Pages

12 March 2014

தி மெசேஜ் - இஸ்லாத்தின் கதை




நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பத்து பதினைந்து ஆவணப்படங்களாவது வெளியாகியிருக்கும். அவருடைய வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட ஒரே முழு நீளத் திரைப்படம் என்றால் ‘’தி மெசேஜ் - THE MESSAGE’’ மட்டும்தான். இயக்குனர் முஸ்தபா அக்கட் இயக்கிய இத்திரைப்படம் 1977ல் வெளியானது.

இப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு ஸ்லைட் போடுகிறார்கள். ‘’இப்படத்தை தயாரித்தவர்கள் இஸ்லாமிய பண்பாட்டை மதிக்கிறவர்கள், இறைதூதர் நபிகளுக்கு உருவம் கொடுப்பது இஸ்லாத்தின் புனிதமான கோட்பாட்டிற்கு எதிரானது என்பதால் இப்படத்தில் நபிகளின் உருவம் எங்குமே காண்பிக்கப்படவில்லை’’.

இஸ்லாம், நபிகள் நாயகம் என்கிற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இதை ஒரு சாதாரண திரைப்படமாக பார்ப்போம். நாயகனின் உருவத்தை காட்டாமலே ஒரு திரைப்படம் சாத்தியமா? தமிழ்ப்படங்களில் மிகச்சில காட்சிகள் அதுபோல முயற்சிப்பதுண்டு.. முதலில் காலை காட்டி பிறகு நெஞ்சைக்காட்டி பிறகு முகம் காட்டுகிற யுக்திகள், அல்லது படம் முழுக்க நிழலாக காட்டப்படும் வில்லனின் உருவம் இறுதிகாட்சியில் அவிழ்க்கப்படும் என்பது மாதிரி நிறைய உண்டு. ஆனால் ஒரு படம் முழுக்கவே கதாபாத்திரத்தின் அதுவும் கதையின் நாயகனின் உருவத்தை ஒரு ஃப்ரேம் கூட காண்பிக்காமல் எப்படி படமெடுக்க முடியும்?

இதனாலேயே படம் பார்க்கும் போது நபிகள் நாயகம் தோன்றுகிற(?) அக்காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். என்ன சொல்ல… ப்ரில்லியன்ட். படத்தில் நபிகளை காட்டமட்டுமில்லை. அவருடைய குரலும் கூட வருவதில்லை. உலக சினிமாவில் நாயகனை காட்டாமலேயே எடுக்கப்பட்ட ஒரே படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்!

அவர் தோன்றுகிற காட்சிகளில் பல நேரங்களில் கேமரா அவருடைய கண்களாக மாறிவிடும். அவருடைய பாய்ன்ட் ஆஃப் வ்யூவிலிருந்து காட்சிகள் சொல்லப்படும். அல்லது அவரை நோக்கி மற்ற பாத்திரங்கள் பேசுவதாகவும், பெரும்பாலான நேரங்களில் நபிகளின் பதில் மௌனமாக வரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அல்லது அவருடைய பதிலை அவருடைய சீடர்கள் சொல்வதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

படத்தின் ஓரிடத்தில் நபிகளும் அவருடைய சீடர்களும் ஒரு ஊருக்குள் செல்ல அந்த ஊர் சிறுவர்கள் சேர்ந்து அவரை கல்லால் அடிப்பது போல் காட்சி… கும்பலாக அவருடைய சீடர்கள் சேர்ந்து அவரை மறைத்துக்கொள்ள கற்கள் எறியப்படும். அந்தக்காட்சியும் மிகசிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. ஒரு சில காட்சிகள் தவிர்த்து எங்குமே நபிகள் காட்டப்படவில்லை என்கிற உணர்வே வராதபடி காட்சிப்படுத்தியது நிச்சயம் மிகப்பெரிய சாதனைதான்! பதூர் மற்றும் உகுத் போர்க்கள காட்சிகளின் போது மட்டும் போரை முன்னின்று நடத்துவதாக நபிகளின் உறவினரான ஹம்சாவை காட்டுகிறார்கள். ஆனால் அப்போர்களை முன்னின்று நடத்தியது நபிகள்தான். படத்தில் இதுபோல சில வரலாற்று சலுகைகளையும் இயக்குனர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நபிகளின் முழு வாழ்க்கையையும் இப்படம் காட்சிப்படுத்துவதில்லை. இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களையும் அது எதிர்கொண்ட சவால்களையும் அச்சவால்களை எப்படி நபிகளும் அவருடைய சீடர்களும் எதிர்கொண்டு அரபு நாடுகளில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிருவினார் என்பதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மெக்காவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு மெதீனாவில் முதல் வழிபாட்டுதலத்தை நிருவி மீண்டும் மெக்காவிற்கே திரும்பி அந்நகரை ஆண்ட அபூ சூஃபியானை சரணடைய செய்வதோடு படம் முடிகிறது.

300க்கும் அதிகமான மதங்களை வழிபாட்டு முறைகளை கொண்ட மெக்காவில் இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்தோடு வருகிற நபிகளை அந்நகரத்து செல்வந்தர்கள் பரிகசிக்கின்றனர். மெக்கா நகரத்தின் பொருளாதாரம் முழுக்க முழுக்க இந்த 300க்கும் அதிகமான கடவுள்களையும் இந்த கடவுகள்களின் சிலைகளுக்காகவும் வழிபாட்டுக்காகவும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகிற யாத்ரீகர்களையும் நம்பியே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நபிகளின் இந்த வாக்கும் இந்த ஓரிறை கொள்கையை பரப்ப முயலும் நடவடிக்கைகளும் வியாபாரிகளுக்கு எரிச்சலூட்டுகிறது. அடக்குமுறைகளை கையாளுகிறார்கள்.

