Pages

26 March 2014

தண்டரையில் ஓர் இருளர் பெண்





ரோமுலஸ் விட்டேக்கரை பற்றித் தெரியுமா? தெரியவில்லையென்றாலும் குற்றமில்லை. அவரால் உருவாக்கப்பட்ட கிண்டி பாம்புப்பண்ணையையும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிற முதலைப்பண்ணையையும் நம்மில் பலரும் அறிந்திருப்போம். இந்தியாவின் மிகமுக்கியமான HERPETALOGY (ஊர்வன மற்றும் நகவர்வன இயல்) ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேக்கர். அவர் எழுதிய "இந்திய பாம்புகள்" என்கிற நூல் சுற்றுசூழல் ஆர்வமுள்ள பாம்புகள் குறித்து அறியவிரும்புகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.(தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு).

தன்னுடைய வாழ்க்கையை முழுக்கவும் சுற்றுசூழல் மற்றும் அது சார்ந்த முன்னேற்றத்திற்காக அர்பணித்துக்கொண்ட அமெரிக்கர் இவர்! சென்னையிலிருந்து பணியாற்றிவருகிறார். சென்னை முதலை மற்றும் பாம்புப்பணைகள் அல்லாது கர்நாடக மாநிலம் அகும்பேவில் ராஜநாகங்களை காப்பதெற்கென அகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளார். தற்போது கரியல்(GHARIAL) என்கிற அழிந்துவருகிற முதலை இனத்தினை காக்கும் முயற்சிகளில் இருக்கிறார்.

27ஆண்டுகளுக்கு ரோமுலஸும் அவருடைய சகோதரி நினாவும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் உருவாக்கப்பட்டது ITWWS என்கிற இருளர் பழங்குடி பெண்கள் அமைப்பு. பாம்பு பிடித்தல் சட்ட விரோதமாக்கப்பட்டபோது இருளர் இனத்தைசேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர். அதுவரை வயல்களில் வீடுகளில் புகுந்துவிடுகிற பாம்புகளை எலிகளை பிடிப்பதை மட்டுமே தொழிலாக வைத்திருந்தவர்கள் இவர்கள். அவர்களுடைய மறுவாழ்வுக்காக கிண்டி பாம்புகள் ஆராய்ச்சி பண்ணையையும் செங்கல்பட்டு அருகேயிருக்கிற தண்டரை என்கிற கிராமத்தில் இருளர் பழங்குடி பெண்களின் மேம்பாட்டிற்காக ஒரு அமைப்பையும் உருவாக்கியுள்ளார்.

14ஏக்கர் பரப்பளவுள்ள காலி நிலத்தை செப்பனிட்டு அதில் மரங்களை வளர்த்து பண்ணைகளை உருவாக்கி இன்று ஒரு அற்புதமான சமூக காட்டினை கட்டமைத்திருக்கிறார்கள் இருளர் பெண்கள். இந்த இடத்தில் மிகப்பெரிய மூலிகைப்பண்ணையையும் உருவாக்கியுள்ளனர். இன்று ஆறாயிரத்திற்கும் அதிகமான இருளர் பெண்கள் இவ்வமைப்போடு இணைந்து செயல்படுகிறார்கள். மூலிகை ஆராய்ச்சிகளுக்கென மிகப்பெரிய மூலிகை பண்ணையை இந்த அமைப்பிலுள்ள பெண்களே நிர்வகிக்கிறார்கள். கடந்த 27ஆண்டுகளாக இருளர் இன மக்களின் வாழ்வுரிமைக்காகவும் அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது இந்த அமைப்பு.

****



இந்த அமைப்பு குறித்து முன்பே அறிந்திருந்தாலும் அங்கே செல்கிற வாய்ப்பு ஒரு முறை கூட அமையவில்லை. அப்படிப்பட்ட இடத்தில்தான் ‘’கதை பேசுவோம்’’ என்கிற ஒரு நாள் இலக்கிய முகாமினை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் நண்பர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஏற்பாடு செய்திருந்தார். அறிவிப்பு வந்ததுமே எனக்கொரு சீட் புக் பண்ணி வைத்துக்கொண்டேன்! (200ரூபாய் கட்டணம்தான் என்றாலும் இலக்கியத்துக்கு இலக்கியமும் ஆச்சு… இடத்தையும் பார்த்துக்கலாம் என்பது என் திட்டம்)

செங்கல்பட்டிலிருந்து நிறைய ரியல் எஸ்டேட் வயல்களை கடந்து நென்மேலி தாண்டினால் இடதுபக்கம் திரும்புகிற மிகச்சிறிய சாலையில் ஒன்றரை கிலோமீட்டரில் தண்டரை கிராமம். மிக அழகான ரம்மியமான மலைப்பகுதி. கோடைகாலத்திலும் வெப்பங்குறைவாக இருந்தது. ஆள்நடமாட்டம் அதிகமில்லை என்று சொல்லமுடியாது. ஆளே இல்லை.

