித்த இளைஞர்களைவிட இதுபோன்ற கொலைகாரர்களைதான் பிடிக்கும் என்பது மாதிரியெல்லாம் படத்தில் வசனங்கள் வேறு வருகிறது!

இப்படிப்பட்ட ஒரு நல்லவனான நாயகனுக்கு வில்லன்களால் சிக்கல்வர.. இறுதிகாட்சியில் நாயகனின் தாயே வில்லனின் சங்கை அறுத்து கொலைசெய்து கதையை சுபமாக முடித்துவைக்கிறார். அம்மாவும் அவருடைய தோழியும்கூட குலதெய்வமாகிறார்கள்.

''இதுதான் நம்ம குலசாமிகளான ஆச்சி சேச்சி பேச்சி முதலானவர்களின் கதை'' என்று பின்னணியில் இயக்குனர் ஏதேதோ பேச படம் முடிகிறது. சங்கறுப்பதில் தொடங்கும் கதை சங்கறுப்பதில் முடிவதுதான் எவ்வளவு சிறப்பு. படத்தில் கழுத்தை அறுப்பதையும் கொலை செய்வதையும் ஒவ்வொரு பாத்திரமும் ரசித்து ருசித்து செய்கிறது. படம் முழுக்க சங்கறுப்பதை ஆளாளுக்கு ஏதோ டிப்ளமோ படிப்பில் கோல்ட்மெடல் வாங்கியதைப்போல பெருமையோடு பறைசாற்றிக்கொள்வது மகுடத்தில் மாணிக்கம். நமக்குதான் பகீர் பகீர் என்று வருகிறது.

ஒருகாட்சியில் நாயகனின் நண்பன் ''எங்காளு சங்கறுக்கறதுக்குதான் ஃபேமஸ் தெரியும்ல.. அவர்கிட்டயேவா'' என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார். உடனே நாயகன் சசிகுமாரும் ஆஸ்கர் விருது வாங்கினதைப்போல அதை ஆமோதித்து வெற்றிபுன்னகை பூக்கிறார். சுப்ரமணியபுரம் படத்தில் சங்கறுத்தாராம். பெருமைதான்.

12 வயது சிறுவனின் தொண்டையில் ''தறியில் உபயோகிக்கிற சிறிய கூரான கட்டை''யை முன்பக்கமாக சொருகி அதை பின்பக்கமாக எடுப்பதும், அதை செய்கையில் திரையில் ரத்தம் தெறிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதையும் பார்க்கும்போது அதிர்ச்சியாகவும் அதே சமயம் எவ்வளவு ஆராய்ச்சி செய்து இதுமாதிரி டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகவும் இருந்தது.

12வயசு குழந்தையை கொன்றுவிட்டு கண்ணில் லென்ஸ் வைத்த மீசை வில்லன் படம் முழுக்க ''12வயசு பையனையே கொன்னவன்ர பயம் இருக்கணும்'' என்று பெருமையாக பேசிக்கொண்டே திரிவதெல்லாம்...

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் சசிகுமார் தன் முந்தைய படமான சுந்தரபாண்டியனிலேயே அப்பட்டமாக ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிபிடித்து அவர்களுடைய வன்முறைகளுக்கு சப்பைக்கட்டு கட்டியிருந்தார். ஆனால் இந்தப்படத்தில் ஒருபடிமேலே போய் சாதிசார்ந்த கொலைகளுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு வம்படியாக நிற்கிறார். அதேசமயம் ஒரு திரைப்படத்தின் தவறை ஒட்டுமொத்தமாக சசிகுமார் என்கிற ஒரே ஒரு ஆசாமியின் தலையில் சுமத்துவது தவறு. படத்தின் இயக்குனருக்கும் இதில் முழு பொறுப்பு இருக்கவேசெய்கிறது.

சரி இந்த சாதி அரசியல் மைசூர்களையெல்லாம் பீச்சாங்கையால் ஒதுக்கிவிட்டு.. நம்முடைய நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு படத்தை படமாக பார்த்தாலும் கூட சகிக்கவே முடியாத குப்பையாகத்தான் இப்படம் வந்திருக்கிறது.

சரண்யா இன்னும் எத்தனை படத்தில்தான் என் புள்ள ரொம்ப நல்லவன் என்று பிக்காலி பயலுகளுக்கு வம்படியாக வக்காலத்து வாங்கிக்கொண்டு தெருத்தெருவாக பிதற்றிக்கொண்டு திரிவாரோ தெரியவில்லை. இதில் ஆகச்சிறந்த கொடுமை என்னவென்றால் சரண்யாவை பார்க்க சசிகுமாரின் தங்கையைப்போல இருக்கிறார். சீரியஸ்லி. படத்தை டிவியில் போடும்போது கவனித்துப்பாருங்கள். அவருக்கு இவர் தாயாம்!

இன்னொரு பக்கம் படத்தின் கதை எதை நோக்கி பயணிக்கிறதென்பதை கிளைமாக்ஸ் முடிந்தபின்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. திரைக்கதையாவது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.. அதுவும் முழுக்க முழுக்க நமக்கு தெரிந்த எல்லாவித ட்விஸ்டுகளுடன் மகாமட்டமாகத்தான் இருக்கிறது.

