Pages

24 May 2014

கோச்சடையான்




படம் முடிந்தபின் ''இன்னும் கொஞ்சம் மெனெக்கட்டிருக்கலாமோ'' என்கிற எண்ணம் மட்டும்தான் மிச்சமாக இருந்தது. நல்ல வேகமாக கட்டுக்கடங்காமல் ஓடும் கேஎஸ்ரவிகுமாரின் திரைக்கதை. ஹீரோயிசத்தை தூக்கி நிறுத்த ஏற்ற அருமையான வசனங்கள். ரஹ்மானின் எரிச்சலூட்டாத நல்ல இசை. காட்சியமைப்புகள் எல்லாமே இருந்தும் ஏதோ குறைகிறது.

நிச்சயமாக இது ரஜினி படம்தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஷாட்டுக்கு ஷாட் ரஜினியே நிறைந்திருக்கிறார். இவர்கள் என் மக்கள், அன்பால் சேர்ந்த கூட்டம் என்பது மாதிரி நிறைய நல்ல பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார். ஸ்டைலாக நடக்கிறார். சடாமுடியோடு ருத்ரதாண்டவம் கூட ஆடுகிறார். கோச்சடையானில் வருகிற அந்த உருவத்திற்கு ரஜினியின் முகமிருக்கிறது. அது கிட்டத்தட்ட ரஜினிகாந்தைப்போலவே நடக்கிறது அசைகிறது திரும்புகிறது, அவருடைய குரலிலேயே பேசுகிறது. எல்லாமே ஓக்கே. ஆனால் அது ரஜினி இல்லை என்பதை மோசமான அனிமேஷன் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.

பல காட்சிகளில் ரஜினியின் காந்தப்பார்வை கொண்ட கண்கள், தாறுமாறாக சுழன்று மாறுகண் உள்ள மனிதரைப்போலவே இருக்கிறது, ரஜினியின் பலமே அவருடைய வேகமான நடையும் கையசைப்பும் மின்னல்வேக ரியாக்ஷன்களும்தான். ஆனால் இந்த ரஜினியோ எதையும் மிக பொறுமையாகத்தான் செய்கிறார். ‘’என்… ஆன்பு.. மன்னா…’’ என்று மெதுவாகத்தான பேசுகிறார். அது சமயத்தில் ரொம்பவும் கோபப்படுத்துகிறது.

கைதட்டவும் விசிலடிக்கவும் அற்புதமான தருணங்கள் படம் முழுக்க ஏகப்பட்டது உண்டு. ஆனால் அக்காட்சிகள் வரும்போதும் மாறுகண்ணோடு உடலை வளைத்துக்கொண்டு டிக்கியை பின்னால் தள்ளிக்கொண்டு கைகளை ஒருதினுசாக வைத்துக்கொண்டு 'பார்த்தாயா..'' என்று பேசுகிற ரஜினியை பார்த்து அப்படியே நம்முடைய ஆவேசம் அடங்கிப்போகிறது. கைதட்டவும் விசிலடிக்கவும் தயாராயிருக்கிற நம் விரல்கள் மீண்டும் நாற்காலிகளின் கைகளையே பிடித்துக்கொள்கின்றன. இது அடுத்தடுத்து நிகழும்போது கடைசியில் அடச்சே இது ரஜினி இல்லப்பா என்றாகிவிடுகிறது. ஒருவேளை அது ரஜினியாக இல்லாமல் ஏதோ ஒரு ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா கேமில் வரும் கேரக்டர் போலிருந்திருந்தால் இந்த சிக்கலே இருந்திருக்காது!

ஒருவேளை இது அனிமேஷன் படமாக இல்லாமல், ரஜினியே நேரடியாக நடித்திருந்தால் இது இன்னொரு ‘’மகதீரா’’வாக வந்திருக்கும். அவருடைய ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஏனென்றால் ஒரு ரஜினி படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அச்சுபிசகாமல் மிகச்சிரியான இன்க்ரீடியட்ன்ஸுடன் சேர்க்கப்பட்ட டிபிகல் கேஎஸ் ரவிகுமார் பாணி திரைப்படம். விசுவாசமான வேலைக்காரன், முரட்டுத்தனமான முதலாளி, நண்பனின் துரோகம் மாதிரி எல்லாமே இருந்தும். அனிமேஷன் அவ்வளவு சிறக்கவில்லை என்பதுதான் கொஞ்சமாக சொதப்பிவிட்டது.