தன்னந்தனியாக குட்டி குட்டி மலையாக சிலவற்றை கடக்கும்போதே மலை அடிவாரத்தில் சிலர் குத்தவைத்து உட்கார்ந்து எதையோடு குடித்துக்கொண்டிருந்தனர். பைக்கை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு அருகில் சென்று பார்த்தால்… அருமையான ‘’பனங்கள்’’. எவ்வளவு செலவானாலும் பரவால்ல வாங்கி இரண்டு மடக்கு குடிச்சிடலாம் என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டாலும் போகப்போவது இலக்கிய முகாம்… அதுவும் எஸ்ராவின் இலக்கிய முகாம் என்பதால் ஆசையை சீட்கவரில் வைத்து மூடிவிட்டு பைக்கை கிளப்பினேன்!

நான் உள்ளே செல்ல கூட்டத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கூட வந்திருக்கவில்லை. அந்த அமைப்பைச்சேர்ந்த ஒரு இளம் பெண் வாசல் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருந்தார். மஞ்சள் சேலையும் மஞ்சள் முகமுமாக மங்களகரமான இதுமாதிரி பெண்களை சென்னையில் எங்கே பார்க்கமுடிகிறது என்று விசனித்தபடி அவரிடம் கூட்டம் இங்கதான் நடக்குதுங்களா என்று விசாரித்தேன். அவருக்கு எஸ்ராவையும் தெரியவில்லை இலக்கியமும் தெரியவில்லை. ஆனால் புத்தக விழா என்பதாக புரிந்திருந்தார். ஒரே ஒரு இலக்கிய வாசகர் மட்டும் வேலூரிலிருந்து கிளம்பிவந்திருந்தார். நானும் அவருமாக அந்தப்பகுதியை சுற்றினோம்.

இந்த அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிற இந்த காட்டில் பல அரியவகை மரங்களும் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மரத்திற்குமான பெயரையும் அதன் பலனையும் எழுதிவைத்திருக்கிறார்கள். நெய்சட்டி என்கிற மரம் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுகிறதாம். டென்னிஸ்பால் மரம் என்று ஒன்றைப்பார்த்தேன். அதன் காய்கள் டென்னிஸ்பால் போல இருக்குமாம். விசாரித்ததில் அந்த காய் எதற்கும் உதவாது என்றார்கள். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே.. அந்த இலுப்பை மரம் கூட இங்கே வளர்க்கப்படுகிறது. சோகம் என்னவென்றால் அந்த மரத்தில் ஒரு பூ கூட இல்லை!

திருவோட்டுக்காய் மரம் என்றும் ஒரு மரம் இருக்கிறதுது. அவ்வகை மரங்கள் தமிழ்நாட்டில் கிடையாது. அந்தமானிலிருந்து வரவழைத்து இங்கே வளர்க்கிறார்கள். இம்மரத்திலிருந்து கிடைக்கிற காய்களின் ஓட்டில்தான் சாமியார்கள் திருவோடு தயார்செய்கிறார்கள்! இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கே வந்து திருவோட்டுக்காய் வாங்கிச்செல்வார்களாம் சாமியார்கள்! அம்மரத்தில் ஒரே ஒரு காய்மட்டும் கரும் பச்சைநிறத்தில் இரண்டு திருவோடுகளை ஒட்டிவைத்ததுபோல அல்லது ரக்பி பந்துபோல ஒட்டிக்கொண்டிருந்தது. தட்டிப்பார்த்தேன். ஸ்ட்ராங்காக இருந்தது. பறிக்கலாம் என்று இழுத்தேன்..வரவில்லை. மரம் மட்டும் நெடுநெடுவென தேக்கைப்போல ஓங்குதாங்காக இருந்தது.