உதாரணமாக ஒன்றை சொல்லலாம். ஒரு வீடு திடீரென பற்றி எரிகிறது. ஊரே சேர்ந்து தீயை அணைக்கப்போராடுகிறது. இதை பார்த்து நாயகி ஓடி வருகிறாள். வீட்டின் உள்ளே... ஒரு வயதான பெரியம்மா மாட்டிக்கொண்டிருக்கிறார். ஊரே கூடிநின்று சசிகுமார் வரட்டும் என காத்திருப்பதை போல நிற்கிறது. அப்போது அந்தப்பக்கமாக வருகிறார் ஹீரோ.. அப்புறம் என்ன நடக்கும்.. அதேதான். தீக்குள் குதித்து காப்பாற்றி.. நாயகி அப்படியே நெகிழ்ந்துபோய்.. காந்தி செத்துட்டாருதானே?

சரி இப்படி நமக்கு தெரிந்த காட்சிகளால் ரொப்பிவைத்திருக்கிறாரே என்று கடுப்பாகி.. காண்டாவது ஒருபக்கமென்றால்.. இன்னொரு பக்கம். தமிழ்சினிமாவில் எதையெல்லாம் கிண்டல் பண்ண ஆரம்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டதோ அதையெல்லாம் பிடித்து தொங்குகிறார் இயக்குனர்.

முக்கியமாக தாலிசென்டிமென்ட்! தமிழ்திரையுலக வரலாற்றில் முதன்முறையாக காதலிக்கு தாலியை பரிசாக கொடுக்கிறார் ஹீரோ.. உடனே ஹீரோயின் நெகிழ்ந்து போய்.. ‘’காதலிக்கிற எல்லா பொண்ணும் காதலன்கிட்ட எதிர்பார்க்குறது இந்த தாலியதான்’’ என்று சொல்லி.. இந்த லட்சணத்தில் போகிற போக்கில் விக்ரமன் பட லாலாலாவை கலாய்க்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பாதிபடத்தில் விலகி வேறு படத்தில் பிசியாகிவிட்டார் போல... இரண்டாம்பாதி முழுக்க இளையராஜாவின் பழைய ரெக்கார்டுகளாக போட்டு தேய்க்கிறார்கள். ரீரிகார்டிங்கும் ராஜா புண்ணியம்தான்..பாடல்களும் பழைய ராஜா பாடல்களே... அந்த அளவுக்கா நம் இசையமைப்பாளர்களுக்கு இசைத்துவப்பஞ்சம்! இளையராஜா பாடல்களை கொடூரமான காட்சிகளோடு இணைத்துப்போட்டு அவருக்கும் அடிவாங்கிக்கொடுத்திருக்கவேண்டாம்.

படத்தின் சீரியான காட்சிகள் அனைத்திலுமே சிரிப்பொலிகளை மட்டுமே கேட்க முடிகிறது. அதிலும் இடைவேளையில் சசிகுமார் வெட்டுவாங்கும்போதும்... க்ளைமாக்ஸில் சரண்யா தலைவெட்டுகிற காட்சியிலும்.. நமக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை. மாறாக சிரிப்பை வரவழைக்கிற வகையிலேயே அக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படம் முழுக்க ஒருலாரி ரத்த மிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று யூகிக்கலாம்.

சசிகுமாருக்கு படத்தில் கண்ணடிக்கிற வியாதியோ என்னவோ.. யாரைபார்த்தாலும் ப்ளிங் ப்ளிங் என கண்ணடித்துக்கொண்டேயிருக்கிறார். விசாரித்ததில் அது அவரோட ஸ்டைலாம் , மேனரிசமாம்! ஆச்சர்யமாக இருந்தது. சமகாலத்தில் பவர்ஸ்டாரே இதையெல்லாம் செய்வதில்லை.

அதோடு படம் முழுக்க பொண்ணுனா பொண்ணா பொறக்கணும் ஆணுன்னா ஆணாபொறக்கணும் என்பது மாதிரி... மாதிரிதான் , பெண்களை கவரும் பஞ்ச் டயலாக்குகள் சொல்லிவிட்டு ஸ்லோமோசனில் நடக்க வேறு செய்கிறார். நாம கைத்தட்டணுமாம்! பேரரசுகூட இப்படியெல்லாம் படமெடுப்பதை கைவிட்டுவிட்டு இமயமலையில் செட்டில் ஆகிவிட்டார்.

கிராமத்துப்படங்களுக்கு பேர் பெற்ற ராஜ்கிரண் தொடர்ந்து மூன்றோநான்கோ வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். அவருக்கு ஒருநாள் சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்று ஆசைவர சில ‘நல்ல’’” படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசி நடித்து தன்னுடைய தலையில் தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார். இப்போது அதே ஆசை சசிகுமாருக்கும் வந்திருப்பதை குட்டிப்புலியில் உணர முடிந்தது. சசிகுமாரும் தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடித்துவந்தால்.. அதை ஏன் நம்ம வாயால சொல்லிக்கிட்டு!

இதுபோன்ற திரைப்படங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல நம்மிடையே சாதீய பெருமையை அபிமானத்தை வெறியை சத்தமில்லாமல் ஏற்றவல்லவை. ஆபத்தானவை. தவிர்க்கவேண்டியவை. தப்பித்தவறியும் இப்படம் ஓடுகிற தியேட்டர்பக்கம் கூட மழைக்கும் ஒதுங்கிவிடவேண்டாம். புலி ப்ராண்டிரும்!





(நன்றி - www.cinemobita.com )