ஆனால் பல குறைகள் இருந்தாலும் எல்லாமே அனிமேஷன் சார்ந்தே! குறிப்பாக ரஜினிக்கு மட்டுமல்ல மற்ற எல்லா பாத்திரங்களின் முகங்கள் அச்சு அசலாக வரவேண்டும் என நிறையவே மெனக்கெட்டிருந்தாலும், அனைவரது கண்களுமே சரியாக கையாளப்படவில்லை. அதுபோலவே அவர்களுடைய அசைவுகளும் கொஞ்சமும் சிறப்பாக இல்லை.

காட்சிகளின் பின்னணிகளுக்காக ஆக்சன் மற்றும் நடன காட்சிகளில் காட்டியிருக்கிற அக்கறையை எல்லா காட்சிகளிலும் காட்டியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஷோபானா,அவர் கையிலிருக்கிற குழந்தை என எதுவுமே உருப்படியாக இல்லை. சரத்குமாரை பார்க்க சரத்பாபு போலிருக்கிறார்! ஆனால் நாகேஷை மீண்டும் திரையில் சாத்தியப்படுத்தியது ஒன்றுதான் படத்தின் மிகப்பெரிய சாதனை. அவருக்கு குரல் கொடுத்தவரும் அவருக்கு உடல் அசைவு கொடுத்தவரும் வாழ்க!

படத்தில் பர்ஃபார்மென்ஸ் காப்பச்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இப்படத்தில் பெரும்பாலான இடங்களில் மோசன் கேப்சரிங் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. இரண்டுக்கும் அடிப்படையிலேயே நிறைய வேறுபாடுகள் உண்டு. (பார்க்க WIKI)

இப்படி ஏகப்பட்ட குறைகளையும் தாண்டி ரஜினியின் குரல் நமக்குள் ஒரு மாயவித்தையை நிகழ்த்துகிறது. அது எரிச்சலூட்டுகிற அனிமேஷனையும் தாண்டி இப்படத்தை ரசிக்க வைக்கிறது. அதற்கு முதல் காரணம் நமக்கு ரஜினிமேலிருக்கிற அன்பு அல்லது மரியாதை நிமித்தமாக கூட இருக்கலாம்.

அனிமேஷன் படங்களின் ரசிகர்களுக்கு இப்படம் ரசிக்கும் என்றே கருதுகிறேன். காரணம் டாய் ஸ்டோரியில் தொடங்கி சமீபத்தில் வெளியான ஃப்ரோசன், ரியோ2 வரைக்குமான அத்தனை பிக்சார் மற்றும் டிஸ்னியின் படங்களையும் மிஸ்பண்ணாமல் பார்த்தவர்கள் எல்லாருக்குமே தமிழில் இப்படி ஒரு படம் சாத்தியமாகாதா என்கிற குறை எப்போதுமே இருந்தது. அந்த வகையில் இந்த கன்னிமுயற்சியே என்கிற அளவில் இதை அதன் குறைகளோடே ஏற்றுக்கொள்ளலாம். ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பியோவூல்ஃப், அவதார் அளவுக்கு இல்லையென்றாலும் இது 2004ல் வெளியான 3டி அனிமேஷன் திரைப்படமான டாம்ஹேங்க்ஸ் நடித்த போலார் எக்ஸ்பிரஸ் அளவையாவது எட்டியிருக்கிறது என்றவகையில் பாராட்டத்தக்கதே. எப்போதுமே தமிழ்சினிமா ஹாலிவுட்டை விட பத்தாண்டுகள் பின்னால்தான் இருக்கும் என்று கணக்கு இருக்கிறது.

இப்படத்தை திரையரங்கில் எல்லோராலும் ரசிக்க முடியுமா என்பதை உறுதியாக கூற முடியாது. நிச்சயமாக பென்டென் சோட்டாபீம் குழந்தைகள் இடதுகையால் உவ்வேக் என்று நிராகரிப்பார்கள் என்பதைமட்டும் உறுதியாக சொல்வேன். அவர்களை இப்படம் ஒரு இடத்திலும் கூட குஷிபடுத்தாது. குழந்தைகளை அழைத்துச்செல்வது வீண்! அடிப்படையில் எனக்கு அனிமேஷன் படங்களின் மீது தீராக்காதல் உண்டென்பதால் இப்படத்தை ரொம்பவும் இன்ச் பை இன்ச் ரசித்தேன்.