மரங்களை கடந்து உள்ளே நுழைய சின்ன கட்டிடங்கள் கட்டியிருக்கிறார்கள். அலுவலகமாகவும் தங்குமிடங்களாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆராயச்சி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பறவை பார்த்தலுக்காக வருகிறவர்கள் இங்கே தங்கியிருந்துவிட்டு செல்ல வசதியாக அறைகளும் கட்டப்பட்டுள்ளன. மிகக்குறைவான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. முன்பே சொல்லிவைத்துவிட்டால் உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுகிறார்கள். எழுத்தாளர்கள் சினிமாக்காரர்கள் பலரும் இங்கே வந்திருந்து தங்கி எழுதுவார்களாம்! நிறைய விழாக்களும் கூட இங்கே நடத்தப்படுகின்றன. குடிப்பது புகைப்பிடிப்பது மற்றும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இங்கே மூலிகைக்காவும் மருத்துவ ஆலோசனைக்காகவும் வருகிறவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்குமாம். காரணம் இங்கே பழங்கால முறைகளில் தயாரித்துக்கொடுக்கிப்படுகிற அசல் மூலிகை மருந்துகள். இங்கேயே மூலிகைகள் தயாரிக்கவும் மருந்துகள் கொடுக்கவும் இருளர் இனத்தைசேர்ந்த ஒரு இளம் வைத்தியரை வைத்திருக்கிறார்கள். அவருடைய பரம்பரையே பாம்புக்கடிக்கும் பிற நோய்களுக்கும் வைத்தியம் பார்த்துவந்தவர்களாம். வழிவழியாக பின்பற்றுகிற முறைகளிலேயே இங்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்று சுற்றிக்காட்டினார். இங்கே மூலிகை மசாஜ் மற்றும் மூலிகை குளியலும் கூட உண்டு! 800ரூபாயாம் கட்டணம்.



மூலிகைப்பண்ணையில் வெவ்வேறு விதமான மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். பூனைமீசை என்கிற மூலிகை சிறுநீரக கற்களிருந்தால் நல்ல மருந்தாக இருக்குமாம்! எலும்பொட்டி,கல்முளையான்,வெப்பாலை என விதவிதமான மூலிகை செடிகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். நண்பர்கள் வாங்கிக்கொண்டனர். மரக்கன்றுகளும் கூட கிடைக்கின்றன. மூலிகை சூரணங்களும் கிடைக்கின்றன. நேரில் வந்து வாங்க வசதியில்லையென்றால் போனில் சொன்னால்கூட கொரியர் செய்துவிடுவார்களாம். இந்தியாவின் பலபகுதிகளுக்கும் மூலிகை சப்ளை இங்கிருந்துதானாம்!

மின்ட் என்றால் இத்தனை நாளும் துளசி அல்லது புதினா என்பதாகவே நானாக நினைத்திருந்தேன். உள்ளே மின்ட் செடி என்றே ஒன்று வைத்திருந்தனர். அதில் ஒரு இலையை பிடுங்கி வாயில் போட்டால்... ஹால்ஸ் மாதிரி தொண்டையில் குளுகுளு...

இலக்கிய கூட்டத்தில் மதியம் ஏதாவது மூலிகை உணவு கொடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் சாதாரண ஃபுல் வெஜ் மீல்ஸ்தான் பரிமாறப்பட்டது. அதுவும் நன்றாகவே சுவையாக இருந்தது. காலையில் துளசி டீயும், மதியம் செம்பருத்தி டீயும் கொடுத்தார்கள். புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. இந்த தூள் கிடைக்குமா என்று விசாரித்தேன். செம்பருத்தி டீ தயாரிக்கவென காயவைத்த செம்பருத்திபூவை அப்படியே தருகிறார்கள். இதை நீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு அந்த நீரை வடிகட்டி அதோடு பனங்கற்கண்டு சுக்கு அல்லது இஞ்சியோடு இஷ்டபட்டால் ஏலக்காயும் போட்டு கலக்கி இறக்கினால் டீ ரெடி என்றார்கள்! துளசி டீக்கும் அதே ரெசிபிதான். செம்பருத்தி மட்டும் கொஞ்சமாக வாங்கிக்கொண்டேன் டேஸ்ட்டு பாக்கவென!

வாரத்தின் ஏழு நாட்களும் இங்கு யார்வேண்டுமானாலும் வரலாமாம். சுற்றிபார்க்க கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அந்த சூழலும் மரங்களும் பச்சை வாசனையும் அற்புதமாக இருந்தது. விதவிதமான சின்ன சின்ன பறவைகளையும் நிறைய பார்க்க முடிந்தது. நான், இயக்குனர் சசி மற்றும் எஸ்ரா மூவருமாக மூலிகைப்பண்ணையில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

தலைக்கு மேலே இருந்த கொடுக்கபுளி மரத்தில் கொண்டை வைத்த குருவி ஒன்று அமர்ந்திருந்தது. வால் மட்டும் கருப்பு நிறத்தில். தலையில் மஞ்சளும் சாம்பலுமாக கொண்டை. என்ன குருவிங்க இது என்று பேசிக்கொண்டிருக்க ‘’அது கொண்டாலத்தி என்றார் எஸ்ரா. இன்னும் கூட இதுமாதிரி எண்ணற்ற குட்டிப்பறவைகளை கண்டோம். ஆனால் அவற்றின் பெயர்கள் தெரியவில்லை. ஆனால் நிறைய புகைப்பட கலைஞர்கள் கைகளில் ராக்கெட் லாஞ்சர் போல நீளமான லென்ஸ் கொண்ட கேமராவோடு சுற்றிக்கொண்டும் வெயிட்டிங்கிலும் இருந்தனர்.