ஆனால் நபிகளின் சீடர்கள் அமைதியான வழியில் தங்களுக்கான ஆதரவை நபி அவர்களின் வாக்குகளையும் கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி ஆதரவு கோருகிறார்கள். அக்காலகட்டத்தில் அரபு நாடுகளெங்கும் பரவியிருந்த பெண் சிசுக்கொலைக்கெதிரான நபிகளின் கொள்கைகளை முன்வைத்து பேசுகிறார்கள். அது பெண்களை ஈர்க்கிறது. அடிமைகளும் முதலாளிகளும் சமமானவர்கள் என்பது மாதிரி சமத்துவத்தை முன்வைக்கிறார் இது ஏழைகளை ஈர்க்கிறது. இவ்விஷயங்களை பிரச்சாரத்தன்மை இல்லாமல் காட்சிகளாக சொன்னவிதமும் இப்படத்தின் நன்றாக இருந்தது.

படத்தில் நபிகளுக்கு இணையான முக்கியத்துவம் படத்தில் பல பாத்திரங்களுக்கும் தரப்படுகிறது. ஹம்சா, அலி, அம்மர் என அவருடைய சீடர்கள் பலருக்கும் முக்கியத்துவம் உண்டு. இவர்களில் ஆப்பிரிக்க அடிமையான பிலாலின் பாத்திரம் அருமையானது. நபிகளின் முக்கிய சீடர் ஒருவரை பிடித்துவந்து அவரை விசாரணை செய்கிறார்கள். ‘’ஏழை பணக்காரன் அடிமை முதலாளி என்கிற வேற்றுமை இல்லை அனைவரும் சரிசமமானவர்கள் என்று எங்கள் நபிகள் சொல்கிறார்’’ என்கிறார். உடனே ஆத்திரப்படும் அரசரின் ஆட்கள் அங்கே அமைதியாக இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிற அடிமையான பிலாலை அழைத்து சவுக்கை கொடுத்து சீடரை அடிக்க சொல்கிறார்கள்.

அவரோ கண்களில் கண்ணீரோடு நபிகளையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறான். அடுத்த காட்சியில் பிலால் சித்ரவதை செய்யப்படுகிறார். அவர் மீது மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அப்போதும் அவர் அல்லாஹ்வை மறுக்க முடியாதென்கிறான். பிறகு நபிகளின் இன்னொரு சீடரால் பெரிய தொகை பணம் கொடுத்து பிலால் மீட்கப்படுகிறார். அதற்குபிறகு எப்போதும் நபிகளுடனேயே நிரந்தரமாக இருந்துவிடுகிறார்.

நபிகள் மெக்காவிலிருந்து மெதீனாவிற்கு சென்ற பிறகு, மெதீனாவில் தன்னுடைய முதல் மசூதியை சீடர்களின் உதவியோடு கட்டிமுடிக்கிறார். முடித்த பின் மக்களை வழிபாட்டுக்கு அழைக்கும் வழி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வெவ்வேறு யோசனைகளுக்கு பிறகு வாய்வழியாக அறிவிப்பதே சிறந்தது என்கிற முடிவிற்கு வருகிறார்கள். நபிகள் பிலாலை அழைத்து பாங்கு சொல்ல வற்புறுத்துகிறார்…

பிலால் உடலெல்லாம் உற்சாகம் பொங்க மசூதியின் உச்சிக்கு சென்று… ‘’அல்லாஹூ அக்பர்’’ என்று முதன்முதலாக பாங்கு அறிவிக்கிறார். படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த காட்சி இது. படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் அபூ சூஃபியானைவிட அவருடைய மனைவியாக வரும் ஹிந்தின் பாத்திரம் அருமையானது. தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனை போரில் கொன்ற ஹம்சாவை பழிவாங்க துடிக்கும் அவருடைய நடிப்பும் ஆவேசமும் அவ்வளவு கச்சிதமாக இருந்தது.

படத்தின் நாயகனாக நபிகள் இருந்தாலும் முக்கால்வாசி படத்தை தன்னுடைய அபாரமான நடிப்பினால் ஆட்கொள்பவர் இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆன்டனி க்வீன். நபிகளின் உறவினரான ஹம்சாவாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படம் வெளியான சமயத்தில் போஸ்டர்களில் இவருடைய படத்தை போட்டுதான் விளம்பரப்படுத்தினார்களாம், இவர்தான் நபிகளாக நடிக்கிறார் என்று நினைத்து இஸ்லாமியர்கள் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று போராட்டமெல்லாம் நடத்தியதாக விக்கிபீடியா சொல்கிறது! அதனாலேயே இப்படத்தின் அமெரிக்க வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாம்.

நபிகள் குறித்தும் இஸ்லாத்தைப்பற்றியும் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் இஸ்லாம் தன்னுடைய துவக்க காலத்தில் என்னவாக இருந்தது என்பதை புரிந்துகொள்ளவும் நினைப்பவர்கள் இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். யூடியூபிலேயே முழுப்படமும் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.