இந்த காட்டுப்பகுதிக்கு மிக அருகிலேயே சின்ன சின்ன மலைகள் இருக்கின்றன. இங்கே ட்ரெக்கிங் அழைத்துசெல்லுகிற வசதிகளும் இந்த அமைப்பினர் செய்து தருகிறார்களாம். அடுத்த முறை ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்து ட்ரெக்கிங்கெல்லாம் போகலாம் என நண்பர்களும் நானும் முடிவு செய்திருக்கிறோம். நேரம் ஒத்துவரவேண்டும்.

இவ்வமைப்பு குறித்த விபரங்களுக்கு - http://www.itwwsindia.com/
 

***



எப்போதும் டொக்கு வைத்து பொறுமையாக ஆடுகிற ராகுல் ட்ராவிட் திடீரென பாலுக்கு பால் சிக்ஸராக அடித்து வெளுவெளுவென்று வெளுத்தால் அதிர்ச்சிகலந்து ஆனந்தமாக இருக்குமில்லையா. அப்படித்தான் இருந்தது எஸ்ராவின் பேச்சு. சிரிப்பதை பற்றிப்பேசினாலும் சீரியஸாகவே பேசக்கூடியவர் இலக்கிய முகாமின் ஒவ்வொரு நொடியிலும் சிரிக்க சிரிக்க அவ்வளவு நகைச்சுவையாகப் பேசினார். மணிக்கணக்கில் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது அவருடைய பேச்சு.

தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள் என்கிற கருத்தில் தமிழின் மிகமுக்கியமான ஐந்து சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அதை ஒட்டி தமிழில் இதுவரை என்னமாதிரியான சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை விளக்கினார். நகுலன் மற்றும் ஜிநாகராஜன் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் அவருடைய பேச்சுக்கு சுவாரஸ்யம் கூட்டின. மதியத்திற்கு மேல் உலக இலக்கியத்தில் சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பின் அவசியம் குறித்தும் பேசினார். ஒருநொடிகூட போர் அடிக்காமல் எப்படித்தான் பேசமுடிகிறதோ. அதைவிட ஒவ்வொரு கதையையும் எப்படித்தான் இப்படி நினைவில் வைத்து அதன் சாரத்தையும் அதன் நுட்பத்தையும் விளக்குகிறாரோ என வியந்துகொண்டேயிருந்தேன். ப்ரில்லியன்ட் தலைவா!

கூட்டத்திற்கு 160சொச்சம் பேர் வந்திருந்தனர். வந்த எல்லோருமே ஒவ்வொரு நொடியையும் ரசித்தனர் என்று எந்த கோயிலுக்கும் வந்து சத்தியம் செய்வேன். அவ்வளவு சிறந்த கூட்டமாக இது இருந்தது. ''எஸ்ரா வாசகர் வட்டம் ஆரம்பிக்கலாமா?'' என்று அப்போதிருந்தே ஒரு யோசனை. ஆனால் அவரோ எனக்கு எந்த "அரசியல் வேணாம்ம்ம்'' என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருப்பதால்.. (சூப்பர் ஸ்டாரின் நண்பர்தானே இவரு) முகாமிலேயே எஸ்ரா தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலும் வெளியிடப்பட்டது.

நான் காலையில் தண்டரையில் நுழைந்த போது மஞ்சள் சேலை அணிந்த ஒரு இளம் பெண் வாசல் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருந்தாரே… அவர் எஸ்ராவின் பேச்சை ரொம்பவும் ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தார். கிளம்பும்போதுதான் கவனித்தேன்.

அவரிடம் ‘’என்னங்க உங்களுக்கு எஸ்ராவை முன்னாலயே தெரியுமா, அவருடைய புத்தகம் எதாச்சும் படிச்சிருக்கீங்களா’’ என்று விசாரித்தேன். ‘’இல்லைங்க’’ என்று புன்னகைத்தார். ‘’டிவில பார்த்திருக்கீங்களோ’’ மேலும் தொடர்ந்தேன்.

‘’அதெல்லாம் இல்லைங்க இப்பதான் பஸ்ட் டைம் இவரை பாக்குறேன்… அவர் பேசுறதை காலைலருந்து கேட்கறேன் ரொம்ப நல்லா பேசுறார்ல.. ரொம்ப பிடிச்சிருந்துச்சுங்க,, அதான் ஒரு புக் உடனே வாங்கிட்டேன்’’ என்று தன் கையிலிருந்து புத்தகப்பையை என்னிடம் நீட்டினார். அது எஸ்ராவின் சிறுகதை தொகுப்பு.